தமிழ் | తెలుగు

» பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை » பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணா

பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணா

வெளிநாட்டில் இருந்து வந்த அநேகர், மனுஜோதி ஆசிரமமான சீயோனில் தங்கியிருந்தனர். 197,0 1972 ஆகிய இரு ஆண்டுகளில் மட்டும் சுமார் 3,000 பேருக்கும்மேல் மனுஷகுமாரன் பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு அவரைப் பின்பற்றினர். ஆசிரமத்திற்கு வரும் பக்தர்கள் மிக எளிமையாக வாழ கற்றுக் கொடுக்கப்பட்டனர். மேசை, நாற்காலி, கட்டில் போன்ற வசதிகளும் இல்லை. ஆசிரமத்திற்கு அருகில் ஹோட்டல், கடைகள்  என்று எதுவும் கிடையாது.
சாலை வசதி இல்லை, பஸ் வசதி இல்லை, மின் இணைப்பு இல்லை. ஆசிரமத்தில் அளிக்கப்படும் எளிமையான உணவை ஏற்றுக் கொண்டனர். அவர்கள் எல்லோரும் பொதுவான உணவை உட்கொண்டு, ஜாதி, மதம், தேசம் என்ற பாகுபாடின்றி ஆசிரமத்தில் தங்கியிருந்தனர். இவர்களுக்கு பைபிள், குர்ஆன், பகவத்கீதை போன்ற பல்வேறு வேதங்கள் குறித்த விளக்கங்கள் அளிக்கப்பட்டன. ஒவ்வொரு நாளும் நடக்கும் முழு இரவு பிரார்த்தனைக் கூட்டங்களில் வெளிநாட்டினர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
யோகா, இசை, இந்திய கலாச்சார ரீதியான தற்காப்பு கலைகள் போன்றவற்றிலும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்தி, தமிழ் போன்ற மொழி பயிற்சியும் அளிக்கப்பட்டது. கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுப்பது, ஆசிரம பண்ணைகளில் வேலை பார்ப்பது, மரம், செடி, கொடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது, சமையல் கூடங்களில் சமைப்பது போன்ற எல்லா வேலைகளையும் அவர்கள் விருப்பமுடன் செய்தனர். இங்கு ஆண்கள் பெண்கள் என இருபாலரும் தங்கியிருந்தனர். சிலர் குழந்தைகளுடன் குடும்பத்தோடு தங்கியிருந்தனர். இந்த குழந்தைகளுக்கும் மொழி பயிற்சி, இசை பயிற்சி மற்றும் வேத பாடங்களும் கற்றுக் கொடுக்கப்பட்டது.
ஐந்து ஆண்டுகள், (1971 முதல் 1976 வரை) சுமார் நூறு முதல் நூற்றி இருபது வெளிநாட்டவர்கள் ஆசிரமத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்தார்கள். ஐந்து ஆண்டுகள் ஆசிரமத்தில் பயிற்சி பெற்றபின், அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு மிகுந்த துக்கத்துடன் திரும்பினர். ஆனால் ஆசிரமத்தை விட்டு அவர்கள் செல்லும்போது விலைமதிப்பில்லாத பொக்கிஷங்களை இங்கிருந்து கொண்டு செல்வதாக அவர்கள் பெருமைப்பட்டுக் கொண்டனர். மிக எளிமையான வாழ்க்கை முறை, அதற்கு தேவையான உழைப்பு, தொன்மையான இந்திய கலாச்சாரம், பாரம்பரிய கதைகள், பைபிள், குர்-ஆன், பகவத்கீதை ஆகிய பல்வேறு வேதங்களின் அடிப்படை உண்மைகள், இவற்றைத்தான் அவர்கள் பொக்கிஷங்கள் என குறிப்பிட்டார்கள்.
ஒவ்வொருவருக்கும் பயிற்சி எடுத்து கொண்டதற்கு அடையாளமாக ‘சான்றிதழ்கள்’ வழங்கப்பட்டன. மனுஷகுமாரன் பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணா அவர்களுக்கு உபதேசித்த உண்மைகளை தங்கள் நாட்டில் இருந்தபடியே உலகுக்கு உணர்த்தும் வேலைகளை அவர்கள் இன்றும் செய்து வருகிறார்கள்.
