தமிழ் | తెలుగు

» ஆசிரியர் குறிப்பு » ஆகஸ்ட் – 2016

ஆகஸ்ட் – 2016

அன்பார்ந்த ஆன்மீக சகோதர சகோதரிகளே,

ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்!

ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் மகிமையின் சந்நிதியில் ஜூலை 15-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை 47-வது கல்கி ஜெயந்தி விழா மற்றும் அகில உலக ஆன்மீக கூடாரப் பண்டிகையானது மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், அமெரிக்கா, மலேசியா, பர்மா, போன்ற வெளி நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்து கலந்துகொண்டு, பகவான் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் அருளாசியை பெற்றுச் சென்றனர். ஜூலை 1-ம் தேதி கொடியேற்றத்துடன் கல்கி ஜெயந்தி விழா இனிதே ஆரம்பமானது.

மனிதனின் பிறவிப்பயன் இறைவனுடன் ஒன்றர கலப்பதாகும். ஒவ்வொரு யுகத்திலும் மனிதன் இதை மறக்கும் தருவாயில் இறைவன் அவதரித்து பிறவிப் பயனை நினைவுபடுத்துகிறார். இந்த கலியுகத்தில் 1969-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதியன்று கல்கி அவதாரமாக காட்சிகொடுத்து நம்முடன் ஐக்கியம் வைத்துக்கொள்வதற்காக வந்தார்.

இறைவனுக்கும், பக்தர்களுக்குமிடையே நிலவும் இத்தகைய அன்பைப் பற்றி நாம் ஆண்டாளின் சரித்திரத்தில் கேட்டிருக்கிறோம். ஆண்டாள் இறைவனை தனது மணவாளனாக பாவித்து, இறைவனுக்கு மலர் மாலை சூட்டினாள். கோபிகைகள் மற்றும் மீராபாயும் கிருஷ்ணரை தங்களது மணவாளனாக பாவித்து வணங்கினார்கள். இந்த நிலை ‘மதுர்ய ரசா’ என்றழைக்கப்படுகிறது. இந்நிலையில் இறைவனை மணந்து அவன் அன்பை ஒரு ஜீவாத்மா ருசிக்க இயலுகிறது. இத்தகைய நிலையை எந்த மானுடனும் எளிதாக அடைய முடியாது. இறைவனில் ஒரு பாகமானவர்களே இந்நிலையை அடைய முடியும்.

மனிதர்களுடைய வழக்கத்தின்படி எழுத்தின் மூலமாகவோ, தங்கம், வெள்ளி நகைகளை மணமகளுக்கு கொடுப்பதின் மூலமாகவோ சாட்சிகாரர்களின் முன்னிலையில் நிச்சயம் செய்யப்படுகிறது. இறைவன் எவ்வாறு நிச்சயம் செய்கிறார்? நமக்கு அநேக வாக்குறுதிகளை அளித்துள்ளார். அவைகளெல்லாம் அவர் நம்மை நிச்சயம் செய்திருக்கிறார் என்பதற்கான அடையாள சின்னங்களாகும். இறைவன் நமக்கு எவற்றையெல்லாம் வாக்குறுதி செய்திருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள வேதங்கள், பகவத்கீதை, கிரந்தங்கள், திருக்குர்ஆன், விவிலியம் ஆகியவற்றை படித்து தெரிந்துகொள்ள வேண்டும்.

பகவத்கீதையில் அநேக வாக்குறுதிகள் உள்ளன. பகவத்கீதை 3-ம் அத்தியாயம் 22-ம் ஸ்லோகத்தின் பொருளாவது: மனிதன் எவ்வாறு நைந்துபோன துணிகளை எறிந்துவிட்டு வேறு புதிய துணிகளை அணிந்து கொள்கின்றானோ அவ்வாறே உங்களுடைய ஆன்மா இந்த சரீரத்தை விட்டுச் செல்கையில் நவானி தேஹி என்ற மகிமையின் சரீரத்தை அடைகிறது. இந்த வாக்குறுதி இறைவனை கிரஹித்து உணர்ந்த மக்களுக்குரியது. இதே வாக்குறுதி விலியத்திலும் உள்ளது. II கொரிந்தியர் 5:1: பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்”.

