தமிழ் | తెలుగు

» ஆன்மீக கருத்து » வள்ளாரின் திருவருட்பா

வள்ளாரின் திருவருட்பா

தெளிதேன் துளிகள் (தெரிந்தெடுக்கப்பட்டவை)

உலகர்க்கு உய்வகை கூறல்

கட்டோடே கனத்தோடே வாழ்கின்றோம் என்பீர்

கண்ணோடே கருத்தோடே கருத்தனைக் கருதீர்

பட்டோடே பணியோடே திரிகின்றீர் தெருவில்

பசியோடே வந்தாரைப் பார்க்கவும் நோPர்

கொட்டோடே முழக்கோடே கோலங் காண்கின்றீர்

குணத்தோடே குறிப்போடே குறிப்பதைக் குறியீர்

எட்டோடே இரண்டு சேர்த்தெண்ணவும் அறியீர்

எத்துணை கொள்கின்றீர் பித்துலகீரே

விளக்கவுரை (தொடர்ச்சி):  சென்ற இதழில், “கண்ணோடே கருத்தோடே கருத்தனைக் கருதீர்” என்பது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. சிலர் “கண்ணும் கருத்துமாக மிகவும் பிரயாசப்பட்டு இறைவனை அறிய வேண்டுமா?” என்று மிகவும் விசனப்பட்டு கொள்கிறார்கள். அப்படிப்பட்ட மக்களுக்கு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஞானி ஜேம்ஸ் ஆலன் இயற்றிய அகம்மே புறம் என்ற புஸ்தகத்திலிருந்து ஒரு பகுதியை எடுத்துக்காட்டுவது உகந்ததாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என்பது தெளிவாகும். அவர் தமது 24-ம் வயதில் ‘ஆசிய தீபம்’ என்ற புஸ்தகத்தை வாசித்தார். அந்த புஸ்தகத்தை வாசித்த பிறகு அவருக்கு மெய்யுணர்வு உண்டாயிற்று. அது முதற்கொண்டு நமது நாட்டு நூல்களுள் பெரு விருப்பம் கொண்டு மிகுதியாக படிக்க தொடங்கினார். “கீழ்நாட்டாரே மெய்ஞான கருவூலம் என்று அவர் அடிக்கடி கூறுவதுண்டு. அவருடைய நூல்களை நமது இந்திய சுதந்திர போராட்ட வீரரும், கப்பலோட்டிய தமிழன் என்று சிறப்பிக்கப்படுபவருமான வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாசித்து, அவற்றின் அருமை பெருமைகளை உணர்ந்து “யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்” என்ற திருமூலரின் திருமந்திரத்திற்கேற்ப தமிழாக்கம் செய்துள்ளார். அவர் தமிழ்ப்படுத்திய “அகமே புறம்” என்ற நூலின் ஒரு பகுதி வாசகர்கள் கண்ணோடே கருத்தோடே இறைவனை தேட வேண்டும் என்பதற்காக கீழ்க்கண்டவாறு கொடுக்கப்படுகிறது.

இப்போது சிலர் சரீரத்தை ஒழுங்கு செய்வதும், நாவை அடக்குவதும் எதற்காக? இத்தகைய கடும் பிரயாசமும், விடாமுயற்சியும், எச்சரிக்கையும் இல்லாமல் உயர்தர வாழ்வை அடைந்து அறியலாகாதோ என்று வினவுகிறார்கள். ஆகாது. ஜட உலகத்தைப்போல சித்துலகத்திலும் (ஆன்மீக காரியத்திலும்) எதையும் பிரயாசையின்றி செய்ய முடியாது. கீழுள்ளதை நிறைவேற்றும் வரை, மேலுள்ளதை அறிய முடியாது. ஒரு மனிதன் உளியை எப்படி பிடிக்க வேண்டும் என்பதையும், ஒரு ஆணியை எப்படி செலுத்த வேண்டும் என்பதையும் கற்றுக்கொள்ளும் முன்னால் ஒரு நாற்காலியை செய்ய முடியுமா?

