தமிழ் | తెలుగు

» ஆன்மீக கதைகள் » முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்

அது ஒரு மழைக்காலமாக இருந்தது. ஒரு அடர்ந்த காட்டில் தவளைகள் ஒரு கூட்டமாக பிரயாணம் செய்து கொண்டிருந்தன. அப்பொழுது திடீரென்று இரண்டு தவளைகள் மாத்திரம் ஒரு ஆழமான குழியில் விழுந்து விட்டன. மற்ற தவளைகள் குழி ஆழமாக இருப்பதைக் கண்டு, நீங்கள் இருவரும் அங்கேயே கிடந்து சாக வேண்டியதுதான் என்று கூறியது.

இரண்டு தவளைகளும் அவர்கள் சொல்வதைப் பொருட்படுத்தாமல், குழியில் இருந்து வெளியே வர தங்களுடைய முழு பெலத்தையும் உபயோகித்து குதிக்க முயற்சி செய்து கொண்டிருந்தன. வெளியே இருந்த மற்ற தவளைகள் முயற்சி செய்ய வேண்டாம் என்று கூறிக்கொண்டே இருந்தன. இறுதியில் ஒரு தவளை மற்றவர்கள் சொன்னதைக் கேட்டு முயற்சியை கைவிட்டது. அது கீழே விழுந்து இறந்துபோனது.

இன்னொரு தவளையோ எவ்வளவு தூரம் குதிக்க முடியுமோ அவ்வளவு தூரம் குதிக்க முயற்சி செய்து கொண்டேயிருந்தது. கடைசியில் வெளியே குதித்தது. அது வெளியே வந்தவுடன் மற்ற தவளைகள் எல்லாம், நாங்கள் கூறியது உன் காதில் விழவில்லையா? என்று கேட்டன. அதற்கு அந்த தவளை எனக்கு காது கேட்காது, நான் செவிடு என்று கூறி மற்றவர்கள், என்னை வெளியே வரும்படி உற்சாகப்படுத்துவதாக நினைத்துக்கொண்டேன் என்று கூறியது.

இந்தக் கதையிலிருந்து நாம் என்ன அறிய வருகிறோம் என்றால், ஜீவனை கொடுக்கும் வல்லமை நாவுக்கு இருக்கிறது. இதை சாலொமோன் என்ற ஞானி வெகு அழகாக கூறுகிறார். “மரணமும், ஜீவனும் நாவின் அதிகாரத்தில் இருக்கும். அதில் பிரியப்படுகிறவர்கள், அதின் கனியைப் புசிப்பார்கள்” – நீதிமொழிகள் 18:21. மோசமான நிலையில் இருக்கும் ஒருவருக்கு நாம் கூறும் வார்த்தைகள் அவர்களை தேற்றி, உற்சாகமூட்டி மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும் என்ற ஆசையை தூண்டுகிறதாக அமைகிறது. அதே சமயத்தில் அந்நேரத்தில் ஒருவன் கூறும் பழிச்சொல் அவர்களை முற்றிலுமாக அழித்துவிடக்கூடும் என்பதை இக்கதையின் மூலம் அறிகிறோம்.

அதோடு வாழ வேண்டுமா அல்லது சாக வேண்டுமா என்ற தீர்மானம் நம்மிடம்தான் இருக்கிறது. முதல் தவளை மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு சாக வேண்டும் என்று தீர்மானித்தது. இன்னொன்று வாழ வேண்டுமென்று தீர்மானித்து வெளியே குதித்தது. இறைவன் நமக்கு நல்ல உடல் ஆரோக்கியம், புத்தி கூர்மை ஆகியவற்றை கொடுத்தது நாம் சிறப்பாக வாழ வேண்டுமென்பதற்காகத்தான், மடிவதற்காக அல்ல. வாழ வேண்டுமென்ற ஆசை கொண்ட தவளை மற்றவர்கள் கூறின அதைரியமூட்டும் சொற்களை காதில் போட்டுக்கொள்ளவே இல்லை.

எல்லாருக்கும் வாழ்க்கையில் மோசமான நேரம் ஏற்படும்போது, இந்த தவளையைப்போல் நாமும் செவிடாகி விட்டால் முன்னேறலாம் அல்லது அவர்கள் என்னை அழிந்து போ என்று சொல்வதற்கு யார்? என்ற வைராக்கியம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. பிறர் சொல்லும் பழிச்சொற்கள் இந்த இடத்தில் நாம் வாழ வேண்டும் என்ற ஆசைக்கு உரமிடுவதுபோல உள்ளது. பயிர்களுக்கு நாம் எதை உரமாக போடுகிறோம்? தேவையற்றதான மாட்டுச்சாணம், ஆட்டுப்புழுக்கை போன்றவைகள்தான். ஒரு மரம் எவ்வாறு மனிதனுக்கு உபயோகமற்றதை தனக்கு உரமாக்கிக் கொள்ளுகிறதோ, அதேபோல நாமும் நம்மீது எறியப்படும் பழிச்சொல்லை உரமாக்கிக்கொண்டு, இன்னும் அதிகமாக முன்னேறி வளமடைய வேண்டும் என்ற உற்சாகம், வைராக்கியம், தீவிரம் அடைந்து ‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ என்பதற்கேற்ப வாழ்ந்து காட்டலாம்.

– S. ஜோசப், கன்னியாகுமரி

✡✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீக கதைகள்