பகவத்கீதை மூன்றாம் அத்தியாயத்தில் எவனொருவன் பரமபுருஷரால் கொடுக்கப்பட்ட கடமைகளை செய்கின்றானோ அவன் பரமாத்மாவை அடைகின்றான் என்று கூறப்பட்டுள்ளது. இறைவன் நமக்கு கொடுத்த கடமைகள் எவை என்பதை முதலில் நாம் கண்டுபிடித்து அதன் பின்னர் அவற்றை நாம் செவ்வனே செய்தால் இறைவனை அடையலாம். கர்ம பாவங்களால் மனிதர்கள் எல்லாரும் கட்டுண்டவர்களாக உள்ளனர். கரும கட்டினின்று விடுவிப்பேன் என்று இறைவன் வாக்குறுதி அளித்துள்ளார்.எவர்கள் என்னுடைய உபதேசத்தில் குறை கண்டுபிடிக்காமல் வைராக்கியத்துடன் அவைகளை பின்பற்றி அதின்படி நடக்கின்றார்களோ அவர்கள் கருமத்தினின்றும் அல்லது பாவங்களின் கட்டினின்றும் விடுபடுகின்றனர்”.

இந்த உலக வாழ்க்கை முடிந்த பின்னர் நம் ஆன்மா அடுத்த உலகத்திற்கு செல்ல வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டுமென்று பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது. பகவத்கீதை 4:36: எல்லாப் பாவிகளுள்ளும் நீ மிக்க கொடும் பாவியாயிருப்பினும், எல்லாப் பாவத்தையும் ஞானமெனும் படகு ஒன்றினாலேயே நன்கு கடந்திடுவாய்”. இங்கே ‘ஞானம்’என்றால் பிரம்ம வேள்வி அல்லது ஆதி வேள்வி அல்லது அழிவற்ற யோகத்தின் அறிவு என்று அர்த்தமாகும். இந்த அறிவு ஒன்றே எல்லா பாவத்தினின்றும் நீக்கி ஒரு படகுபோல மற்றொரு உலகத்திற்கு கொண்டு செல்லும்.

தாமரை இலைமேல் தண்ணீர் ஒட்டாது. அதைப்போல பாவத்தால் தொடப்பட முடியாத நிலையை அடைய முடியும் என்று இறைவன் வாக்கு கொடுத்திருக்கிறார். பகவத்கீதை 5:10: எவன் கருமங்களைப் பிரம்மத்தினிடத்தில் வைத்துப் பற்றை விட்டுச் செய்கின்றானோ அவன் நீரில் தாமரை இலைபோல் பாவத்தால் பற்றப்படுவதில்லை”. பூலோக பற்றை விட்டவனாக, கிரியை செய்கிற ஒரு பக்தன் தன்னுடைய செயல்கள் எல்லாவற்றையும் இறைவனிடத்தில் சமர்ப்பிக்கிறபடியால் பாவத்தால் தொடப்பட முடியாது அல்லது குற்றந்தீர்க்கப்பட முடியாது. இதே வாக்குறுதி விவிலியத்திலும் உள்ளது. ரோமர் 8:1: ஆனபடியால் கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை”.

நற்கருமங்களை செய்பவர்கள் சுவனபதியில் தங்குவார்கள் என்றும், அவர்களை பூமியில் அதிபதிகளாக்குவேன் என்றும், உயர் பதவிகளையும் கண்ணியமான உணவை தருவேன் என்றும் இறைவன் திருக்குர்ஆனில் வாக்குறுதி அளித்துள்ளார். திருக்குர்ஆன் 11-ம் அத்தியாயம் ஸூரா 4, வசனம் 122, ஸூரா 10 வசனம் 63, ஸூரா 24, வசனம் 55, ஸூரா 33, வசனம் 31. இறைவன் தனது பக்தர்களை பராமரிப்பேன் என்று வாக்கு கொடுத்திருக்கிறார்.

