தமிழ் | తెలుగు

» வாசகர் கருத்து »

அன்புடையீர், “மனுஜோதி” ஆகஸ்டு-அக்டோபர் 2016 இதழ் படித்தேன். வனாந்தரத்திலிருந்து ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அழைக்கும் செய்தியை அட்டைப்படம் உணர்த்தியது. வானம், பூமி, சமுத்திரம் யாவையும் படைத்த பரமபுருஷராகிய ஸ்ரீமந் நாராயண மூர்த்தியாம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவுக்கே எங்கள் கனம், துதி, மகிமை யாவும் உரித்தாகட்டும் என்ற ஆசிரியர் ஜெபதுதியில் நானும் பங்கேற்று பிரார்த்திக்கிறேன். மகத்தான கலாச்சாரத்தை கொண்டிருக்கும் ஒப்பற்ற மதம் இந்து மதம் என்பதில் இருவேறு கூற்றுக்கு இடமேயில்லை. ஸ்ரீமந் நாராயணரை கிரஹித்து உணர்ந்து கொண்டவன் தன்னுடைய பூலோக சரீரத்தை விட்டு செல்கிறபோது, மகிமையின் சரீரத்தை பெறுவது நிச்சயம் என்பதனை நான் நம்புகிறேன். வணிக வரித்துறை இணை ஆணையர் தேவேந்திர பூபதி அவர்கள் கூறியபடி, எப்போதெல்லாம் இந்த உலகிலே தீமை தலை தூக்குகிறதோ, எப்போது தர்மம் தன்னுடைய சக்தியை இழக்கிறதோ, அப்போதெல்லாம் அந்த தர்மத்தை காத்து நிலைநாட்டுவதற்காக நான் அவதாரம் எடுத்து வருவேன் என்ற உண்மையான மகா அவதாரத்தையே கல்கி ஜெயந்தி நினைவுறுத்துகிறது என்ற அவரது உள்ளக்கிடக்கையை நான் அப்படியே வழிமொழிந்து பதிவு செய்கிறேன். தொலைக்காட்சி பார்ப்பதற்கும், சினிமா பார்ப்பதற்கும் அல்லது வேறு எதற்காவது முக்கியத்துவம் கொடுத்தால் அது இறைவனின் பார்வையில் அசுத்தமான காரியங்களாகும் என்பது நூற்றுக்கு நூறு உண்மையே. சிவனும், சக்தியும் ஒன்றே, இதனை அறியாதவன் வாயிலே மண்தான்.

கோவில்களில் நந்தியின் சிலை இருப்பதின் தத்துவம் என்ன என்பதனை ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அற்புதமாக போதித்துள்ளார். மதுபானம், சூதாட்டம், காமசேட்டை, வேட்டை இந்த நான்கும் மனிதனை ஆசை வெள்ளத்தில் இழுத்துச்சென்று விரைவில் அழித்துவிடும் என்பதனை நினைவில் இருத்தி, லஹரி என்ற தெய்வீக அன்புக்கடலில் மூழ்கி, ஞான முத்துக்களை எடுப்போம். சிருஷ்டிப்பிலுள்ள அதிசயங்களில் மரங்களைக் குறிந்து அறிந்து இதனை ஆட்டுவிக்கும் சூத்திரதாரியான இறைவனின் மலரடியில் தஞ்சமடைகிறேன். வாயும் பொய், வயிறும் பொய்; வாழ்வும் பொய் என்பதுதான் ‘காயமே இது பொய்யடா, வெறும் காற்றடித்த பையடா’ என்ற கூக்குரலின் வெளிப்பாடாகும். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் உண்மையான அருளுரை ஆகும். சிற்றின்பத்தை முழுவதும் துறந்து பேரின்பத்தை அளித்த இறைவனையே முழுவதும் நம்பி தியானிப்போம். கிழக்கே தோன்றிய மின்னல் ஒளியில் பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவை கண்டு பரவசமடைகிறேன். 47-வது கல்கி ஜெயந்தி விழா காட்சிகள் அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

கா. இரா. குப்புதாசு, செஞ்சி

✡✡✡✡✡✡✡

Filed under: வாசகர் கருத்து