தமிழ் | తెలుగు

» ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள் »

18-9-1987- திருநெல்வேலியிலுள்ள ஊர்மேலழகியான் என்ற கிராமத்தில் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் சொற்பொழிவு

ஒரு மார்க்கத்திலிருந்து இன்னொரு மார்க்கத்திற்கு ஜனங்களை மதம் மாற்றுவதற்காக ஏற்படுத்தப்பட்ட கூட்டமல்ல இது. நான் உங்களை இந்தியர்களாக நேசிக்கிறேன். இன்றைக்கு அநேகர் என்னை வெளிநாடுகளிலிருந்து தொலைபேசியில் கூட அழைக்கிறார்கள். ஆனால் இந்திய மக்களிடம் பேசி அவர்கள் யார் என்பதை உணர வைக்க விரும்புகிறேன். நீங்கள் யார் என்பதை உணர்ந்தாலொழிய உங்களுடைய ஸ்தானத்தை நீங்கள் உரிமை கொண்டாடவே மாட்டீர்கள். நான் எல்லா வேத புராணங்களையும் ஆராய்ந்திருக்கிறேன். பவிஷ்ய புராணம், உபநிஷத்துக்கள், பைபிள், குர்-ஆன், பகவத் கீதை ஆகிய புத்தகங்களை ஆராய்ந்திருக்கிறேன். அதிலே பெரிய மார்க்க தலைவர்கள் அறியாத அநேக இரகசியங்கள் அவர்களுடைய புத்தகங்களிலேயே இருக்கிறது. 1969 -ம் வருடத்தில் நான் அமெரிக்காவிலே பிரயாணம் செய்யும்போது அநேக அமெரிக்கர்கள் எனக்கு அதிகமாக பணம் கொடுத்து என்னை அவர்களுடைய பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். நான் என்னுடைய தேசத்தை நேசிக்கிறேன்.

1942-ம் ஆண்டு காந்தியடிகளோடு நான் இந்த நாட்டின் விடுதலைக்காக போராடினவன். என்னுடைய படிப்பு, அந்தஸ்து எல்லாம் அந்த சமயத்திலே அப்படியே போய்விட்டது. அதன்பிறகு அரசியல்வாதியாக விரும்பினேன். அந்த சமயத்திலே கடவுள் என்னை சந்தித்தார்.  ஈ.வெ.ரா பெரியார் அவர்களையும் கடவுள் அதிக சக்தியோடு உபயோகித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் நமக்கும் பகுத்தறிவு என்று ஒன்று உண்டு. அந்த பகுத்தறிவை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். நாம் இந்தவிதமாக போய்க்கொண்டே இருக்க முடியாது. வன்முறை அதாவது ஜனங்களை சுட்டுத்தள்ளும்படியான கலவரங்கள் வரும்போது அந்த சமயத்தில்தான் இறைவன் கீழே இறங்கிவந்து தலையிட வேண்டும். இல்லாவிட்டால் நல்லவர்கள் எல்லாம் அழிந்துபோவார்கள். நல்லவர்கள் யார்? இன்றைக்கு நல்லவர்கள் என்றால் ஜனங்களிடத்திலே அதிகமாக பணம் உள்ளவர்களும், அதிகமாக பொய் சொல்லுகிறவர்களும்தான் நல்லவர்களாக இருக்கிறார்கள். ஒரு நல்ல மனிதன் தேர்தலிலே ஒரு சமயத்திலும் வெற்றி பெற முடியாது. மோசமானவனாக இருப்பீர்களென்றால் தேர்தலிலே வெற்றி பெற்று விடலாம். அப்படியென்றால் நீங்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்க முடியும்? கடவுள் யார் என்பதை முதலாவதாக நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

