தமிழ் | తెలుగు

» ஆன்மீக கட்டுரைகள் » கணங்களின் அதிபதி கணபதி

கணங்களின் அதிபதி கணபதி

இந்தியாவில் சுமார் கி.மு. 3-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 3-ம் நூற்றாண்டு வரை ஆந்திர மாநிலம், அமராவதி சிற்பங்களில் விநாயகரின் உருவம் காணப்படுகிறது.
இந்திய தேசத்தில், ஏன் முழு உலகமெங்கிலும் கணபதியை வணங்காதவர்கள் கிடையாது. ஹைதராபாத், மஹாராஸ்டிரா, மத்திய பிரதேசம், இராஜஸ்தான், புவனேஷ்வர், ஒடிசா, பஞ்சாப், உத்திர பிரதேசம், காசியில் ஆரம்பித்து, தமிழ்நாட்டில் திருநெல்வேலி வரை அனைத்து மாநிலங்களிலும் கணபதியை வணங்காதவர்கள் இல்லை எனலாம்.
இந்துக்கள் ஒரு வியாபாரத்தை துவக்குவதற்கு முன்பாக, பரீட்சை எழுதுவதற்கு முன்பாக, ஒரு நல்ல காரியம் செய்வதற்கு முன்பாக ‘உ’ என்ற தமிழ் எழுத்தை அதாவது பிள்ளையார் சுழியை போட்டுத்தான் ஆரம்பிப்பார்கள். பிள்ளையார் சுழியை ‘உ’ என எழுதும்போது சிறு வட்டத்தில் துவங்கும். வட்டத்திற்கு முடிவே கிடையாது. அதன்பின் வளைந்து நேர்கோடு நீளும். சமஸ்கிருதத்தில் “ஆர் ஜவம்” எனப்படும்.
இதற்கு நேர்மை என்பது பொருள். “வளைந்தும் கொடு, அதே சமயம் நேர்மையை கைவிடாதே” என்பதே பிள்ளையார் சுழியின் தத்துவம். ‘உ’ என்ற தமிழ் எழுத்து கணபதியின் உருவத்தைக் குறிக்கிறது. கணபதி ஓங்காரத்தின் வடிவம். ஆகவேதான் இந்துக்கள் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கிறார்கள். அதினால்தான் புலவர்கள் எல்லாரும் விநாயகர் துதியை பாடியபிறகுதான் தங்கள் பாடல்களை எழுதுவார்கள்.
“ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும்
எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக்
கொழுந்தினைப் புந்தியில் வைத்து அடி
போற்றுகின்றேனே” என்று திருமூலரும் பாடியிருக்கிறார்.
இளம்பிறைச் சந்திரனைப் போன்ற வளைந்த தந்தத்தையும், ஐந்து கைகளையும், யானை முகத்தையும் உடைய சிவபெருமானின் திருமகனும், அறிவுக்கொழுந்தாக உள்ளவனுமான விநாயகனை உள்ளத்தில் வைத்து, அவன் திருவடிகளையும் போற்றுகிறேன் என்பது இதன் பொருளாகும்.
இறைமக்களுக்கு பரிசுத்த விவிலியத்தில் இறைவன் கொடுத்த கட்டளை என்னவென்றால்: யாத்திராகமம் 20:4: “மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்.” என்று கூறப்பட்டுள்ளது. எனவே இந்த கட்டளையினை கடைப்பிடிக்கும் விதமாக வானத்திலும் பூமியிலும் இல்லாத ஒரு உருவத்தை அவர்கள் வணங்கினார்கள். இறைவன் கொடுத்த கட்டளையை மீறாதபடி இறை மக்களின் தெளிவான அறிவு அவர்களைக் காப்பாற்றியது.
இந்தியாவில் இரண்டு வெவ்வேறு குழுவினர் இருக்கிறார்கள். ஒரு சாரார் ஆதி வேள்வி அல்லது பிரம்ம யக்ஞத்தை நம்புகிறவர்கள். இவர்கள் மரத்தையும் கல்லையும் சேவிப்பவர்கள், இறைவனை தத்துவங்களாக, அதாவது அவருடைய குணாதிசயங்களை குறிப்பிடும் அர்த்தமுள்ள உருவங்களாகச் செய்து வழிபடும் கீழ்ப்படிதலுள்ள மக்கள்.
