தமிழ் | తెలుగు

» பிரமுகர்களின் உரை » ரெயின்போ FM புகழ் சோமாஸ்கந்தமூர்த்தி அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு

ரெயின்போ FM புகழ் சோமாஸ்கந்தமூர்த்தி அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு

45-வது கல்கி ஜெயந்தி விழாவில்

பழமையும், புதுமையுமாக மாறிக்கொண்டிருக்கிற இந்த வளாகமான மனுஜோதி ஆசிரமத்தை நிர்வகித்து வருகிற நிர்வாகிகளை வாழ்த்துகிறேன். 45 ஆண்டுகளாக கல்கி ஜெயந்தி விழாவை நடத்துகிற ஆற்றலைத் தந்த இறைவனை வாழ்த்தி, இறைவணக்கம் பாடிய மலேசிய குழந்தைகளையும் வாழ்த்துகிறேன். உலகத்தின் பல பகுதிகளிலிருந்து தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கிற இந்த பெருமக்களையும் வாழ்த்துகிறேன். 1998-ம் ஆண்டிலே இருந்து தொடர்ச்சியாக ஒவ்வொரு கல்கி
ஜெயந்தி விழாவிலும் கலந்துகொள்வதற்கு ஆற்றுப்படுத்திய உங்கள் அனைவரையும் வணங்கி வாழ்கிறேன்.

மனிதன் என்பவன் ஆறறிவு உள்ளவனாகத்தானே இருக்கிறான். ஓரறிவு உயிர் என்பது தொடு உணர்வை மட்டுமே கொண்டது. இரண்டறிவுள்ள உயிரினம் என்பது தொடு உணர்வையும், சுவையுணர்வையும் கொண்டது. மூன்றறிவுள்ள உயிரினம் என்பது தொடு உணர்வு, சுவையுணர்வு, வாச உணர்வு என்கிற மூன்று தன்மைகளை ஏற்றுக்கொண்டதாகும். நான்கறிவுள்ள உயிரினம் என்பது தொடு உணர்வு, சுவையுணர்வு, வாச உணர்வு, சப்தம் என்கிற ஒலியுணர்வை அறிந்துகொள்கிற ஆற்றலைக் கொண்டது. ஐந்தறிவு என்று வருகிறபோது அந்த உயிரினத்திற்கு தொடு உணர்வு, சுவையுணர்வு, வாச உணர்வு, ஒலியுணர்வு, ஒளி என்கிற வெளிச்சத்தை உணர்கிற உணர்வு என்கிற இந்த ஐந்து உணர்வுகளையும் கொண்டதுதான் ஐந்தறிவுள்ள உயிரினம் என்று வழங்கப்பட்டது. மனிதர்களாகிய நமக்கு ஆறறிவு என்று வகுத்தார்கள். எப்படி? தொடு உணர்வு, சுவையுணர்வு, வாச உணர்வு, ஒலியுணர்வு, ஒளியுணர்வு, அதற்குப் பிறகு பகுத்தறிவாகும்.

மனிதன் என்ற சொல்லுக்கு மனம் – மனம் என்கிற அடிப்படையைக் கொண்டவன் என்பதினால்தான் அவனுக்கு மனிதன் என்ற பெயர் வந்ததாக பெரியவர்கள் சொன்னார்கள். மனிதன் என்ற சொல்லுக்கு மனமுடையவன். மனமுடையவன் என்று வருகிறபோது மனம் என்றால் என்ன? மனம் என்பது சிந்தனைகளின் தொகுப்பாக இருக்கக்கூடியது, தொகுப்பை ஏற்றுக்கொண்டிருக்கக் கூடியது. மனம் என்பது பல சிந்தனைகளையும் உள்ளடக்கிக்கொண்டிருக்கிற, தொகுப்பாக வைத்துக்கொண்டிருக்கிற ஒரு தன்மையாகும். அந்த மனத்தை உடையவன் மனிதன். அதனால் அவன் பகுத்தறிவான் என்கிற முறையிலே ஆறறிவு என்று சொல்லிவைத்தார்கள். பிறகு என்ன ஏழாவது அறிவு? மனம் என்று வைத்துக்கொண்ட ஒருவன் மாமனிதனாக மாறவேண்டுமானால், அந்த மனம் சொல்வதையெல்லாம்
தவிர்த்து, செயலாற்றுகிற ஆற்றலைப் பெற்று, இறைமையோடு தொடர்பு கொள்கிற பெரியவனாக மாறுகிறபோதுதான் அவன் ஏழாம் அறிவைக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்த்துவதற்காகத்தான் அந்த படத்திலே போதி சித்தனுடைய வரலாற்றைச் சொல்கிறபோது ஏழாம் அறிவு என்று தலைப்பிட்டுச் சொன்னார்கள்.

மனத்தைக் கட்டுப்படுத்தி செயலாற்றுகிற துணிச்சல், இறைவனோடு தொடர்புகொண்டிருக்கிற அனுபவம், இயல்பு, இயைபு அவனுக்கு வாய்த்தது என்பதினால்தான் ஏழாம் அறிவு என்று சொல்லிவைத்தார்கள். நாம் விடுதலை பெற்றிருக்கிறோமா? ஆகஸ்டு 15-ம் தேதி விடுதலை திருநாளை
கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். சமூக பொருளாதார விடுதலையை நாம் இன்னும் பெறவில்லை. சுயவிடுதலை பெற்றிருக்கிறோமா? இல்லை. பெரியவர்கள், காவி அணிந்தவர்கள் சொல்வார்கள். நாம் பேராசைக்கு அடிமைப்பட்டிருக்கிறோம். பொருளுக்கு அடிமைப்பட்டிருக்கிறோம். கனவுகளுக்கு அடிமைப்பட்டிருக்கிறோம். அற்ப சுகங்களுக்கு அடிமைப்பட்டிருக்கிறோம் என்று சொல்லுகிறபோது
சுயவிடுதலையைப் பெறவில்லை. தன்னைத்தானே அறிகிற ஆற்றலைப் பெறுகிறபோதுதான் சுயவிடுதலையைப் பெறுகிறோம் என்று பெரியவர்கள் வகுத்துச் சொன்னார்கள். தன்னைத்தானே அறிகிற ஆற்றல் அதற்குப் பெயர்தான் ஆன்மீகம் என்று ஒரு சொல்லைச் சொன்னார்கள்.

ஆன்மீகம் என்பது என்ன? ஆன்மீகத்தினுடைய அடிப்படை என்ன? இறைமை, இறைமை என்று பகவான் லஹரி கிருஷ்ணாவை சொல்லிக்கொண்டிருக்கின்றோமே, இறைமை என்பது என்ன? இறைமை என்ற சொல்லுக்கு என்ன பொருள்? என்று பார்த்தால் இருத்தல், ஒருமையாக வியாபித்து இருத்தலாகும். இந்த உலக முழுவதும் பகவானாக, அற்புதமான சக்தியாக வியாபித்து இருப்பதுதான் இறைமை என்ற
சொல்லுக்குள் அடங்குகிற தன்மையாகும். மனிதர்களாகிய நாம் அந்த இறைவன் என்கிற இறைமையை கையெழுத்து போட்ட, சுருக்க கையெழுத்து போட்டதுதான் நாம் மனிதர்களாக மாறியிருக்கிறோம். தன்னைத்தானே உணருகிறபோதுதான், சுயவிடுதலை பெறுகிறபோதுதான், யாவர்க்கும் தோன்றுகிற வண்ணம் எல்லாவற்றிலுமே பார்க்கிற நிலையிலே இறைமை இருப்பது நமக்குப் புரியும். இங்கே
வளாகத்திற்கு வந்திருக்கிறோம். ஆண்டுதோறும் பத்து நாட்கள் இந்த திருவிழாவை கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். குறிப்பாக நம்மை ஆண்டுகொண்டிருக்கிற, நம்மை ஆற்றுப்படுத்திக் கொண்டிருக்கின்ற, நம்மை வாழ செய்துகொண்டிருக்கின்ற பகவானைப் போற்றி பணிவதற்காக கூடியிருக்கிறோம் என்று வருகிறபோதுதான் இறைமையை நாம் புரிய ஆரம்பித்திருக்கிறோம். தன்னைத்தானே சுயவிடுதலை பெறுவதற்காக இங்கே கூடியிருக்கிறோம், கூடி மகிழ்கிறோம் என்பதெல்லாம் புலனாகிற காரணத்தினால்தான் ஜெர்மனியிலேயிருந்து தெலுங்கிலே வந்து
பாடுகிறார்கள். ஜெர்மனியிலேயிருந்து வந்து அருமையாக, உருக்கமாக பகவானைப் பற்றி பேசுகிறார்கள்.

