தமிழ் | తెలుగు

» பிரமுகர்களின் உரை » ஸ்ரீ லஹரி கிருஷ்ணா பாடல் வெளியீட்டு விழா

ஸ்ரீ லஹரி கிருஷ்ணா பாடல் வெளியீட்டு விழா

உலக நட்புறவு மையம் நடத்திய ஸ்ரீ லஹரி கிருஷ்ணா பாடல் வெளியீட்டு விழா மற்றும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் கவியரங்க விழா
சென்னை அண்ணா சாலையிலுள்ள உமாபதி அரங்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி, மாலை ஸ்ரீ லஹரி கிருஷ்ணா பாடல்கள் அடங்கிய குறுந்தகடு வெளியீட்டு விழாவும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் கவியரங்க விழாவும் சிறப்பாக நடைபெற்றது. சென்னையிலுள்ள உலக நட்புறவு மையம் மனுஜோதி ஆசிரமத்தின் சார்பாக ஸ்ரீ லஹரி கிருஷ்ணா பாடல் சிடியினை வெளியிட்டது. இவ்விழாவில் ஆன்மீக கவிஞர்கள், அறிஞர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் இறைவணக்கப் பாடலை திருக்குறள் மாமணி டாக்டர். கோ.ப. செல்லம்மாள் அவர்கள் பாடினார். அகில இந்திய சித்த மருத்துவ சங்கத்தின்
பொதுச் செயலாளர் டாக்டர் எம். பாஸ்கர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். MFG Lion Dr. கலைமாமணி ஜி. மணிலால் அவர்கள் விழாவிற்கு தலைமையேற்றார். விஜிபி குழுமத்தின் தலைவர் செவாலியர் கலைமாமணி டாக்டர் வி.ஜி சந்தோஷம் அவர்கள் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டை வெளியிட்டு வாழ்த்திப் பேசினார். சென்னை தொலைக்காட்சியின் உதவி இயக்குனர் முனைவர். திரு. பால இரமணி, தொலைக்காட்சி நடிகர் திரு. சிவன் சீனிவாசன், மாநிலக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் திரு. க. சேக் மீரான் மற்றும் கலைமாமணி. டாக்டர். மேக்னட் ராஜாராம் அவர்கள் குறுந்தகட்டினைப் பெற்றுக்கொண்டு வாழ்த்தி பேசினர்.

அரிமா. டாக்டர் எஸ் க. சக்திவேல், கண்ணோட்டம் பத்திரிக்கையின் ஆசிரியர் திரு. பி. சண்முகம், “ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அமிர்த கானம்” பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் திரு. V.B. மதுசூதனன் மற்றும் பாடல் எழுதிய திரைப்பட பாடலாசிரியர் கவிஞர். கிருதியா, திரைப்பட நடிகர் இராஜேந்திர நாத், திரைப்பட ஒலிப் பொறியாளர் L. ராஜ், பொதுபணித்துறை ஒப்பந்தகாரர் திரு. குப்புசாமி, கல்வியாளர் அமுதா பால கிருஷ்ணன், இளம்பாரி உ. கருணாகரன், கவிஞர் மு. கவிமதி மற்றும் பலர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். உலக நட்புறவு மையத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் வே. மு. கலைநாயகம் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சியினை டாக்டர். சிந்தை வாசன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

