தமிழ் | తెలుగు

» ஆன்மீக கட்டுரைகள் » யாதவ குலத்தின் முடிவு!

யாதவ குலத்தின் முடிவு!

விதுரன் தன்னுடைய புனித யாத்திரையின்போது, கிருஷ்ணரின் நண்பன் உத்தவரை சந்தித்தபோது, யாதவ குலம் எவ்வாறு அழிந்தது என்று உத்தவர் கூறுகிறார். ஸ்ரீ கிருஷ்ணர் யாதவ குலத்தில் தோன்றியபோதும், பகவான் தங்களுடன் வாழ்கின்றார் என்பதை யாதவர்கள் ஒருபோதும் உணரவில்லை. ஒருமுறை சில ரிஷிகள் துவாரகைக்கு வந்தபோது, யாதவ குலத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் சாம்பா என்பவனை கர்ப்பஸ்திரியாக வேடமிடச் செய்து இவளுக்கு பெண் குழந்தை
பிறக்குமா, ஆண் குழந்தை பிறக்குமா என்று ரிஷிகளிடம் கேட்டனர். கோபமுற்ற ரிஷிகள் ஒரு உலக்கையை அவள் பெற்றெடுப்பாள். அது உங்கள் குலத்தை அழிக்கும் என்று கூறினார். சாம்பா தன் உடையை அவிழ்த்தபோது ஒரு இரும்பு உலக்கை அவன் உடையில் இருந்தது. அந்த இளைஞர்கள் நடந்த சம்பவத்தை பலராமனிடமும், கிருஷ்ணரிடமும் தெரிவித்தனர். அவர்களின் பொறுப்பற்ற நடத்தையைக் குறித்து பலராமன் கோபமடைந்தார். ரிஷிகளின் வார்த்தையைக் கேட்டதினால் கவலையுற்ற பலராமன் அந்த இரும்பு உலக்கையை தூளாக அரைக்கும்படி செய்தார். ஒரு துண்டு மிகவும் கடினமாக இருந்தது, அதை தூளுடன் சமுத்திரத்தில் வீசினார்.

குருஷேத்திர யுத்தம் தன்னுடைய குடும்பம் முழுவதையும் அழித்து விட்டது. கிருஷ்ணர் யுத்தத்தை தடை செய்யவில்லை என்பதினால் காந்தாரி கோபமடைந்தாள். கட்டுப்படுத்தாத துவேஷமும், பொறாமையும் குரு குடும்பத்தை அழித்தது என்று கிருஷ்ணர் விளக்கிக் கூறினார். உன்னுடைய குலமும் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வார்கள் என்று காந்தாரி கூறினாள். கிருஷ்ணர் அந்த சாபத்தை ஆசீர்வாதம்போல கரம் கூப்பி தலைகுனிந்து வாங்கிக் கொண்டார்.

யாதவர் குலம் அழியும்நேரம் சமீபித்தபோது, கடற்கரை யோரத்திலிருக்கும் பிரபாஸா என்ற இடத்திற்குச் செல்லும்படி கிருஷ்ணர் கூறினார். யாதவ இளைஞர்கள் குடித்து விட்டு சண்டைபோட்டனர். அவர்கள் கடற்கரையோரத்திலிருந்த ஏரக்கா என்ற புல்லை பிடுங்கி ஒருவரையொருவர் அடித்தனர். அந்த புல் இரும்பு கம்பிகளைப் போலிருந்ததால் எல்லாரும் இறந்தனர். கடலில் வீசப்பட்ட இரும்பு உலக்கையின் தூள் கடல் மணலில் புதைந்து கூரிய புல்லாக முளைத்தது. உலக்கையின் கடினமான பாகம் கரையோரம் கிடந்தது. ஒரு வேடன் அதை எடுத்து கூர்மையான அம்பு செய்தான். கிருஷ்ணர் தன்னுடைய ரதசாரதி தருக்காவிடம் துவாரகையை எல்லாரும் விட்டு இடம் பெயர வேண்டும். ஏனென்றால் கடல் நீர்மட்டம் அதிகரிப்பதினால் துவாரகை மூழ்கிவிடும் என்று தகவல் கூறினார். கிருஷ்ணர் பூமியை விட்டுச் செல்லும் நேரம் நெருங்கி விட்டது என்பதை அறிந்த பலராமன் பராமாத்மாவின்மேல் தியானித்து தன் உயிர் துறந்தார். ஸ்ரீ கிருஷ்ணர் தம்முடைய திவ்ய உருவத்தில் ஒரு அசுவமரத்தின் கீழ் உட்கார்ந்தார். து]ரத்திலிருந்து ஸ்ரீ கிருஷ்ணரின் பாதத்தை மானின் வாய் என்று எண்ணிய வேடன் அம்பு எய்தினான். அந்த அம்பு கடலில் வீசப்பட்ட உலக்கையின் கடினமான பாகத்தில் செய்யப்பட்டது. ஷரா என்ற வேடன் ஒரு தெய்வீக மனிதனை காயப்படுத்தி விட்டதை அறிந்து அதிர்ச்சியுற்றான். இந்த கொடிய தவறை செய்ததற்காக என்னை உடனடியாக கொல்லுங்கள் என்று ஷரா கூறினான். பயப்படாதே, ஷரா தெய்வீக திட்டத்தின்படிதான் நீ கிரியை செய்தாய், நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன் என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறியதால் ஷரா சொர்க்கத்திற்குச் சென்றான்.

