தமிழ் | తెలుగు

» ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! » ஸ்ரீ குணவதி பாய்

ஸ்ரீ குணவதி பாய்

மாதவசிங் என்பவர் ஓர் அக்னி குல ரஜபுத்ர வீரர், சிற்றரசராக இருந்தார். இவரது துணைவியே குணாபாய் என்றழைக்கப்படும் குணவதி பாய் இவ்விருவரும் சிறந்த தெய்வ பக்தியுள்ளவர்கள். குடிகளை கண்ணின் மணிபோல் காத்து வந்தனர். குணவதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். அவர்களுக்கு இரு செவிலித்தாய்களை ஏற்பாடு செய்தனர். அந்த செவிலிகளுள் ஒருத்தி எப்பொழுதும் தெய்வ ஸ்மரணை செய்துகொண்டே இருப்பது கண்டு குணவதியின் மனம் ஆனந்தத்தில் ஆழ்ந்தது. நம்மிடம் வந்துள்ள ஒரு பணிமகள் தன் வேலைகளுக்கிடையே தெய்வ நாம ஸ்மரணை செய்து வருவது சாத்தியமானால், நம்போன்ற எல்லா வசதிகளும் உள்ளவர்கள் மேலும் சிறந்த முறையிலே பக்தி செய்ய முயல வேண்டாமா என்று நினைத்தாள்.

இதன்பின் நாளுக்கு நாள் குணவதியின் தெய்வ பக்தி வளரலாயிற்று. அரண்மனையிலே பாகவதர்களது வருகை அதிகமாயிற்று. இவளது இந்த மனமாறுதல் அரசன் மனத்துள் சந்தேகத்தை எழுப்பியது. புத்தி சுவாதீனமற்றுவிட்டதோ? என்றும் நினைத்தான். ஒருநாள் இவளை நோக்கி: நீ சிலநாட்களாய் சரியாய் ஆடை ஆபரணங்கள் அணியாமலும், உற்றார் உறவினரோடு கலகலவென்று பேசாமலும் இருப்பதற்கு காரணம் என்ன? என்று கேட்டான். அதற்கு இவள்: ஸ்ரீதேவியை மார்பிலே தரித்த நீலமணி வண்ணனை நான் எப்பொழுதும் தியானம் செய்து வருகிறேன். என் மனம் அவருடைய திருவடிகளிலே லயித்திருப்பதால், மற்றவைகளில் எனக்கு நாட்டமில்லை என்றாள். இந்த வார்த்தைகள் அவனுக்கு கோபத்தை உண்டாக்கின. ஓஹோ! அவ்வளவு விரக்தியும், வைராக்கியமும் வந்துவிட்டனவா? குலமகளுக்கு எது கடமை என்பதை யோசித்துப்பார். என்னையும், குழந்தைகளையும் கவனிக்காமல் பக்தி செய்யும்படி எந்த தர்ம சாஸ்திரத்திலுமில்லை. எதிலும் ஓர் அளவு வேண்டும். இந்த வயதிலே பக்தி செய்ய வேண்டுமேயொழிய துறவுக்கோலம் கொண்டாடுவதில் அர்த்தமில்லை என்று கூவினான். பயத்தினால் அவள் இரு கண்களையும் மூடிக்கொண்டாள். இறைவனை மனம் உருகி வேண்டலானாள். சங்குசக்கர கதாதாரியாய் கண்ணன் அவள்முன் நின்றான். தனது வலதுகையை தூக்கி அஞ்சாதே! உனக்கு யாதொரு பயமுமில்லை என்று கூறி மறைந்தான். பின் குணவதி கண்திறந்து அரசனை பார்த்தாள். கடவுள் இவளுக்கு காட்சியளித்த செய்தி அவனுக்கு தெரியாது. ஆகவே தன்னை அவமதித்தே அதுவரை அவள் கண்களை மூடியிருந்தாளென்று எண்ணி, இனி நீ இவ்வாறு நடப்பதானால், நான் கடுமையாய் நடந்துகொள்ள நேரும் என்று சொல்லி அங்கிருந்து சென்றான். பிறகு அந்தப்புர காவலர்களை அழைத்து, இவள் கபட சந்நியாசிகளின் பேச்சுகளை கேட்டு இவ்வாறு ஆகிவிட்டாள் என்று எண்ணி, இனி ஒருவரையும் என் உத்தரவின்றி உள்ளே அனுமதிக்கக்கூடாது என்றான். ஆனால் குணவதியோ வழக்கம்போல் பூஜை தியானம் முதலியவைகளோடு பக்தர்களை அரண்மனைக்குள் அழைத்து உபசாரங்களும் செய்துவந்தாள். அரசன் கோபத்தால் கொதித்து எழுந்தான். இன்னுமா இவளுக்கு புத்தி வரவில்லை? என்று சீறினான்.  நான்கு கொலையாளிகளை அழைத்து, நீங்கள் நகரத்திற்கு சென்று ராணியை கொன்றுவிடுங்கள் என்று உத்தரவிட்டு, தான் வேட்டையாடும் பொருட்டு காட்டிற்குள் புகுந்தான்.