விழாவில் ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்ற தலைப்பில் 16 வரி கவியரங்கம் நடைபெற்றது. அதில் கவிஞர்கள் பலர் பங்கேற்றனர். கவியரங்கத் தலைமை: அரிமா. கவிஞர் பி. பாலகிருஷ்ணன் M.A., ML., கவிஞர். குமரிச்செழியன், கவிஞர் பூவை அமுதன், கவிஞர். மா.உ. ஞானவடிவேல், கவிஞர். சீனிராதாகிருஷ்ணன், கவிஞர் சின்னப்பாண்டியன், கவிஞர். சு.ப. சந்திரசேகரன், கவிஞர். வேளாங்கண்ணி பொன்னிவளவன், கவிஞர். ஸ்ரீராமன், கவிஞர் தென்காசி மீனா, கவிஞர். லெ.நா. சிவக்குமார், கவிஞர். எஸ். இரகுநாதன், கவிஞர். ஆரா, கவிஞர். இராமச்சந்திரன், கவிஞர். மகேந்திரன், கவிஞர். வண்ணைதாசன், கவிஞர். துளசிதாசன், கவிஞர். பேபி உமா, கவிஞர் திருமதி. தாயுமானவன், கவிஞர் நம்மவூர். கோபிநாத், கவிஞர். எம் ஜெயலட்சுமி முதலிய கவிஞர்களின் கவிதைகள் அரங்கேறியது. விழாவில் கலந்துகொண்டு பலர் சிறப்புரை ஆற்றினர். உலக நட்புறவு மையம் கவிதை பாடியவர்களுக்கு நினைவுப் பரிசும் பதக்கமும் அணிவித்து கௌரவித்தது.

விழாவில் விஜிபி குழுமத்தின் தலைவர் செவாலியர் கலைமாமணி டாக்டர் வி.ஜி சந்தோஷம் அவர்கள் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டை வெளியிட்டு பேசியபோது: ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்ற உன்னத நோக்கத்தோடு இந்த மனுஜோதி ஆசிரமத்தை நிறுவிய அன்புக்குரிய ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் ஆன்மீகத்தின் வழியாக பல்வேறு மக்களை ஒன்று சேர்த்து வருகிறார்கள். ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் எங்கள் மாவட்டத்தைச் சார்ந்தவர். அவர் ஒன்றே குலம் என்பதை மக்களுக்கு எடுத்துச் சொன்ன ஒரு சிறந்த ஆன்மீகவாதி ஆவார். அவர் வழித்தோன்றலாக வந்த அவரது மகன் தேவ ஆசீர் லாறி அவர்களும் செய்து வந்தார்கள். மனுஜோதி ஆசிரமத்தில் நடைபெறும் விழாவில் நான் வருடந் தவறாமல் கலந்து கொள்வதுண்டு. ஏனென்றால் ஆன்மீகம் என்ற உறவு – அன்பு என்ற உறவு – அருள் என்ற உறவு – நம்மை ஒன்றாக இணைக்கின்றது. இன்று உலகிலே நம்பிக்கையோடு வாழ்வதற்கு அருளும், அன்பும் தேவை. அன்பு இருக்கும்போது நாம் எல்லோரும் ஒன்றாக இணைந்து செயல்படுகின்றோம். உறவுகள் மூலமாக நாம் ஒற்றுமையைக் காணமுடியும். இங்கே கூடியிருக்கிற நீங்கள் அனைவரும் உறவுக்காரர்கள். அன்பு மற்றும் மனித நேயம் இருந்தால் தவறு செய்தால் கூட மன்னிக்கும் மனப்பான்மை இருக்கவேண்டும். இறைவன் ஒன்று என்கின்ற உணர்வு நமக்குள் வந்தால் அநேக பிரச்சினைகள் நம் நாட்டில் நடைபெறாது. சுப்பிரமணியனுக்கும், சுல்தானுக்கும், சூசைக்கும் சூரியன் ஒன்றே! உலகில் வெவ்வேறு மதங்கள் இருந்தாலும் மதங்களை மதித்து மனதார நாம் ஒன்று சேரும்பொழுது அங்கு எந்தவிதமான துன்பமும் கிடையாது என்ற உயரிய கருத்தைக் கூறி தம்முடைய சிற்றுரையை நிறைவு செய்தார்.