இந்து தேசத்தின் கீழ்ப்படிதலுள்ள மக்கள் இறைவனை அறிந்து உணர்ந்திருக்கிறதினால் அவர்கள் பிள்ளையார் என்ற தத்துவத்தை உருவமாக கொண்டு பூஜிக்கவும், நமஸ்கரிக்கவும் செய்தார்கள். ஏனென்றால் மேலே வானத்திலும், கீழே பூமியிலும் யாதொரு உருவமும் இல்லாத ஒரு சொரூபம்தான் விநாயகரின் உருவம்.
இவ்விதமான சிருஷ்டி வானத்திலோ, பூமியிலோ, பூமியின் கீழோ இல்லை. யானைத் தலையானது ஸ்ரீமந் நாராயணருடைய மகத்தான ஞாபக சக்தியைக் குறிக்கிறது. அதினிமித்தம் அவர் தம்மில் பாகமானவர்களை திரும்பவும் கொண்டுவந்து, மறுபடியும் கூட்டிச் சேர்க்கும் வாக்குத்தத்தத்தை ஒருபோதும் மறக்கமாட்டார் என்பதைக் குறிக்கிறது.
இந்தியர்கள் தத்துவத்தை பூஜிப்பதால் இறைவன் இயற்கையின் மூலமாக நம்மை போஷிக்கின்றார் என்று அறிந்து வைத்திருந்தார்கள். மெய்யான ஒளியைப்பற்றி அறிந்த மக்கள் சிலர் இருந்தனர். போகர்கூட அனைவருக்கும் கல்லறை இருக்கிறது. ஆனால் விநாயகருக்கு கல்லறையே இல்லை என்று ஆராய்ந்தறிந்து கூறுகின்றார். விநாயக பெருமானை வழிபடுபவர்களின் கூற்று என்னவாக இருந்தாலும் இறங்கி வந்த ஸ்ரீமந் நாராயண மூர்த்தியாம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் கணபதியை பற்றி கூறும்போது: “கண+பதி=கணங்களின் அதிபதி. அதுவே கிறிஸ்தவர்களின் விவிலியத்தில் சேனைகளின் கர்த்தர் என்று அழைக்கப்படுகிறார். நீங்கள் எல்லா வேதங்களையும் வாசித்தால்தான் உங்களின் வேற்றுமை அகலும்”.
இந்தியர்கள் விநாயக பெருமானுக்கு தொந்தியை வைத்தார்கள். அவரின் கருணைக்கு தும்பிக்கையும், இனிப்பான உணவுகள் உண்பதற்கு அவர் வாயில் இருந்து முத்தான லட்டு போன்ற வார்த்தைகளையும் அருளுவார் என்பதை கற்பனை செய்து விநாயகரை வழிபட ஆரம்பித்தனர். ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் கூறும்போது: “முருகன் என்றால் அழகன் என்று பொருள். கறுப்பானவராக இருந்தாலும் அவர் அழகர். சிவன், பார்வதி, கணபதி, முருகன் என்றெல்லாம் அழைக்கப்பட்டாலும், அவை ஒரே இறைவனின் காரணப் பெயர்கள். எவ்வாறு ஒரு குடும்பத்தில் தகப்பன், தாய், பிள்ளைகள் இருக்கின்றார்களோ, அதேவிதமாக சிவனாகவும், தாயுமானவராகவும், குருவாகவும், சத்தியமானவராகவும் உள்ளார்.”
இயற்கையினை கட்டுப்படுத்தும் சக்தி கணங்களின் அதிபதிக்கு உண்டு என்று பக்தர்கள் திடமாக நம்புகின்றனர். கணபதி யானைத் தலையுடன் இருப்பதற்கு அநேக கதைகள் இருக்கிறது. எத்தனை நூற்றாண்டுகளானாலும் மறக்காத இறைவன் என்பதற்காக யானைத் தலையை வைத்திருக்கிறார்கள். இந்த விதமான உருவத்தை எங்கேயாவது பார்த்திருக்கிறீர்களா? இவை எல்லாம் தத்துவங்கள். அதைத்தான் போகர் எழுதுகிறார்: “எல்லா கடவுளையும் பார்த்தேன்; அதற்கு கல்லறை தோட்டம் இருக்கிறது. ஆனால் கணபதிக்கு மட்டும் கல்லறை இல்லை. ஏனென்றால் அவர்கள் தத்துவத்தை கும்பிடுகிறார்கள். தத்துவத்துக்கு கல்லறை உண்டா? இல்லை. கணபதியின் மிகவும் பிரசித்தி பெற்ற பெயர் ‘ஹேரம்ப கணபதி’ – இதற்கு ஐந்து யானைத் தலைகள் உள்ளது. ஐந்து தலை கொண்ட ஒரு உயிர் இருந்திருக்கிறதா? இல்லை. அவ்வளவு சக்தி உண்டு என்று அர்த்தம்.