பவிஷ்ய புராணத்தை நான் வாசித்தேன். அதிலே வியாசர் சொல்லுகிறார் விஷ்ணுவாகிய நாராயணர் ஆதாமையும் ஏவாளையும் படைத்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. குர்ஆனில் அல்லாஹ் ஆதாமையும் ஏவாளையும் படைத்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. கிறிஸ்து இயேசு ஆதாமையும் ஏவாளையும் படைத்தார் என்று விவிலியத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இதைப் பார்த்து என் மனதிலே குழப்பமாகி விட்டது. ஒரே ஆளை மூன்று பேர் படைத்தாரா? அல்லாஹ்வும் படைத்தார், இயேசு கிறிஸ்துவும் படைத்தார், நாராயணரும் படைத்தார். அப்படியென்றால் யார் தான் படைத்தார் என்று எனக்கே தெரியவில்லை. ஒன்று மூன்று பேரும் ஒன்றாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மூன்று பேரும் பொய்காரர்கள். இன்னும் அதிகமாக ஆராய ஆரம்பித்தேன். ஜனங்களையும் ஆராய்ந்து பார்த்தேன்.

இந்தியாவிலே ஜனங்களுக்கு தெய்வ பயம் இருக்கிறது. இந்த பயமானது மற்ற நாடுகளிலே உள்ள மக்களிடத்தில் இல்லை. நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் நீங்கள் முன்பு என்னவாக இருந்தீர்கள்? நீங்கள் நல்லவர்களாக இருந்தபடியால் அதிக எளிமையுள்ளவர்களாக ஆகிவிட்டீர்கள். உங்களுக்கு எல்லாத் திருட்டுத்தனமும் தெரியுமென்றால் நீங்கள் எளியவனாக இருக்கவே முடியாது. அநேக அக்கிரமங்களைச் செய்யலாம். நம்முடைய மனசாட்சி என்ன சொல்கிறதோ அதையே நாம் செய்ய விரும்புகிறோம். நாம் வடக்கே இருந்து தெற்கிற்கு சிதறடிக்கப்பட்டோம். ஏனென்றால் நாம் நல்லவர்களாக இருந்தபடியால் நாம் விரட்டியடிக்கப்பட்டோம். கடைசியாக காணி நிலமான முள்ளும் குறுக்கும் உள்ள இடத்திற்கு வந்து விட்டோம். ஒரு மனிதன் கடற்கரையிலே மீன் பிடிக்கச் சென்று அந்த ஜாதியாகி விட்டான். ஒருவன் பனை மரம் ஏறினான். இதேவிதமாக தங்களுடைய வாழ்க்கைக்காக கஷ்டப்பட்டார்கள். ஆனால் அவர்கள் என்ன அறிவார்கள் என்றால் ஒருநாள் இறைவன் அவர்களுக்கு உதவி புரிவார் என்று அறிவார்கள்.

இறைவன் இருக்கிறாரா? நீங்கள் இதை தெரிந்துகொள்ளாமல் எப்படி அறிய முடியும்? சிலர் கடவுள் எங்கே இருக்கிறார் என்று சொல்ல முடியுமா? என்று கேட்பார்கள். கடவுளை நீங்கள் ஒரு சோதனைக் குழாயிலே அடைக்க முடியாது. ஒருவன் முட்டை எங்கேயிருந்து வந்தது? என்று கேட்டான். அது கோழியிலிருந்து வந்தது. அந்த கோழி எங்கேயிருந்து வந்தது? அது ஒரு முட்டையிலிருந்து வந்தது. கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா? அதற்கு யாராலும் பதில் சொல்ல முடியவில்லை. முட்டை என்றால் அது எந்த கோழியிலிருந்து வந்தது? கோழி என்றால் அது எந்த முட்டையிலிருந்து வந்தது? ஆதியிலே ஒன்று முட்டை இருந்திருக்க வேண்டும் அல்லது கோழி இருந்திருக்க வேண்டும். இன்றைக்கு ஜனங்கள் கடவுள் எங்கே? என்று கேட்கிறார்கள். நாம் மின்சாரம் இல்லாத ஒரு பல்பை போல் இருக்கிறோம்….