சென்னை தொலைக்காட்சியின் உதவி இயக்குனர் முனைவர். திரு. பால இரமணி அவர்கள் பேசும்போது: நான் ஏறக்குறைய 10-15 ஆண்டுகள் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் புகழ் பாடி அவர் அருளைப் பெற்றிருக்கிறவன். எனக்கு தெரிந்தவரை மெக்காவும், மெதினாவும் – காசியும், இராமேஸ்வரமும், புத்த கயாவும், எருசலேமும் ஒரே இடத்தில் இருப்பது ஸ்ரீ லஹரி கிருஷ்ணா குடிகொண்டிருக்கிற அந்த மனுஜோதி ஆசிரமம்தான். அநேகர் நான் சொல்லும் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்வார்களோ மாட்டார்களோ அது எனக்குத் தெரியவில்லை. இதை வெறும் ஏட்டளவிற்காகவும், பாட்டளவிற்காகவும், இலக்கிய நயத்திற்காகவும், அவையினுடைய கைதட்டலுக்காகவும் நான் சொல்லவில்லை. இந்த அனுபவ மொழியை பலபேர் உணர்ந்திருக்கிறார்கள்; சிலபேர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்பது மானுடத்தின் நாடிநரம்புகளில் ஊடுருவிப் பாய்கின்ற மிகப் பெரிய மந்திரமாகும். இந்த ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அளவிலே நமக்கெல்லாம் இன்னமும் வழிகாட்டிக் கொண்டிருக்கிற ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் இந்த உலகத்தையும் கடந்தும் வாழ்கிறார்கள். நம்மோடும் வாழ்கிறார்கள். ஊர், தேசம், நாடு, அண்டசராசரம், கஹனம் இவற்றை அடக்கிய ஒற்றை வார்த்தை உலகம். உலகம் கடந்தும் நாம் வாழ்வோம் என்று அவர்கள் உறுதியிட்டதினால்தான் முதல் வரியே முதல் கவிதையே உலகம் என்று தொட்டு எழுதினார்கள். கம்பன் எழுதிய முதல் பாடல் முதல் வரியே உலகம் யாவையும் தாமுல ஆக்கலும்… என்று முதல் வரியே உலகம் என்று எழுதினான். இன்றைக்கு உலகம் கடந்து வாழ்ந்து வருகிறான். அவருக்கு முன்னர் வாழ்ந்த சேக்கிழார் பெருமான் எழுதுகிறபொழுது முதல் வார்த்தை எழுதுகிறார். உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்… என்று அவர் எழுதிய முதல் வரி உலகம். இவர்களுக்கெல்லாம் தாத்தா திருவள்ளுவர் அவர் இரண்டாம் நூற்றாண்டில் என்ன எழுதினார்? அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு என்று எழுதுகிறார். எவன் ஒருவன் உலகத்தைத் தொட்டு எழுதுகின்றானோ அவன் உலகத்துள் வாழவில்லை; உலகத்தை தாண்டியும் வாழ்கின்றான். உலகம் மறைந்த பின்னும் வாழ்கிறான். எனவே தான் பாரதியும் எனக்கு வாழ்வு உண்டு சாவு கிடையாது என்று அறிவித்தான்.

பாரதி ஒருவனைக் கூப்பிட்டு புத்தன் தெரியுமா என்று கேட்டான்; அதற்கு அவன் தெரியும் என்றான். உடனே பாரதி அவன் செத்துவிட்டான் என்று தெரியுமா? என்றான். ஆதிசங்கரர் தெரியுமா என்று கேட்கிறான் பாரதி. அதற்கு அவன் தெரியும் அய்யா என்கிறான். அவனும் இறந்துவிட்டான் தெரியுமா? என்றான். புத்தன், இராமானுஜர், இயேசு நாதர், கிருஷ்ணர் மற்றும் ராமன் இருந்தார் அவரும் இறந்துவிட்டார் தெரியுமா என்று அவனிடத்தில் சொல்கிறான் பாரதி. கடைசியில் அவர்கள் எல்லாம் செத்துவிட்டார்கள் ஆனால் நான் சாகமாட்டேன் என்று சொன்னான் பாரதி. இவர்களை விட நான் சிறந்தவன் என்பதை அரூபமாக வேறுவிதத்தில் சொல்கின்றான்.

