தமிழ் | తెలుగు

» ஆசிரியர் குறிப்பு » ஆசிரியர் குறிப்பு -2

ஆசிரியர் குறிப்பு -2

ஜனவரி – 2017

அன்பார்ந்த ஆன்மீக சகோதர சகோதரிகளே,

ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்!

2016-ம் வருடம், அக்டோபர் மாதம் 3-ம் தேதி நடைபெற்ற நீதியுக ஸ்தாபக விழாவானது மனுஜோதி ஆசிரமத்தில் கூடி வந்திருந்த எல்லாருக்கும் மற்றும் உலகெங்கிலும் உள்ளவர்களுக்கும் ஆசீர்வாதமாக இருந்தது. ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பிரசன்னம் அந்நாள் முழுவதும் இருந்ததை உணர முடிந்தது.

செப்டம்பர் மாதம் 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை திருச்சி, சேலம், வேலூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் போன்ற பல மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! கொள்கையை மக்களுக்கு பிரச்சாரம் செய்வதற்காக சென்றனர்.

அக்டோபர் மாத துவக்கத்தில் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகளை மக்களுக்கு அறிவிக்க ஆந்திரா மாநிலத்திற்கு நாங்கள் குழுவாக சென்றிருந்தோம். விசாகப்பட்டினத்திலிருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள பாடேரு என்ற மலைக் கிராமத்திலுள்ள மலைவாழ் மக்களிடையே “ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்ற கொள்கையை பரப்புவதற்காக சர்வ சமய மாநாடு மற்றும் தேசீய ஒருமைப்பாடு கூட்டம் நடந்தது. அம்மாத இறுதியில் நான் மலேசியாவிற்கு சென்று வந்தேன்.

தற்போது இந்திய அரசு கருப்பு பணத்தை ஒழிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் வெளியான அரசாணையில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததை நாமறிவோம். கையில் பணம் வைத்திருந்தாலும்கூட பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆகவே இந்த பணம் உருவான விதம் குறித்து தீர்க்கதரிசி முத்துக்குட்டி எழுதிய அகிலத்திரட்டு அம்மானையில் கூறப்பட்டுள்ளது. இவற்றை விளக்கமாக பார்க்கலாம்.

கலியன் அத்தனை சாஸ்திரங்களையும், வசமாக்கும் வித்தையும், நிசமாக்கும் வித்தையும் இன்னும் பிற ஜால வித்தைகளையும் ஈசனிடம் வரங்களாக கேட்டுப் பெற்றான். சக்கரமும், கிரீடமும், அனைத்து வித்தைகள் மற்றும் வரங்களும் கலியன் இடத்தில் இருப்பதால் அவனை ஒருவராலும் வதைக்க முடியாது. எனவே கலியனை வெல்ல திருமாலும், தந்திரமாக ஆண்டியாக உருவெடுத்து வெறுங்கையோடு அவனிடம் வந்து: நீ ஈசனிடத்தில் இறைஞ்சி பெற்ற வரங்களில் சிலவற்றை இந்தப் பரதேசி, இரப்பவனுக்கு கொஞ்சம் கொடுவென்று கேட்டார். நீ கொடுக்காவிட்டால் சாபம் இடுவேன் பார் என்றார்.

“பரதேசி உன்னோடு பேச்சு எனக்கு எதுக்குடா? நீ போடா” என்று வசைபாடினான் கலியன். “பிச்சைக்காரனுக்குப் பலமில்லையா? அது உன் கணக்கா? பரதேசி பலம் பெரிதா, உன் பலம் பெரிதா எனச் சோதிக்கலாம் வா” என்றார் ஆண்டி உருவாய் நின்ற திருமால். “ஆட்படையும், வேட்படையும் இல்லாமல், வெட்ட வாளில்லாமல் கந்தையை உடுத்திய உன்னோடு யுத்தம் செய்தால், ஆண்மையில்லாத பேடியென்று ஆயிழைப் பெண்கள் எல்லாம் சிரிப்பாரே!” என்று கெக்கலித்தான். மேலும் நீசனோ, “போடா பரதேசி, நீ இரப்பவன். உன்னோடு எனக்கென்ன போர்? திருமால் என்னிடம் வரட்டும், அவனுடன் நான் யுத்தம் செய்ய தயார்” என்றான்.

