தமிழ் | తెలుగు

» வாசகர் கருத்து » வாசகர் கடிதம்

வாசகர் கடிதம்

அன்புள்ள ஆசிரியர் மற்றும் அதன் குழுவுக்கு கோடானு கோடி வணக்கங்கள். ஆகஸ்ட்-செப்டம்பர்- அக்டோபர் 2020, காலாண்டிதழ் கையில் கிடைக்கப் பெற்றேன். படித்தேன், மகிழ்ந்தேன், வியந்தேன். அத்துனையும் முத்துக்கள், அகிலத்தின் சொத்துக்கள். ஊரடங்கு உத்தரவால் 51-வது கல்கி ஜெயந்தி விழா எளிமையாக கொண்டாடியது சிறிது வருத்தத்தை அளித்தாலும், மக்களின் நலன் கருதி மக்களின்மேல் அக்கறை கொண்டு செயல்பட்ட விதம் போற்றுதற்குரியது. கௌதம புத்தரின் பொன்மொழிகள் சிந்திக்க வைத்தது. மேலும் பக்த துக்காராம், சுவாமி விவேகானந்தர், கபீர்தாஸ், ஞானதேவர் ஆகியோரின் பொன் மொழிகள் இன்றைய இளைஞர்களுக்கு அவசியம் தேவை.
நடந்ததெல்லாம் நன்மைக்கே, பிரார்த்தனை, ஸ்ரீபோசலபாவாவின் வரலாறு, சிருஷ்டிப்பிலுள்ள அதிசயங்கள், காலஞானம், சங்கைமிக்க குர்-ஆன், படித்ததில் பிடித்தது, சித்தர்களின் எதிர்பார்ப்பு, நினைந்திரு, மனிதனின் வீழ்ச்சிக்கு காரணங்களாக வள்ளலார் கூறுவதென்ன?, வசையை வாழ்த்தாகக் கொள்வதெப்படி?, ஓய்வுநாள் இரகசியம், சாதிக்க பிறந்தவர்கள், பொறுமையோடிருந்தால் பொக்கிஷங்கள் உண்டு, ஆன்மீகம், ஸ்ரீமத் பகவத்கீதை பத்தாம் உபதேசம், இறைவனின் தெய்வீக மகிமைகளைப் பற்றிய இரகசியம், எது பிரம்மம்? போன்ற தகவல்கள் பயனுள்ளதாக இருந்ததுடன், வியப்பாகவும் இருந்தது.
வாசகர் குரல் பகுதியில் இடம்பெற்ற கடிதங்கள் அருமையாக இருந்தது. கவிதைகள் அனைத்தும் காதுகளில் தேனாய் பாய்ந்தது. பா. ஹவிலா நட்சத்திரம் மனுஜோதி ஆசிரமம் அவர்கள் எழுதிய அவரும் – நாமும் தகவல் இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள வேறுபாட்டை எடுத்துக்காட்டியதுடன் இன்றைய கலியுகத்திற்கு தேவையானதாக அமைந்தது. அனைத்தும் அருமை! இனிமை! பாராட்டுக்கள்! நல்வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.
– கவிஞர். ஆர். எஸ் செல்வராஜ், தேவனூர்

ஐயா, வணக்கம். மனுஜோதி ஆகஸ்ட்-செப்டம்பர்-அக்டோபர்-2020 இதழில், பிரம்மம் என்றால் என்ன? இந்த சொல் சமஸ்கிருத மொழியிலிருந்து வந்த சொல்லாகும். தைத்தாரிய உபநிஷத்தில் “சத்தியம், ஞானம், அனந்த பிரம்மம் என்று பிரம்மத்திற்கு விளக்கம் கூறப்படுகிறது. விவிலியத்தில் மோசே என்பவர் இறைவனிடத்தில் உம் பெயரென்ன என்று கேட்டபோது, நான் இருக்கிறவராகவே இருக்கிறேன் என்று இறைவன் பதிலளித்தார். எக்காலத்திலும் அவர் இருக்கிறார் என்பது இதன் பொருளாகும்.
மேலும் அன்னமையா என்பவர் சுந்தரத் தெலுங்கில் எழுதிய கீர்த்தனைகள் தற்கால மக்களுக்கு எது பிரம்மமாக விளங்குகிறது? என்பதற்கு தெலுங்கு பாடலுடன் தமிழில் விளக்கம் அளித்திருப்பது யாவரும் எளிதில் புரியும்படி அமைந்தது எனலாம். பசித்தவனுக்கு உணவு பிரம்மமாகவும், லௌகீகமாக இருப்பவனுக்கு உலகமே பிரம்மமாகவும், வேலை செய்பவனுக்கு நேரமே பிரம்மமாகவும் இருக்கும்போது, இறைவனைப் பற்றி எவ்வாறு நினைக்க முடியும் என்ற விளக்கம் அருமை. நினைவில் நிலை நிறுத்த வேண்டுவது ஆகும். 36 பக்கங்கள் கொண்ட மனுஜோதி பத்திரிகை பல்வேறு ஆன்மீக கருத்துக்களை உள்ளடக்கியது எனலாம்.
– இரா. நல்லகண்ணு, பாளையங்கோட்டை

