தமிழ் | తెలుగు

» பத்திரிகை செய்திகள் » ஸ்ரீ ஜனாபாய்

ஸ்ரீ ஜனாபாய்

ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!

ஒருநாள் நடுநிசியில் நாமதேவர் தமது வீட்டிற்குள் அயர்ந்து தூங்கிகொண்டிருந்தார். கடும் காற்றும் மழையும் உண்டாயின. காற்று கூரைகளையெல்லாம் தூக்கி எறிந்தது, மழையும் இடியும், மின்னலுமாய் பொழிய ஆரம்பித்தது. இறைவன் கோயிலினின்று ஓடிவந்து தமது சக்ராயுதத்தை அவரது வீடு பறந்து செல்லாமல் மேலே குடைபோல் நிறுத்தி அவ்வீட்டை காத்தார். ஆனாலும் சுவர்கள் ஈரம் தாங்காமல் சரிந்து உட்கார்ந்துவிட்டன. பொழுது புலரும் சமயம் நாமதேவர் மழை பெய்த செய்தியே அறியாதவராய் மெல்ல எழுந்து எட்டிப்பார்த்தார்.

ஒளி பொருந்திய பீதாம்பரம் தரிப்பவனும், காதுகளிலே குண்டலங்கள் சூரிய சந்திரர்கள்போல் பிரகாசிப்பவனும், ரத்தினமயமான கிரீடம் தரிப்பவனுமான இறைவன் மண்ணை தன் கையினால் பிசைந்து சுவர் எழுப்புவதைக் கண்டார். “அடடா, இதென்ன அபச்சாரம்! என் வீட்டிற்கு தாங்கள் மண் பூசுவது அடுக்குமா? இது தகுமா” என்று கதறினார். இறைவனோ மிகுந்த கனிவுடன் “அப்பா குழந்தாய் காற்றிலே உன் சிறு குடிசை பறந்துபோயிருக்கும். நீயோ என் நாமத்தை தவிர வேறொன்றிலுமே பற்று இல்லாமலிருக்கிறாய். உனக்கு வரும் தீமையை விலக்குவது என் பணியல்லவா! அப்படி செய்யாவிட்டால், உன் தாயார் என்னை சும்மாவிடுவாளா?” என்றார்.

இங்கே பேச்சுக்குரல் கேட்டு வெளியே வந்த குணாயி இறைவன் திருவடிகளிலே வீழ்ந்து “தங்களை நான் தூஷித்ததுண்டு, உண்மைதான். மன்னிக்க வேண்டும்” என்று இறைஞ்சினாள். பிறகு அவன் இருகரங்களையும் பற்றி உள்ளே அழைத்துச் சென்றாள். இறைவனுக்கு சேவை செய்யும் பேறு ஜனாபாய்க்கு கிடைத்தது. வெகுவேகமாக வெந்நீர் தயார் செய்து, மழையினால் சேறாயிருந்த அவனது பீதாம்பரத்தை வாங்கி உலர வைத்து தருவதாக கேட்க, இறைவன் ஜனாபாயின் கந்தல் புடவையை எடுத்து அணிந்துகொண்டான். சுத்தமாய் தோய்த்து உலர்த்தியிருந்த அந்த கந்தல் சேலை இறைவனது திருமேனிக்கு பொருத்தமாய் விளங்கியது. சமையலை முடிக்க சென்ற ஜனாபாய் இடையே வந்து அவரது பீதாம்பரம் உலர்ந்ததா என்று பார்த்து, எடுத்து வந்து கொடுத்து அணிந்துகொள்ள செய்து, அங்கிருந்த ஒரு கயிற்றுக் கட்டிலிலே பழைய துணிகளையும், கோணிகளையும் போட்டு அதிலே சற்று சிரம பரிகாரம் செய்து கொண்டிருங்கள் என்றாள். ஆதிசேஷ சயனத்தினும் மென்மையாக இருக்கின்றது என்று பகவான் கூறி அதிலே பள்ளி கொள்ள, ஜனாபாய் அவன் பாதங்களை வருடலானாள். இறைவன் சற்றே இளைப்பாறினான்.