நான் அமெரிக்காவில் இருந்தபோது இந்தியாவைக் குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன். இந்த ஜனங்களுக்கு எப்படி கடவுளைக் காண்பிப்பது? கடவுள் இருக்கிறார் என்று எல்லாரும் பேசுகிறார்கள். அவர் எங்கும் இருக்கிறார். ஒன்றே தெய்வம் என்கிறார்கள். அப்படி பேசுகிறவனுக்கே கடவுள் எங்கே இருக்கிறார் என்று தெரியாது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று நீங்கள் பேச வேண்டுமானால் அந்த ஒரு தேவனைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? அவரைக் கண்டுகொள். அவரே உன் தகப்பன். அவர் உன் இருதயத்திலே வர விரும்புகிறார். அந்த ஒரே இறைவன் எல்லாரையும் நேசிக்கிறார். யாரும் வியாதிப்பட்டிருப்பதற்கு அவர் விரும்புவதில்லை. அவர் வியாதியை உங்களிடத்திற்கு அனுப்புவதுமில்லை. கவனமாக கேளுங்கள். நான் யாரிடத்திலாவது வியாதியை அனுப்புவேன் என்றால் அந்த வியாதிக்கு விரோதமாகப் போராட வேண்டும். யாராவது உங்கள் மகளின் கையைப்பிடித்துக் கொண்டு ஓடுகிறான் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் உடனே கடவுளே, இந்த பையன் என் மகளை இழுத்துக்கொண்டு ஓடி விட்டான், உம்முடைய சித்தம் நடக்கட்டும் என்று பிரார்த்தனை செய்துகொண்டிருக்க மாட்டீர்கள். நீங்கள் சத்தமிட்டு, போலீஸைக் கூப்பிட்டு உள்ளே தள்ளிவிடுவீர்கள். வியாதி வந்தால் மட்டும் கடவுள் எனக்கு இந்த வியாதியை அனுப்பி இருக்கிறார் என்றால் அது அப்படித்தான் இருக்கும். உங்களுக்குள் என்ன இருக்க வேண்டும்? நான் வியாதியாய் இருப்பது கடவுளின் சித்தமல்ல. நான் உங்களிடம் பேசும்போதே உங்கள் வியாதிகள் போகும். ஏன்? ஒருவேளை நீங்கள் வியாதியாய் இருப்பீர்கள் என்றால், இறைவன் உங்களுக்கு வியாதியை அனுப்பி இருப்பாரென்றால் அவர் ஒரு மோசமான கடவுள்தான். கடவுள் உங்களுக்கு வியாதியை அனுப்புவாரென்றால் டாக்டர் எவ்வாறு உங்களுக்கு சுகம் கொடுக்க முடியும்? அப்படியென்றால் டாக்டர் கடவுளை விட பெரியவராயிற்றே. இதேவிதமாக அநேக காரியங்களை என்னால் உங்களிடம் கூறமுடியும். இறைவன் உங்களை நேசிக்கிறார். அவர் உங்களுக்கு வியாதியை அனுப்புவதில்லை. அவர் உங்களுடைய இருதயத்திலே பிரவேசிக்க விரும்புகிறார்.

இந்த உலகத்திலே அநேகவிதமான மார்க்கங்கள் இருக்கின்றன. ஜனங்கள் மதம் மாறி விடுவார்கள் என்று அநேகர் பயந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சமபந்தி என்று வைக்கிறார்கள். அதுதான் ஒரு பரிகாரமா? எல்லாரும் சாப்பிடுவார்கள், ஆனால் ஜாதி வித்தியாசத்தை மாத்திரம் விட மாட்டார்கள். ஆனால் சமபந்தி என்பார்கள். அங்கே உட்கார்ந்திருக்கிற ஒவ்வொருவரும் தங்களுடைய ஜாதிக்குத்தான் பாடுபடுவார்கள். சாப்பிடும்போது சமபந்தி என்று பேச்சு. பத்திரிக்கையிலே சமபந்தி நடந்தது என்று போட்டு விடுவார்கள். அந்த சமபந்தியிலே பங்கேற்ற ஒருவராவது தன் பிள்ளையை வேறொரு ஜாதியைச் சேர்ந்தவனுக்கு திருமணம் செய்து கொடுக்க மாட்டான். அப்படியென்றால் அது என்ன சமபந்தி? ஒன்றே குலம் என்று அனைத்து சமய மாநாடு என்பார்கள். அங்கே ஒவ்வொருவரும் தன்னுடைய மதத்தைப் பரப்புவதற்குத்தான் வருவார்கள். அப்படியென்றால் அனைத்து சமய மாநாடு என்றால் என்ன? நான் உங்களுக்கு அந்த விதமான காரியங்களைச் சொல்லவில்லை.

