தமிழ் | తెలుగు

» ஆன்மீக கருத்து » ஸ்ரீ ஜயவந்த பக்தர்

ஸ்ரீ ஜயவந்த பக்தர்

ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!

இருண்ட சிறையிலே தன்னந்தனியாய் உட்கார்ந்திருந்தார் ஜயவந்தர். சிறையில் அசுத்தமும், நாற்றமும் கலந்த அந்த சூழ்நிலை அவருக்கு அருவருப்பு உண்டாக்கவில்லை. சிறையை கண்டவுடனேயே, நீதி நெறியற்ற இந்த செயல்கள் இன்று புதிதல்லவே. கம்சனின் கொடுமையினால் ஒரு பாவமும் அறியாத வசுதேவர் சிறையில் இருக்கவில்லையா? இன்று எப்படி நடைபெற வேண்டுமென்பது அவன் திருவுள்ளமோ? விடிந்ததும் நம்மை கட்டிப்போட நபர்கள் வந்துவிடுவார்கள்.

ஆகவே எஞ்சியுள்ள இந்த நேரத்திலே இறைவனுடைய திருநாமத்தை ஓதுவோம். இப்பிறவி போனால் மறுபடியும் எப்பிறவி வாய்க்குமோ? இந்த நிலையில்லாத சரீரத்தினால் எவ்வளவு நன்மைகள் செய்ய முடியுமோ செய்தாயிற்று. இனி அவருடைய திருவடிகளை அடைவது ஒன்றுதான் பாக்கி. ஆனால் இதற்கு ராஜ தண்டனை என்ற பழி வேண்டாம் என்று நினைத்தவராய், தியானத்தில் ஆழ்ந்தார். எவ்வளவு நேரம் தியானம் செய்தார் என்பதே அவருக்கு தெரியாது. சிறைச்சாலையில் பெரிய இரும்பு கதவுகள் திறக்கப்படும் ஓசையினால் அவரது தியானம் கலைந்தது.

மிகப் பெரியதோர் குளம். அதிலேதான் இவரைப் போட வேண்டும் என்று உத்தரவு. விஷயம் தெரிந்த ஊரார் அரசனை தூற்றினர். இப்படிப்பட்ட மகானுக்கு தண்டனையா? என்று துடிதுடித்தனர். அருமையான மைந்தர்கள் அறுவறும்கூட அங்கே வந்திருந்தனர். வீரர்கள் ஜயவந்தரை கட்டி வைத்த பையைத் தடால் என்று குளத்தில் வீசினர். அப்பொழுதும் அவர் மனம் தளரவில்லை. மீண்டும் பிறந்தாலும் உன் பொன்னடியை மறவாதிருக்க வரம் தருவாயென்று வேண்டியவராய், தசாவதார ஸ்தோத்திரத்தை முணுமுணுக்கலானார். அப்பொழுதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. வீழ்ந்த கோணி ஒரு முறை மூழ்கியது, மேலே வந்தது. அது மீண்டும் ஒருமுறை மூழ்கியது. அப்பொழுது குளத்து நீரிடையே ஒரு மின்னல் எழுந்தது.

அப்பர் பெருமானை கல்லிற் பிணித்து கடலில் தள்ளியபோது என்ன நேர்ந்தது? கடுநெடுங்கடலுள் கல்லும் மிதந்ததே என்று ஆச்சரியப்படுகிறார் சேக்கிழார் பெருமான். அதுபோல இந்த பை, ஜயவந்தரோடு மிதந்தது. மிக மிக பெரிய பொன்னிறமான ஆமை ஒன்று அதை முதுகிலே தாங்கி வர, மெல்ல மெல்ல அந்த கோணியானது குளத்தின் நடு மையத்திலிருந்து கரையை நோக்கி வந்தது.

வீரர்களும், கூட்டமும் திகைத்தன. அழகிய தெப்பம்போல் அந்த மூட்டை மிதந்து வரும் செய்தி அரசனுக்கு சென்றது. உடனே குதிரையின்மேல் ஏறி ஓடோடி வந்தான். அவன் வந்து சேருவதற்கும், ஆமை மூட்டையை சுமந்து கரையில் ஒதுக்கவும் சரியாக இருந்தது. ஜயவந்தரது மெய்யடியார்கள் பலர் வெற்றி கோஷம் எழுப்பினர். அரசன் ஓடோடி சென்று மூட்டையை தூக்க மற்றவர்கள் பிரிக்க, அதனுள் பத்மாசனத்தின் நிஷ்டையில் ஆழ்ந்திருந்தார் ஜயவந்தர். மூட்டையை சுமந்த கூர்மாவதார மூர்த்தியை பலரும் நன்றாக கண்டார்கள். ஆனால் மூட்டை கரை சேர்ந்தவுடன் ஒருமுறை புரண்டு தனது பொன் நிறத்தை காட்டி மூழ்கி விட்டது அந்த ஆமை.

அரசனும், புதல்வர்களும் இவர் திருவடிகளிலே வீழ்ந்து வணங்கி மன்னிக்கும்படி வேண்டினர். ஜயவந்தரோ அப்பொழுதும் மலர்ந்த முகத்தோடு, இறைவன் உங்களுக்கு பக்தியை போதிக்கவே இப்படிப்பட்ட ஒரு கடும் தண்டனையை எனக்கு அளித்தான். உண்மையில் இப்படிப்பட்ட மிகப்பெரிய மாறுதல்கள் ஏற்படுமானால், நாள்தோறும் நான் மரண தண்டனையை ஏற்க சித்தமாயிருக்கிறேன் என்றார். மனந்திருந்திய அரசன் இவரையே தனக்கு ஞானாசிரியராக கொண்டான். அன்று முதல் அந்த பிரதேசம் முழுவதும் தெய்வ பக்தி சிறந்தோங்கி வளரலாயிற்று. அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி என்ற சொல்லுக்கேற்ப அவன் விளங்கினான். ஜயவந்தரோ கூர்மமாக வந்து தம்மை காத்த இறைவனது புகழை வியந்து ஆனந்த கண்ணீர் சொரிந்தார்.

இறைவன் ஒரு பெண் பக்தையை காப்பாற்ற புலி உருவில் வந்தார். அந்த பெண் பக்தையான ‘ஸ்ரீ குணவதி பாய்’ என்பவரின் வாழ்க்கை வரலாற்றை அடுத்த இதழில் காண்போம்.

– தொடரும்…

✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீக கருத்து