தமிழ் | తెలుగు

» ஆன்மீக கட்டுரைகள் » வள்ளலாரின் திருவருட்பா

வள்ளலாரின் திருவருட்பா

தெளிதேன் துளிகள் (தெரிந்தெடுக்கப்பட்டவை)

உலகர்க்கு உய்வகை கூறல்

கட்டோடே கனத்தோடே வாழ்கின்றோம் என்பீர்

கண்ணோடே கருத்தோடே கருத்தனைக் கருதீர்

பட்டோடே பணியோடே திரிகின்றீர் தெருவில்

பசியோடே வந்தாரைப் பார்க்கவும் நேரிர்

கொட்டோடே முழக்கோடே கோலங்காண்கின்றீர்

குணத்தோடே குறிப்போடே குறிப்பதைக் குறியீர்

எட்டோடே இரண்டு சேர்த்தெண்ணவும் அறியீர்

எத்துணை கொள்கின்றீர் பித்துலகீரே

விளக்கவுரை (தொடர்ச்சி): பட்டோடே பணியோடே திரிகின்றீர்என்று வள்ளலார் மக்களில் ஒரு சாராரை விமர்சிக்கிறார். அவர்கள் பசியுடன் வருபவர்களுக்கு உணவளிப்பதில்லை என்றும் அவர்களைப்பற்றி தமது வருத்தத்தை இந்த பாடலில் வெளிப்படுத்துகிறார். பட்டு என்றால் ஏழை மக்கள் அணியக்கூடிய வஸ்திரமல்ல என்பது நம் அனைவருக்கும் தெரியும். பணி என்றால் பொன்னால் செய்யப்பட்ட ஆபரணங்களை குறிக்கும். பட்டாடை அணிந்து பொன் ஆபரணங்களை கொண்டு அலங்கரித்தல் தவறா? என்ற கேள்வி சாதாரணமாக எழக்கூடும். இதைப்பற்றி வேதங்கள் என்ன கூறுகின்றன என்பதைப்பற்றியும், ஞானிகள் என்ன கூறியிருக்கிறார்கள்? என்பதுபற்றி நாம் தெரிந்துகொண்டால் தெளிவான உண்மைகளை அறிய முடியும். வள்ளலாரின் இந்த கருத்துக்களை தன்னைத்தான் கிரஹித்து உணர்ந்து இறைவனையும் கிரஹித்து உணர்ந்த மக்கள் மாத்திரமே புரிந்துகொள்வர். விவிலியம் என்ன கூறுகிறது?I பேதுரு 3:3-5: மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது. இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்து பரிசுத்த ஸ்திரிகளும் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள்”. இறைவன் தன்னுடைய மணவாளன் என்றும், அவருடைய மனைவியாக நான் இருக்கிறேன் என்று கூறுகின்ற பக்தர்கள் அனைவருக்கும் இதில் அறிவுரை இருக்கிறது. பெண்களுக்கு மாத்திரம்தான் இவை பொருந்துகின்றன என்று நினைப்பது ஒரு மாம்சீக எண்ணமேயொழிய வேறல்ல.

ஆகவே இறைவனுடைய கட்டளை எதுவானாலும் அதற்கு கீழ்ப்படிந்து வாழ்வதே இறைவனுக்கு மகிமையை கொடுக்கக்கூடிய அழியாத அலங்காரமாகும். ஏனென்றால் மனிதன் வெளித்தோற்றத்தைப் பார்க்கிறான். ஆனால் கடவுள் இருதயத்தைப் பார்க்கிறார். ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா தமது செய்தியில் குறிப்பிடுவதாவது:“நகை அணிவதால் தவறு என்ன?” என்று சிலர் கேட்கிறார்கள். அந்த நகையோடுகூட கலியனின் ஆவியும் வந்து விடுகிறது. விவிலியத்தில் எசேக்கியேல் 28:13-ன்படி லூசிபர் (அல்லது கலியன் பொன்னினால் மட்டுமல்ல அநேக ரத்தின கற்களாலும் மூடப்பட்டிருந்தான். எனவே நாம் அவனுடைய கூட்டத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்பதை காண்பிப்பதற்காக நகை அணிவதில்லை.

