தமிழ் | తెలుగు

» ஆன்மீக கட்டுரைகள் » ஷோஃபார்

ஷோஃபார்

“ஷோஃபார்” அல்லது ஆட்டுக்கடாவின் கொம்பு, இன்றைக்கு யூத ஆலயங்களில் நடக்கும் சடங்குகளில் உபயோகிக்கப்படும் பழமையான ஓர் இசைக்கருவியாகும். ஆட்டுக்கடாவின் கொம்பை மக்கள் ஏன் இதற்கென்று தெரிந்தெடுக்கவேண்டும்? ஆபிரகாம் பலி செலுத்துவதற்கென்று தன் மகனாகிய ஈசாக்கை கறுகளினால் கட்டியதின் மூலம் வெளிப்படுத்திய ஒப்பற்ற விசுவாசத்தை, அந்த இசைக்கருவியின் ஓசையைக் கேட்கும் ஒவ்வொருவருக்கும் நினைப்பூட்டவே இக்கொம்பு தெரிந்தெடுக்கப்பட்டது.

இறைவன் ஆபிரகாமை இடைமறித்து, மகனுக்குப் பதிலாக ஆட்டுக்கடாவைப் பலிசெலுத்த அனுமதித்தார். பசு அல்லது எருதின் கொம்பை ஷோஃபாராக உபயோகிக்க யூத பிரமாணம் அனுமதிப்பதில்லை. ஏனெனில் எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் ஜனங்கள் நன்றி கெட்டவர்களாகி இறைவனை விட்டுத் திரும்பி, பொன்னினால் வார்ப்பிக்கப்பட்ட கன்றுக்குட்டியை வணங்கிய சம்பவத்தை அது நினைவுபடுத்தும். ஆபரணம் ஒவ்வொன்றும் ஒரு தெய்வத்திற்கு அடையாளமாயிருக்கிறது. ஆரோன் பொன்னினால் கன்றுக்குட்டியை உண்டாக்கினபிறகு அதைச் சுட்டிக் காண்பித்து “இதோ உங்கள் தெய்வங்கள்” என்றான். வித்தியாசமான தெய்வங்கள் ஒன்றாகச் சேர்க்கப்பட்டன. ஒவ்வொரு ஆபரணமும் ஒரு தெய்வத்தைச் சித்தரிப்பதன் காரணத்தால்தான், அதை அணிவது பாவமாகக் கருதப்படுகிறது, அது விலையுயர்ந்த பொருள் என்பதினாலல்ல. இவ்வுலகில் இந்தியாவில் மாத்திரமே பசுவை தெய்வமாக வழிபடுகின்றனர்.

“ஷோஃபார்” என்னும் இசைக்கருவி 10 அங்குலம் முதல் 12 அங்குலம் வரை நீளமாயிருக்கும். பாவத்திற்காக மனஸ்தாபப்பட்டு நொறுங்குண்ட இருதயத்தின் அடையாளமாக, அது வளைந்திருக்கிறது. அதுவுமின்றி, ஆட்டுக்கடாவின் இழிவான பாகம் ஒரு பெரிய காரியத்திற்கு உபயோகப்படுகின்றது. ஆட்டுக்கடாவுக்கு இவ்வுலகில் ஒன்றுமில்லை. அதின் சரீரத்தின் ஒவ்வொரு பாகமும் மனிதனுக்கு உபயோகமாயிருக்கிறது. அது நாளைக்காக கவலைப்படுவதில்லை. அது மேய்ப்பனின் சத்தத்தைக் கேட்டு, அவன் கரங்களில் தன் வாழ்க்கை முழுவதையும் சமர்ப்பிக்கிறது”.

“புராதன காலங்களில், இஸ்ரவேலின் சரித்திரத்தில், ஷோஃபார் என்னும் இசைக்கருவி, மார்க்க சம்பந்தமான காரியங்களிலும், பொதுவான காரியங்களிலும் முக்கிய பாகம் ஏற்றிருந்தது. அது ஓசையிட்டு யுத்தத்திற்கு மக்களை ஒன்றுசேர்த்தது அல்லாமலும், அது அமாவாசை போன்ற உபவாச நாட்களையும், விருந்தின் நாட்களையும் மக்களுக்கு அறிவித்து, நாட்டிற்கு நேரவிருக்கும் அபாயத்தை முன்னறிவித்து, சமாதானச் செய்தியையும் மக்களுக்களித்து, இவ்விதமாய் அவர்களுக்குச் சேவை செய்தது. அது எக்காள முழக்கம் செய்தால், புதிய அரசனின் முடிசூட்டு விழாவைக் குறிக்கும். நகரத்தைக் காவல் காக்கும் மக்கள் அதை ஊதினால், தேசம் பகைவர்களின் கைகளினின்று பாதுகாக்கப்பட்டதென்றும், நகர மக்களுக்கு ஆபத்து ஏதும் நேரிடாதென்பது அதின் அர்த்தமாகும். மார்க்க சம்பந்தமான விவகாரங்களில், உடன்படிக்கைப் பெட்டி சமீபமாக வந்திருக்கிறது என்பதை அறிவிக்கவும், யூபிலி வருஷத்தை அறிவிக்கவும் ஷோஃபார் ஊதப்படும். இஸ்ரவேலர் பாலஸ்தீனாவை இழந்த பின்னர் ‘ரோஸ் ஹஷானா’ (Rosh Hashanah) என்னும் நாளில் ஷோஃபார் ஊதும் சடங்கு எல்லாவற்றைக்காட்டிலும் மிகவும் முக்கியமானதாகும். இந்த வழக்கத்தின் காரணம் ‘மித்ராஷ்’ என்பதில் எழுதப்பட்டிருக்கிறது. இறைவனிடத்திலிருந்து நியாயப்பிரமாணம் பொறிக்கப்பட்ட கற்பலகைகளைப் பெறுவதற்கென மோசே சீனாய் மலையின்மேல் இரண்டாவது முறை சென்றபோது, இஸ்ரவேல் ஜனங்கள் மோசே முதன்முறை மலையின்மேல் சென்றபோது விக்கிரக ஆராதனையில் ஈடுபட்டதுபோன்று, மறுபடியும் செய்யலாகாது என்பதனை ஷோஃபார் தன் பயங்கர சப்தத்தினால் நினைவுறுத்தும்.

மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு நேர்ந்த இச்சம்பவம், யூதர்களுக்கு மார்க்க சம்பந்தமாகவும், சரித்திர சம்பந்தமாகவும் முக்கியம் வாய்ந்தது. ஆகையால் இதனை நினைவுறுத்த ‘ரோஸ் ஹஷானா’ என்னும் நாள் தெரிந்தெடுக்கப்பட்டது. வேதத்தில் இது ‘ஷோஃபார் ஊதும் தினம்’ என்று விவரிக்கப்பட்டுள்ளது. இக்காலங்களில் ஷோஃபாரின் ஓசை யுத்தத்தின் செய்தியை அறிவிப்பதில்லை. ஆவிக்குரிய வீரர்கள் பாவத்தையும், பின்வாங்குதலையும் எதிர்த்துப் போராட அது ஆலோசனை கூறுகின்றது. மக்களின் மனசாட்சியைத் தட்டியெழுப்பி, அவர்கள் தங்கள் இருதயங்களையும், நிந்தனைகளையும் ஆராய்ந்து, தங்கள் பாவத்தைக் கணக்கு பார்க்க வைப்பதே ஷோஃபார் ஓசையின் முக்கிய நோக்கமாகும். மக்கள் தங்கள் பாவங்களைக் கணக்குப்பார்த்தல் ‘செஸ்பான் ஹனேஃபெஷ் (Cheshbon Hanefesh) என்று எபிரெய மொழியில் அழைக்கப்படுகின்றது”.

மய்மானிடஸ் (Maimonides) எனும் பெயர் கொண்ட ரபீ – தத்துவ ஞானி, ஷோஃபாரின் ஓசையைப் பின்வருமாறு விவரிக்கிறார்: அவை மக்களை இவ்விதம் அழைக்கின்றன “உறங்குபவர்களே, எழுந்திருங்கள். உங்கள் உறக்கத்தினின்றும் சோம்பலினின்றும் விழித்தெழுங்கள். உங்கள் கிரியைகளை ஆராய்ந்து மனந்திரும்புங்கள். உங்கள் சிருஷ்டிகரை நினைவுகூருங்கள். மாயமான காரியங்களைப்பெற எண்ணி உங்கள் வாழ்க்கையை வீணாக்கினீர்கள். அவை உங்களுக்கு லாபத்தை அளிப்பதில்லை. அவை உங்களை விடுவிக்கவுமாட்டாது. சத்தியத்தை இக்காலங்களில் நீங்கள் அற்பமாய் எண்ணுகிறீர்கள்.”

“ஷோஃபார் ஊதுபவன் ஒப்பில்லா பக்தியையும், தன் நடக்கையில் பரிசுத்தத்தையும் கொண்டவனாயிருக்கவேண்டும். அவன் ‘பால் டேக்கியா’ (Baal Tekiah) என்று எபிரெய மொழியில் அழைக்கப்படுகின்றான். ‘மக்ரி’ என்று அழைக்கப்படும் வேறொருவன் ஷோஃபாரை ஊதக்கூறினாலன்றி, அவன் அதை ஊதுவதில்லை. யூத சபையைக் கண்காணிக்கும் போதகர் பெரும்பாலும் ‘மக்ரி’யாக நியமிக்கப்படுவார். ஷோஃபார் மூன்றுவிதமான சப்தங்களை உண்டாக்கும். அவை தனிப்பட்ட முறையிலோ அல்லது மற்ற சப்தங்களுடன் சேர்ந்தோ ஊதப்படும். ஷோஃபார் ஊதப்படுதலைக் குறித்து யூத மார்க்கத் தலைவர்கள் யாதுகூறினும், நவீன வேதபண்டிதர்கள் அது புராதன காலங்களில் அசுத்த ஆவிகளை பயமுறுத்தி விரட்டியடிக்க உபயோகப்பட்டதாகவே கருதுகின்றனர்.”

இக்காலத்தில் ஆட்டுக்கடாவின் கொம்பின்மூலம் சப்தமிடுதல் முக்கியம் வாய்ந்தது. ஆட்டுக்கடா மரித்தும் இன்னமும் பேசுகிறதென்றும், அது மற்றவருக்காகத் தன் ஜிவனைக் கொடுத்ததென்றும், மரணம் வரை இவ்வுலகில் அதற்கு ஒன்றுமில்லாதிருந்ததென்றும், அதின் சரீரத்தின் ஒவ்வொரு அங்கமும் மனிதனுக்கு உபயோகமாகிறதென்றும், அதின் இரத்தம் வீணாக சிந்தப்படவில்லையென்றும், மரணத்தின்மேல் வெற்றியளித்து நித்தியத்தையளித்த இறைவனுக்கு அது அடையாளமாயிருக்கிறதென்றும் இறைவனில் பாகமாக இருப்பவர்கள் உணர்ந்துகொள்கிறார்கள்.

தொகுப்பு: – J. பாலசந்தர்

✡✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீக கட்டுரைகள்