மனுஜோதி ஆசிரமத்தை தங்கள் பூலோக சொர்க்கமாக அல்லது சீயோனாக கருதுபவர்கள் இன்றும்கூட ஆண்டுக்கு ஒருமுறை ஆசிரமத்தில் நடக்கும் விழாக்களில் கலந்து கொள்கிறார்கள்.
ஆசிரமத்தில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை, இரவு, என மூன்று பொழுதுகளிலும் பிரார்த்தனைகள் நடைபெறும். ஆசிரமத்திலுள்ள அனைவரும் இந்த பிரார்த்தனைகளில் கலந்துகொள்வார்கள். எல்லா பிரார்த்தனைகளிலும் கிறிஸ்தவம், இஸ்லாம் மற்றும் இந்து தங்களுக்குரிய ஸ்தோத்திர பாடல்கள் இடம்பெறும். பாடல்களுக்கு ஊடாக பைபிள், குர்ஆன், பகவத்கீதை ஆகிய வேதங்களையும் படிப்பது வழக்கம்.
1969-ம் ஆண்டில் கடவுள் மனுஷகுமாரனுக்குள் இறங்கி வந்தார். அந்த ஆண்டில் இருந்து காம்ப் கூட்டங்கள் என்று அழைக்கப்பட்ட கூடாரப்பண்டிகை, கல்கி ஜெயந்தி விழா என்ற புதிய பெயரில் மனுஜோதி ஆசிரமத்தில் கொண்டாடப்பட்டது. இன்று வரை இவ்விழாக்களில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த தலைவர்களும் எவ்வித பாகுபாடுமின்றி பங்கு பெற்று வருகின்றனர்.
1969-ம் ஆண்டைப் போலவே 1972-ம் ஆண்டும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக கருதப்பட்டது. பாலாசீர் லாறி வேதங்களில் மறைந்திருந்த உண்மைகளை ஏழு இடிமுழக்க செய்திகளாக வெளிப்படுத்தினார். வேதாகமம் மற்றும் கடவுள் குறித்து அவர் எழுப்பிய நுாறு கேள்விகளுக்கு கிறிஸ்தவ மதத்தினரால் எந்த பதிலையும் இன்றுவரை சொல்ல முடியவில்லை. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும், இந்த அறிவிப்பு மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஜெர்மனி, அமெரிக்கா, கனடா, ஸ்விட்சர்லாந்து, இந்தியா ஆகிய தேசங்களைச் சேர்ந்த இசை கலைஞர்களை வைத்து பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணா “சௌந்தரிய லஹரி சர்வதேச இன்னிசை குழு” என்ற குழு ஒன்றை துவக்கினார்.
இக்குழு அநேக இசைக் கருவிகளை நேர்த்தியாக வாசிப்பதிலும், இசைக்கச்சேரி நடத்துவதிலும், தேர்ச்சி பெற்றிருந்தது. அவருடைய மூன்றாவது மகன் தேவ தயவு இந்த குழுவை நடத்தினார்.
இந்துக்கள், முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்தவர்களின் பிரார்த்தனைக் கூட்டங்களிலும், அவர்களின் குடும்ப விழாக்களிலும் இசை
நிகழ்ச்சிகளை இக்குழு நடத்தியது. கிறிஸ்தவ சபைகளால் அந்திக்கிறிஸ்து எனப் புறக்கணிக்கப்பட்டிருந்த பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணா இந்த நிகழ்ச்சிகளில் கடவுள் பற்றிய உண்மைகளை எடுத்துச் சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்த குழு தமிழ் நாட்டில் மட்டும் அல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலேயும் இசைக்கச்சேரிகளை நடத்தியது. இந்த இசைக்குழுவினால் வடிவமைக்கப்பட்ட பாடல்கள், உலக பிரசித்திபெற்ற ஹெச்எம்வி மற்றும் இன்ரிக்கோ நிறுவனங்களால் இசைத்தட்டுகளாகவும், ஒலிநாடாக்களாகவும் வெளியிடப்பட்டன.
– தொடரும்….

Filed under: பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை