தமிழ் | తెలుగు

» ஆசிரியர் குறிப்பு, ஆன்மீக கருத்து » டிசம்பர் 2013

டிசம்பர் 2013

அன்பார்ந்த ஆன்மீக சகோதர சகோதரிகளே, ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்!

 

மனுஜோதி ஆசிரமத்தில் அக்டோபர் மாதம் 3-ம் தேதி நீதியுக ஸ்தாபக விழா சிறப்பாக நடைபெற்றது. உலகெங்கிலுமுள்ள ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் அனைவரும் இந்த நாளில், ஸ்ரீமந் நாராயணரின் அன்புக்கொடியை தங்கள் இல்லத்தில் ஏற்றி, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.
இந்த நாளில் தெய்வீக ஆட்சி நடைபெறுகிறது என்பதை உணர்ந்து கொண்டாடிய  இறைவனின் பிள்ளைகள் அனைவருக்கும் இது ஆசீர்வாதமாக அமைந்தது. மனுஜோதி ஆசிரமத்திலும் மற்றும் அன்புக்கொடி எங்கெல்லாம் ஏற்றப்பட்டதோ அங்கு ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் மகிமையின் பிரசன்னம் அந்நாள் முழுவதும் இருந்ததை உணர முடிந்தது.
செப்டம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவி லுள்ள சிட்னி மாநகாரில் சிட்னி தமிழ் சங்கம் மற்றும் வி.ஜி.பி உலகத் தமிழ் சங்கத்தின்
13-வது மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நானும், ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் சிலரும் சென்றிருந்தோம். மேலும் மெல்போர்னிலும், மலேசியாவிலும் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள் புத்தகங்கள் மற்றும் சி.டிக்கள் வாயிலாக மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. என்னுடைய சகோதரன் திரு. D. லியோ பால் C. லாறியும், ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் சிலரும் குழுவாக தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் சென்றனர். ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!! என்ற கொள்கையை மக்களுக்கு அறிவிக்க இந்த பயணம் உறுதுணையாக அமைந்தது.

