தமிழ் | తెలుగు

» ஆன்மீக கட்டுரைகள் » கண்ணன் – என் தாய்

கண்ணன் – என் தாய்

எட்டையாபுரத்து சிங்கம் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பலவிதமான பாடல்களை எழுதினார். தெய்வப் பாடல்களில் ‘கண்ணன் பாட்டு’ என்ற தலைப்பில் 23 விதமாக கண்ணனை பாடியுள்ளார். ‘கண்ணன் – என் தாய்’ என்ற பாடல் 1913-ம் ஆண்டு அக்டோபர் மாத்தில் ஞானபாநு இதழில் வெளிவந்தது.
இறைவன் மேலுள்ள அன்பை பக்தியை அவர் பல கோணங்களில் அனுபவித்து எழுதியுள்ளார். ஸ்ரீமத் பகவத்கீதையில் அர்ச்சுனன் ஸ்ரீ கிருஷ்ணரிடம் மகனுக்குத் தந்தையாகவும், தோழனுக்குத் தோழனாகவும் காதலிக்கு காதலனாகவும் அருள் செய் என்று வேண்டுகிறார். ஆழ்வார்கள், நாயன்மார்கள், இன்னும் பலர் இறைவனை பல்வேறு விதமாக போற்றி, பக்தி செய்து புகழ்ந்து பாடல்களை எழுதினர்.
பாரதியாரின் நோக்கு மிகவும் வேறுபட்டதாக உள்ளது. அவருடைய பாடல்கள் அன்பின் வெவ்வேறு பரிமாணங்களை கூறுகின்றது. இந்தப்பாடலில் இறைவனை தாயாக வர்ணிக்கிறார். தாயன்பிற்கு நிகரான அன்பு இல்லை என்பது உலகளாவிய கருத்து. தாய்-மகன் இது ஒரு உறவு. இந்த உறவு போதுமானதா? இல்லை, தந்தை அன்பும் வேண்டும். அதன்பின்னர் இளமைப் பருவத்தில் தோழர்களின் அன்பு – அவர்களோடு உறவாடுகின்றோம். அத்தோடு உறவு நின்று விட்டதா? இல்லை, காதலன் அல்லது காதலியின் அன்பு தேவைப்படுகிறது. அதன்பின் குழந்தையின் அன்பிற்காக ஏங்குகிறோம்.
மனிதனின் உறவு என்பது இவ்வாறு நீண்டுகொண்டே சென்று இறுதியில் மானிட அன்பெல்லாவற்றையும் வென்ற அல்லது அதை தோற்கடிக்கக்கூடிய ஒரு அன்பிற்காக ஏங்குகிறோம். அதுவே பரிபூரணமான அன்பு. அதுதான் ‘இறையன்பு’. சிலர் இதை பக்தி என்றும் குறிப்பிடுகிறார்கள்.
“உண்ண உண்ணத் தெவிட்டாதே-அம்மை
உயிரெனும் முலையினில் உயர்வெனும் பால்:
வண்ணமுற வைத்தெனக் கே-என்றன்
வாயினிற்கொண் டூட்டுமோர் வண்மையுடையாள்,
கண்ணனெனும் பெயருடையாள்-என்னைக்
கட்டிநிறை வான் எனுந்தன் கையி லணைத்து
மண்ணெனுந்தன் மடியில் வைத்தே-பல
மாயமுறுங் கதைசொல்லி மனங்களிப் பாள்”
உண்ண உண்ண தெவிட்டாத ஞானப்பாலை தருபவர் இறைவன். ஒரு பள்ளியில் மாணவர்கள் படித்தால் மட்டும் போதுமா? இல்லை, படித்தபின் அதை அவர்கள் கற்றுத் தெளிந்தார்களா என்பதற்கு பரீட்சை வைக்கப்படுகிறது. அதைப் போலவே ஞானப்பாலை ஊட்டிய இறைவன் என்னும் அன்னை, நாம் கற்று தேறினோமோ என பரீட்சிக்க, நம்மை சோதிக்க பல கதைகளை கூறி ஒரு தாய் தன் பிள்ளைக்கு கற்றுத் தருவதுபோல, வாழ்க்கையில் முன்னேற இறைவன் நமக்கு இன்பத்தையும், துன்பத்தையும், தோல்விகளையும், வீழ்ச்சிகளையும் அனுபவிக்கும்படி செய்து நம்மை பக்குவமடைய செய்கிறார்.
மனப்பக்குவம் அடைய இறைவன் நமக்கு தாயைப்போல ‘பல மாயமுறுங் கதை சொல்லி மனங்களிப்பாள்’. சிறுவயதில் நல்ல கருத்துக்களை தாயானவள் கதைகள் மூலமாக கூறி தன் பிள்ளைகளின் மனதில் நல்ல கருத்துக்களை விதைக்கிறாள். அதைப்போல இறைவனும் மாயையான இந்த உலகில் இன்பமும், துன்பமும் மாயை, இவ்வுலகம் மாயை என்று கூறி சிற்றின்பத்தை விட்டு பேரின்பத்தின்பால் அழைத்து செல்கிறார்.
“இன்பமெனச் சில கதைகள்-எனக்
கேற்றமென்றும் வெற்றி யென்றும் சில கதைகள்
துன்பமெனச் சில கதைகள்-கெட்ட
தோல்வியென்றும் வீழ்ச்சியென்றும் சில கதைகள்
என்பருவம் என்றன் விருப்பம்-எனும்
இவற்றினுக் கிணங்கவென் னுளமறிந்தே
அன்பொடவள் சொல்லிவரு வாள்:- அதில்
அற்புதமுண் டாய்ப்பர வசமடை வேன்.
விந்தைவிந்தை யாக எனக்கே-பல
விதவிதத் தோற்றங்கள் காட்டுவிப் பாள்”.
கதைகள் மூலமாக பாடம் சொன்ன தாய் அடுத்ததாக பொம்மைகளை காண்பித்து மகிழ்விக்கிறாள். சந்திரன், சூரியன், மழைபொழியும் மேகம், கணக்கிலடங்கா நட்சத்திரங்கள் இவையெல்லாம் மனிதர்களுக்காக செய்யப்பட்ட பொம்மைகள். இந்த பொம்மைகள் பேசுவதேயில்லை. அவை மோனத்திலேயிருக்கும். எனினும் அது ஒரு மொழி பேசுகிறது.
இதே கருத்தை விவிலியத்தில் தாவீது என்னும் அரசன் இறைவனைப் போற்றி எழுதிய “சங்கீதம்” எனும் புஸ்தகத்தில் காணலாம். சங்கீதம் 19:1-4: “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாய விரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது. அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை. ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறது; அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார்”.
இறைவனின் படைப்பில் மனிதர்கள் மட்டுமே பேசுகிறார்கள். இறைவன் படைத்த இயற்கை மற்றும் வானத்திலுள்ளவை, விண்வெளியிலுள்ளவை பேசுகிறதில்லை என்று தாவீது குறிப்பிடுவதோடு ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும் ஒலிக்கிறது என்கிறார். மௌனமே அவைகளின் மொழி, இறைவன் வகுத்த நியமத்தின்படி அவை இயங்குவதின் மூலம், இறைவனின் கட்டுப்பாட்டில் இயங்குங்கள் என்று அவைகள் மனிதர்களுக்கு சொல்லாமல் சொல்கின்றன.
மகாத்மா காந்தியடிகள் இக்கருத்தை மிகவும் அழகாக கூறியுள்ளார். “மணிக்கணக்காக பிரசங்கம் செய்வதைப் பார்க்கிலும் ஒரு அவுன்ஸ் அளவு பயிற்சி செய்தல் அல்லது பழக்கப்படுத்தி கொள்வது என்பது மிக மதிப்பு வாய்ந்தது. அவைகள் என்ன கூறுகின்றன? இறைவனின் கட்டுப்பாட்டில் வாழ், உனக்கருளிய இடத்தில் நில் அதாவது உனக்கு கொடுக்கப்பட்ட வாழ்க்கையை வாழ வேண்டும். இறைவனின் ஆணைப்படி வாழ வேண்டும் என்பதை கூறுகின்றன.
– தொடரும்….

Filed under: ஆன்மீக கட்டுரைகள்