இறைமையை நோக்கி அவனை ஆன்மீக பாதையில் அடியெடுத்து வைக்கிறான் என்று தன்னைத்தானே உணர்ந்தவனை, சுய விடுதலையைப் பெற்றவனைத்தான் சொல்லிவைத்தார்கள். ஆன்மீகம் என்பது என்ன? வறுமையால் வருவதல்ல, நாம் வறுமைப்பட்டா இங்கே கூடியிருக்கிறோம்? இல்லை. மனத்தைச் செழுமைப்படுத்துவதற்காக, செழுமையாய் செதுக்கப்படுவதுதான் ஆன்மீகம் என்பதை உணர்ந்தவர்களாக நாம் கூடியிருக்கிறோம். 15 ஆண்டுகளாக, தொடர்ச்சியாக இங்கே வந்துகொண்டிருக்கிறோமென்றால், அது கிடைத்தற்கரிய பேறாகும். வராமல் போனவர்கள் என்று வருகிறபோது அவர்களுக்கு கொடுத்துவைக்கவில்லை என்றுதான் நாம் சொல்ல வேண்டுமேதவிர, உடல் நலிவுற்றாலும்கூட அன்பிற்கரசு சுவாமிகள் இங்கே வந்து மகிழ்ச்சியோடு பகவானைப்பற்றி போற்றுகிறார்களென்றால், அந்த ஆன்மீகத்தை நோக்கி பயணப்படுகிற பாதையை பகவான் அவருக்கு அருளியிருக்கிறார். தன்னைத்தானே உணர்ந்துகொண்ட, சுயவிடுதலை பெற்ற மனதோடு செழுமைப்பட்ட விஷயமாக இருப்பதாகும். ஆன்மீகம் என்பது என்ன? அன்பு என்பது அதன் வாசல், கருணை என்பது வரவேற்பரையாகும். அதேபோல மகிழ்ச்சி என்பது அதனுடைய முற்றம். நாம் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக வழிபாடு செய்கிறோமே, தியானம் செய்கிறோமே அதுதான் வழிபாட்டுகூடமாகும். விஞ்ஞானம் என்றெல்லாம் சொல்லுகின்றார்கள். விஞ்ஞானம் என்பது என்ன? விஞ்ஞானம் என்பது வெளியே தேடுவதாகும். ஒரு விளக்கை எரியவைக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டுமென்பதை வெளியே தேடுவதாகும். அவ்வாறு வெளியே தேடுவதை ஒருவர் கண்டுபிடித்து சொல்லிவிட்டால் அதன் மூலமாக உலகத்திற்கு பயன்பெறுகிறது. மெஞ்ஞானம் என்பது மட்டும்தான்
நமக்குள்ளே தேடுவது, உள்ளுக்குள்ளே தேடுவது, உள்ளுக்குள்ளே தேட வேண்டியதுதான் மெஞ்ஞானமாகும். அதை ஒவ்வொருவருமே தேட வேண்டும் என்பதுதான் உண்மை. அதனால்தான் உயிரோடு வாழ்வதைவிட உயிர்ப்போடு வாழ வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லிவந்தார்கள்.

நித்திய ஜீவ வார்த்தைகளை வாசித்துப் பாருங்கள். நீங்களெல்லாம் உயிரோடு வாழ்வதைவிட உயிர்ப்போடு வாழ வேண்டும். எப்படி? இந்த மனுஜோதி ஆசிரம வளாகத்திலே மாமரமும், தேக்குமரமும் அருகாமை, அருகாமையிலே வளர்ந்துகொண்டிருக்கின்றன. மாமரத்தை நோக்கி எல்லோரும் சென்றுகொண்டிருக்கிறோம். கடினமாக, திடமாக, உறுதியாக இருக்கக்கூடிய தேக்குமரத்தை யாரும் சீண்டுவாரில்லை. எல்லோருமே மாமரத்தை நோக்கி போய்கொண்டிருக்கிறோம். மாம்பிஞ்சு முதல் மாம்பழம்வரை அது விளைந்துகொண்டே இருக்கிறது என்பதை அந்த தேக்குமரம் கவனிக்கிறது. தேக்குமரம் வருத்தத்தோடு மாமரத்தைப் பார்த்து கேட்கிறது: “நான் உறுதியானவனாக இருக்கிறேன், உறுதியான பொருட்களை தயாரிப்பதற்கு உதவுபவனாக இருக்கிறேன். ஆனாலும் மாமரமே உன்னை நோக்கித்தானே இந்த மக்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். காரணம் என்ன?” என்று வருத்தத்தோடு, புலம்பலோடு கேட்டபோது அந்த மாமரம் தேக்குமரத்திடம் பதில் சொல்லியதாம்: “நான் வாழ்கிறபோது வழங்குகிறேன். நான் உயிரோடிருக்கிறபோது மாம்பிஞ்சை குழந்தைகள்  எடுத்துக்கொள்ளலாம், மாங்கனிகளை சாப்பிடலாம் என்று வருகிறபோது நான் உயிரோடிருக்கிறபோது
வழங்குகிறேன். ஆனால் உன்னை வீழ்த்தியபிறகுதான் நீ பொருளாக மாறுகிறாய், விநியோகிக்கிறாய். நீ வீழ்கிறபோதுதான் விநியோகிக்கிறாய். நான் வாழ்கிறபோதே வழங்குகிறேன்” என்று அந்த மாமரம் தேக்குமரத்திடம் சொல்லுகிறபோது, அதுதான் உயிரோடு வாழ்வது என்பதற்கும், உயிர்ப்போடு வாழ்வது என்பதற்குமுள்ள வித்தியாசமாகும்.

வள்ளலாரை, இராமலிங்க அடிகளாரை நினைக்கும்போதெல்லாம் நமக்கு மூன்று அம்சங்கள் நினைவிற்கு வரும். ஒன்று சமரசம், இரண்டாவது ஜோதி, அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்று சொல்லிவைத்த தாரக மந்திரமான இறைமையை ஜோதி வடிவில் கண்ட அந்த தன்மை. சமரசம், ஜோதி, மூன்றாவது  வெண்மை அதாவது வெண்மை என்பது தூய்மையை சொல்லக்கூடியது. அதேபோல நமது பகவான் லஹரிகிருஷ்ணாவையும் நாம் நினைக்கிறபோது மூன்று அம்சங்கள்
நம்முடைய நினைவிற்கு வருகின்றன. ஒன்று சமரசம், இரண்டாவது நவீனம் நம்மைப்போன்ற உடையுடன் இருக்கக்கூடிய ஒரு நிலை – நவீனம். மூன்றாவது அன்புக்கொடி. உலகத்திலேயே அன்புக்கொடியை கற்பித்தவர், காட்டியவர், பழக்கியவர் பகவான் லஹரிகிருஷ்ணா அவர்கள் ஒருவர்தான். ஆக வள்ளலாரைப்போல அவர் பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்று சொன்னதைப்போல சமரசம், நவீனமாக, புதுமையாக இருக்கக்கூடிய தன்மை, புதுமை என்றால் பகுத்தறியக்கூடிய தன்மை அந்த தன்மை அன்புக்கொடியாகும். இந்த மூன்று அம்சங்களையும் கற்பித்தவர் என்கிற நிலையில் ஆக பொதுவாக நாம் சுயவிடுதலை பெற்றவர்கள் என்று வருகிறபோது எல்லா சொல்லும் பொருள்குறிக்கிறதே என்று இலக்கணம் சொல்லும். தமிழ் இலக்கணத்தைப்
பொறுத்தவரை எந்த சொல்லும் வீணாக சொல்வதல்ல. ஒரு சொல்லை எடுத்துக்கொண்டால் 13, 14 பொருள்களை தரக்கூடிய மொழி தமிழ் மொழியாகும். எல்லா சொல்லும் பொருள்குறிக்கிறதே என்பதுபோல, நான் இந்த ஆண்டு கல்கி ஜெயந்தி விழாவில் என்ன பேசலாம் என்று யோசித்துக்கொண்டே இருந்தபோது சட்டென்று எனக்கு தோன்றியது ஒவ்வொரு எழுத்தையும் வைத்துக்கொண்டு ஏதாவது கண்டுபிடிக்க முடியுமா என்று ஆராய்ந்தேன். மனுஜோதி ஆசிரமம் லஹரிகிருஷ்ணா என்கிற ஒவ்வொரு எழுத்தும் என்ன சொல்கிறது என்று கவனித்தேன்.

முதல் எழுத்து மனுஜோதி என்பதை எடுத்துக்கொள்வோமே MANUJOTHI. M – என்பது Masterly முதன்மை திறமையுடைய என்கிற அர்த்தத்தைக் குறிப்பதாக எனக்கு தோன்றுகிறது. இரண்டாவது A – என்பது Academy முதன்மை தரமுடைய கல்விகலைக்கழகம் என்பது முதல் இரண்டு எழுத்துக்களுக்குரிய அர்த்தமாக நான் கணித்தேன். மூன்றாவது எழுத்து N – என்பது Neighbourly எவருடனும் நட்போடு, இணக்கமாக இருக்கக்கூடிய தன்மை. U – என்பது University என்று வந்தது. முதலில் எப்படி முதன்மை தரமுடைய கல்விகழகம் என்று தோன்றியதோ, அதேபோல
Neighbourly இணக்கமுடைய, நட்புடைய யூனிவர்சிட்டி பல்கலைக்கழகம் என்று அந்த
4 எழுத்துக்களும் எனக்கு உணர்த்தியிருக்கின்றன. அடுத்ததாக JOTHI என்று வருகிறபோது J – என்பது Joyous என்று சொல்லக்கூடிய மகிழ்ச்சி நிறைந்த O – என்பது Organisation அமைப்பு, தொடக்கம் என்று வைத்துக்கொண்டால், மகிழ்ச்சி நிறைந்த அமைப்பாகும். அடுத்ததாக T – என்பது Tangible உறுதியான, திடமான என்று வருகிறது. H – என்பது History வரலாற்றில் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கக்கூடிய
I – என்பது Institution, I என்ற எழுத்தில் தொடங்குவதால் ஒரு கழகம், நிறுவனம் என்று பொருள்படுகிறது.

மனுஜோதி என்பதை முதன்மை தரமுடைய கல்விகலைக்கழகம், எவருடனும் இணக்கமுடைய, நட்புடைய பல்கலைக்கழகம், மகிழ்ச்சி நிறைந்த அமைப்பு, உறுதியான, திடமான வரலாற்றில் குறிப்பிடத்தக்க கழகம், நிறுவனம் என்று மனுஜோதி என்ற வார்த்தைக்குள்ள ஒவ்வொரு எழுத்தையும் வைத்துக்கொண்டு நான் கணித்தேன். அடுத்தது ASHRAM ஆசிரமம் என்று வருகிறபோது A – என்பது Arouse தூண்டுகிற, நம்மை விழிக்கச்செய்கிற S – என்பது Sacred புனிதமான H – என்பது Hospitable மனுஜோதி ஆசிரமத்திற்கு உள்ளே முதலில் வந்தவுடன் விருந்தோம்பும் பண்பு இருக்கிறது என்று வருகிறபோது அது Hospitable ஆகும். R – என்பது Reputable மதித்து வாழ்ந்த A – என்பது Activate செயல்படுகிற M – என்பது Movement அதாவது இயக்கம் என்பதாகும். தூண்டுகிற, விழிக்கச்செய்கிற, புனிதமான, விருந்தோம்பும் பண்புடைய, மதித்து வாழ்ந்த, செயல்படுகிற இயக்கம் மனுஜோதி ஆசிரமமாகும். ஆக மனுஜோதி ஆசிரமம் என்ற வார்த்தைக்கே இவ்வளவு இருந்தால், இந்த ஆசிரமத்தை செயல்படுத்தி நம்மையெல்லாம் வழிநடத்தி ஆன்மீகப்பாதையை நோக்கி திருப்பிக்கொண்டிருக்கிற லஹரிகிருஷ்ணா என்கிற வார்த்தைக்குள்ள ஒவ்வொரு எழுத்திற்கும் என்ன அர்த்தம் என்று நாம் பார்த்தால், L – என்பதை நீங்கள் Leader அல்லது LORD என்றும் எடுத்துக்கொள்ளலாம். A – என்பது Affectionnate அன்பான H – என்பது Happiest மகிழ்ச்சியான A – என்பது Absolute முழுமையான R – என்பது Realistic உண்மையான, மெய்யான I – என்பது Imperishable பிரிக்கமுடியாத என்று  அர்த்தமாகும். ஆக அன்பான, மகிழ்ச்சியான, முழுமையான, உண்மையான, பிரிக்கமுடியாத Leader லீடர் லஹரிகிருஷ்ணா ஆவார். அடுத்ததாக KRISHNA கிருஷ்ணா – கருமைநிற கண்ணனை நாம் கிருஷ்ணா என்று அழைக்கிறோம்.