ஆண்டியான நாராயணரும் தந்திரமாய், “நன்று, நீசா! பண்டாரமென்றால், பைத்தியக்காரன் என்றால், ஒருவன் தனியாக வந்தால் போரிடமாட்டேன் என்றாய், இரப்பவனென்றும், கச்சையில்லாதவன் என்றும் நையாண்டி செய்தாய்; பண்டாரத்தை வம்பு செய்வதில்லை என்றாய்; இதையே நீ எனக்குச் சத்தியம் செய்து கொடு” என்றார் நாராயணர். வெகு யோசித்து மீண்டும் இவ்வாறு சொன்னான் நீசன்:- “பண்டாரமாக வந்த பரதேசிகளை அட்டி செய்யேன். சண்டை இடேன். முட்டி வம்பை ஒருநாளும் செய்யமாட்டேன்” என்றான். “சரி, அப்படியே, உன் சொற்படியே ஆணையிட்டுக்கொடு” என்றார் நாராயணர்.

“யார் பேரில் ஆணையிட வேண்டும். சொல், செய்கிறேன்” என்றான் நீசன். “ஈசனை (நாராயணரை) வணங்கி, நீ பெற்ற வரங்கள் பேரிலும் பெண்டாய் நீ பெற்றவள் பேரிலும் ஆணையிடு. ஆணையை மீறி நீ ஆண்டிக்குத் தொல்லை கொடுத்தால் பெண்ணையும், பெற்ற வரங்களையும் தோற்பாய். மண்ணையும், பெற்ற மக்கள், சுற்றம் தோற்பாய். சேனைத்தளமும் தோற்று சீமை அரசும் தோற்று, ஆனைப்படை தோற்று, அரசு மேடை தோற்று உயிரையும் தோற்பாய். அதுமட்டுமல்லாமல் நீயும், உன்னைச் சார்ந்தோரும் நரகத்தில் வீழ்வீர்களாக! ஆக நீ எனக்கு அதை அறிந்து ஆணையிட்டுக் கொடு” என ஆண்டி கேட்க,

அதற்கு நீசனும், ‘இதை ஒருபோதும் நான் மறவேன், மறந்து வம்பு செய்தால், நீ சொன்னபடியே தோற்றழிந்து என் உயிரும் நானும் கொடிய நரகில் போவோமென்று’ ஆணையிட்டான். அப்போது ஆண்டி வேடத்தில் இருந்த திருமாலோ, “நீசா, வல்லமையுள்ள மகாகோடி ஆயுதங்களை ஆக்கிய நிமலனின் சக்கரத்தையும், கிரீடத்தையும் நீ சுமப்பதில் என்ன பயன்? இரும்பால் ஆன அவை உனக்குப் பயன்படாது. நீ அதை எனக்குக் கொடுத்தால் கண்டார் விரும்பும் கன திரவியமாக ஆக்கித் தருகிறேன்” என்றார்.

இயல்பு கெட்ட நீசனான கலியன் கனதிரவியம் பணம் என்றதும், மகிழ்ந்து சக்கரத்தையும், கிரிடத்தையும் ஆண்டியிடம் கொடுத்தான். சாபம் பெற்ற சக்கரம் சுவாமியை நோக்கி, நீரே என் சுவாமி, இப்போதிட்ட இந்த சாபம் எப்போது தீரும்? எனக்கேட்டது. அதற்கு நாராயணர் கலியன் ஆட்சி மாறும்போது தீரும் என்றார். பணமாகிக் கீழே பரந்து குவிந்து கிடந்த பணத்தை எல்லாம் அள்ளி இரு கண்களிலும் ஒத்தி பெண்சாதி கையில் கொடுத்தான்.

நாராயணர் தனது சங்கு சக்கரத்தை பணமாக மாற்றி கலியனுக்கு கொடுத்தார் என்ற சரித்திரத்தைப் பற்றித் தெரிந்துகொண்டோம். கேரளாவில் இன்றும் கூட பணத்தை சக்கரம் என்று அழைக்கின்றனர். இன்னும் சிலர் பணத்தை தங்களுடைய கண்களில் ஒற்றிக்கொள்வதை நம்முடைய அன்றாட வாழ்வில் காண முடிகிறது. பணத்தின் ஆசை எல்லாத் தீமைக்கும் காரணமாக இருக்கிறது என்று வேதங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. மக்களும் பணத்திற்காக கொலை, கொள்ளை, ஏய்ப்பு போன்ற மாபாதகங்களைச் செய்ய தயங்குவதில்லை.

