தமிழ் | తెలుగు

» ஆன்மீக கட்டுரைகள் » காலஞானம்

காலஞானம்

தொடர்ந்து மனுஜோதி இதழை வாசித்து வரும் அன்பர்கள், ‘காலஞானம்’ போத்தலூரி வீரபிரம்மம் அவருடைய வாழ்க்கையில் இறைவன் அருளால் செய்த அநேக அற்புதங்களையும், அறிந்திராத செய்திகளையும் வாசித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
ஆந்திர மாநிலத்தில் தோன்றிய வீரபிரம்மம் திருநெல்வேலிக்கு அருகே வருகை புரிந்து, ஸ்ரீமந் நாராயணரைப் பற்றிய கருத்துக்களைக் கூறி மக்களை விழிப்படையச் செய்து, உண்மையான நாராயணரை கண்டுகொள்வதற்கு வழிகாட்டியாக இருந்தார் என்பது பற்றிய கருத்துக்களை தொடர்ந்து வெளிவந்த இதழ்களின் மூலம் அறிந்துகொண்டோம். வாசக அன்பர்களுக்கு என்னுடைய மனப்பூர்வமான நன்றியும், பகவான் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்களின் நாமத்தில் வாழ்த்துதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு இறைவனை அடைய வழி தேடிய மக்களுக்கு இறைவனிடம் சேர்வதற்கு அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டவர்கள்தான் தீர்க்கதரிசிகள், ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள், தொண்டர்கள், நாயன்மார்கள் மற்றும் திருவள்ளுவரைப் போன்ற தெய்வப் புலவர்கள். அவர்கள் இறைவனின் திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றி முடித்தார்கள். அவர்களுடைய இறைதொண்டின் பலனாக இன்று நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது நமக்கு மட்டுமே வெளிச்சம்.
ஸ்ரீ வீரபிரம்மம் அவர்கள் “வித்துலேனி பண்டு விஸ்வமுலோ உண்டு” என்று தெலுங்கு மொழியில் கூறியுள்ளார். அப்படியென்றால் “விதையில்லா பழம் ஒன்று உண்டு. அதுவும் பூமியிலே உள்ளது. அதைக்கண்டு கொள்ளுங்கள்” – என்று பொருள் விளங்க கூறியுள்ளார். வித்து இல்லையென்றால், அவர் பிறப்பு இறப்பு இல்லாதவர் என்று அர்த்தமாகும். இறைவன் ஒருவரே பிறப்பு, இறப்பு எல்லாவற்றையும் கடந்தவர்.
சென்ற இதழ்களில் குறிப்பிட்டபடியே அவ்விதமாக இப்பூமியில் தோன்றிய இறைவன் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்களே என்பதை நாம் அனைவரும் வாசித்து தெரிந்துகொண்டுள்ளோம். ஆனால் அவரை அடைவது எப்படி, அவருடன் ஒன்றுபடுவது எப்படி, அதற்கான முயற்சிகளை அனுதினமும் செய்துகொண்டு வருகின்றோமா? என்பது நமக்கு நாமே கேட்டுக்கொள்கின்ற கேள்வியாக இருக்கின்றது.
உதாரணத்திற்கு, மனிதர்களாகிய நாம் விலையுயர்ந்த தங்கத்தால் ஆன ஆபரணங்களை கை, கழுத்து, மூக்கு, காதுகளில் அணிகின்றோம். தங்கம் மண்ணிலிருந்து தோண்டி எடுக்கப்படுகிறது. தங்கத்தின் பிறப்பிடம் மண்தான். ஆனால் அதை ஏழு முறை புடமிட்டு, வகை வகையான நகைகளாக நாம் அணிந்து மகிழ்கிறோம். அதன்மூலம் நம்முடைய செல்வாக்கின் உயர்வையும் நாம் காண்பித்து கொள்கிறோம்.