நமக்கு தமிழ் கொடுத்த பாரதி இந்த தமிழகத்திலே இருந்து கொண்டு, உலகத்திற்கு கவிதையை – சிந்தனையைத் தந்தவன்; மொழியைத் தந்தவன்; விழியைத் தந்தவன்; நான் இருந்து கொண்டிருப்பேன். அவர்கள் ஒன்றுமில்லை, அவர்கள் வெறும் ஆன்மீகத்தை மட்டுமே கொடுத்தார்கள். நான் ஆன்மீகத்தைக் கடந்து, அதற்குள் வாழ்ந்து, வாழ்கையைக் கொடுத்ததினாலே நான் வாழ்வேன் என்று சொன்னவன் பாரதி. ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் ஆன்மீகம் மட்டும் அல்ல, வாழ்க்கையையும் நமக்குக் கொடுத்திருக்கிறார். பாவேந்தர் பாரதிதாசனிடம் இதைப் பற்றி கேட்டபோது என்ன சொன்னார் தெரியுமா? பாரதி சாகமாட்டார் உண்மைதான். தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை; தமிழ்த் தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ? என்று கேட்கிறான். இது இரண்டையும் பார்த்த கவிஞர் கண்ணதாசன் மட்டும் சாதாரணமானவரா என்ன? அவர் எழுதினார் – “நான் நிரந்தரமானவன், அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்று எழுதினான்.

அப்படி நிரந்தரத்தில் மரணமில்லா பெருவாழ்வு வாழ்கிறேன் என்று சொன்ன வள்ளலாரைப் போலே, மரணம் வேறு, வாழ்வு வேறு அல்ல. மரணமில்லாத பெருவாழ்வுதான் மனித வாழ்க்கை என்று சொன்னவர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா. அவர் மதங்களுக்கு அப்பாற்பட்டவர். ஸ்ரீ லஹரி கிருஷ்ணா நமக்குச் சொல்வதாக அமைந்த ஒரு பாடல் எனக்கு திடீரென்று ஞாபகத்திற்கு வந்தது. இந்த தமிழ் இலக்கியத்திற்காக நேற்றைய தினம் தன் உடலை நீக்கி அமர்ந்திருக்கின்ற ஜெயகாந்தன் எழுதிய கவிதை. கண்ணதாசனே வியந்த பாடல் இது. “சில நேரங்களில் சில மனிதர்கள்” – ஜெயகாந்தன் எழுதிய பாடல் இது. அது லஹரி கிருஷ்ணா அவர்களுக்குச் சொல்லிப் பார்த்தால் அப்படியே பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

“கண்டதைச் சொல்லுகிறேன்; உங்கள் கதையைச் சொல்லுகிறேன்; இதைக் காணவும் கண்டு நாணவும் உமக்கு காரணம் உண்டென்றால் அவமானம் எனக்குண்டோ? கும்பிடச் சொல்லுகிறேன்; உங்களைக் கும்பிட்டுச் சொல்லுகிறேன்; இதை நம்பவும் நம்பி, அன்பினில் தோயவும் நம்பிக்கை இல்லையென்றால் எனக்கொரு தம்பிடி நட்டமுன்றோ என்று எழுதினார். வாழ்ந்திடச் சொல்கின்றேன்; நீங்கள் வாழ்ந்ததைச் சொல்கின்றேன்; இங்கு தாழ்வதும் தாழ்ந்து, வீழ்வதும் உமக்கு தலையெழுத்தென்றால் உம்மைத் தாங்கிட நாதி உண்டோ” என்று எழுதி விட்டு இப்போதுதான் தீக்குள் போனான். இந்த வரிகள் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவுக்கு காலாகாலமாக பொருந்தும் என்று கூறி தமது உரையை நிறைவு செய்தார்.

09A

*******

Filed under: பிரமுகர்களின் உரை