தமிழ் | తెలుగు

» ஆசிரியர் குறிப்பு » ஆசிரியர் உரை

ஆசிரியர் உரை

மே – 2016

அன்பார்ந்த ஆன்மீக சகோதர சகோதரிகளே,

ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்!

மனுஜோதியை படித்து, நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களை உங்கள் கடிதங்கள் மூலமாக கிடைக்கப் பெறுகிறோம். தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தங்கள் கருத்துக்களையும், பாராட்டுதலையும் தெரிவித்த அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மாணவ மாணவியர்களுக்கான கோடைகால விடுமுறை முகாம்  மே மாதம் 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை மனுஜோதி ஆசிரமத்திலும், ஏப்ரல் 29-ம் தேதி முதல் மே மாதம் 15-ம் தேதி வரை மனுஜோதி ஆசிரமத்தின் சார்பில், ஆந்திர மாநிலம் அசரடா பகுதியிலும் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. மாணவ மாணவியர் அனைவரும் மனுஜோதி ஆசிரமத்தின் சட்டதிட்டங்களையும், வேதங்களையும், ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகளையும், கடவுள் ஒருவரே என்ற சத்தியத்தையும் கற்றுச் சென்றனர். மேலும் பல மாணவ மாணவியர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றார்கள்.

நான் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகளை அறிவிக்க சட்டீஸ்கரிலுள்ள பிலாய், ஆந்திர மாநிலத்திலுள்ள விஜயவாடா, கட்டுபிடிபாலேம், விணுகொண்டா, ராவுலபாலேம், விசாகப்பட்டிணம், அசராடா போன்ற இடங்களுக்கு சென்று வந்தேன். என்னுடைய சகோதரன் D. லியோ பால் மற்றும் சில பக்தர்களுடன் மலேசியா, சீனா போன்ற நாடுகளுக்கு சென்று ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகளை மக்களுக்கு தெரியப்படுத்தி வந்தனர். இறைவன் வேதங்களில் மறைந்துள்ள இரகசியங்களை ஒரு மனிதனாக அவதரித்து நமக்கு தெரியப்படுத்துகிறார். எல்லா வேதங்களையும் நாம்  படிக்கும்போதுதான் நம்முடைய வேற்றுமைகளை உணர்ந்து அந்த ஒரே இறைவனிடம் ஒன்றுபட முடியும். திருவள்ளுவர் திருக்குறளில் “அறன் வலியுறுத்தல்” என்கிற ஒரு அதிகாரத்தை எழுதியுள்ளார். இந்த பூமியில் இறைவனுடைய நீதியை வலியுறுத்த வேண்டும். இறைவனுடைய சித்தத்தை இந்த பூமியில் நிலைநாட்டி, இறைவனின் மக்களுக்குள் ஒற்றுமையை கொண்டுவர வேண்டும். அதுவே இறைவனுடைய மக்களின் கடமை ஆகும். எனவேதான் கடந்த14 வருட காலமாக ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகளை இந்த மனுஜோதி இதழின் மூலமாக அனைத்து மதத்தினருக்கும் தெரியப்படுத்தி வருகிறோம்.

“செயற்பல தோரும் அறனே; ஒருவருக்கு

            உயப் பால தோரும் பழி”

தம் வாழ்நாளில் செய்ய வேண்டுவது அறமே, அதனைச் செய்யாவிடில் வாழும் காலம் முழுவதும் பழியே வந்து சேரும். அறன் வலியுறுத்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர், மக்கள் இறைவனின் சித்தத்தை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார். ஒருவன் தன் வாழ்நாளில் அதைத்தான் செய்ய வேண்டும். இல்லையென்றால் அவனுக்கு பழிதான் வந்து சேரும் என்கிறார். துடுப்பில்லாத படகு கரை சேர்வதுண்டு. பிரமாண்டமான இயந்திரக் கப்பல்கள் மூழ்கி விடுவதும் உண்டு. இறைவன் ஒவ்வொன்றிற்கும் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார். இறைவனின் திட்டத்தை அல்லது சித்தத்தை யாராலும் எளிதாக அறிந்துகொள்ள முடியாது. அப்படி அதை அறிந்து கொண்டாலும் அதை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினமான காரியமாகும்.