மற்றொரு உதாரணமாக எடுத்துக்கொள்வோமானால் சாதாரணமாக எல்லா வீட்டிலும் உபயோகப்படுத்தும் பொருள் பால். பாலை நாம் நன்றாக காய்த்து அதை பத்திரப்படுத்தும்போது, ஒருநாள் முழுவதும் அது கெடாமல் இருக்கிறது. அடுத்த நாள் அது கெட்டுவிடும். அதே பாலில் சிறிது பொறை ஊற்றி அதை தயிராக மாற்றும்போது, தயிரானது ஒன்று, இரண்டு நாட்கள் நன்றாக இருக்கும். மூன்றாவது நாள் புளிக்க ஆரம்பித்து விடும். ஆனால் தயிரை நாம் மோராக கடையும்போது, நமக்கு வெண்ணெய் கிடைக்கின்றது. அந்த வெண்ணெயை காய்க்கும்போது, அது அருமையான நெய்யாக மாறுகின்றது. நெய்யாக மாறிய பின்னர் அதை பத்திரப்படுத்தினால், அது கெடாமல், வெகு நாட்கள் இருக்கும். அருசுவை உணவிலும், பலகாரங்களிலும் சேர்த்து நாம் உபயோகப்படுத்தி வருகின்றோம்.
அதேபோல அருமையான நண்பர்களே, மனுஜோதி இதழை வாசித்து வரும் நீங்கள் இன்று பால் என்ற நிலையில் இருக்கிறீர்களா? அல்லது தயிர், மோர், வெண்ணெய் எல்லாவற்றையும் கடந்து நெய்யின் நிலைக்கு உயர்ந்திருக்கிறீர்களா என்று நீங்கள் ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் இது கலியுகம். இன்றைக்கு உலகத்தில் எங்கு பார்த்தாலும் அழிவுகளும், கொள்ளை நோய்களும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. கடந்த மாதங்களில் “கொரோனா” என்ற தொற்று நோய் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகின்றது. வல்லரசு நாடுகளாக இருந்தாலும், சாதாரண நாடுகளாக இருந்தபோதிலும், அதில் வாழும் அனைத்து மக்களும் இன்று மரண பயத்தில் சிக்கி, தப்பிக்க வழிகளை தேடிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் வருகையை தெரிந்துகொண்டு அவரையும், அவருடைய உபதேசங்களைப் பின்பற்றும் மக்களுக்கு எந்தவிதமான பயமும் தேவையில்லை என்பதை ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் கூறியுள்ளார்கள்.
எனவே அன்பர்களே, வீரபிரம்மம் குறிப்பிட்ட ஆனந்த ஆசிரமத்தில் அமர்ந்துள்ள ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்களின் உபதேசங்களை அறிந்துள்ள நாம் அவற்றை வாசிப்பது மட்டுமல்லாது, அவருடைய உபதேசங்களைக் கடைபிடித்து நடப்போமானால், வருகின்ற அழிவுகளினின்று நம்மை காத்துக்கொண்டு அவருடன் ஒன்றுபட்டு வாழ்வதற்காக ஒரு உயர்ந்த நிலைமைக்கு நாம் வருவோம்.
வள்ளலார் குறிப்பிட்டுள்ளபடி “ஞான செங்குமுதம் மலர வரும் மதியே” என்ற சொல்லிற்கேற்ப செங்குமுதம் மலர்களாக, மதி (சந்திரன்) என்ற ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பிரகாசத்தால் செங்குமுத மலர்களாக மலர்ந்து அவருடன் ஒன்றுபடுவோம். ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் அருள் எப்பொழுதும் நீங்கள் நிறைவாக பெற வேண்டுமென்று கூறிக்கொண்டு காலஞான தொடர் கட்டுரையினை முடிக்கிறேன். தீர்க்கதரிசிகளை குறித்து வாசித்து தெரிந்துகொண்டவிதமாக அடுத்த இதழிலிருந்து வேறு தலைப்பில் சந்திப்போம்.
ஓம் நமோ பகவதே ஸ்ரீ லஹரி கிருஷ்ணாய நமஹ!
– முற்றும்.
– D. பத்மநாபன், இறைத்தொண்டர், நெல்லூர்

Filed under: ஆன்மீக கட்டுரைகள்