தமது உரைநடை திருவருட்பாவில் பக்கம் 472 – இரண்டாவது பத்தியில் வள்ளலார் கூறுவது:

காதில் இரண்டு பெரிய பொத்தல் செய்து வரவிடுத்தவர்

ஆணுக்கு கடுக்கன் இடுதலும் பெண்ணுக்கு மூக்குத்தி முதலியன போடுதலும் தமக்கு (இறைவனுக்கு) சம்மதமானால் காதிலும், மூக்கிலும் அதற்கு வேண்டிய பொத்தல்களிட்டு வரவிட்டிருக்க மாட்டாரா என்று விசாரித்து தெரிந்துகொள்ளுகிற பட்சத்தில் காதில் கடுக்கனிடவும், மூக்கு முதலியவற்றில் நகை போடவும் சம்மதம் வருமா? இப்படி விசாரித்து பிரபஞ்ச போகத்தின் கண் (உலக ஆசையின்பால்) அலட்சியம் தோன்றினால், நிராசை (ஆசையின்மை) உண்டாகும். இன்னொரு பாடலில் மறிகடலே பொன்னாசைஎன்று குறிப்பிட்டுள்ளார். அதாவது அலைகள் ஆர்த்தெழுகின்ற கடலுக்கு ஒப்பாக பொன்னாசை உள்ளது என்பது இதன் கருத்தாகும். ஆகவே பொன்மீதுள்ள ஆசை உன்னதமான ஆன்மீக வாழ்க்கைக்கு தடையாக உள்ளது. அந்த ஆசையை புறக்கணித்தால் மிகுந்த ஆன்மீக லாபம் உண்டாகும் என்பது வள்ளலாரின் அழுத்தமான கருத்து.

அப்பர் பெருமான் (திருநாவுக்கரசர்) ஆலயத்தில் உழவாரப்பணி செய்து வந்தபோது இறைவன் கற்களையெல்லாம் பொன்மயமான ரத்தினகற்களாக மாற்ற அந்த கற்கள்மீது அவர் இச்சை எதுவும் கொள்ளாமல் அவற்றையும் தூக்கி எறிந்தார் என்று நாம் அவருடைய வரலாற்றிலிருந்து அறிகிறோம். பகவத்கீதை காட்டும் ஜீவன் முத்தனுக்கு மாதிரி இவரே. (பகவத்கீதை 14:24)

வள்ளல் பெருமான் இறையருளால் மண்ணைப் பொன்னாக்கும் சித்தியையும் பெற்றிருந்தார். என்றாலும் அவர் அதைப் பயன்படுத்தி தனக்கு புகழ் சேர்க்கவோ, பொருள் சேர்க்கவோ விரும்பவில்லை. ஜனங்கள் சித்து விளையாட்டுகளுக்காக அவரை சுற்றி வந்தபோது இவையெல்லாம் பிள்ளை விளையாட்டுகள், இதற்காக நான் வரவில்லைஎன்று உறுதியாக தெரிவித்து விட்டு பேராசை கூடாது என்று அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

சமஸ்கிருத மொழியின் புகழ்பெற்ற நீதிநூல் ஆசிரியர் விதுரர் அவர்கள் கூறியிருப்பது:

கைக்கழகு தானம், கழுத்துக்கழகு சத்தியம், செவிக்கழகு நீதி நூல்கள், ஏது பயன், வேத அணிகலன்களால்ஆகவே கைளுக்கு அழகூட்டுவது வளையல்கள் அல்ல. தானம்தான், கழுத்துக்கு எழில் சேர்ப்பது ஆரம் அல்ல சத்தியமே, செவிக்கு அழகூட்டுவது குண்டலங்கள் அல்ல, நீதி நூல்கள் சொல்லும் அறம் சார்ந்த கருத்துக்களை கேட்பதேயாகும். இத்தகைய உண்மையான அணிகலன்கள் ஒருவனிடம் இருக்குமானால், வளையல், ஆரம் மற்றும் குண்டலங்கள் போன்ற போலி அணிகலன்கள் தேவையே இல்லை. தானம் செய்வதுதான் கைகளுக்கு அழகு. தீமை செய்யக்கூடிய சோதனைகள் வந்தபோதும் தீமையினின்று கைகளை தடுத்துக்கொள்வதே கைகளுக்கு அழகு. இறை மக்கள் இவற்றை அடையாளம் கண்டு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