பகவத்கீதை 9:22-ம் சுலோகத்தில் என்னைவிட வேறொன்றிலும் நாட்டமில்லாதவராய் என்னையே சிந்திப்பவராய் எந்த பக்தர்கள் என்னை வணங்குகிறார்களோ, அவர்களை நான் கவனித்துக்கொள்கிறேன். அப்படிப்பட்ட பக்தர்கள் தங்களுடைய நலத்தைக் குறித்து கவலைப்பட தேவையில்லை. அவர்களுடைய முழு பாதுகாப்பிற்கும் இறைவன்தாமே பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார் என்ற மகத்தான வாக்குறுதியை இறைவன் அளித்துள்ளார்.

இதற்கொத்த வாக்குறுதி விவிலியத்தில் உள்ளது. I பேதுரு 5:7: அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். சங்கீதம் 34:10: சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது. நம் மனது சுத்தமாக இருந்தால் இறைவன் விவிலியத்தில் என்ன வாக்குறுதி அளித்திருக்கிறார் என்று இந்த கலியுகத்தில் வாழுகின்ற ஒவ்வொருவரும் அறிந்துகொள்ளலாம். மத்தேயு 5:8: இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்”. சங்கீதம் 73:1: சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலருக்கு தேவன் நல்லவராகவே இருக்கிறார்”. ஏழாம் நாளை ஓய்வுநாளாக கடைபிடிக்கும்போது ஏராளமான வரங்களை இறைவன் வாக்களித்துள்ளார். ஏற்ற காலத்தில் நம் நாட்டில் மழைபொழியும், கடன் வாங்காமல் கடன் கொடுப்போம், நாம் தாழ்ந்துபோகாமல் மேலோங்கி இருப்போம் என்ற வாக்குறுதிகள் விவிலியத்தில் கூறப்பட்டுள்ளது. உபாகமம் 28:12-15. உணவுக்காகவும், உடைக்காகவும் கவலைப்பட வேண்டாம், நான் அவற்றை உங்களுக்குத் தருவேன் என்று இறைவன் வாக்குறுதி அளித்துள்ளார். மத்தேயு 6:25-32. காட்டிலுள்ள மிருகங்களுக்கும், வானில் பறக்கும் பறவைகளுக்கும் இறைவன் உணவளிக்கிறான். அதேவிதமாக எல்லாவிதமான மலர்களுக்கும் இறைவன் அழகான உடையை அதாவது அழகிய வண்ணத்தை கொடுத்திருக்கிறார். அப்படியிருக்கும்போது, படைப்பில் சிறந்த படைப்பாகிய மனிதனுக்கு உணவையும், உடையையும், உறைவிடத்தையும் இறைவன் அருளமாட்டாரா? சிந்தியுங்கள்.

தற்போது மக்கள் அடிக்கடி விமானத்தில் பிரயாணம் செய்கிறார்கள். விமானத்தின் மூலம் பசிபிக் அல்லது அட்லாண்டிக் கடலின்மேல் செல்லும்போது நமக்கு பயமாக இருக்கும். விமானம் கீழே விழுந்துவிட்டால் என்னவாகும் என்று நாம் நினைப்போம். ஆனால் இறைவன் நீ தண்ணீர்களை கடக்கும்போது, நான் உன்னோடே இருப்பேன் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார். ஏசாயா 43:2. நீங்கள் ஒருவேளை ஆற்றைக் கடக்க நேரிட்டால் உங்களுடைய கப்பல் அல்லது படகு கவிழ்ந்து விடாது. ஆறுகளை கடக்கும்போது, தண்ணீர் உன்மேல் புரளுவதில்லையென்று இறைவன் வாக்கு கொடுத்திருக்கிறார்.

