தமிழ் | తెలుగు

» ஆசிரியர் குறிப்பு » ஆசிரியர் உரை – ஜனவரி 2021

ஆசிரியர் உரை – ஜனவரி 2021

அன்பார்ந்த ஆன்மீக சகோதர சகோதரிகளே,
ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்!
2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-ம் தேதி நீதியுக ஸ்தாபக விழாவானது மனுஜோதி ஆசிரமத்தில் எளிய முறையில் கொண்டாடப்பட்டது.
உலகெங்கிலுமுள்ள பக்தர்கள் தங்கள் இல்லங்களில் ஆதிபலி அன்புக் கொடியை ஏற்றினர். ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் மகிமையின் பிரசன்னம் அந்த நாள் முழுவதும் இருந்ததை அனைவராலும் உணர முடிந்தது. வரவிருக்கும் ராம ராஜ்ஜியத்தை பறைசாற்றி பிரகடனம் செய்யும் விதமாகவும், வைகுண்ட லோகத்தில் நிலவும் தெய்வீக அன்பிற்கு சாட்சியாகவும் நாம் கொடியேற்றுகிறோம்.
ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு நான் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் சிலருடன் ஆந்திரா மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளுக்கு சென்று வந்தேன். அதேவிதமாக என்னுடைய சகோதரன் திரு. D. லியோ பாலுடன், ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் சிலரும் தெலுங்கானா மற்றும் ஆந்திராவிலுள்ள பல இடங்களுக்கு சென்று பக்தர்களை சந்தித்தார்கள்.
பருத்தியின் பூவாகிய பஞ்சிலிருந்து திரிக்கப்படும் ‘நூல்’ ஆடை நெய்வதற்கு உரியதாகும். இறைவனின் வாயினால் உரைத்த அறிவுரைகள் அடங்கிய வேதங்கள் எனும் ‘நூல்’ மனிதர்களின் வாழ்க்கை நலத்திற்கு உரியதாகும்.
“வனையப்பட்ட நூல் ஒருவரின் வடிவ வனப்புக்கு வகையாகிறது.
வரையப்பட்ட வேத நூல் ஒருவரின் வாழ்வு வளத்திற்கு வழியாகிறது”.
இருவகை நூலுமே இன்றியமையாததாகும். என்றாலும் வேத நூல்கள் வரையறைக்கு உட்பட்டதும், வாழ்வின் வளத்திற்குரியதும், காலங்கடந்து நிற்கும் நேர்த்திக்குரியதாகும். மேலும் வேத நூல்கள் கவித்துவத்தின் வெளிப்பாடாய், கருத்துக்களின் உள்ளீடாய், முக்காலத்திற்கும் பொருந்தும் கருத்துக்களடங்கியவையாகும். ஏழு கடல்கள் அடங்கிய நம் உலகத்தில் பல மதங்கள் இருந்தபோதிலும் பெரும்பான்மையான மதங்கள் ஒன்பது.
பௌத்த மதத்தின் வேதம் திரிபிடகா, இஸ்லாமியர்களின் வேதம் குர்-ஆன் மற்றும் ஹதீஸ், சீக்கியர்களுக்கு குருக்ரந்த சாஹீப் வேதமாகும். பஹாய் மதத்தை பின்பற்றுபவர்களின் வேதம் கித்தாபி-அக்தாஸ், ஜைனர்கள் ஆகமங்கள் எனும் வேதத்தைப் பின்பற்றுகிறார்கள்.
யூதர்களின் வேதம் ‘தல்மூத்’, கிறிஸ்தவர்களின் வேதம் விவிலியம், இந்துக்களின் வேதம் நான்கு வேதங்கள், உபநிஷத்துக்கள் மற்றும் ஸ்ரீமத் பகவத்கீதை. பார்சி மதத்தைச் சேர்ந்தவர்கள் ‘அவெஸ்தா’ எனும் வேதத்தை வாசிக்கிறார்கள். சீனாவில் தோன்றிய கன்ஃபூசியஸ் எழுதியது ‘லன்-யூ’, ‘உஷின்ங்’ மற்றும் ‘சி-ஹூ’. தாவோயிசம் என்ற சீன சமய தத்துவக் கோட்பாடுகளடங்கிய நூல் ‘தாவோ தே சிங்’.
வேதங்கள் எனும் நூலினால் நெய்யப்பட்ட ஆடையை நாம் அணிய வேண்டும். இறைவனுக்குள் ஐக்கியமாக இருப்பவர்கள் இத்தகைய ஆடையை அணிய வேண்டும். நூல் இருக்கிறது, அதாவது வேதங்கள் இருக்கிறது. அவற்றையெல்லாம் துணியாக நெய்யக்கூடிய நெசவாளர் தேவையல்லவா? அதற்காக இறைவனே இப்பூமிக்கு இறங்கி வந்து, எல்லா வேதங்களின் சாராம்சத்தையும் ஒரு ஆடையாக நெய்து கொடுத்திருக்கிறார். அனைத்து வேதங்களின் சாராம்சம் என்ன? இறைவன் ஒருவரே! நாமெல்லாரும் ஒரு குலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உயரிய, உன்னத உலகளாவிய தத்துவமே அதின் சாராம்சமாகும்.