இந்தியாவிலே முக்கியமாக அநேக மக்கள் இந்துக்கள் தான் இருக்கிறார்கள். இந்து மார்க்கம் ஒரு மகத்தான மார்க்கம். இதை ஏன் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றால் ஒரு முஸ்லீமை ஒரு இந்துவாக மதம் மாற்றினீர்கள் என்றால் முஸ்லீம்கள் அதிகமாக கோபப்படுவார்கள். ஆனால் இந்துக்கள் அவ்விதமாக கோபம் அடைவதில்லை. யாரும் எங்கேயும் போங்கள், இது எங்களுடைய மக்கள் என்பார்கள். ஆனால் வெள்ளைக்காரர்கள், முஸ்லீம்கள், சீனாக்காரர்கள் வருகிறார்கள், நீ என்ன வேண்டுமானாலும் செய்து பார், நாங்கள் அசைய மாட்டோம் என்று இந்தியர்கள் கூறுகிறார்கள். இந்தியாவைத் தோற்கடிக்க முடிந்ததா? இந்தியாவிற்கு முஸ்லீம் சக்கரவர்த்திகள், பிரிட்டீஸ் மக்கள் வந்தார்கள். இந்தியாவை முற்றிலுமாகப் பிரிக்க முடிந்ததா? இந்தியாவைப் பிரிக்கவே முடியாது. இந்தியா தான் இந்த முழு உலகத்தையும் ஆட்சி செய்யப் போகிறது என்று சொன்னால் சிரிப்பீர்கள். என்னய்யா உலகம் முழுவதும் நம் ஆட்சிக்குள் வரபோகிறதா! அதுவும் தமிழ் மொழி. முதல் மொழி தமிழ் மொழி. தமிழில் இருந்துதான் எல்லா பாஷையும் பிரிந்தது. இப்பொழுது கடவுள் என்ன செய்திருக்கிறார்? எல்லாரையும் ஒன்று சேர்க்க வரும்போது இது சமபந்தியும் அல்ல. இது மத மாற்றமும் அல்ல. நீங்கள் வணங்குகிற இறைவனை வணங்கலாம். ஆனால் நீங்கள் என்ன புரிந்துகொள்ள வேண்டுமானால் அவர் ஒரே இறைவன் என்று புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் முருகா என்றால் அவரைத்தான் சொல்ல வேண்டும். நாராயணா, அல்லாஹ் என்றாலும் அந்த இறைவனைப் பார்த்து சொல்லுங்கள். அப்படியென்றால் நாம் எல்லோரும் யார்? நம் எல்லோரும் ஒரே குடும்பத்தார்தான்.