யோவான் 14:3: “…..நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்”என்று இறைவன் விவிலியத்தில் விளம்பியுள்ளார். பகவத்கீதை 4:7,8 சுலோகங்களில் தர்மத்திற்கு குறைவும் அதர்மத்திற்கு எழுச்சியும் உண்டாகிறதோ அவ்வப்போது நான் என்னை படைத்துக்கொள்ளுகிறேன். சாதுக்களை காப்பதற்கும் துஷ்டர்களை அழிப்பதற்கும் தர்மத்தை நிலைநாட்டுவதற்கும் யுகந்தோறும் வந்துதிப்பேன்” என்று கூறப்பட்டபடி இறைவன் இப்பொழுது கல்கி மகா அவதாரமாக அவதரித்து தமது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். அதற்காக நாம் அவருக்கு நன்றி கூற வேண்டாமா? ஆம், நாம் நன்றி கூற வேண்டும். இப்படி பல வாக்குறுதிகள் இருக்கின்றன. அவற்றை நாம் அறிந்துகொண்டு உரிமை கொண்டாடி, இறைவா! இந்த வாக்குறுதிகளையெல்லாம் என் வாழ்க்கையில் நிறைவேற்றியதற்காக நன்றி என்று நாம் கூறும்போது இறைவன் அவற்றை நிறைவேற்ற கடமைப்பட்டவராகிறார்.

இறைவன் பல வாக்குறுதிகளை நமக்கு அருளியுள்ளார். அந்த வாக்குறுதிகளை முதலாவது நாம் அறிந்துகொள்ள வேண்டும். அதற்கு நாம் வேதங்களை வாசிப்பது மிகவும் அவசியமாகும். வாக்குறுதிகளை அறிந்துகொண்ட பின்னர் அவற்றை நாம் உரிமை கொண்டாட வேண்டும். வாக்குறுதிகள் நமக்கு இறைவன் கொடுத்திருக்கிற ‘காசோலை’ போல உள்ளது. அதை வங்கியில் கொடுத்தால் பணமாக மாற்றலாம். ஆனால் இப்பொழுது நம்மிடம் ‘காசோலை’ இருக்கிறது. ஆனால் அதின் மதிப்பை அறியாமலிருக்கிறோம். அதினால் பல கஷ்டங்களுக்குள்ளாகிறோம். உதாரணத்திற்கு ஆபத்து நேரிடும்போது என்னை கூப்பிடு, நான் உன்னை காப்பாற்றுவேன் என்று இறைவன் கூறுகிறார். சங்கீதம் 91:15. ஆபத்து வரும்போது நாம் இறைவனிடம் ஆலோசனை கேட்கிறோமா? இல்லை. மருத்துவரிடமோ அல்லது வட்டிக்கு கடன் கொடுப்பவர்களிடமோ செல்லுகிறோம். ஆனால் நாம் சற்று பொறுமையாக இருந்து இறைவனுக்கு காத்திருந்தால், அவர் தமது வாக்கை நிறைவேற்றி நம்மை காப்பாற்றுவார். இறைவனின் வாக்குறுதிகளை அறிந்துகொண்டு இறைவனின் உதவியை நாடி மற்றவர்களுக்கும் இறைவனின் மகிமையை உணர்த்துவோம்!

இந்த இதழை நீங்களும் படித்து இன்புற்று, மற்றவர்களும் படித்துப் பயன்பெற உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து உதவுங்கள். தர்மத்தை நிலைநாட்டும் பணியில் அனைவருக்கும் பங்கு உண்டு. இந்த உலகத்தை மூடியிருக்கும் இருளை அகற்ற மனுஜோதி தீபத்தை ஏற்றி வையுங்கள். இருள் தானாக மறைந்துவிடும்.

வானம், பூமி, சமுத்திரம் யாவையும் படைத்த பரமபுருஷராகிய ஸ்ரீமந் நாராயண மூர்த்தியாம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவுக்கே எங்கள் கனம், துதி, மகிமை யாவும் உரித்தாகுக!

ஆசிரியர்

✡✡✡✡✡✡✡

Filed under: ஆசிரியர் குறிப்பு