தமிழ் | తెలుగు

» ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!, பத்திரிகை செய்திகள் » ஸ்ரீ சமர்த்த ராமதாஸர்

ஸ்ரீ சமர்த்த ராமதாஸர்

‘மன்னும் இமயமலை எங்கள் மலையே’ என்று நமது நாட்டின் பெருமையைப் பாடிய பாரதியார்,

“இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே
இங்கிதன் மாண்புக்கு எதிர்எது வேறே?”
என்று கங்கையின் புகழைப் பாடுகிறார். இந்த நதிக்கு கூப்பிடும் துாரத்தில், இப்பொழுது ‘ஜான்புரி’ என்று வழங்கும் ஜோன்பூர் என்னும் நகரில் சூர்யாஜி பண்டிதர் என்று பெயர் கொண்ட அந்தணர் வாழ்ந்து வந்தார். இவரது கிருஹ லக்ஷ்மியாய் அமைந்தவள் ராணுபாய் என்னும் பெண்மணி. அவ்விருவரும் மிகச் சிறந்த முறையிலே பிறர் மெச்ச இல்லறம் நடத்தி வந்தனர்.

இவர்களது குலதெய்வம் சூர்யபகவான்; இஷ்ட தெய்வம் ஸ்ரீ ராமபிரான்.
பன்னிரண்டு வருடங்கள் இவர்கள் ஆதித்யஹ்ருதயத்தை முறைப்படி பாராயணம் செய்தும், ஸ்ரீ ராமபிரானை வழிபட்டும் வந்தனர். ஒருநாள் சூர்ய நாராயணமூர்த்தி இவருக்குப் பிரத்யட்சமானார். நல்ல தெய்வ பக்தியுள்ள ஒரு புதல்வன் வேண்டும் என்று இவர் விரும்பியதை அறிந்த அவர், “அன்பனே! உனக்கு இரண்டு குமாரர்கள் தோன்றுவார்கள். முன்னவன் எனது அம்சமாகவும், பின்னவன் மாருதியின் அம்சமாகவும் தோன்றி உங்கள் விருப்பப்படியே பாரத பூமியிலே பக்தி மார்க்கம் பரவச் செய்வார்கள்” என்றார். சூர்யாஜி ஆனந்தக் கடலிலே ஆழ்ந்தார்.

நாட்கள் சென்றன. முதற்புதல்வன் தோன்றினான். அவனுக்குக் கங்காதரன் என்று பெயரிட்டு அருமையும் பெருமையுமாய் வளர்த்தனர். கங்காதரனுக்கு ஐந்து வயது முடிந்தது. சூர்ய நாராயண பகவானது வாக்கின்படி இரண்டாவது புதல்வன் தோன்றினான். குழந்தைக்கு ஒரு சிறு வால் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டாள் ராணுபாய். தகவல் தெரிந்த சூர்யாஜி, “அதுவும் அவன் செயலே! மாருதியின் அம்சம் என்று நமக்கு நினைவூட்டவே இப்படி வைத்திருக்கிறான் இறைவன்!” என்று
நினைத்தார்.

சில நாட்களில் வால் மறைந்து போயிற்று. குழந்தைக்கு ‘நாராயணன்’ என்று பெயரிட்டனர். குழந்தை நாராயணன் தவழ்ந்தான்; தளிர்நடை நடந்தான்; பெற்றோரை இன்பக் கடலில் ஆழ்த்தினான். வயது ஏழும் வந்தது. உபநயனம் செய்வித்துப் பள்ளிக்கு அனுப்பினர். ஏற்கனவே விஷமக் கொடுக்கு என்று பெயர் பெற்றிருந்த அவன், தன்னுடன் ஒரு குழுவைச் சேர்த்துக்கொண்டு மரங்களில் ஏறி மாங்காய் திருடுவதும், குளத்திலே குதித்து நீந்துவதுமாய் இருந்தான். ஏழு வயது நிரம்பாத குழந்தை இப்படி
விஷமம் செய்வது பொறாத ராணுபாய், “இப்படியெல்லாம் செய்தால் பூதம் உன்னை விழுங்கி விடும்” என்று பயமுறுத்தினாள். அவனோ, மிகவும் உரத்த குரலில், “பூதமா? பூதம் வந்தால் ஒரே அடியில் வீழ்த்திவிடுவேன்” என்று கைகளை வீச மகனது மழலையிலே மெய்மறந்தாள் தாய்.

இப்படியே வருடங்கள் சென்றன. கங்காதரனுக்கு மணப்பருவமும் வந்தது.
விவாகம் செய்வித்து மகிழ்ந்தனர். ஆனால் “நாராயணன் இன்னும் ஒழுங்காகக் கல்வி பயிலவில்லையே, இப்படி வேண்டாத செயல்களிலே பொழுதை எல்லாம் வீணாக்கிப் பிள்ளைகளுடன் ஊர் சுற்றுகிறானே” என்று ஏங்கலானாள் தாய். ஒருநாள் தந்தை அறியாமல் அவனைத் தனியே அழைத்து, அண்ணனுக்கு விவாகம் ஆகிக் குடியும் குடித்தனமுமாய் வாழ்கிறான். நீயோ இன்னும் பொருள் தேட வேண்டும் என்ற
பொறுப்பில்லாமல் திரிகிறாயே. கல்வியறிவிலே எப்படியோ தேர்ந்து விட்டாய். இனிக் குடும்ப நிர்வாகத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாமா? ஏதாவது ஒரு தொழில் செய்ய முயற்சி செய் என்றாள் ராணுபாய்.

தாயின் சொற்கள் அவனுக்கு விளங்கவில்லை. என்ன தொழில் செய்து பொருள் தேடுவது? என்று எண்ணியவனாய்க் குளக்கரையை நோக்கி நடந்தான். அங்கே குடியானவர்கள் நெல் மூட்டைகளைக் களத்திலிருந்து கொணர்ந்து அடுக்கியிருந்தனர். அவைகளை ஒருவரால் துாக்க இயலாது. அதில் ஒரு மூட்டையை முதுகில் சுமந்து வீட்டுக்கு வந்து தெருத்திண்ணையிலே இறக்கினான். உரத்தக் குரலில், அம்மா நீ சொன்னபடியே ஒரு வேலை செய்திருக்கிறேன். வா! வந்து பார்!
என்று உற்சாகமாகக் கூச்சலிட்டான் நாராயணன்.

ராணுபாய் உள்ளிருந்து ஓடிவந்தாள். மிகப் பெரிய நெல் மூட்டை
திண்ணையின்மீது கம்பீரமாக உட்கார்ந்திருந்தது. ஆச்சரியத்தினால் திகைத்த
அவள், “இது யாருடையது? எங்கிருந்து கொண்டு வந்தாய்?” என்றாள். அவள் சொல்லி வாய் மூடுமுன் மூட்டைகளுக்கு உரியவனான உழவன் அங்கே வந்து இந்த நெல் மூட்டை என்னுடையதுதான். நான்கு பேர் துாக்க வேண்டிய மூட்டையை உங்கள் மகன் ஒருவனாகவே துாக்கி வந்து விட்டான் என்றான். நாராயணன் அவனை நோக்கி, சரிதான் உன்னுடையது என்றால் எடுத்துப் போகலாம் என்றான். உழவன் ஆட்களுடன்
வந்து மெல்ல மெல்லப் புரட்டி அந்த மூட்டையை வண்டியில் ஏற்றினான். ஆனால் திண்ணையில் மீண்டும் ஒரு மூட்டை இருந்தது. உழவன் திகைத்துப் போய் இந்தச் செய்தியை எல்லோரிடமும் சொல்லி, “இந்த நாராயணன் தெய்வப் பிறவி” என்று வணங்கி வீடு சென்றான். தந்தையாரும் நெல் மூட்டை செய்தியை அறிந்து, அதுவும்
இறைவனின் திருவருள் என்று வியந்தனர்.

நாட்கள் செல்லச் செல்ல நாராயணனுடைய விஷமங்களும் ஊர் சுற்றுவதும்
குறைந்தன. வீட்டின் ஓர் அறையிலேயோ தோட்டத்திலேயோ உட்கார்ந்து தியானம் செய்வதிலேயே ஆழந்திருந்தான். வீட்டிலே விவாகத்துக்கு உரிய முயற்சிகள் நடைபெற்றன. அதைப்பற்றி அவன் அறிந்துகொள்ளவில்லை. மறுநாள் விவாகம். முன் இரவு புரோகிதர் பூர்வாங்கமான சடங்குகள் தொடரும்பொழுதுதான் ஒரே குழப்பமாக இருந்தது. மறுநாள் காலை மங்கள ஸ்நானம் நடைபெறும் பொழுதெல்லாம் தாயிடம், “உங்கள் குலம் விளங்க அண்ணன் இல்லறம் நடத்துகிறானே! என்னையும் ஏன் வற்புறுத்த வேண்டும்?” என்றான். தாயோ, மகன் ஏதோ விளையாட்டாக
சொல்லுகிறான் என்றே நினைத்தாள்.

திருமண நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. மணவறையிலே இவனது தந்தை சூர்யாஜியும், பெண்ணின் தந்தையும், தங்கள்மேல் உத்தரீயங்கள் இரண்டையும் முடியிட்ட வண்ணம் வேதிகளை வணங்கி நின்றனர். மணமேடையிலே வேதகோஷம் தொடங்கியது. “ஸுலக்னே ஸாவதான” என்று மணமக்களை குறித்துச் சொல்லும் மந்திரங்கள் சொல்லும்போது நாராயணன் திடுக்கிட்டான். “ஹே! நாராயணா! ஜாக்கிரதை! எச்சரிக்கையாய் இரு! விழிப்புடன் இரு! என்று தன்னை ஸ்ரீ ராமபிரான்
வந்து எச்சரிக்கை செய்ததுபோல உணர்ந்தான். அவ்வளவுதான் ‘இதோ வருகிறேன்’ என்று சொல்லி எழுந்து உடை மாற்றச் சென்ற நாராயணனைக் காணவில்லை.

நேரம் ஆகிறது, மணமகன் எங்கே? எங்கே? என்ற ஒலி கூட்டத்தில் எழுந்தது. மணமகள் வந்து அமர்ந்து, அவள் எதிரே வெண்மையான திரைத் துகிலும் பிடித்தாயிற்று. ஆனால் மணமகனைக் காணவில்லை. சில நிமிஷங்களுக்கெல்லாம் ஓடிவிட்டான் என்ற உண்மை எல்லோருக்கும் புலனாயிற்று.

தாயும் தந்தையும் தேடப் புகுந்தனர். மூலைக்கு மூலை ஆட்கள் பறந்தனர்.
இதற்குள் அங்கிருந்த முதியவர்கள், இதுவும் நன்மைக்கே. அவன் மெய்ஞ்ஞானி. அவனுக்குக் குடும்பப் பந்தம் உண்டுபண்ண முயற்சி செய்தது நம் தவறு. தானே வந்து சேருவான் என்று ஆறுதல் கூறினர். பெண்ணின் பெற்றோர்கள், “அந்த மட்டும் முன்னதாகவே ஓடினானே மகானுபாவன். அதுவே பெரிய பாக்கியம்” என்று நினைத்தனர். ஊர் முழுவதும் ஒரே அமளிதுமளிபட்டது.

– தொடரும்…

*******

Filed under: ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!, பத்திரிகை செய்திகள்