தனது சரீரத்திற்கு தான் அடிமையாக இருப்பதை ஒழிக்கும் முன்னர் மெய்ப்பொருளை (இறைவனை) அறிவதற்கு தக்கவாறு தனது மனதை திருத்த முடியுமா? அட்சரங்களையும் (எழுத்துக்களையும்), சுலபமான சொற்களையும் கற்று பயன்படுத்துவதற்கு முன்னர் பாஷையின் அரிய நுட்பங்களை அறியவும், பயன்படுத்தவும் முடியாததுபோல, நல்ல நடக்கையின் அரிச்சுவடியை பூர்த்தியாக அறியும் முன்னர், மனதின் ஆழ்ந்த நுட்பங்களை அறியவும், மனதை சித்தப்படுத்தவும் முடியாது.

பிரயாசத்தைப்பற்றி கேட்பின், ஒரு வாலிபன் ஒரு கைத்தொழிலை கற்றுக்கொள்வதற்காக உற்சாகத்தோடும், பொறுமையோடும் ஏழு அல்லது எட்டு வருடங்கள் கூட மாணாக்கனாக இருப்பதில்லையா? அவன் தனது ஆசிரியருக்கு கீழ்ப்படிந்து தனது தொழிலில் இடைவிடாது பழகி திறமையடைந்து, தானே ஒரு ஆசிரியனாகக் கூடிய காலத்தை எதிர்பார்த்துக் கொண்டு, தனது ஆசிரியர் கற்பித்தவற்றில் ஒவ்வொன்றையும் கவனத்தோடும், உண்மையோடும் நாள்தோறும் செய்து வரவில்லையா? சங்கீதத்தில், ஓவியத்தில், பாஷையில், ஒரு கைத் தொழிலில், ஒரு வியாபாரத்தில் அல்லது உத்தியோகத்தில் மேன்மை அடைய வேண்டும் என்று உண்மையாக கருதுகிற மனிதரில், எவன்தான் குறிப்பிட்ட தொழிலில் நிறைவு அடைவதற்கு தனது வாழ்நாள் முழுமையும் செலவு செய்ய விருப்பம் இல்லாதவன்?

அப்படியிருக்க, எல்லாவற்றிலும் உயர்ந்த மெய்ப்பொருளின் (இறைவனின்) காரியத்தில் பிரயாசத்தைப் பெரிதாக நினைக்கலாமா? எவன் “நீ காட்டுகிற மார்க்கம் செல்லுவதற்கு மிக கடினமானது. நான் பிரயாசமில்லாமல் மெய்ப்பொருளையும், மோட்சத்தையும் அடைய வேண்டும்” என்று கூறுகிறானோ, அவன் சுயநலத்தினால் வரும் கவலைகளிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் நீங்கும் மார்க்கத்தைக் காணமாட்டான். அவன் அமைதியும், உறுதியும் உள்ள மனதையும், விவேகத்தோடே கூடிய வாழ்க்கையையும் அடையமாட்டான். அவன் விருப்பம் சுகத்தையும், போகத்தையும் நோக்கியே செல்கிறது. மெய்ப்பொருளின்பால் அதாவது இறைவனின்பால் செல்வதேயில்லை. எவன் தனது அகத்தினடியில் மெய்ப்பொருளை வைத்து போற்றி அதனை அறிவதற்கு தாகம் கொள்கிறானோ அவன் எந்த வேலையையும் மிகப்பெரிதென்று கருதமாட்டான். ஆனால் அவன் அதனை உற்சாகத்துடனே செய்து பொறுமையோடு பின்பற்றுவான். அவன் இடைவிடாத பயிற்சியினால் மெய்ப்பொருளின் ஞானத்தை அடைந்து விடுவான்.

