தமிழ் | తెలుగు

» ஆசிரியர் குறிப்பு » ஆசிரியர் உரை

ஆசிரியர் உரை

அன்பார்ந்த ஆன்மீக சகோதர சகோதரிகளே, ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்!

ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் மகிமையின் சந்நிதியில் ஜூலை 15-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 46-வது கல்கி ஜெயந்தி விழா மற்றும் அகில உலக ஆன்மீக கூடாரப் பண்டிகை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், அமெரிக்கா, மலேசியா, பர்மா, ஜெர்மனி போன்ற வெளி நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்து கலந்துகொண்டு, பகவான் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் அருளாசியைப் பெற்றுச் சென்றனர். ஜூலை 1-ம் தேதி கொடியேற்றத்துடன் கல்கி ஜெயந்தி விழா இனிதே ஆரம்பமானது.

கலியனை அழிக்க ஆறு யுகங்களின் முடிவில் கல்கி அவதாரமாக தோன்றுவார் என்று தீர்க்கதரிசி முத்துக்குட்டி அகிலத்திரட்டில் கூறியபடி, இறைவன் 1969-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி கல்கி அவதாரமாக தோன்றினார். ஆறு யுகங்களாக கலியனை அழிக்காமல் பொறுமையாக இருந்தார், அவர் பொறுமையின் சிகரமாக திகழ்பவர். ‘அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’, ‘பொறுமை கடலினும் பெரிது’ என்ற பழமொழிகளை நாம் கேட்டிருக்கிறோம். பூமியை ஆள பொறுமை வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இறைவனின் பக்தர்கள், மகான்கள், தீர்க்கதரிசிகளுக்கு பொறுமை என்ற குணம் மிகவும் அவசியமாகும். விவிலியத்தில் யோனா என்ற தீர்க்கதரிசியின் வாழ்க்கையைப் பற்றி பார்க்கலாம்.

யோனா இறைவனின் தீர்க்கதரிசியாவார். அவர் வாழ்ந்த காலத்தில் நினிவே மிகப்பெரிய பட்டணமாகும். தற்காலத்தில் நம் இந்தியாவிலுள்ள டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை போன்ற பட்டணங்களைப்போல் மாநகரமாக திகழ்ந்தது நினிவே. அந்நகரத்திலுள்ளவர்கள் பொல்லாத வழிக்கு திரும்பினதால் இறைவன் கோபங்கொண்டு, யோனாவிற்கு ஒரு பணியை செய்யும்படி கட்டளையிடுகிறார். இன்னும் 40 நாட்களுக்குள் நினிவே பட்டணம் அழிக்கப்படும் என இறைவன் கூறுகிறார் என்று அந்நகரத்திற்குச் சென்று அம்மக்களுக்கு கூறு என்கிறார். அவன் நினிவேக்குச் செல்லாமல் தர்ஜீஸ் என்ற பட்டணத்திற்கு செல்ல, கப்பலில் பிரயாணம் செய்தான். அவன் இறை கட்டளைக்குக் கீழ்ப்படியாததினால், அவன் சென்ற கப்பல், கடலில் பெரிய புயலில் சிக்கும்படி இறைவன் செய்கிறார். தன் தவறை உணர்ந்த யோனா தன்னை கடலில் போடும்படி கூறுகிறான். இறைவன் அவனைக் காப்பாற்ற மீனாக அவதாரம் எடுத்தார். மீன் அவனை விழுங்கிற்று. மூன்று நாட்களுக்கு பின்னர் மீன் அவனை நினிவே பட்டணத்தின் கடற்கரையிலே கக்கியது. அவனை மீன் கக்கியதால் நினிவே பட்டணத்திலுள்ளவர்கள் அவன் கூறியதை நம்பினார்கள். ஏன்? நினிவே பட்டணத்திலுள்ளவர்கள் ‘தாகோன்’ என்ற கடவுளை வணங்குபவர்கள். தாகோன் சிலையானது பாதி மீன் தலையும், பாதி மனித சரீரத்தையும் உடையதாக இருக்கும். யோனாவை மீன் கக்கியதால் நம்முடைய இறைவனான தாகோன் அனுப்பிய இறைதூதன்தான் யோனா என்று அந்த மக்கள் நம்பினார்கள். அதிலும் இறைவனின் ஞானத்தை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். இறை தூதர் எப்படிச் சென்றால் அப்பட்டணத்தின் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை அறிந்து அதற்கேற்றவாறு செயல்படுகிறார். ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீமத் பகவத்கீதையில் இவ்வாறு கூறியுள்ளார். பகவத்கீதை 4:11: “எவர்கள் எவ்வாறு என்னை நாடுகின்றார்களோ அவர்களை அவ்வாறே நான் அனுக்கிரஹிக்கிறேன்” என்றார்.