நகை மோகம் பெண்களுக்கான சாபம் என்று கவிஞர் தமிழ் ஒளிஎன்பவர் தனது பாப்பா பாட்டில் அடியிற்கண்டவாறு கூறுகிறார். பாப்பாக்களின் மனதிலிருந்தே அந்த ஆசையை அகற்றிப்போட வேண்டும் என்பதே அந்தப் பாடலின் உட்கருத்து ஆகும். பாடல் பின்வருமாறு:

பச்சைக்கிளிக்கு நகை இல்லை

பாடும் குயிலுக்கு மணியில்லை

இச்சை மைனாப் பறவைக்கும்

ஏதும் கழுத்தில் நகை இல்லை

கச்சை சதங்கையில்லாமல்

காட்டில் ஆடும் மயிலுக்கும்

உச்சிக் கொண்டை நகையில்லை

உனக்கேன் பாப்பா நகையெல்லாம்

புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் சிறுவர் பாடல் ஒன்று மகளுக்கும், தாய்க்கும் நடைபெற்ற உரையாடல் ஒன்றில் கவிதை நயத்துடனும், கருத்துச் சுவையுடனும், எது உண்மையான ஆபரணம் என்பதை வலியுறுத்தும் பாணி, புரட்சிக்கவிஞருக்கு, மேலும் பெருமை சேர்க்கிறது. வீண் பெருமையை மக்களின் உள்ளத்திலிருந்து விரட்டியடிப்பதாகவும், அப்பாடல் அமைந்துள்ளது என்பதையும் வாசகர்கள் கண்டுகளிக்கலாம். அப்பாடல் வருமாறு:-

மகள் தாயிடம் :   அம்மா என்காதுக் கொருதோடு – நீ

                      அவசியம் வாங்கி வந்து போடு

                      ஆபரணங்கள் இல்லையானால் – என்னை

                      யார் மதிப்பார் தெருவில் போனா?

தாய் :              கற்பது பெண்களுக்காபரணம் – கொம்புக்

                      கல் வைத்த நகை தீராத ரணம்

இருபொருள்பட இங்கு புரட்சிக்கவிஞர் கருத்துக்களை எடுத்துக்கூறியுள்ளது, மக்கள் மனதில் நன்றாக எளிதில் பதியக்கூடியதாக உள்ளது. தாய் கூறியதின் பொருள்: கற்பு என்பது பெண்களுக்கு ஆபரணமாக உள்ளது என்பது மட்டுமல்ல. நல்ல அறநூல்களை கற்று அதன்படி நிற்றலும் ஆபரணமே. கற்பு நெறியில் வாழ்வது பெண்களுக்கு ஓர் பரணமாக (கவசமாக) அமைந்துள்ளது.

ஆனால் நகையாசையால் ஈர்க்கப்பட்டு அதில் மோகம் வைக்கும் பெண்கள் கொம்புக்கல்; வைத்த தங்க நகையை அணிகிறார்கள். அது அவர்களுக்கு தீராத ரணத்தையே, துன்பத்தையே பிறப்பிக்கும். ஆகவே நல்ல அறநூல்களை கற்று மெய்யறிவு பெறுவதே, அழியாத அலங்கரிப்பாகவும், எவராலும் அபகரித்து செல்ல முடியாத மெய்யான ஆபரணமாக உள்ளது என்ற முத்தான கருத்தும் நமக்கு முன்னால் கவிஞரால், நாம் விழிப்புணர்வு பெற முன்வைக்கப்படுகிறது.                                       – தொடரும்…..

சா. செல்லப்பாண்டியன், மனுஜோதி ஆசிரமம்

Filed under: ஆன்மீக கட்டுரைகள்