தாங்கள் வெளியிடும் மனுஜோதி இதழ் மிகவும் சிறப்பாக உள்ளது. அதில் வரும் கதைகள், அதில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் பயன் உள்ளதாக உள்ளது. அந்த இதழை நான் படித்து அதில் வரும் சிறு கதைகளை என் குழந்தைகளுக்கும், வேலை பார்க்கும் அலுவலகத்தில் உள்ளவர்களுக்கும் எடுத்துரைப்பேன். இதற்கு முன் படித்த மனுஜோதி இதழில் உள்ள கதை சிறப்பாக இருந்தது. என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருந்தது. உங்கள் இதழுக்கு புதிய வாசகி. நன்றி.
– ம. கற்பகவல்லி, முத்தையாபுரம்

தங்களின் மனுஜோதி இதழ் எனக்கு தடையில்லாமல் வந்து சேர்கிறது. அதற்கு நன்றி. தற்போது தாங்கள் வெளியிட்டுள்ள இதழில் “நடப்பவை எல்லாம் நன்மைக்கே”, மற்றும் கண்ணதாசனின் மனமாற்றம் போன்றைவைகள், அறிவுரை கூறும் வகையில் அமைந்திருந்தது. மேலும் தங்கள் சேவை சிறப்புற வாழ்த்துக்கள். நன்றி.
– S. ஜெயகணபதி, முள்ளக்காடு

பேரன்புடையீர்,
தாங்கள் அனுப்பிய காலாண்டு இதழ் கிடைக்கப் பெற்றேன். இதை பார்த்தால் ஒரு பெரிய பொக்கிஷத்தைப் பார்த்த ஆவல். காரணம் பாமர மக்களுக்கும் தெரியாத பல செய்திகளை தெரிந்து கொள்ள பயனுள்ளதாக இருக்கிறது.
ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அய்யாவின் அறிவுரைகளையும், தாங்கி வரும் இதழ் எனக்கு ஒரு பொக்கிஷமாக கருதுகிறேன். கண்ணதாசன் விடுக்கும் கேள்விக்கணைகள் எனக்கு பிரமிப்பை ஊட்டியது. பக்த துக்காராம், சுவாமி விவேகானந்தர் கூறும் வாசகங்கள் நட்சத்திரங்கள்போல உள்ளது. பிரார்த்தனை என்ற தலைப்பில் கொடுத்த விளக்கம் பக்திமான்களுக்கு ஒரு படிப்பினை ஆகும்.
சிருஷ்டிப்பின் அதிசயங்கள் என்பதில் தென் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் நீர் நாய்கள் அணை கட்டுவதை நம் இதழ் மூலம் நான் படித்தேன், மிகவும் வியப்புற்றேன். பலர் அறிய ஒரு வாய்ப்பு. காலஞானம் என்ற தலைப்பில் நீரால் விளக்கு எரியும் என்பது இந்த கலியுகத்தில் நிரூபணமாகியது என சுட்டி காண்பித்தது சிறப்பு. மனிதன் மனிதனாக வாழ என்ன செய்ய வேண்டும் என்பதை நினைந்திரு என்ற தலைப்பில் விளக்கியது மிக சிறப்பு. ஓய்வுநாள் இரகசியத்தை விளக்கியது என் போன்ற அறியாதவர்களும் அறிந்து கொள்ள முடிந்தது. சனிக் கிழமை வார விடுமுறை என்ற விபரம் தெரிந்ததுடன் அதை கடைபிடிக்க விரும்புகிறேன். ஆன்மீகம் என்ற 20 விளக்கங்களும் மிக சிறப்பு. அறிந்து கொள்ள முடியாத அரிய பெரிய செய்திகளையும் இது போன்ற மனுஜோதியில் மட்டுமே அறிந்து கொள்ள முடிகிறது.
– D. குப்புசாமி, முள்ளைவாடி

ஐயா, அனைத்து வேதங்களின் ஆய்வு இதழ் கிடைக்கப்பெற்றேன். மிக்க மகிழ்ச்சி. அட்டை பக்கத்திலேயே “கண்ணதாசன் விடுக்கும் கேள்விக் கணைகள்” படித்து விட்டு அசந்து போனேன். தொடர்ந்து, “நடப்பதெல்லாம் நன்மைக்கே” என்ற பகுதியும், மனிதர்களைப் போலவே, விலங்குகளும் அணைகள் கட்டுகின்றன. பீவர், நீர் நாய் அணை கட்டும் திறமையுடையது என்ற தகவலும் பயனுள்ளவையாக அமைந்தது. நன்றி!
– தண்டபாணி, வேம்படிதாளம், சேலம்

Filed under: வாசகர் கருத்து