யோனா இறைவன் கூறியவிதமாக தீர்க்கதரிசனம் உரைத்தான். அந்த பட்டணத்திலுள்ள எல்லாரும் பெரியோர் முதல் சிறியோர் வரை ஆடு, மாடுகளும் அந்நாட்டின் ராஜாவும்கூட உபவாசம் செய்தனர். எல்லாரும் தாங்கள் தாங்கள் செய்யும் தீய வழிகளை விட்டுவிட வேண்டும் என்று ராஜா அறிவித்தான். இதையெல்லாம் பார்த்த இறைவன் மனதுருகி நினிவேயை அழிக்க வேண்டாம் என்று முடிவு செய்தார். ஆனால் யோனாவோ நாற்பதாவது நாள் முடிந்து நினிவே பட்டணத்திற்கு வெளியே ஒரு குடிசையைப் போட்டு, நினிவே அழிக்கப்படுவதை பார்க்க உட்கார்ந்தான். இறைவன் நினிவேயை அழிக்காததினால் நீர் இரக்கமுள்ளவர், நீடிய சாந்தமுடையவர். ஆகையால்தான் நான் நினிவேக்கு செல்லாமல் தர்ஜீசுக்குச் சென்றேன். இதனால் எனக்கு எரிச்சலாயிருக்கிறது என்றான். அப்பொழுது வெயில் அதிகமாக அடிக்கிறதினால் அவனுக்கு எரிச்சல் தணிய இறைவன் ஒரு ஆமணக்கு செடியை சிருஷ்டித்தார். அது ஒரு இரவிலே தோன்றி மறுநாள் காலை பெரிய கொடியாக படர்ந்து அவன் தலையின்மேல் நிழலைக் கொடுத்தது. யோனா சந்தோஷப்பட்டான். மறுநாளிலோ இறைவன் ஒரு பூச்சியை கட்டளையிட்டார். அது அந்த ஆமணக்கு செடியை தின்று போட்டது. அதேசமயம் உஷ்ணத்தையும் அதிகரித்தார். அதினால் யோனா நான் செத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தான். அப்பொழுது இறைவன்: “நீ கஷ்டப்பட்டு விதைக்காமலும், தண்ணீர் பாய்ச்சாமலும், உரமிடாமலும் வளர்ந்த ஆமணக்கு செடிக்காக பரிதபிக்கிறாயே. அப்படியென்றால் இலட்சத்து இருபதினாயிரம் பேருக்கு மேற்பட்ட மனிதர்களும், அநேக மிருக ஜீவன்களுமிருக்கிற நினிவே பட்டணத்திற்காக நான் பரிதாபப்படக்கூடாதா?” என்று கூறினார்.

இங்கே நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டிய விஷயங்கள் இரண்டாகும். ஒன்று யோனா தீர்க்கதரிசியின் தன்மானம். இன்னொன்று இறைவனின் கருணை. 40 நாட்களுக்கு பின்னர் அவன் கூறியது பலிக்காததால், பொய்யான தீர்க்கதரிசி என்று மக்கள் கேலி பரியாசம் செய்வார்கள். அதினால் அவன் எரிச்சலடைந்தான். ஆனால் 40 வருடங்களுக்குப் பிறகு அதே பட்டணம் அழிக்கப்பட்டது. மனமாறியவர்களை இறைவன் தண்டிப்பதில்லை. 40 வருடங்கள் கழித்து நினிவேயின் மக்கள் மோசமான நிலைக்கு திரும்பிச் சென்றபோது, இறைவன் அப்பட்டணத்தை அழித்தார். ஆகையால்தான் இறைவனின் பக்தர்களுக்கும், மகான்களுக்கும், தீர்க்கதரிசிகளுக்கும் பொறுமை அல்லது நீடிய சாந்தம் தேவையாகும்.

யோனாவின் தீர்க்கதரிசனம் சற்று தாமதமாக, 40 வருடங்கள் கழித்து நிறைவேறியது. அதினால் யோனாவின் சுயம் அல்லது அகங்காரம் அழியும்படி செய்து, ஒரு நன்மையையும் இறைவன் செய்கிறார். ஆக இறைவனின் ஞானம் நம் புத்திக்கு எட்டாது என்பது புலப்படுகிறது. பொறுமையை கடைப்பிடிப்போம். இறைவனுக்கு பிரியமானவர்களாவோம்.

உலகத் தமிழ் வாசகர்களுக்காக manujothi.com என்ற இணையதளத்திலும் மனுஜோதி இதழை வெளியிட்டு வருகிறோம். இந்த இதழை நீங்களும் படித்து இன்புற்று, மற்றவர்களும் படித்துப் பயன்பெற உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து உதவுங்கள். தர்மத்தை நிலைநாட்டும் பணியில் அனைவருக்கும் பங்கு உண்டு. இந்த உலகத்தை மூடியிருக்கும் இருளை அகற்ற மனுஜோதி தீபத்தை ஏற்றி வையுங்கள். இருள் தானாக மறைந்துவிடும்.

வானம், பூமி, சமுத்திரம் யாவையும் படைத்த பரமபுருஷராகிய ஸ்ரீமந் நாராயண மூர்த்தியாம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவுக்கே எங்கள் கனம், துதி, மகிமை யாவும் உரித்தாகுக!

– ஆசிரியர்

*******

Filed under: ஆசிரியர் குறிப்பு