தமிழ் | తెలుగు

» பத்திரிகை செய்திகள் » ஸ்ரீ சமர்த்த ராமதாஸர்

ஸ்ரீ சமர்த்த ராமதாஸர்

ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!

அடர்ந்த காடு ஊரை விட்டு நெடுந்தூரம் வந்த நாராயணன் அந்த வனத்துள்ளே புகுந்து, தன்னைத் தேடி வருபவர்களது கண்களுக்குப் புலனாகாவண்ணம் நடந்துகொண்டே இருந்தான். எப்படியும் ராமபிரானைத் தரிசனம் செய்தே தீருவது என்ற உறுதியுடன் புதர்கள் அடர்ந்த ஒரு மறைவிடத்தைத் தேடி உட்கார்ந்தான். அது ஒரு குகை. குகைக்குள் அமர்ந்த சற்று நேரத்திற்கெல்லாம் இருளும் சூழ்ந்தது. பசி, தாகம் ஒன்றையும் பற்றிச் சிந்தியாமல், ராம மந்திரத்தையே தியானிப்பதில் அவன் முனைந்தான்.

வாரம் ஒன்றாயிற்று, அந்தக் குகையை அடுத்து ஓர் அழகிய நீரோடை இருந்தது. இடையிலே தியானம் கலைந்து எழும்போதெல்லாம் கிட்டும் காய் கனிகளைத் தின்று நீரோடையின் தெளிந்த நீரை அள்ளிப் பருகி, மீண்டும் தியானத்திலே ஆழ்ந்துவிடுவான். இப்படியே நாட்கள் சென்றன. ராமபிரான் அருள் தரவில்லை.

“இறைவனை நேரில் அடைவது இயலாதோ! நாம் செல்லும் வழி முறையற்றதோ என்ற சந்தேகம் அவன் உள்ளத்திலே எழுந்தது. சரிதான், ராமன் திருவடிகளை அடைவதற்கு முதற்படி அவனது தாசனாகிய அனுமனை வழிபடுவதுதான் சரியானது என்ற முடிவுக்கு வந்தான். அவ்வளவுதான்! மீண்டும் அனுமானை நோக்கி தவம் செய்யலானான் நாராயணன். அனுமான் தோன்றவில்லையானால் உயிரை விட்டுவிடுவது என்றே முடிவு செய்துகொண்டான். இப்படி ஏழு நாட்கள் அனுமானை வழிபட, இவனது உறுதியைக் கண்ட அனுமான் இவன் எதிரே தோன்றினான். இவனோ அவன் தாள்களைக் கெட்டியாகப் பற்றி, “எனக்கு ராமபிரானது அருள்பெற உபதேசிக்க வேண்டும்” என்று இறைஞ்சினான்.

அனுமானது முகத்திலே புன்முறுவல் தவழ்ந்தது. நீ யார் என்பது உனக்குத் தெரியாது. நீ எனது அம்சமாகவே தோன்றியவன். உனக்கு ராமபிரானது அருள் கிடைக்க தடையென்ன? என்னுடன் வா! என்று நாராயணனின் கைகளைப் பற்றி அழைத்துக்கொண்டு கால்நடையாகவே கிளம்பினான் ஆஞ்சநேயன்.

அன்று ஸ்ரீராமநவமி. பஞ்சவடியிலே உள்ள ஆலயம் ஒரே கோலாகலமாகக் காட்சி தந்தது. பக்தர்கள் குழு ஆடியும் பாடியும் வழிபட்டுக் கொண்டிருந்தது. இன்னிசைகளுக்கெல்லாம் அரசன் என்று சொல்லப்படும் மாருதி அந்தப் பஜனைகளிலே ஈடுபட்டுத் தலையசைத்தவனாய் நாராயணனுடன் மண்டபத்தின் ஒரு மூலையில் அமர்ந்திருந்தான்.

நேரம் ஆயிற்று, இரவும் வந்தது. அப்பொழுது பக்தர்கள் கூட்டம் கலைய ஆரம்பித்தது. அர்ச்சகர்களும் தமது கடமையை முடித்து வீடு திரும்பலாயினர். இந்தச் சமயத்திலே அந்தண வடிவமாக தோன்றிய மாருதி கர்ப்பக்கிருகத்தில் நுழைந்தான். கண்கள் பனிசேரக் கரங்குவித்துத் துதித்து நின்றான்.

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி நிற்கும் மாருதியை ஏற இறங்க ஒருமுறை பார்த்தான் ராமபிரான். பிறகு அன்பும் பிரிவும் கலந்த குரலிலே மாருதி, சேதுவைக் காவல் செய்து கொண்டிருக்கும் நீ இங்கே வந்த காரணம் என்ன? என்றான்.