ஒரே ஒரு இரகசியத்தைச் சொல்லுகிறேன். எந்த ஒரு மார்க்கமும் இவ்வாறு பிரச்சாரம் செய்யவில்லை. இந்த உலகம் எவ்வாறு ஆரம்பித்தது? உலகம் தோன்றுவதற்கு முன்னதாக நாராயணர் ஒரு பலியைச் செலுத்தினார். அதுதான் ஆதியிலே செலுத்தப்பட்ட பலி ஆதிபலி என்று சொல்லப்படுகிறது. அதுதான் பரமபுருஷர் புருஷோத்தமன் பலியான நேரம். அந்த சமயத்திலே எந்தவிதமான மதமும் கிடையாது. எந்தவிதமான தேசமும் கிடையாது, தேச பாகுபாடுகள் கிடையாது. அந்த சமயத்தில் இந்த பலி செலுத்தப்பட்டபொழுது நாம் அப்பொழுது அங்கு இருந்திருக்கிறோம். இறைவன் அதை அப்படியே மறைத்து விட்டார். ஆகவே ஜனங்கள் கடவுளை கண்டுகொள்ள முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர்களால் கண்டுகொள்ள முடியவில்லை. பிசாசுக்கும் கடவுளுக்கும் உள்ள வித்தியாசத்தை ஜனங்களால் கண்டுகொள்ள முடியவில்லை. ஏனென்றால் எல்லாரும் அசைகிற எல்லாவற்றையும் இறைவன் என்று சொல்லி விடுகிறார்கள். எது சரியான ஆவி என்றும் எது தவறான ஆவி என்றும் நீங்கள் கண்டுகொள்ள வேண்டும். ஒரு நல்ல ஆவி என்றால் உங்களுக்கு மன சமாதானத்தையும் நல்ல ஆரோக்கியத்தையும் கொடுக்கும். தவறான ஆவியானது சங்கடத்தையும், வியாதியையும் கொடுக்கும். அதை நீங்கள் வெளியே துரத்த வேண்டும். நான் உங்களுக்காக ஜெபிக்கும்போது ஒரு காரியத்தை நீங்கள் கண்டுகொள்ள வேண்டும். நம்முடைய கர்மங்களும் நம்முடைய முற்பிதாக்களின் கர்மங்களும் நாம் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு தடையாக இருக்கும். உங்களுடைய கர்மங்களையெல்லாம் மன்னிக்கும்படியாக இறைவனிடத்தில் வேண்டிக்கொள்ள வேண்டும். அடுத்தபடியாக இறைவனை நம்முடைய வாழ்க்கையில் நடத்தும்படியாக கேட்க வேண்டும். அவர் நம்முடைய இருதயத்திலே வரும்படியாக கேட்க வேண்டும். அவர் வருவார். நீங்கள் அவரை அழைக்காமல் அவர் வரவே மாட்டார். நீங்கள் அழைப்பதை அவர் விரும்புகிறார். மூன்றாவதாக அவர் உங்களை சந்தோஷத்தால் நிரப்புவார். அந்த சமாதானம் உங்களுக்கு போதுமானது. அது உங்களை மகத்தானவனாக மாற்றும். உங்கள் எல்லா கர்மங்களையும் அவர் மன்னிப்பார். உங்களுடைய கர்மங்களெல்லாம் மன்னிக்கப்படுமானால் நீங்கள் அந்த சமாதானத்தைப் பெறுவீர்கள். உங்கள் வியாதிகளும் போய்விடும்.

ஆகவே இன்றைக்கு நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று நான் உங்களிடம் கேட்கவில்லை. உங்களை நான் மனிதர்களாக கருதுகிறேன். நீங்களும் மனுஷன் தான் நானும் மனுஷன்தான், நமக்குள் எந்தவிதமான வித்தியாசமும் தேவையில்லை. நான் உங்களுடைய மார்க்கத்தை குறைகூற இங்கு வரவில்லை. எனக்கு எந்தவிதமான மார்க்கமுமே கிடையாது. முழு இந்தியாவும் ஒன்றே. நாம் எல்லாரும் இந்திய மக்கள். ஒரே குடும்பத்தைப் போல் நாமெல்லாரும் போராட வேண்டும். நீங்கள் செல்வதற்கு முன்னதாக உங்களுக்காக பொதுப்பிரார்த்தனை செய்யப்போகிறேன். அதன்பிறகு கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். உங்களுடைய வாழ்க்கையிலே அந்த சக்தியை நீங்கள் பெறுவீர்கள். அதற்காகத்தான் நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். இதை நான் எப்படி பெற்றேன் என்றால் நான் அமெரிக்காவில் இருந்தபோது 40 கறுப்பு இனத்தவர்கள் (நீக்ரோக்கள்) என்னிடத்தில் வந்து எங்களுக்கு சமாதானம் இல்லை என்றார்கள். நான் அவர்களுக்காக ஜெபித்தபோது கடவுள் அவர்களை ஆசீர்வதித்தார். அப்பொழுது கடவுள் அசரீரி சத்தத்தில் என்னிடம் பேசினார். “உன்னை நான் இந்தியாவிற்கு அனுப்புகிறேன், நீ யாரையெல்லாம் தொடுகிறாயோ அவர்கள் கர்மங்கள் மன்னிக்கப்படும். இந்த கடைசி யுகத்திற்காக உன்னை தேர்ந்தெடுத்திருக்கிறேன். நல்லவர்கள் எல்லாம் உன்னிடத்தில் வருவார்கள் தீயவர்கள் உனக்கு விரோதமாக வருவார்கள், நீ அவர்களை அழிப்பாய். பெரிய யுத்த வீரர்களை வைத்து சண்டை போடவேண்டியதில்லை; உன் வாயினால் பேசினாலே அழிந்து போவார்கள். ஆகவே பயப்படாதே, வானத்திலுள்ள எல்லா சேனைகளும் உனக்கு ஆதரவாக இருக்கிறது. அதற்காக பலப்பட்டு போ.” என்றார்.  நான் பயந்துகொண்டு இங்கு வரவில்லை. இந்த நாட்டைப் பாதுகாக்க விரும்புகிறேன். ஏனென்றால் இந்த தேசத்தில் மோசமானவர்கள் கட்டாயமாக தோல்வியைத் தழுவுவார்கள். உங்களிடத்திலே தெய்வ பயம் இருக்குமானால் நான் உங்களை அழைக்கிறேன்.