ஸ்ரீ கிருஷ்ணர் இறக்கும் தருவாயிலிருக்கிறார் என்பதை அறிந்த உத்தவர் நிலைகுலைந்து போகிறான். ஸ்ரீ கிருஷ்ணரிடம் தன்னை வழி நடத்துமாறு கேட்கிறான். அப்போது அவன் உத்தவ கீதையை கேட்கிறான். ஸ்ரீ கிருஷ்ணர் இந்த உடலின் அழியும் தன்மையைப் பற்றி மறுபடியுமாக எடுத்துரைத்து இவ்வுடல் விலையேறப்பெற்றது, ஐம்புலன் கொண்ட இந்த சரீரத்திலிருந்துதான் ஒரு மனிதன் ஜீவன் முக்தியை அடைய முயற்சி செய்யலாம். பத்ரி வனத்திற்குச் சென்று நான் கூறிய சத்தியத்தை தியானம் செய். நான் பாகவதம் மூலமாக என்னை வழிபடுபவர்களுக்கு வழிகாட்டுவேன் என்றார். இவ்வாறு கூறி விட்டு ஸ்ரீ கிருஷ்ணர் தியானத்தில் அமர்ந்து வைகுண்டம் ஏகினார்.

இச்சம்பவத்தின் உண்மையான அர்த்தம்: கடவுள் கவனித்துக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு சாட்சியாக அங்கேயே இருக்கிறார். மக்கள் கேளிக்கைகளில் ஈடுபட்டு தங்களையே அழித்துக் கொள்ளுகிறார்கள். நமக்கு சுயசித்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது ஒரு வரப்பிரசாதமாகவும் உள்ளது. அதேசமயத்தில் ஆபத்தானதும்கூட. தர்மம் உன்னதமானது. தீயவர்கள் திருந்தவில்லை என்றால் அவர்கள் அழிக்கப்படுவார்கள். யுத்தம் தவிர்க்க முடியாது. ஏனெனில் தீமை வேரறுக்கப்பட வேண்டும். ஆகவேதான் மகாபாரதப்போர் நடந்தது. அர்ச்சுனனைப்போல நம்முடைய குடும்பம் மற்றும் நண்பர்கள் மேலான பந்தபாசங்கள் தர்மத்திற்கு விரோதமாக இருக்கக்கூடாது. அர்ச்சுனன் பந்த பாசங்களை விட்டு மேலே எழுந்து போரிட்டு தர்மத்தையும், நியாயத்தையும் ஸ்தாபிக்க வேண்டுமென ஸ்ரீ கிருஷ்ணர் அறிவுரை கூறுகிறார். அர்ச்சுனன் ஒரு சாதாரண மனிதனுக்கு மாதிரியாக இருக்கிறான். ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் எது சரி, எது தவறு என்பதை அறியாமல், குழப்பத்தில் இருக்கிறான். அவன் நேர்மையானவன். அவன் பகவானை நோக்கி விண்ணப்பிக்கும்போது குடும்ப பாசம் மற்றும் நம் எல்லா உணர்ச்சிகளையும் விட தர்மத்தை ஸ்தாபிப்பதே நம் தலையாய கடமை என்று பகவான் அவனுக்கு அறிவுரை கூறுகிறார். ஆன்மீகவாதிகளை கேலி, பரியாசம் செய்வது ஆபத்தானது. லௌகீக உலகிலுள்ளவர்கள், குறிப்பாக இளைஞர்கள் எளிமையாக உடை உடுத்துபவர்களை அவமரியாதை செய்கிறார்கள். அவர்கள் நல்ல உடை, அந்தஸ்தைத்தான் பார்க்கிறார்கள். எல்லா உயிர்களையும் நாம் சமமாக பார்க்க வேண்டும். எனினும் ரிஷிகளுக்கு விசேஷித்த மரியாதையை செலுத்த வேண்டும். ஏனெனில் அவர்கள் உலகத்தின் துக்கங்களுக்கு விடை காண்பவர்கள். அவர்கள் குடும்பம் என்னும் ஆதாரத்தை விட்டு விட்டவர்கள்.

ஸ்ரீ கிருஷ்ணர் மனிதனாக அவதரித்தபோது, மனிதனாக அவர் இறக்க வேண்டும் என்ற நியதியை ஏற்றுக்கொண்டார். அவர் ஷரா என்ற வேடனை தேற்றுகிறார். ஷரா என்பவன் விருத்தாப்பியத்திற்கு அடையாளமாகும். இந்த சரீரத்திலிருப்பவர்கள் விருத்தாப்பியத்தை தவிர்க்க முடியாது. இறப்பிலும் யுத்தத்தின் நடுவிலும் பக்தியும் தர்மமும் தெளிவாகக் காணப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் தம் உடலை விட்ட போதிலும் ஸ்ரீமத் பாகவதத்தின் மூலமாக கலியுகத்தில் தன் பக்தர்களை வழி நடத்துவேன் என்று கூறுகிறார்.

யாதவர் குலம் மனித குலத்திற்கு மாதிரியாக உள்ளது. “யாத்” என்ற வார்த்தையிலிருந்து யாதவர்கள் என்ற வார்த்தை உருபெற்றது. “யாத்” என்றால் ‘யாராக இருப்பினும்’ என்று அர்த்தமாகும். மனித குலத்தில் யாராக இருப்பினும் அவர்கள் ஐம்புலன்களின் இன்பங்களில் ஈடுபடும்போது அவர்கள் மனிதர்களல்ல, மிருகங்களைப் போலிருக்கிறார்கள். ரிஷிகளின் சாபம் உண்மையாகி யாதவ குலம் அழிந்தது.

*******

Filed under: ஆன்மீக கட்டுரைகள்