ராமபிரானும் மாருதியும் பேசிய சொற்கள் நாராயணனுக்குத் தெளிவாய்க் கேட்டன. ஆனால் ராமபிரானது வடிவம் அவன் கண்களுக்குப் புலனாகவில்லை. மாருதியின் முகத்தை ஏறிட்டு நோக்கினான் நாராயணன். மாருதிக்கு விஷயம் விளங்கிவிட்டது. இவனுக்குக் குருமுகமான உபதேசம் இல்லை. ஆகவே தான் ராமபிரானது உருவம் இவன் கண்களுக்குப் புலனாகவில்லை என்று கண்டு, பிரபோ! இந்தச் சிறுவனுக்குக் கடாட்சம் இல்லை. ஆகவே, நீங்களே இவனுக்கு உபதேசம் செய்ய வேண்டும் என்றான்.

ராமபிரான் நாராயணனது தலைமீது தனது வலதுகரத்தை வைத்து வலச் செவியிலே ராமதாரக மந்திரத்தை உபதேசித்து, ஏ! நாராயணா! இன்று முதல் நீ ராமதாஸன் என்று வழங்கப்படுவாய். பக்தியைப் பிரச்சாரம் செய்து நாட்டு மக்களை நல்வழிப்படுத்தித் தெய்வ வாழ்க்கை வாழ வழி வகுப்பாய். அரசரும் உன் பல்லக்கைச் சுமக்கும் பேறு பெறுவாய் என்று சொல்லி ஆசீர்வதித்தான்.

மந்திரம் செவியில் விழுந்ததோ இல்லையோ, நாராயணனுடைய கண்களின் முன்னே கொண்டலும் மின்னலும்போல் ராமபிரானும் சீதாபிராட்டியும் லட்சுமணனும் தோன்றினார்கள். அந்த அற்புதக் காட்சியிலே மெய்மறந்து அவர்கள் தாள்களிலே பணிந்தான். பேருவகையினால் அவன் இதயம் விம்மியது. மீணடும் மீண்டும் பணிந்து பணிந்து எழுந்துகொண்டே இருந்தான். ராமபிரான் போதும் என்று கையமர்த்தி, மாருதியைப் பார்த்து, மாருதி, நீ சேதுவின் காவலுக்குச் செல்லலாம் என்றான்.

நாராயணனோ, மாருதியின் கரங்களைப் பற்றி, உங்களைப் பிரிந்து நான் வாழமாட்டேன் என்று பிடிவாதம் செய்ய, ராமபிரான், ஏ! ராமதாஸ்! நீ நினைக்கும்பொழுதெல்லாம் மாருதியும் நானும் வருவோம்! தயங்காதே! என்று அருளி மறைந்தான். ஆனாலும், மாருதியைப் பற்றிய பிடியை விடாமலேயே சாங்க்லீ என்ற நகரை நோக்கி நடந்தார் ராமதாஸர்.

சாங்க்லீ நகர் அதுகாறும் கண்டிராததொரு புதுமையைக் கண்டது. குருவும் சீடனுமான இரு அந்தணர்கள் ராமபஜனை செய்து வருவதும், புதிய புதிய கருத்துக்கள் அமைந்த பாடல்களால் இறைவனை வழிபடும் முறையும், இசையின் இனிமையும் மக்களை மெய்மறக்கச் செய்தன. மாருதி இசையின் பிறப்பிடம், நலவியாகரண பண்டிதன், சொல்லின் செல்வன் என்பதையெல்லாம் நிரூபிப்பதைப்போல அந்த சாங்க்லீ நகர முழுவதும் அவனது இசை எதிரொலித்துக் கொண்டிருந்தது.

இன்று கர்நாடக சங்கீதத்திலே இரு பெரும் பிரிவுகள் உண்டு. அவற்றில் ஒன்று நாரதமதம், மற்றொன்று ஹனுமனமதம். சங்கீதத் திரிமூர்த்திகளுள் ஒருவரான தியாகராஜ ஸ்வாமிக்கு நாரத முனிவர் நேரில் வந்து, “ஸ்வரார்ணவம்” என்ற சுவடியை அளித்த செய்தி நம்மெல்லொருக்கும் தெரியும். இவரது மதம் நாரத மதம்.

குருகுஹதாஸன் என்று பெயர் பெற்ற ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சீதர் அவர்களின் மதம் ஹனுமன் மதம் என்று சொல்லப்படுகிறது. சதுர்தண்டிப் பிரகாசிகா என்ற இசை நூலை வகுத்த வேங்கடபதி என்பவர் ஹனுமன் மதத்தைச் சேர்த்தவர் என்பதைப் பலரும் அறிவர். இப்படி ஓர் இசை இலக்கியத்துக்கே மூல புருஷனாய் விளங்கும் மாருதியே பாடுவது என்றால் சாங்க்லீ நகரம் இசையின்பத்திலே மிதந்து கொண்டிருந்ததில் ஆச்சரியம் என்ன?

– தொடரும்…

Filed under: பத்திரிகை செய்திகள்