தமிழ் | తెలుగు

» ஆன்மீக கட்டுரைகள் » ஆன்மீக வாழ்க்கை

ஆன்மீக வாழ்க்கை

சென்ற இதழில் ஆன்மீகம் என்ற தலைப்பில் மெய்ஞானமாகிய இறைவனை அடைவது பற்றியும், இறையருளைப் பெருவதைப் பற்றியும் தெரிந்து கொண்டோம். இந்த இதழில் ஆன்மீக வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
உலகில் மனித இனம் உருவான நாளிலிருந்து ஆன்மீகம் என்ற அம்சம் இருந்து வருகிறது. அந்தந்த நாட்டு மக்களின் அறிவு, வாழ்வியல் முறைகள், நாகரீகத்தை பொறுத்து ஆன்மீக நெறிகள் வேறுபடுகின்றன. ஐம்பூதங்களால் உயிருக்கு அச்சம் ஏற்படும் நிலையில், பாதுகாப்பு வேண்டி இறைவனை தேடுவது ஒருவகை ஆன்மீகமாகும். ஒவ்வொரு இன்பத்தையும் அனுபவிக்கும்போது, ஏற்படும் மகிழ்ச்சியினால் நன்றி உணர்வுடன் பகவானை ஆராதிப்பது ஒரு வகை ஆன்மீகம். பகவான் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கூறுவதுபோல ஆன்மீகம் என்பது இறைவனுடன் கூடிய சொந்த அனுபவமே.
நாம் ஆவி, ஆத்துமா, சரீரம் என முப்பரிமாணங்களானவர்கள். இதை உணராமல் பிறப்பது, பின்பு இறப்பது இதுதான் வாழ்க்கை என பலர் நினைப்பதுண்டு. ஆவி, ஆன்மாவினை ஒரு பொருட்டாகவே எண்ணுவதில்லை. மண்ணான சரீரம் மண்ணுக்குள் செல்வதுடன் முடிவடைகிறதா வாழ்க்கை?
“தேடிச் சோறு நிதம் தின்று – தினம்
சின்னஞ் சிறு கதைகள் பேசி – மனம்
வாட துன்ப மிகவுழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் புரிந்து – நரை
கூடி கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக்கு இரையென மாயும்
பல வேடிக்கை மனிதரைபோல
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ?”
ஆனந்த சுதந்திரம் பற்றி பாடின ஆன்ம கவிஞர் பாரதியார் என்ன கூறுகிறாரென்றால், தேடி நாள்தோறும் உணவு சாப்பிட்டு, கிழவிகள் பேச்சு பேசி, மனம் வாட, பிறர் வாட பல காரியங்கள் செய்து, துன்பத்தில் உழன்று, நரை எய்தி முதுமையடைந்து பின்பு எமனின் இரையாகும், பல வேடிக்கை மனிதர்கள் போல நானும் இறப்பேன் என நினைக்காதே என்கிறான்.
வாழ்வின் நோக்கம், இலட்சியம் இருக்க வேண்டும் என்கிறான். ஆனால் அநேகருக்கு இவ் வாழ்க்கையின் அருமை தெரியவில்லை. வாழ்க்கையின் அர்த்தம் புரியவில்லை. அர்த்தமற்ற வாழ்க்கை வாழுகிறார்கள்.
பிறப்பது பின்பு இறப்பது இதுதான் நம் வாழ்க்கையா? இல்லை. ஓரறிவு முதல் ஐந்தறிவு வரையுள்ள தாவரங்கள், புழுக்கள், ஜீவசந்துக்கள், பறவைகள், மிருகங்கள்போல நாம் படைக்கப்படவில்லை. நாம் ஆறறிவு படைத்தவர்கள், சிந்தனை ஆற்றல் மிக்கவர்கள். நாம் இறைவனின் சாயலில் உண்டாக்கப்பட்டோம். நம் படைப்பின் நோக்கம் அலாதியானது.
“இப்பிறவி போயின் எப்பிறவி வாய்க்கும்” என்பார் ஆழ்வார். நமக்கு கிடைத்தது, ஒரே வாழ்க்கை, ஒரே வாய்ப்பு, ஒரே உயிர், ஒரே உடல்.
“அரிது அரிது மானிடனாக பிறத்தல் அரிது” என்கிறார் ஒளவையார். மனிதனாக பிறப்பது அரிதுதான். அரிதிலும் அரிது மனிதனாக வாழ்வது. மனிதர்களில் மக்களும் உண்டு, மாக்களும் உண்டு. நமது மனதின் எண்ணங்கள், சிந்தனைகள், செயல்கள், நற்பயன்களை அளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
தின்று, திரிந்து உறங்குவதற்கா பிறந்தோம் என்ற சிந்தனை வந்துவிட்டால், எதற்காக பிறந்தோம் என்ற உணர்வு ஏற்பட்டு விட்டது என்கிறார் வேதாந்த மகாரிஷி. அன்றாட வாழ்வை அறிந்து அனுபவிக்க இன்றே விரைந்து எழுச்சி பெற்றிடுவீர், அன்பரே வாரீர் என்கிறார்.
வாழ்க்கையின் ஒவ்வொரு செயலிலும் சிந்தனை, சிக்கனம், சீர்திருத்தம் தேவை என்கிறார். தனக்கோ, பிறர்க்கோ தற்காலத்திலோ, பிற்காலத்திலோ உடலுக்கோ, மனதிற்கோ, எக்காலத்திலும் நன்மை பயக்குகிறதா என ஆராய்ந்து செய்ய வேண்டும் என்கிறார். அன்றாட வாழ்வை அறிந்து அனுபவிக்க வேண்டும். இன்றைய பொழுதில் வாழு என்பதே இதின் அர்த்தம். வாழ்க்கை ஒரு வரம், இறைவன் தந்த வரம். – தொடரும்…
– K.T. இராஜசேகர், குலவணிகர்புரம், திருநெல்வேலி

Filed under: ஆன்மீக கட்டுரைகள்