இது மாத்திரமல்ல, கைகளால் தொட வேண்டாம். ஐம்புலன்களும் வேண்டாம். அந்த சுவாசத்திலேயே அறிந்துகொள்வார். அவர் தம் ஆன்மாவின் மூலமாக அறிந்துகொள்வார். அதற்குத்தான் துதிக்கையை போட்டு துதிக்கை ஆசீர்வாதம் பண்ணுகிறார் என்கிறார்கள். தும்பிக்கையானது அவருடைய கை, தம்முடைய ஜனங்களைக் காப்பாற்ற உலகத்தின் எந்தப் பகுதிக்கும் செல்கிறது என்பதைக் காண்பிக்கிறது. விநாயகருக்கு ‘ஏகதந்தன்’ என்ற பெயரும் உண்டு. பொதுவாக யானைக்கு இரண்டு தந்தம் இருக்கும். ஆனால் கணபதிக்கோ ஒரு தந்தம் உடைந்ததாக காட்சியளிக்கிறார்.
இதற்கு ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா என்ன கூறுகிறாரென்றால், “இறைவனின் சிருஷ்டியில் முன்பு கலியன் இறைவனுக்கு மெய்க்காப்பாளனாக இருந்தான். இறைவனுடைய இடத்திற்கு வர வேண்டும் அதாவது அவருடைய அதிகாரத்தையே கைப்பற்ற வேண்டும் என்று நினைத்தபோது, அந்த கெட்ட சிந்தனையை அறிந்த இறைவன் அவனை கீழே தள்ளினார். அந்த துரோகத்தின் அடையாளமாகவே விநாயகரின் ஒரு தந்தம் உடைந்து காணப்படுகிறது” என்று கூறுகிறார். கணபதியாருக்கு தொந்தி இருக்கிறது. அவர் வயற்றிற்குள்ளே எல்லாம் இருக்கிறது. அவருக்குள்ளே இருக்கிறவர்கள் எல்லாரும் வயிற்றிற்குள்ளே இருக்கிறார்கள். அதுதான் பெரிய தொந்தி. நாம் எல்லோரும் அவருக்குள் இருக்கிறோம் என்றும், நமக்கு எந்த சேதமும் வராது என்பதையும் அது குறிக்கிறது.
இன்னொரு பெயர் விக்னேஸ்வரன் என்பதாகும். இதற்கு தடைகளை அகற்றுபவர் என்று அர்த்தம். எனவேதான் நற்செயல்களை துவங்கும்போது விநாயகரை வழிபடுகிறார்கள். அத்துடன் கட்டுப்பாடு தேவைப்படுவோருக்கு தடைகளை சிருஷ்டிப்பவரும் அவரே. “மூஷிக வாஹன” என்றும் இவர் அழைக்கப்படுகிறார். எலியை வாகனமாக கொண்டவர். இதுவும் ஒரு தத்துவம்தான். ஊடுருவ முடியாத இரகசியமான எல்லா இடத்தையும் ஊடுருவக்கூடியவர் என்று பொருள்படும்.
இறைவனை அவர்கள் வேறொரு உருவத்தில் சேவித்தபோதிலும் அவரையே சேவித்தார்கள். அவருடைய சக்தியையும், குணாதிசயத்தையும் உருவமாக செய்து தொழுதுகொண்டு வந்தார்கள். இது இறைவனை மிகவும் பிரியப்படுத்தியது. அவர் திரும்ப வருவதற்கு அவர்கள் பொறுமையோடு காத்திருப்பது இறைவனுக்கு சுகந்த வாசனையாக இருந்தது. சுகந்த வாசனை என்றால் என்ன? இறைவன் ஆதியில் செய்த ஆதி வேள்வியை அல்லது பிரம்ம யக்ஞத்தை நினைவு கூர்ந்து செய்யும் செயல் இறைவனுக்கு சுகந்த வாசனை அல்லது நறுமணமாகும். இப்பொழுது அப்படிப்பட்டவர்களுக்காக இறைவன் தாமே கல்கி அவதாரமாக தோன்றி விமோச்சனம் அளிக்க வந்துள்ளார்.
– S. இராஜேந்திர பிரசாத், மனுஜோதி உதவி ஆசிரியர் (தெலுங்கு), விஜயவாடா

Filed under: ஆன்மீக கட்டுரைகள்