மெய்ப்பொருளை அறிவதற்கு சோம்பலான வழி ஒன்றுமில்லை. மலையின் உச்சியில் ஏறி நிற்க விரும்புகிறவன் பிரயாசப்பட்டு ஏற வேண்டும். பலத்தை சேகரிப்பதற்கு மட்டும், இடையில் சற்று தங்க வேண்டும். மேகமற்ற மலை உச்சியிலும் மலையின் மேல் ஏறுதல் குறைந்த பெருமை உள்ளதாக தோற்றம் அளித்தாலும் அது பருமை (முக்கியத்துவம்) வாய்ந்ததே.

முதலில் யுத்தம், முடிவில் வெற்றி. முதலில் வேலை, முடிவில் ஓய்வு. முதலில் எளிமை முடிவில் வலிமை. துவக்கத்தில் தாழ்ந்த வாழ்வு, யுத்தத்தின் சந்தடி யுத்தத்தின் குழப்பம், இறுதியில் உன்னத வாழ்வு. அமைதி – சாந்தம்.

குமரகுருபரர் என்ற தமிழ் புலவர் எழுதிய பாடல் ஒன்று மேற்கண்ட கருத்துக்களுக்கு ஒப்புதல் அளித்து அவற்றிற்கு வலு சேர்ப்பதாக உள்ளது. அதை ஈண்டு நினைவுகூரல் சாலச்சிறந்தது. அப்பாடல் வருமாறு:-

மெய்வருத்தம் பாரார் பசி நோக்கார் கண் துஞ்சார்

            எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்

            செவ்வி அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்

            கருமமே கண்ணாயினார்

(செவ்வி அருமை – சமயம் அல்லது காலத்தின் அருமை, துஞ்சார் – உறங்கார்)

மேற்கண்ட பாடலை நாம் உன்னிப்பாக கவனித்தால் உலகியல் வேலைகளுக்கு மாத்திரமல்ல, ஆன்மீக வளர்ச்சி சம்பந்தமாகவும், இந்த பாடலின் பொருள் பொருந்துவதாக உள்ளதை கண்டு உணர்ந்துகொள்ளலாம்.

பட்டோடே பணியோடே திரிகின்றீர் தெருவில்

பசியோடே வந்தாரைப் பார்க்கவநேரீர்

பட்டு வஸ்திரம் அணிந்து, பொன் ஆபரணங்களால் தங்களை அலங்கரித்துக்கொண்டு வெளிப்பகட்டாகவும், ஆடம்பரமாகவும் திரிந்து வரும் மக்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் பசியோடு வந்து தங்களிடம் யாசிக்கும் ஏழைகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அவர்களுடைய பசிப்பிணியை தீர்த்து வைக்க நினைப்பதுமில்லை. தரித்திரருக்கு கொடுப்பவன் தாழ்ச்சியடையான். தன் கண்களை ஏழைகளுக்கு விலக்குகிறவனுக்கோ அநேக சாபங்கள் வரும். ஏழைக்கு இரங்குகிறவன் இறைவனுக்கு கடன் கொடுக்கிறான். அவன் கொடுத்ததை அவர் திரும்ப கொடுப்பார். இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் இரக்கம் பெறுவார்கள் என்று விவிலியத்தில் கூறப்படும் வசனங்களை இவர்கள் சிந்தனையில் கொண்டிருப்பார்கள் என்றால் அவர்களுக்கு அது நலமாக இருக்கும். இறைவனுடைய சந்நிதானத்தில், ஆலய வழிபாடுகளிலும்கூட இப்படிப்பட்ட மக்கள் தரித்திரரைப் புறக்கணித்து அவர்களை அற்பமாக எண்ணுகிறார்கள். பட்சபாதம் காட்டுகிறார்கள். விவிலிய நூலில் யாக்கோபு 2:2-6 வசனங்களில் இவர்களைப்பற்றி தெளிவாக காண்பிக்கப்பட்டுள்ளது.

