தமிழ் | తెలుగు

» ஆன்மீக கட்டுரைகள் » மனிதனின் வீழ்ச்சிக்கு காரணங்களாக வள்ளலார் கூறுவதென்ன?

மனிதனின் வீழ்ச்சிக்கு காரணங்களாக வள்ளலார் கூறுவதென்ன?

ஆறாமல் அவியாமல் அடைந்த கோபத்தீர்
அடர்வுற உலகிடை அஞ்சாது திரிவீர்
மாறாமல் மனஞ் சென்றவழி சென்று திகைப்பீர்
வழிதுறை காண்கிலீர் பழிபடும் படிக்கே
நாறாத மலர்போலும் வாழ்கின்றீர் மூப்பு
நரை திரை மரணத்துக் கென் செயக்கடவீர்
ஏறாமல் வீணிலே இறங்குகின்றீரே
எத்துணை கொள்கின்றீர் பித்துலகீரே
அருட்பெருஞ்ஜோதி அகவல் 1170-ல் வள்ளலார் குறிப்பிட்டுள்ளது இங்கு ஒப்பிட்டு உணரத்தக்கது. அந்த அகவல் வருமாறு:-
துறை இது வழி இது துணிவிது நீ செயும்
முறை இது எனவே மொழிந்த மெய்த்துணையே.
பொருள்: “உலகத்தில் நாம் செயல் புரியும் இடம் இது எனவும், அதனை அடையும் வழி இது எனவும் செய்தற்குரிய செயல் இது எனவும், அதை நாம் செய்து முடிக்கும் முறை இது எனவும், மெய்யான துணையாகிய இறைவன் எனக்கு உபதேசித்தருளுகிறார்.” துறை என்றால் வினை செய்யும் இடம். அதனை சென்றடையும் திறமே வழி. செய்வினையும், அதன் விளைவும், துணிவு – செயல் வகை ‘முறை’ எனப்படுகிறது. இறைவனை கிரஹித்து உணர்ந்த ஞானி, வெறுமனே கும்பலோடு கோவிந்தா என்று சத்தம் போடுபவனைப்போல அல்ல. அவனுக்கு இறைவனோடு தனிப்பட்ட முறையில் தொடர்பு இருக்கிறது. இறைவனும் அவனுடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு அவனை நடத்துகிறார். அவனுடைய வழிகளிலெல்லாம் அவனுக்கு உற்ற துணையாக வருவது அவரே.
வள்ளலாருக்கு அத்தகைய வழிநடத்தல் இருந்தது. மெய்யறிவு பெற்ற ஞானிகள் அனைவருக்கும் அத்தகைய வழிகாட்டுதல் இருந்தது என்பது அவர்களுடைய வாழ்க்கை வரலாறு காண்பிக்கும் பேருண்மையாகும். இதைத்தான் விவிலியமும் கூறுகிறது. “பாழான நிலத்திலும், ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தரவெளியிலும் அவர் (இறைவன்) அவனைக் கண்டுபிடித்தார், அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார். அவனைத் தமது கண்மணியைப்போல காத்தருளினார்” என்று உபாகமம் 32:10-ல் இந்தவிதமாக கூறப்பட்டுள்ளது.
“மூப்பு, நரை, திரை, மரணத்துக்கென் செயக்கடவீர்” – முதுமை அடைந்தவுடன் தலைமயிரானது பால்போல வெண்மையாகி விடுகிறது. உடலில் தோல் சுருங்கி விடுகிறது. இறுதியில் மரணம் சம்பவிக்கிறது. இவைகள் நேரிடும்போது என்ன செய்வீர்கள்? என்று வள்ளலார் இங்கு வினவுகிறார்.
கோப்பெருஞ்சோழனின் உயிர்த்தோழனாக பிசிராந்தையார் என்ற புலவர் ஒருவர் இருந்தார். அவர் முதுமை அடைந்தபோது, அவருடைய தலைமயிர் சிறிதும் வெளுக்கவில்லை. அவருடைய சரீரத்தில் தோல் சுருங்குதலும் இல்லை. இதற்கான காரணம் என்ன என்று அவருடைய ஊர் மக்களில் சிலர் அவரிடம் வினவினார்கள். அதற்கு அவர் செய்யுள் வடிவில் அளித்த பதில் வருமாறு:-
யாண்டு பலவாக நரையில வாகுதல்
யாங்காகியரென வினவுதிராயின்
மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர்
யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும்,
அல்லவை செய்யான், காக்கும் அதன் தலை
ஆன்றவிந்தடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே.
இதன் பொருள் வருமாறு:- “ஆண்டுகள் பல கடந்தும் நரை, திரை இல்லாமல் இளமை நலத்துடன் எவ்வாறு நீர் இருக்கின்றீர்?” என்று நீங்கள் வினைவுகின்றீராயின், கூறுகின்றேன்.
1. என்னுடைய மனைவி மாட்சிமையுடையவள். என் சொல்லை மீறாதவள். குறிப்பறிந்து நடப்பவள். ஒருபோதும் என் மனதுக்கு மாறாதவளாக நடப்பவள்.
2. மேலும், என் மக்கள் உத்தமகுணம் படைத்தவர்கள். நான் சொல்வதற்கு முன்பே, குறிப்பறிந்து செயலாற்றுபவர்கள்.
3. என்னுடைய வேலைக்காரர்களும், நண்பர்களும் என் கருத்தை அனுசரித்து நடப்பவர்கள்.
4. என்னுடைய நாட்டை அரசாட்சி செய்யும் மன்னவன் ஒருபோதும் நல்லதல்லாதவற்றைச் செய்யான். தாய்போல் கருணையுடன் காக்கிறான்.
5. இவைகட்கெல்லாம் மேலாக யான் குடியிருக்கும் ஊரில் உயர்ந்த பண்பும், பக்குவப்பட்ட கொள்கையும் உடைய சான்றோர் பலர் வாழ்கிறார்கள்.
ஆதலால் என் உள்ளத்தில் ஒரு சிறிதும் கவலையே இல்லை. அதன் விளைவாக நரை திரையும் இல்லை”. ஆகவே மனிதனின் வீழ்ச்சிக்கு காரணங்களாக வள்ளலார் இப்பாடலில் கூறியுள்ளதை வரிசைப்படுத்துவோம்.
1. கோபம்
2. தெய்வபயம் இல்லாமை
3. மனம் சென்ற வழி செல்லுதல்
4. துன்பத்தை அகற்றும் வழிதுறை தெரியாமை
5. பழி உண்டாகும் நெறியில் வாழ்ந்து, வாசனை இல்லாத மலர்போல் வாழ்வது
6. உயர் நிலையாகிய இறை நெறியில் முன்னேறாமல், வீணாக தெய்வபயம் இல்லாமல் வாழ்ந்து, கீழ்நோக்கி சென்று கீழ்மையிலேயே உழல்தல்
7. இறுதியாக இந்த சரீரத்தின் மூப்பு நரை, திரை மரணத்துக்குள்ளாகி, நற்கதியை இழந்து வீழ்ச்சி அடைகிறார்கள்.
இறைவனிடம் சரணாகதி அடைவதன் மூலமே நாம் நம்முடைய வீழ்ச்சியை தவிர்த்து, இவற்றின்மேல் வெற்றி அடையலாம் என்பது வள்ளலார் வலியுறுத்தும் உண்மை.
– தொடரும்….
– சா. செல்லப்பாண்டியன், மனுஜோதி ஆசிரமம்

Filed under: ஆன்மீக கட்டுரைகள்