சுகவீனமும், பயமும் கடவுளிடத்திலிருந்து வருகிறதல்ல.  கடவுள் ஒருபோதும் வியாதியையோ பயத்தையோ அனுப்புகிறவரல்ல. நாமெல்லோரும் ஆரோக்கியமாக இருக்கவே அவர் விரும்புகிறார். அதற்காகத்தான் ஆதியிலே அவர் பலி செலுத்தினார். ஆகவே நாமெல்லாரும் சகோதர சகோதரிகளைப் போல வாழ வேண்டும். உலகத்திலே ஒரு மனுஷன்தான் உண்டாக்கப்பட்டான். எனவே எந்த ஜாதி வேறுபாடுகளையும் கொண்டு வராதீர்கள். நாமெல்லாரும் அவருடைய பிள்ளைகள். நாமெல்லாரும் அந்த ஒரு தகப்பனுக்கு பிறந்த பிள்ளைகள்தான். அப்படியென்றால் எந்த ஜாதி அங்கே இருக்கிறது? ஜாதி வித்தியாசத்திற்கு இடமே இல்லை. அது ஒரு மோசமான காரியம். ஆகவே இன்றைக்கு இந்தவிதமான எல்லா வேறுபாடுகளையும் மறந்து விடுங்கள்.

முதலாவதாக  கவனியுங்கள். நாளைக்கு யாரையாவது சந்திக்க வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள். நான் உங்களை சந்திக்கிறேன் என்று வெறுமனே சொல்லி விடமாட்டேன்.  நாளைக்கு 9 மணிக்கு இந்த ஊரிலே வந்து சந்திப்பேன் என்று சொல்லுவேன். அதேவிதமாக நீங்கள் சுகமடைவதற்காக ஒரு சமயத்தை நீங்கள் குறித்துக்கொள்ள வேண்டும். இன்றைக்கு உங்களுக்காக நான் பிரார்த்திக்கப் போகிறேன். உங்கள் சரீரத்தில் எந்த இடத்தில் வியாதி இருக்கிறதோ அந்த இடத்திலே உங்கள் வலது கையை வைத்துக்கொள்ளுங்கள். உங்களை நேசிப்பவர்கள் யாராவது தூரத்திலே இருந்து வியாதிப்பட்டிருந்தால் அவர்களைக் குறித்தும் நினைத்துக் கொள்ளுங்கள் அவர்களும் சுகமடைவார்கள். உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருக்குமானால் அதையும் இந்த நேரத்திலே இறைவனிடத்தில் வையுங்கள். நான் அவரிடத்தில் சுகமளிக்கும்படி கேட்டுக்கொள்வேன். உங்கள் வலது கையை இருதயத்தில் வைத்தால் சமாதானம் வேண்டுமானால் அதற்காக பிரார்த்தனை செய்வேன். நான் சொல்லும் வார்த்தைகளை அப்படியே சொல்லுங்கள். கண்களை மூடிக்கொள்ளுங்கள். கையை வியாதியுள்ள பாகத்திலே வைத்துக்கொள்ளுங்கள். எங்களைப் படைத்த இறைவனே, எங்களை ஆசீர்வதியும். நாங்கள் இந்த உலகத்திலே எவ்வளவோ கஷ்டப்படுகிறோம். நீர் எங்களை ஆசீர்வதிக்க வேண்டும். எங்களுடைய பாவ கர்மங்களை எல்லாம் நீக்க வேண்டும். எங்களுக்குள்ளே சந்தோஷத்தையும், சமாதானத்தையும் தாரும். நாங்கள் இந்தியாவிலே ஆசீர்வதிக்கப்பட்ட ஜாதியாக வரவேண்டும். எங்களை ஆசீர்வதியும். எங்களுக்குள்ளே உம்முடைய சக்தி வரட்டும்.

