தமிழ் | తెలుగు

» ஆன்மீக கதைகள் » வைகுண்டம் செல்வதற்கு என்ன செய்ய வேண்டும்?

வைகுண்டம் செல்வதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஒரு ஊரில் ஒரு குரு வசித்து வந்தார். அவர் அங்குள்ள மக்களுக்கு ஆன்மீக கருத்துக்களைத் தெரிவித்து வந்தார். தன்னுடைய சீடர்களிடம் ஒற்றுமையைப் போதித்து வந்தார். சீடர்கள் எல்லோரும், ஒருவர் மற்றவரை விட அனைத்தும் கற்றவர்கள் என தலைக்கனம் நிறைந்தவர்களாக இருந்தனர். குரு இவர்களின் தலைக்கனத்திற்கு பாடம் புகட்ட வேண்டும் என எண்ணினார்.

ஒரு நாள் அவர்களிடம்: உங்களில் யார் வைகுண்டம் செல்வார்கள்? என கேள்வி கேட்டார். உடனே அனைவரும் ஒவ்வொருவரும் தான் அந்த தவறை செய்திருக்கிறேனே இந்த தவறை செய்திருக்கிறேனே, என நினைத்துக் கொண்டு எதுவும் பேசாமல் இருந்தார்கள். அதற்கு அவர் உங்களில் ஒருவர்கூட வைகுண்டத்திற்கு செல்லப்போவதில்லையா? என கேட்டார். அனைவரும் மவுனமாக இருந்தனர்.

உடனே சீடர்களில் ஒருவன் குருவிடம்: “நான் போனால் போகலாம்” என பதிலளித்தான். மற்றவர்கள் அவனை ஆச்சர்யமாக பார்த்தனர். அதன்பின்னர் அவனாலும் வைகுண்டம் செல்வேன் என்று உறுதியாக கூற முடியவில்லையே என மற்றவர்கள் அவனைக் கேலி செய்தனர்.

அதற்கு அந்த சீடன் கூறிய பதிலைக் கேட்டு அனைவரும் திகைத்தனர். அவன் சொன்னது என்னவென்றால் நான் என்கிற அகந்தை போனால்தான் நாம் வைகுண்டம் செல்ல முடியும் என மிக தீர்க்கமாக பதிலளித்தான். குரு சீடர்களிடம்: “நான் என்பதை நீங்கள் மறக்கும்போதுதான் மனித பிறவியின் வெற்றி கிடைக்கும். அப்பொழுதுதான் வைகுண்டம் செல்ல முடியும் என கூறினார். சரியான பதிலளித்த சீடனையும் பாராட்டினார்.

✡✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீக கதைகள்