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பணத்தை அதிகமாக சேகரிப்பதையே தங்களின் குறிக்கோளாக வைத்திருக்கிறார்கள். அப்பணத்தை வைத்து ஆடம்பரமாக வாழ வேண்டும் என்றும், தாங்கள் வசதியாக வாழ்கின்றோம் என மற்றவர்கள் நினைக்க வேண்டும் எனவும் கருதுகின்றனர். அதற்காகவே இரவும் பகலும் இறை சிந்தனையற்று அலைகிறார்கள். இதனால் அவர்கள் குடும்பத்தோடு சேர்ந்து, இன்புற்று வாழவும் முடியாமல், நிம்மதியற்று, ஓய்வில்லாமல் இயந்திரமாகவே சுற்றித் திரிகின்றனர். வேறு சிலர், தங்கள் மனைவி, பிள்ளைகள், தாய், தந்தை, உற்றார், உறவினர்களை விட்டு விட்டு வெளிநாடுகளுக்கு சென்று பகட்டான வாழ்க்கையை வாழ்வதற்காக கஷ்டப்படுகின்றனர்.

ஒருநாள் இரவில் கொடுக்கப்பட்ட சட்டமே இந்திய மக்களை உலுக்கிக் கொண்டிருப்பது நாம் அறிந்த உண்மையே. வருங்காலத்தில் பணத்திற்கு ஒரு உச்ச வரம்பு, தங்கத்திற்கு உச்ச வரம்பு, சொத்துக்களுக்கும் உச்ச வரம்பு போன்ற சட்டங்கள் வரும் என்று ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் தன்னுடைய பக்தர்களுக்கு எச்சரிக்கை கொடுத்தார். அதனால்தான் எளிமையான வாழ்க்கையை தானும், தன் குடும்பத்தினரும் வாழ்ந்து, அவ்விதமாகவே தன்னுடைய பக்தர்களுக்கும் வாழ கற்றுக்கொடுத்தார்.

இந்தியாவிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட அனைத்து சொத்துக்களும் மீண்டும் இந்தியா வந்து சேரும் என்றும், அச்சமயத்தில் உலக நாடுகளிலேயே இந்தியா வல்லரசு நாடாகத் திகழும் என்றும் சூளுரைத்திருக்கிறார். மேலும் உலகப் பொருட்கள் மீது ஆசைப்படாதீர்கள், அவை அனைத்தும் நிலையற்றவை. நிலையான வாழ்வை நமக்கு அருளுகின்ற இறைவனில் ஒரு பாகமாவதற்கு, அவருடன் நேரத்தை செலவழிக்க நேரத்தை மிச்சப்படுத்துங்கள் என்றும், நம்மைப் படைத்த இறைவனே நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்து, நம்மைக் காக்க வல்லவர் என்றும் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அறிவுறுத்தி இருக்கிறார். எனவே எளிமையான வாழ்க்கை வாழ்வோம் என இன்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள். கடந்த 2015, மே- ஜுன்- ஜூலை மனுஜோதி இதழில் விசாகப்பட்டினத்தில் திரு. தேவாசீர் லாறி ஆற்றிய சொற்பொழிவின் தொகுப்பு என்ற தலைப்பிலும், அதன் பிறகு வெளியான இதழ்களிலும் இதற்கான குறிப்புகளைக் கொடுத்திருக்கிறோம்.

உலகத் தமிழ் வாசகர்களுக்காக www.manujothi.com என்ற இணையதளத்திலும் மனுஜோதி இதழை வெளியிட்டு வருகிறோம். இந்த இதழை நீங்களும் படித்து இன்புற்று, மற்றவர்களும் படித்துப் பயன்பெற உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து உதவுங்கள். தர்மத்தை நிலைநாட்டும் பணியில் அனைவருக்கும் பங்கு உண்டு. இந்த உலகத்தை மூடியிருக்கும் இருளை அகற்ற மனுஜோதி தீபத்தை ஏற்றி வையுங்கள். இருள் தானாக மறைந்துவிடும்.

இந்த இதழை நீங்களும் படித்து இன்புற்று, மற்றவர்களும் படித்துப் பயன்பெற உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து உதவுங்கள். தர்மத்தை நிலைநாட்டும் பணியில் அனைவருக்கும் பங்கு உண்டு. இந்த உலகத்தை மூடியிருக்கும் இருளை அகற்ற மனுஜோதி தீபத்தை ஏற்றி வையுங்கள். இருள் தானாக மறைந்துவிடும்.

வானம், பூமி, சமுத்திரம் யாவையும் படைத்த பரமபுருஷராகிய ஸ்ரீமந் நாராயண மூர்த்தியாம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவுக்கே எங்கள் கனம், துதி, மகிமை யாவும் உரித்தாகுக!

– ஆசிரியர்

✡✡✡✡✡✡✡

Filed under: ஆசிரியர் குறிப்பு