தமிழ் | తెలుగు

» ஆன்மீக கட்டுரைகள் » நினைந்திரு

நினைந்திரு

“பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் – கோலஞ்செய்
துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீஎனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா!”
பெருமை மிகுந்த யானை முகத்தைக்கொண்ட விநாயக கடவுளே, நான் உனக்கு இனிய பாலையும், தெளிந்த தேனையும், வெல்லப்பாகினையும், பருப்பு வகைகளையும் கலந்து படைக்கின்றேன். நீ எனக்கு இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழையும் தருவாயாக என்று ஒளவையார் வேண்டுகிறார். முத்தமிழ் போல நினைந்திரு, மகிழ்ந்திரு, போற்றியிரு என்பவை மூன்று சிறப்பு அம்சங்கள் கொண்டவை.
‘நினைந்திரு’ என்பதின் இரண்டாம் கட்டம். இறைவன் நம் வாழ்க்கையில் செய்தவற்றை நினைவு கூறுவதாகும். இது ஒவ்வொருவருக்கும் வித்தியாசமானதாக இருக்கும். பிறப்பதே ஒரு ஆச்சரியம்! பிரசவத்தில் சிலர் சிக்கல்களை தாண்டி பிறந்திருப்பார்கள். சிலர் மயிரிழையில் விபத்திலிருந்து காப்பாற்றப்பட்டிருப்பார்கள். சிலருக்கு தக்க நேரத்தில் முகம் தெரியாதவர்கள் உதவி செய்திருப்பார்கள். சிலர் நல்ல ஆலோசனைகளை கூறி உதவி செய்திருப்பார்கள். பொருளுதவி, பண உதவி, சிபாரிசு செய்ததில் உதவி, தக்க நேரத்தில் இரத்ததானம் செய்வது போன்ற உதவிகளை யாரோ செய்திருப்பார்கள். அப்படிப்பட்ட உதவியை செய்தவர்களை இறைவனைப்போல வந்தாய் என்போம். ஆம்! உண்மையிலேயே அது இறைவனின் செயல்பாடுதான்.
நாம் சற்று நேரம் அமைதியாக உட்கார்ந்து சிறு வயதிலிருந்து என்னென்ன நன்மையான விஷயங்கள் நடந்தன என்று சற்று பின்னோக்கி பார்க்க வேண்டும். அதை செய்யும்போதுதான் நமக்கு எத்தனை ஆபத்துக்கள், விபத்துக்கள் ஏற்பட்டன. இன்னும் பல விஷயங்களும் நம் நினைவிற்கு வருகிறது. அப்பொழுது எத்தனையோ நன்மைகள் இறைவன் செய்திருக்கிறான் என்று கூற ஆரம்பிப்பார்கள். அப்பொழுது இறைவனின் அன்பு உங்கள் மனதில் பொங்கி வழியும். அதினால் மகிழ்ச்சி ஏற்படுகிறது.
எவ்வாறு நாம் மகிழுகிறோம் அல்லது ‘மகிழ்ந்திரு’ என்பது எப்பொழுது சம்பவிக்கிறது? ஆஹா! எப்பேர்ப்பட்ட நன்மைகளையெல்லாம் இறைவன் செய்துள்ளார் என்பதை கிரஹித்து உணரும்போது பெரும் உவகை, மகிழ்ச்சி ஏற்படுகிறது. அதின் விளைவாக நாம் இறைவனை போற்றுகிறோம். நினைந்திரு, மகிழ்ந்திரு, போற்றியிரு என்பது சங்கிலித் தொடராக நடக்கும் சம்பவங்களாகும். நமக்கு ஏன் மகிழ்ச்சி ஏற்படவில்லை? ஏனெனில் நாம் இறைவனின் நன்மைகளை ருசித்தும், அதை உணரவில்லை. நாம் ஏன் அவரை போற்றவில்லை அல்லது அவர் புகழை பாடவில்லை? ஏனென்றால் நாம் மகிழவில்லை. இறைவன் செய்தவற்றை கிரஹித்து உணர்ந்தவுடன் தானாகவே அவரை போற்ற ஆரம்பிக்கிறோம்.
அக்காலத்தில் ரிஷிகளும், சாதுக்களும் காடுகளுக்குச் சென்று இறைவனை தியானம் செய்தனர். அதினால் அவரின் அருளைப் பெற்றனர். தியானம் என்பது இறைவனின் அருட்கொடைகளை நினைவுகூர்வது மாத்திரமல்லாமல், அது நம்மை இறைவனோடு இணைக்கும் இணைப்பாகும். இறைவன் செய்தவற்றை நினைத்துப் பார்க்கும்போதுதான், இறைவன் இருக்கிறார் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.
இவ்வளவு நாட்களாக நாம் காலத்தை விரயம் செய்து விட்டோமே என்ற உணர்ச்சி ஏற்பட்டவுடன், நாம் அவரைப் பற்றி இன்னும் அறிந்துகொள்ள அவா ஏற்படுகிறது. நாளுக்கு நாள் தியானம் செய்ய, செய்ய நாளுக்கு நாள் நாம் இறைவனுடன் ஒன்றர கலக்க வழி வகுக்குகிறது. ஆகவே தியானம் செய்வோம். இறைவனுடன் இணைந்திருப்போம்.
– முற்றும்.

Filed under: ஆன்மீக கட்டுரைகள்