ஆங்கிலத்தில் எழுதுகிறபோது ஒவ்வொரு எழுத்தையும் வைத்துக்கொண்டு இப்படியும் நாம் ஆய்வு செய்யலாம் அல்லவா? K – என்பது King’s Fort. நாமெல்லோரும் நாட்டினுடைய, உலகத்தினுடைய பல்வேறு பகுதிகளிலேயிருந்து வந்து, இந்த நிகழ்ச்சிகளிலே கலந்துகொண்டிருக்கிறோமென்றால் அது K-யை உணர்த்துகிற Kith and Kin என்ற King’s Fort என்பது உற்றார், உறவினர் என்ற அர்த்தத்தை தரக்கூடிய King’s Fort அல்லது Kith and Kin. R – என்பது Refined பண்படுத்தப்பட்ட என்ற அர்த்தத்தை தரக்கூடியதாக உணர்ந்தேன். அடுத்ததாக I – என்பது Inmost என்பது உள்ளார்ந்த S – என்பது Seen தெளிந்த, அறிவுள்ள, ஞானமுள்ள H – என்பது Honourable மதிப்பிற்குரிய N – என்பது Noble என்று வைத்துக்கொள்ளலாம். அது பெருந்தன்மைமிக்க, உயர்ந்த A – என்பது Adviser போதகர், நித்திய ஜீவ வார்த்தைகளை நமக்கு விவிலியத்தைப்போல, பகவத்கீதையைப்போல, குர்- ஆனைப்போல தந்திருக்கிற அந்த போதகராகும். ஆக உற்றார், உறவினர்களை பண்படுத்தப்பட்ட, உள்ளார்ந்த, தெளிந்த, அறிவுள்ள, ஞானமுள்ள, மதிப்பிற்குரிய, பெருந்தன்மைமிக்க, உயர்ந்த நிலையை உருவாக்கக்கூடிய போதகராகத்தான் லஹரிகிருஷ்ணா நம்மை ஆட்சிசெய்கிறார், ஆற்றுப்படுத்துகிறார். நாம் வாழ்க்கையில்
செம்மையாக வாழ்வதற்குரிய நெறிமுறைகளை, வழிமுறைகளை தந்திருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழா புதுபுது சிந்தனையோடு புதுபுது வண்ணங்களோடு விளங்கி வருகின்றன. அதை தம்பிகள் உப்பாஸ் அவர்களும், தம்பி லியோ அவர்களும், அம்மா அவர்களும் இணைந்து மிக சீரிய முறையிலே நாம் சந்தித்து மகிழ்வதற்குரிய ஏற்பாடுகளை தொடர்ந்து அவர்கள் செய்ததற்கும், எனக்கு
வாய்ப்பளித்ததற்கும் லஹரிகிருஷ்ணா அவர்களுக்கு முழுமையான நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி! வணக்கம்!

*******

Filed under: பிரமுகர்களின் உரை