பின் ஜனாபாய் தூயநீரால் அவன் பாதங்களை அலம்பி அர்ச்சனை செய்து அன்னம் பரிமாற பகவான், நாமதேவர், குணாயி, ராஜாயி, நாமதேவரது மக்களான விட்டலன், மகாதேவன், நாராயணன், கோவிந்தன் அனைவரும் சூழ உட்கார்ந்து போஜனம் செய்யலாயினர். குழம்பும், சோறுமாய் கலந்து பகவானுக்கு நாமதேவர் ஊட்ட இறைவனது முகத்திலே முறுவல் அரும்பியது. இதுகண்டு ஜனாபாய் மனம்நொந்தாள். மற்றெல்லோருடனும் சமமாக உண்ணும் இறைவன் என்னையும் ஏன் சேர்த்துக்கொள்ளவில்லை? என்று எண்ணினாள். பிறகு மீதியிருந்த சோற்றை எடுத்துக்கொண்டு தனக்கென்று ஏற்படுத்தப்பட்ட அறையிலே சென்று உண்ணத்தொடங்கினாள். இறைவன் மெல்ல எழுந்து அவள் அறைக்குள் சென்று அவள் உணவிலே இரண்டு கவளம் வாங்கி உண்டு அங்கேயே சயனித்துவிட்டான். இதைக்கண்ட குணாயி நாமதேவரை அழைத்து “இறைவனின் திருக்கூத்தை பாருங்கள்! நீ எவ்வளவோ சிரத்தையுடன் ஊட்டியதை விரும்பாமல் ஜனாபாயின் உணவை உண்டு அங்கேயே தூங்கவும் ஆரம்பித்துவிட்டார்” என்றாள். நாமதேவர் நிஜபக்தி ஒன்றுக்கே இறைவன் கட்டுப்படும் பெருமையை விவரித்தார். இதற்குள் பொழுதும் புலர்ந்தது.

நாள்தோறும் விடியற்காலையிலே ஜனாபாய் கோதுமை மாவு அரைப்பது வழக்கம். அன்று முன்னிரவில் இறைவனோடு நெடுநேரம் அளவளாவி மகிழ்ந்திருந்த காரணத்தினால் அயர்ந்து அவள் தூங்கிவிட்டாள். இறைவன் அவளை தட்டி எழுப்பியும் அவள் எழுந்திருக்கவில்லை. அவளை எழுப்பி மாவரைக்கும் இயந்திரத்தின் அருகே உட்காரவைத்து கூடை நிறைய தானியத்தைக் கொண்டு வந்து அருகில் வைத்து “அம்மா! ஜனா! நீ பாடிக்கொண்டே அரைத்தால் சிரமம் தெரியாது” என்றான் இறைவன். ஜனாபாயும் பாடிக்கொண்டே அரைக்க ஆரம்பித்தாள்.

தசாவதாரங்களைப் பற்றிய அருமையான பாமாலைகளை அவள் வாய் இசைத்துக் கொண்டிருந்தது. பகவான் தாமே அள்ளி அள்ளி இட்டு, “பேஷ் பேஷ்” என்று தலையசைத்த வண்ணம் இயந்திரத்தைச் சுற்றிக்கொண்டிருந்தான். இயந்திர ஓசையும், பாடலின் ஓசையும் கேட்டு எழுந்து வந்த குணாயி “யாரோடு பேசிக்கொண்டிருக்கிறாய்? யாரடா அது? இந்த விடியற்காலையிலே” என்று சொல்லி கையிலிருந்த கோலினால் ஜனாபாயின் முதுகிலே நாலு அடிகள் வைத்தாள். அப்பொழுது இறைவனது திருமேனி சிலிர்த்தது. மிகவும் பணிவான குரலில் “அம்மா! என் பெயர் விட்டோபா, இந்த பெண்ணின் மேலுள்ள இரக்கத்தினால் அவள் விடிந்ததும் செய்ய வேண்டிய வேலையை நான் இப்பொழுதே செய்கிறேன். இதற்கு என்னையும் சேர்த்து அடிப்பானேன்?” என்றார். இதற்குள் நாமதேவரும் அங்கே வர “அம்மா, இது என்ன அக்கிரமம்? இறைவனே வந்தும் நீ அறிந்துகொள்ளவில்லையே! என்று அங்கலாய்த்து இறைவன் திருவடிகளிலே வணங்கி “பிழை பொறுக்க வேண்டும். தேவரிரது திருமேனி அடியை ஏற்கவும் நேர்ந்ததே, என் தாயும் யசோதையே என்று நினைக்கவேண்டும்” என்று வேண்டி நின்றார். குணாயி அம்மையாரும் மனங்கசிந்து வருந்தினார்.

இறைவனது திருவுள்ளம் ஜனாபாயின் பெருமையை உலகினருக்கு அறிவிக்க ஆசை கொண்டது. ஆகவே இறைவன் தனது பீதாம்பரத்தையும், அணிகலன்களையும் அங்கே விடுத்து ஜனாபாயின் கந்தல் துணியை உடுத்து வீதியிலிறங்கினான். “ஸ்வாமி! அது என்னுடைய துணி, பீதாம்பரம் இதோ!” என்று கூறிய ஜனாபாயின் கூச்சலை ஏற்காமல், “நீயே பீதாம்பரத்தை உடுத்திக்கொள்” என்று சொல்லி நடந்து மறைந்துபோனார்.

– தொடரும்…

✡✡✡✡✡✡✡

Filed under: பத்திரிகை செய்திகள்