கொலையாளிகள் அந்தப்புரத்தை அடைந்தபொழுது மணி ஓசை கம்பீரமாக முழங்கிக்கொண்டிருந்தது. கண்ணனது விக்கிரகம் அலங்காரத்துடன் ஜொலித்துக்கொண்டிருந்தது. மலர்களின் நறுமணமும், சாம்பிராணி இவைகளினின்று எழும்பும் நறும்புகையும் அங்கே நிறைந்திருந்தன. குணவதி ஏகாந்த மனதுடன் மலர்களால் அர்ச்சித்துக்கொண்டிருந்தாள். இந்த அற்புத காட்சியைக் கண்டு ஒரு கொலையாளியின் மனம் தளர்ந்தது. மற்ற மூவரோ, ஏன் தாமதம்? அவரை அழைத்து அவரிடம் சொல்லி நம் கடமையை முடிப்போம் என்றனர். அந்த சமயத்திலே கற்பூரத்தை ஏற்றினாள் குணவதி. அவ்வளவுதான். பளிச்சென்ற ஒரு மின்னல் பிரம்மாண்டமானதொரு வரிப்புலி, அந்த விக்கிரகத்தினின்றும் வாயிற்படியை நோக்கி பாய்ந்தது. கீழே இருந்த பூஜா திரவியங்கள், தீபங்கள், மலர்கள், மாலைகள், பழங்கள் எல்லாம் உருண்டன. குணவதியோ அஞ்சலி செய்தவளாய், ஸ்வாமி இப்பொழுது ஸ்தூல வடிவம் எதன்பொருட்டு? என்றாள். அதற்கு விடையேதுமில்லை. புலி கொலைஞர் நால்வரையும் அறைந்துவிட்டு மறைந்துபோயிற்று. புலியின் உறுமல் கேட்டு அருகிலிருந்தவர்கள் குணவதியின் பூஜை அறைக்கு வெளியே வந்து பார்க்க, அங்கே வாளும் கையுமாக நால்வர் மாண்டுகிடப்பதைக் கண்டு அலறினர். குணவதி பூஜையை முடித்து வெளியே வந்து பார்க்க எம்பெருமான் புலியுருவில் வந்த காரணம் விளங்கிற்று. நொடிக்குள் இந்த செய்தி அரண்மனை முழுவதும் பரவி எல்லோரும் வந்து கூடினர். குணவதியின் பக்தி பெருக்கையும், எம்பெருமான் அவ்வம்மையாருக்கு எந்தவிதமான ஆபத்தும் நேராமல் வந்து காத்ததுபற்றியும் வியந்து பாராட்டி புகழ்ந்தனர்.

வேட்டைக்கு சென்றிருந்த அரசனுக்கும் செய்தியை தெரிவித்தனர். அரசன் மனம் வருந்தி குணவதியிடம், உனது அருமையை அறியாமல் கொல்ல உத்தரவிட்டேன். என்னை மன்னித்துவிடு. முன்போலவே வழிபாட்டுக்கு உரியன செய்க என்று ஓலை அனுப்பினான். அரசன் வேட்டை முடிந்து திரும்பும் சமயத்தில் வழியில் ஒரு காட்டாறு, எல்லோரும் ஓடத்தில் ஏறி வந்தனர். நட்டாற்றிலே ஒரு பெரிய சுழல் ஏற்பட்டது. ஓடம் கவிழ்ந்துவிடும் போலிருந்தது. குணவதியை காணாமலே மடிந்துவிடுவேனோ என்று கலங்கினான். இறைவனது அடியார்களை நினைப்பது சிறந்தது என்ற கருத்துக்கு இணங்க, குணவதியை நினைத்தவுடனேயே ஓடம் சுழலினின்று தப்பி கரை சேர்ந்தது. இதனால் அரசனது மனம் பேருவகை கொண்டது. அரண்மனையை அடைந்ததும் குணவதியை நோக்கி: நீ பரம பக்தை என்பதையும், இறைவனது அருள் உனக்கு எப்பொழுதும் உண்டு என்பதையும் இன்று நேரில் கண்டேன் என்று ஓடம் கரை சேர்ந்த செய்தியை அறிவித்தான். மன்னிப்பும் கேட்டான். இதன்பின் அரசனும் மற்றும் எல்லோரும் சிறந்த தெய்வ பக்தர்களாக விளங்கினார்கள்.

ஸ்ரீ கோராக்கும்பார் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை அடுத்த இதழில் காண்போம்.

<p style=”text-align: center;”>✡✡✡✡✡✡</p>

Filed under: ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!