யாக்கோபு 2:2-6: “ஏனெனில், பொன்மோதிரமும், மினுக்குள்ள வஸ்திரமும் தரித்திருக்கிற ஒரு மனுஷனும், கந்தையான வஸ்திரம் தரித்திருக்கிற ஒரு தரித்திரனும் உங்கள் ஆலயத்தில் வரும்போது, மினுக்குள்ள வஸ்திரந்தரித்தவனைக் கண்ணோக்கி: நீ இந்த நல்ல இடத்தில் உட்காரும் என்றும்; தரித்திரனைப் பார்த்து: நீ அங்கே நில்லு, அல்லது நீ இங்கே என் பாதபடியண்டையிலே உட்காரும் என்றும்; நீங்கள் சொன்னால், உங்களுக்குள்ளே பேதகம்பண்ணி, தகாத சிந்தனைகளோடே நிதாணிக்கிறவர்களாயிருப்பீர்களல்லவா? என் பிரியமான சகோதரரே, கேளுங்கள்; தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா? நீங்களோ தரித்திரரைக் கனவீனம் பண்ணுகிறீர்கள். ஐசுவரியவான்களல்லவோ உங்களை ஒடுக்குகிறார்கள்? அவர்களல்லவோ உங்களை நியாயாசனங்களுக்கு முன்பாக இழுக்கிறார்கள்?”

ஆகவே உண்மையில் ஏழை என்பவன் யார்? என்பதற்கு கிரேக்க தத்துவ ஞானி பிளேட்டோ கூறியுள்ள விளக்கங்கள் ஈண்டு ஒப்பிட்டு பார்த்து மகிழ்வதாக உள்ளன. அவை பின்வருமாறு:- “பொதுவாக பொருள் இல்லாதவனை ஏழை என்றுதான் கூறுவார்கள். இவ்விதம் நாம் எண்ணுவது தவறாகும். இவன் ஏழையே அல்ல. எத்தனையோ ஏழை எளியவர்கள் கஞ்சியோ, கூழையோ உண்டு, இதுதான் நமக்கு கொடுத்து வைத்தது என்று எண்ணியவர்களாய் நிம்மதியுடன் நிறைவாகவும் வாழ்பவர்கள் உண்மையில் ஏழைகள் அல்ல. எவன் ஒருவன் அளவற்ற ஆசைகளை கொண்டு அல்லல்படுகின்றானோ, அவன்தான் ஏழை என்று கருதப்படுகிறான். அதிகப்படியான ஆசைகள் அவனுக்கு பல துன்பங்களை விளைவிக்கும். அதிகப்படியான ஆசைகளை கொண்டுள்ள நிலையில் அவனால் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாதபோது அவனுக்கு (அந்த பேராசைக்காரனுக்கு) வாழ்வின்மீது ஒருவித அதிருப்தி உண்டாகி விடும். தேவைகளை முடிந்த அளவு குறைத்து கொள்பவன் நிம்மதியாக வாழ்வான். அவன் என்றுமே செல்வந்தனாவான். செல்வம் இருந்தும் ஆசைகள் பெருகி அவனை நிலைகுலைய வைத்தால் அவன் செல்வந்தனே அல்ல. அவன்தான் ஏழையாவான். ஆம், பரம ஏழை என்பவன் அவன்தான்.

செல்வம் என்பது பொருள்களின் பெருக்கத்தில் இல்லை. போதும் என்று திருப்தி அடைகிற இதயத்தில்தான் பொதிந்துள்ளது. செல்வ செழிப்பால் பொதிசுமத்தப்பட்டவன் சுவர்க்க பேரின்பம் என்ற கூரிய மலை உச்சியை அடைவது கடினமாகும் என்று நபிகள் நாயகத்தின் பொன்மொழி (ஹதீஸ்) ஒன்று கூறுகிறது. போதுமென்கிற மனதோடே கூடிய தேவபக்தியே சிறந்த ஆதாயம் என்று விவிலியம் பறைசாற்றுகிறது. நான் எந்த நிலைமையில் இருந்தாலும் மனரம்மியமாக இருக்க கற்றுக்கொண்டேன் என்பது பவுல் என்ற முனிவரின் சாட்சியமாகும்.

 – தொடரும்….

✍ சா. செல்லப்பாண்டியன், மனுஜோதி ஆசிரமம்

✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீக கருத்து