நான் உங்களுக்காக பிரார்த்திக்கும்போது நம்மைச் சிருஷ்டித்தவரிடத்திலே நான் கேட்பேன். அவர் என் பிரார்த்தனையை எப்பொழுதும் கேட்பார். எந்த வியாதியாக இருந்தாலும், உங்கள் கைகள் வளைந்து திருகி போயிருந்தாலும் அது சரியாகி விடும். டாக்டர்கள் சுகமாக்க முடியாது என்று சொல்வார்கள். இந்த நிமிஷத்திலே நீங்கள் சுகமடைய முடியும். ஆனால் ஒரு காரியம் என்னவென்றால் உங்களுடைய கண்களை மூடி கடவுளை உங்கள் இருதயத்திற்குள்ளே வரும்படியாக கேளுங்கள். உங்களுடைய கர்மங்களை எல்லாம் எடுத்துப் போடும்படியாக கேட்டுக்கொண்டால் போதும். உங்கள் கண்களை மூடிக்கொள்ளுங்கள்.

எங்கள் அன்பான சிருஷ்டிகரே, எங்கள் ஒரே கடவுளே, இன்றைக்கு உம்மிடத்திற்கு வருகிறோம். கடவுளே எங்களை நீர் ஆசீர்வதிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். எங்களை கடவுளுடைய ஆவியினால் நிரப்பும். எல்லா பிசாசின் சக்தியையும் எங்களை விட்டு எடுத்துப்போடும். எல்லா மாந்திரீக சக்தியையும் இறைவனுடைய சக்தியினால் உடைக்கிறேன். எல்லா ஏழ்மையையும் எடுத்துப்போடும் இறைவா, எல்லா குருட்டுத்தன்மை, வயோதிகம், வியாதிகள், புற்றுநோய், டி.பி, கிட்னி வியாதிகள் மற்றும் சரீரத்திலுள்ள எல்லா வியாதிகளையும் முறியடிக்கிறேன். எல்லா வியாதிகளும் சரீரத்தை விட்டு வெளியே வரட்டும். அவர்களை அதிகமாய் ஆசீர்வதியும் இறைவா, கடவுளுடைய சமாதானத்தினாலே அவர்களை நிரப்பும். அவர்கள் இறைவனை நேசிக்கட்டும். ஒவ்வொரு தேசத்தின் மக்களிடத்திலும் அவர்களின் அன்பு இருக்கட்டும். பிரிந்துபோன இந்தியாவை ஒன்றாக்கும். நல்லவர்களை எல்லாம் ஒன்றுகூட்டி அவர்களை காப்பாற்றும். துன்மார்க்கர் நல்லவர்களை முறியடிக்காதபடி பார்த்துக்கொள்ளும். அதற்காக நீர் என்னை அனுப்பி இருக்கிறீர். உம்முடைய திட்டத்தை நிறைவேற்றும் இறைவா, அந்த ஆதிபலிக்காக நன்றி செலுத்துகிறோம். உம்முடைய சக்திக்காக இன்றைக்கு நன்றி செலுத்துகிறோம். எங்களை நிரப்பும்.

******

Filed under: ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்