இறைவனின் திட்டம் அல்லது சித்தம் என்றால் என்ன என்பதை ஒரு சிறிய உதாரணம் மூலம் காணலாம். ஒரு கணவன் தன் மனைவியை சந்திக்கச் சென்றான். மனைவி ஒரு பெட்டியை எடுத்துக்கொண்டு வருகிறாள். கணவனைப் பார்த்தவுடன் என்னை தூக்குங்கள் என்று கூறுவாளா? இல்லை, இந்த பெட்டியை நீங்கள் தூக்கிக்கொள்ளுங்கள் என்பாள். இறைவனும் அப்படித்தான் செய்கிறார். நாம் கவலைப்படத் தேவையில்லை. அவர் நமக்காக சகலத்தையும் செய்து ஆயத்தமாக வைத்திருக்கிறார் என்ற குருட்டு விசுவாசத்துடன் நாம் செல்ல வேண்டும். ஒரு விதையை மண்ணில் விதைத்தால், அதற்கு தினமும் நாம் தண்ணீர் ஊற்றுகிறோம். வேர் வந்துவிட்டதா என்று தினமும் தோண்டிப் பார்க்கிறோமா? இல்லை. அதைப்போலத்தான் இறைவன் மீதும் நாம் நம்பிக்கை வைக்கிறோம். நான் டாக்டர் ஆக வேண்டும், நான் முக்கிய மந்திரியாக வேண்டும் என்று நாமாக நம் வாழ்க்கையை திட்டமிடக்கூடாது. இறைவனின் பாகமாக இருப்பவர்களுக்கு தங்கள் வாழ்க்கையை திட்டமிட உரிமை இல்லை. ஏனென்றால் இறைவன் ஏற்கனவே அவர்களுடைய வாழ்க்கையை திட்டமிட்டுவிட்டார் என்பதை விவிலியம் நிரூபிக்கிறது.

எபேசியர் 2:10 “ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.” என் மகன் இஞ்சினியராக வேண்டும், என் மகள் விளையாட்டு வீராங்கனையாக வேண்டும் என்றுகூட நீங்கள் கூற முடியாது. நாம் ஒரு நோக்கத்திற்காக பூமிக்கு வந்திருக்கிறோம். அதை நாம் கிரஹித்துக்கொள்ள வேண்டும். மகாபாரத யுத்தத்தின்போது அர்ஜூனன் எதற்காக இப்பூமியில் பிறந்தான் என்ற காரணங்களை ஸ்ரீ கிருஷ்ணர் விளக்கிக் கூறினார். இதையே நாம் தன்னையே உணர்ந்துகொள்ளுதல் அல்லது இறைவனின் திட்டத்தைப் பின்பற்றுவது என்கிறோம். இறைவனின் திட்டத்தை அல்லது இறைவனின் சித்தத்தை அறிந்துகொள்ளாததால் அர்ஜூனன் யுத்தம் செய்ய மாட்டேன் என்றான். அதை உணரச் செய்தார் ஸ்ரீ கிருஷ்ண பகவான். அதினால்தான் நமக்கு ஸ்ரீமத் பகவத்கீதை கிட்டியது.  சாதாரணமாக கூற வேண்டுமென்றால் இறைவனின் திட்டம் அல்லது சித்தத்தை ‘விதி’ என்கிறார்கள். விதியை யாரால் வெல்ல முடியும்? ஆம், விதியை நம்மால் வெல்ல முடியாது. ஏனெனில் அது இறைவன் வகுத்த வழியாகும். இதை உணர்ந்துகொண்டால் நாம் நம்முடைய சொந்த வழியில் செல்லாமல், இறைவன் வகுத்த வழியில் செல்லுவோம். இறைவனின் திட்டத்தை செய்தால் பாவம் ஏற்படாது என்பதை அர்ஜூனனின் வாழ்க்கை வரலாற்றின் மூலமாக உணர்ந்துகொள்ளுகிறோம். இறைவனின் திட்டம் இனிது. அதை செயலாக்கம் செய்யவே நாம் பூமிக்கு வந்துள்ளோம் என்பதை மனுக்குலத்திற்கு உரைக்க தோன்றியது மனுஜோதி!

உலகத் தமிழ் வாசகர்களுக்காக www.manujothi.com என்ற இணையதளத்திலும் மனுஜோதி இதழை வெளியிட்டு வருகிறோம். இந்த இதழை நீங்களும் படித்து இன்புற்று, மற்றவர்களும் படித்துப் பயன்பெற உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து உதவுங்கள். தர்மத்தை நிலைநாட்டும் பணியில் அனைவருக்கும் பங்கு உண்டு. இந்த உலகத்தை மூடியிருக்கும் இருளை அகற்ற மனுஜோதி தீபத்தை ஏற்றி வையுங்கள். இருள் தானாக மறைந்துவிடும்.

வானம், பூமி, சமுத்திரம் யாவையும் படைத்த பரமபுருஜராகிய ஸ்ரீமந் நாராயண மூர்த்தியாம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவுக்கே எங்கள் கனம், துதி, மகிமை யாவும் உரித்தாகுக!

– ஆசிரியர்

✡✡✡✡✡✡✡

Filed under: ஆசிரியர் குறிப்பு