நானும், என்னுடைய சகோதரனும், அக்டோபர் மாதத்தில் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகளை மக்களுக்கு அறிவிக்க கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்திற்குச் சென்றிருந்தோம். மேலும் அக்டோபர் 27-ம் தேதியன்று, ஹைதராபாத் நகரத்தில் நடைபெற்ற நுகர்வோர் பாதுகாப்பு கழகம் நடத்திய  நுகர்வோர் விழிப்புணர்ச்சி மாநாட்டில் நாங்கள் கலந்துகொண்டோம். மனுஜோதி ஆசிரமத்தின் சார்பாக ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்களும் பங்கேற்றனர். கடவுள் ஒருவர்தான் என்று மக்களுக்கு அறிவிக்கும் வகையில், ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள் அடங்கிய புத்தகங்களை விநியோகம் செய்தோம். எங்களோடு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு. மீனாட்சி சுந்தரம் அவர்களும் இம்மாநாட்டில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா தாமே 1987-ம் வருடம், அக்டோபர் 3-ம் தேதியன்று ஆதிபலி அன்புக்கொடியை ஏற்றினார். ‘ஆதிபலி அன்புக்கொடி’ என்பது, இக்கொடிக்கு வழங்கிய பெயராகும். கொடியின் உண்மைப் பொருளானது தெய்வீக அன்பாகும். அதை இந்த உலகிற்கு எடுத்துச் சொல்லவே ஆதிபலி அன்புக்கொடியை ஏற்றினார். இத்தெய்வீக அன்பை நாம் எவ்வாறு பெற முடியும் என்பதற்கு வழி சொல்லுவதே அதிலுள்ள குறியீடுகளாகும். கொடியின் காவி நிறமானது ஆதிபலி அல்லது பிரம்ம வேள்வியை செய்த இறைவனின் தியாக குணத்தைக் குறிக்கிறது.
தெய்வீக அன்பு என்றால் என்ன என்பதை நமக்கு விளக்கிக்கூற விவிலியத்தில் இயேசு பிரான் ஒரு கதையை கூறியிருக்கிறார். ஒரு பணக்காரன் இருந்தான். அவன் நல்ல உடைகளை உடுத்திக்கொண்டு, நன்றாக சாப்பிட்டான். அவன் வீட்டு வாசலில் லாசரு என்ற பிச்சைக்காரன் இருந்தான், அவனுக்கு வீடு இல்லை. இந்தப் பணக்காரனின் வாசலில் இருந்த நாய்களுடன் குடியிருந்தான். அவன் உடல் முழுவதும் புண்களாக இருந்தது. இந்த பணக்காரனின் வீட்டில் நாய்களுக்குப் போடும் உணவை உண்டு வாழ்ந்தான். காலப்போக்கில் பணக்காரனும் இறந்து போனான்‡ லாசருவும் இறந்தான். அதன் பின்னர் லாசரு வைகுண்ட லோகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டான். அவன் முற்பிதாவாகிய அபிராமே அவனுக்கு இறைவனின் அன்பை எடுத்துக்கூறி, ஆறுதல் கூறுகிறான்.
பணக்காரன் இறந்த பின்னர் நரகத்திற்குச் சென்றான். அங்கே அவன் நாவறண்டு மேலே பார்க்கும்போது, அபிராமின் மடியில் லாசருவைப் பார்த்து, ஒரு சொட்டு தண்ணீர் எனக்கு ஊற்று என்று கேட்கிறான். அது முடியாது. நாங்கள் உங்களிடத்திற்கும் நீங்கள் எங்களிடத்திற்கும் வர முடியாதபடி, ஒரு பொரிய பிளவு இருக்கிறது என்று அபிராம் கூறினார். அதற்கு பணக்காரன்் என்னுடைய ஐந்து சகோதரர்களும் நரகத்திற்கு வராதபடி அங்கே லாசருவை அனுப்புங்கள் என்று கேட்கிறான். அதற்கு அபிராம் அவர்கள் வேதங்களில் சொல்லியதை கடைப்பிடித்தால் இங்கே வரமாட்டார்கள் என்கிறான். இல்லை, இறந்துபோன லாசரு சொன்னால் நம்புவார்கள் என்றான் பணக்காரன். வேதங்களில் சொல்லப்பட்டதை பின்பற்றாதவர்கள், இறந்து போனவன் சென்று சொன்னாலும் கேட்கமாட்டார்கள் என்று கூறினார் அபிராம். இக்கதைக்கு ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கூறும் விளக்கம் என்னவென்றால், பணக்காரன் நரகத்திற்கு சென்றான்‡ அவன் யாருக்கும் எந்த தீங்கும் செய்யவில்லை. அவன் சம்பாதித்தான், தன் குடும்பத்தை பராமாரித்தான். அவன் வீட்டு வாசலில் நோயுற்ற லாசருக்கு உதவி செய்யவில்லை, யாருக்கும் உதவி செய்யவில்லை. என் குடும்பம், என் மனைவி, என் பிள்ளைகள், என் சகோதரர்கள் என்று வாழ்ந்தான். இப்படிப்பட்ட சுயநலமான அன்பே, அவனை நரகத்திற்கு கொண்டு சென்றது. நரகத்திற்கு என் சகோதரர்கள் வரக்கூடாது என்றுதான் கேட்டானேயொழிய, மனிதர்கள் யாரும் இங்கே வராதபடி லாசருவை அனுப்புங்கள் என்று அவன் கேட்கவில்லை. பணக்காரனுக்கு அப்போதும் ‘சுயம்’ போகவில்லை.
லாசரு ஏன் வைகுண்டலோகத்திற்குச் சென்றான்! லாசரு பணக்காரனின் வீட்டு வாசலில் நோயுள்ளவனாக, வீடு இல்லாமல், உடுத்திக்கொள்ள சாரியான ஆடையில்லாமல், உண்பதற்கு சாரியான உணவில்லாமல் வாழ்ந்தாலும், பணக்காரனை ஒரு நாளும் திட்டவில்லை. அவனுக்கு எந்த சௌகாரியமும் இல்லாதிருந்தபோதும், தனக்கு கிடைத்ததை வைத்து திருப்தியாக இருந்தான். இதுவே அவனை வைகுண்டம் செல்ல தகுதி பெறச் செய்தது.
அங்கே அபிராம் அவனுக்கு இறைவனின் அன்பை பற்றிக் கூறிய பின்னர், லாசரு பணக்காரனை மன்னித்தான். பணக்காரனே, நான் உன்னை மன்னிக்கிறேன், உனக்கு உதவி செய்ய வழி இருந்தும், நீ எனக்கு உதவி செய்யவில்லை. ஆனாலும் நான் உன்னை மன்னிக்கிறேன். நீயும் நான் இருக்கும் இடத்திற்கு வர வேண்டுமென விரும்புகிறேன் என்று மனதில் நினைத்தான். அவனின் நினைவு ஒரு அலையாக சென்றது. பணக்காரன் நரகத்திலிருந்து மேலே பார்த்தபோது, அவனை அந்த அலை தொட்டது. லாசருக்கு நான் உதவி செய்யாமலிருந்தும், அவன் என்னை மன்னித்து விட்டான் என்ற எண்ணமே அவனை சித்ரவதை செய்தது. அந்த சித்ரவதை குறைவதற்காக, அவன் லாசருவின் கையிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர் கேட்கிறான். ஆனால் பணக்காரன் இருக்கும் இடமோ பகை நிறைந்த இடமாகவும், லாசரு இருக்கும் இடமோ அன்பு நிறைந்த இடமாக இருந்தது. அவர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல முடியாது.
ஆகவே லாசரு தெய்வீக அன்பைக் காண்பித்தான். தனக்கு உதவி செய்யாதவனை அவன் திட்டவில்லை, சபிக்கவில்லை. மாறாக அவனை மன்னித்தான். தனக்கு கிடைத்ததைக் கொண்டு திருப்தியாக வாழ்ந்தான். இதுவே தெய்வீக அன்பு! இந்த தெய்வீக அன்பை நாமும் பின்பற்றி, மற்றவர்களுக்கும் பறைசாற்றுவோம்!
இந்த இதழை நீங்களும் படித்து இன்புற்று, மற்றவர்களும் படித்துப் பயன்பெற உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்குக் கொடுத்து உதவுங்கள். தர்மத்தை நிலைநாட்டும் பணியில் அனைவருக்கும் பங்கு உண்டு. இந்த உலகத்தை மூடியிருக்கும் இருளை அகற்ற மனுஜோதி தீபத்தை ஏற்றி வையுங்கள். இருள் தானாக மறைந்துவிடும். யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறுக என வாழ்த்துகிறோம்.
வானம், பூமி, சமுத்திரம் யாவையும் படைத்த பரமபுருமூராகிய ஸ்ரீ மந் நாராயண மூர்த்தியாம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவுக்கே எங்கள் கனம், துதி, மகிமை யாவும் உரித்தாகுக!

Filed under: ஆசிரியர் குறிப்பு, ஆன்மீக கருத்து