தமிழ் | తెలుగు

» வாசகர் கருத்து » வாசகர் கடிதம்

வாசகர் கடிதம்

பேரன்புடையீர்,

மனுஜோதி பிப்ரவரி-மார்ச்-ஏப்ரல் 2016-ன் காலாண்டிதழை கண்ணுற்றேன். முதல் பக்கத்திலுள்ள “ஆசிரியரின் அன்புக் கடிதத்திலிருந்து”, இறுதி பக்கத்திலுள்ள “சிருஷ்டிப்பிலுள்ள அதிசயங்கள்” வரை 34 பக்கங்களும் முத்துக்கள் கோர்த்த மிக உயர்ந்த மாலையெனத் திகழ்கின்றது. “ஐம்புலன்களுடைய ஜீவராசிகளிடமிருந்து ஆறறிவு படைத்த மனிதன் கற்க வேண்டிய பாடங்கள்” மிகவும் அருமையாக இருந்தது. “கிழக்கே தோன்றிய மின்னல்” தொடர் பெருமை மிக்க பகுதியாகும். “கீதாஞ்சலி” தொடர், “ஷோஃபார்” தொகுப்பு இரண்டுமே எழிலோவியங்கள் ஆகும். ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்களின் “முட்களும் ரோஜாவும்” விளக்கம், “ஸ்ரீ ஜனாபாய்” “ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!” தொடர், “மதங்களை இணைத்த மகாகவி”, “நான்கு திறமைகள்” பற்றி கூறும் புதுச்சேரி K. நாகராஜ் சம்பவ நிகழ்வுகள் என மனுஜோதி விண் சுடரென ஒளி வீசுகின்றது. ஆறு “கவிதைகள்” அறுசுவை அமிழ்தங்கள். தொடர்க நும்பணிகள்!

இலக்கியச்சுடர் இறைமறைதாசன் Dr. M.A.M. தாஜுதீன், சென்னை

Y Y Y

அன்பும் பண்பும் பாசமும் நிறைந்த ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.

வாசகர் குரலில் இடம் பெற்ற பண்ருட்டி தி. மேகநாதன், தஞ்சாவூர் ஆர். செந்தமிழ் செல்வி, கன்னியாகுமரி எஸ். பிச்சைப்பிள்ளை, விழுப்புரம் ஜி. சுகாசினி. நெல்லை சு. பொருநை பாலு அவர்களின் “கடிதங்கள்” மிகவும் அருமையாக இருந்தது. திருவாரூர் வீ. உதயகுமாரன், சென்னை பொதிகை. மு.செல்வராசன், வள்ளியூர் எம். எஸ். முனியம்மாள், பாவலர் தூத்துக்குடி பாலு, கோவை கே. இரவிக்குமார், உதவி ஆசிரியர் ஜெ. பாலசந்தர் இவர்களின் “கவிதைகள்” இனிமையாக இருந்தது. ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் ஆன்மீக மாநாட்டில் ‘எண்ணங்களின் களஞ்சியம்’ புத்தக வெளியீட்டு விழாவில் “கலைமாமணி ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்களின் சிறப்புரையின் தொகுப்பு” என்னை மெய் சிலிர்க்க வைத்தது. “நான்கு திறமைகள்” கதையில் ஆசாரி, நெசவாளி, பொற்கொல்லன், மந்திரவாதி ஆகிய நால்வரின் திறமையை வெளிப்படுத்தியதுடன் இவர்களால் உயிர்பெற்ற மங்கைக்கு சித்திராங்கி என பெயரிட்ட சந்நியாசியை தன் மானசீகக் குருவாக ஏற்று அவருடைய சீடர்களாக உருவானதை விளக்கிய விதம் மேலும் மெருகூட்டியது. மகிழ்ச்சி! நன்றி! பாராட்டுக்கள்! நல்வாழ்த்துக்கள்!

கவிமலர். ஆ. ச. செல்வராஜு, விழுப்புரம்

 

மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு, மனுஜோதி புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு நான் அதனை முழுமையாக படித்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். குறிப்பாக “முட்களும், ரோஜாவும்”, “கோபம்”, தாயின் கர்ப்ப காலத்தில் குழந்தையின் வளர்ச்சியின்போது ஏற்படும் மாற்றங்களினால் தாயின் வேதனைகள் ஆகியவற்றை “சிருஷ்டிப்பிலுள்ள அதிசயங்கள்” என்ற கட்டுரையில் படித்து மிகவும் மகிழ்ந்தேன். கோபத்தால் உண்டாகும் ஆபத்துக்கள், பிரச்சினைகள் போன்றவை விளக்கமாக எழுதப்பட்டிருந்தது. அதை படித்து மற்றவர்களும் உணரும்படி எடுத்து கூறி வருகிறேன். நானும் மிகவும் பொருமையாகவும், உணர்ச்சிவசப்படாமல் மற்றவர்க்கு மத்தியில் இறைவனின் பெருமைக்குரியவனாக வாழ்கிறேன்.

– விஸ்வநாதன், வேலூர்.

 

ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். தங்களது அயராத ஆன்மீக பணிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மனுஜோதி இதழை தொடர்ந்து படித்து வருகிறேன். ஆன்மீக கருத்துக்கள் பலவற்றை பரவலாக வெளியிட்டு வருகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. நீங்கள் நல்ல சேவை புரிகிறீர்கள். ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் ஆன்மீக மாநாட்டில் ‘எண்ணங்களின் களஞ்சியம்’ புத்தக வெளியீட்டு விழாவில் “கலைமாமணி ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்களின் பேச்சு மிகவும் அருமை. நன்றி.

– T.K. சுப்பிரமணியன், விழுப்புரம்.

✡✡✡✡✡✡✡

Filed under: வாசகர் கருத்து