நதிகள் கடலில் சங்கமித்த பின்னர் அவை கடல் நீர் என்றே அழைக்கப்படும். இது கங்கை நீர், வைகை ஆற்று நீர், தாமிரபரணி நீர், காவிரி நீர் என்று கூறப்படுவதில்லை. அதைப் போலவே எல்லா வேதங்களும் அதை எழுதிய நாயகனாகிய, மூல கர்த்தாவாகிய ஸ்ரீமந் நாராயணரின் கல்கி அவதாரத்திடம் சங்கமித்த பின்னர், அவை ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்ற தத்துவமாகி விடுகிறது. இப்பொழுது வேதங்கள் என்ற நூலிலிருந்து நெசவு செய்த ஆடையை, இறைவனுக்குள் ஐக்கியப்பட வேண்டும் என்று விருப்பம் கொண்டவர்கள் அணிந்துகொள்ள வேண்டும். ஆனால் அதற்கு முன்பாக அவர்கள் பூலோக சரீரமெனும் ஆடையை களைய வேண்டும். எவரேனும் ஒரு ஆடைக்கு மேலேயே இன்னொரு ஆடையை அணிவார்களா? இல்லை. ஆகவே இறைவன் கொடுக்கும் நவானி தேஹி எனும் ஆடையை அணிய, முதலில் நம் ஐம்புலன்களை களைய வேண்டும். அதுவே ‘பிரம்ம நிர்வாணம்’ என்று அழைக்கப்படுகிறது. நம்முடைய மனதின் எண்ணங்கள், சிந்தனைகள், சொந்த அறிவு ஆகியவை நம் சொந்த ஆடையாகும். அதை களையும்போது, அதாவது நம் சுய இஷ்டங்கள், எண்ணங்கள், திட்டங்கள், சிந்தனைகள் ஆகியவற்றை உபயோகிக்காமல் இருப்பதே ‘பிரம்ம நிர்வாணமாகும்’. பிரம்ம நிர்வாணம் என்ற நிலையை நாம் அடைந்த பின்னர், நமக்கு புதிய தேஹத்தை கொடுக்கிறார்.
கீதை 2:22: “மனிதன் எவ்வாறு நைந்து போன துணிகளை எறிந்துவிட்டு வேறு புதியவற்றை எடுத்துக் கொள்ளுகிறானோ அவ்வாறே உடலில் உறைபவன் நைந்துபோன உடல்களை விட்டுவிட்டு வேறு புதியவற்றை அடைகிறான்”.
சமஸ்கிருத ஸ்லோகத்தில் ‘நவானி தேஹி’ என்று குறிப்பிடப்பட்டுள்ள புதிய தேகமே இறைவன் நமக்கு கொடுக்கும் புதிய ஆடை. ஐம்புலன்களடங்கிய தேகத்திலிருக்கும் நாம், நான், எனது, என் குடும்பம் போன்றவற்றையும், ‘நான்’ என்ற அகங்காரத்தையும் ஒழிக்கும்போது இறைவன் புதிய தேகத்தை அருளுகிறார். ஆக கல்கி மகா அவதாரமாக வந்த ஸ்ரீமந் நாராயணரின் நோக்கம் நாம் அதை பெறும்போது நிறைவடைகிறது.
இதே கருத்து வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது. II கொரிந்தியர் 5:1,2: “பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம். ஏனெனில், இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து, நம்முடைய பரம வாசஸ்தலத்தைத் தரித்துக்கொள்ள மிகவும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம்”.
“மனிதர்கள் தங்கள் மனதை மாற்ற வேண்டும் அப்பொழுது இறைவன் மனிதர்களின் தேகத்தை மாற்றுகிறான்”. இதை அவர் நொடிப்பொழுதில் செய்வார். நாம் நம்முடைய மனதை இன்றே மாற்ற ஆரம்பிப்போம்!!!
உலகத் தமிழ் வாசகர்களுக்காக www.manujothi.com என்ற இணைய தளத்திலும் மனுஜோதி இதழை வெளியிட்டு வருகிறோம். இந்த இதழை நீங்களும் படித்து இன்புற்று, மற்றவர்களும் படித்துப் பயன்பெற உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து உதவுங்கள். தர்மத்தை நிலைநாட்டும் பணியில் அனைவருக்கும் பங்கு உண்டு. இந்த உலகத்தை மூடியிருக்கும் இருளை அகற்ற மனுஜோதி தீபத்தை ஏற்றி வையுங்கள். இருள் தானாக மறைந்துவிடும்.
வானம், பூமி, சமுத்திரம் யாவையும் படைத்த பரமபுருஷராகிய ஸ்ரீமந் நாராயண மூர்த்தியாம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவுக்கே எங்கள் கனம், துதி, மகிமை யாவும் உரித்தாகுக!

– ஆசிரியர்

Filed under: ஆசிரியர் குறிப்பு