தமிழ் | తెలుగు

» ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள் » முட்களும் ரோஜாவும்

முட்களும் ரோஜாவும்

இராமாயணத்தில் ராமர் வனவாசம் சென்றபோது சீதை ஒரு மாயமானைக் கண்டு, அதின்மேல் ஆசைப்படுகிறாள். தனக்கு அந்த மான் வேண்டும் என கேட்டதினால் ஸ்ரீ ராமர் அதைப் பின்தொடருகிறார். அவரைப் பின்தொடர்ந்து இலட்சுமணனும் சென்றான். ஸ்ரீ ராமரும், இலட்சுமணனும் இல்லாத சமயத்தில் இராவணன் சீதையை கவர்ந்து சென்றான்.

சீதை எங்கே இருந்தாள்? சீதை ராட்சத ஸ்திரிகளின் மத்தியில் ‘அசோக வனம்’ என்ற இடத்திலிருந்தாள். அங்கே அந்த அசுரப் பிறவிகள் அவளை ஓயாமல் துன்புறுத்திக் கொண்டிருந்தனர். இராவணனின் மகிமைகளை அவளுக்கு கூறி, ‘ராமனை மறந்து விடு, உன் மனதை மாற்றிக் கொள்’ என்றனர். மனதளவில் அவளை துன்புறுத்தினர்.

ஸ்ரீ ராமர் இறைவனின் அவதாரமாவார். அவருடைய மனைவிக்கு இப்படியொரு அவல நிலை ஏற்பட்டது. ஆனால் சீதை எப்படியிருந்தாள்? முட்களுக்கு மத்தியிலிருந்த ரோஜாப்பூவைப் போல் இருந்தாள். அவள் எதற்கும் கலங்காமல், அமைதியாக இருந்தாள்.

இறைவனின் பாகமாக இருப்பவர்களும்கூட முட்களின் மத்தியிலிருக்கும் ரோஜாப் பூவைப் போலத்தான் இருக்கிறார்கள். ‘மக்கள் என்னை முட்களைப் போல குத்துகிறார்கள். என்னால் அதை சகித்துக் கொள்ள முடியவில்லை’ என்று நீங்கள் கூறினால் நீங்கள் ரோஜா மலரல்ல. ‘நான் ரோஜாவாகவும் இருக்க வேண்டும். அதேசமயத்தில் முட்களும் என்னை குத்தக்கூடாது’ என்று நீங்கள் கூறமுடியாது.

அத்துடன் ரோஜாப் பூவில் நல்ல வாசனை வருகிறது. எல்லோரும் அந்த வாசனையை முகர்ந்து பார்த்து அருமையான வாசனை என்று கூறி அதை அனுபவிக்கிறார்கள். அதைப் போலவே இறைவனில் பாகமாயிருப்பவர்களின் குணம் எல்லோருக்கும் பயனுள்ளதாகவும், போற்றக்கூடியதாகவும், மாசில்லாத குணமாகவும் இருக்க வேண்டும். அவர்களின் எதிரிகள்கூட அவர்களால் நன்மையடைபவர்களாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட குணம் இறைவனின் பூரண அருளினால் ஏற்படுகிறது. யாரும் அப்படியிருக்க முடியாது, யாரும் அப்படிப்பட்டவர்களுடன் போட்டிபோட முடியாது. எல்லோரும் பொறாமைப்படும் அளவிற்கு அவர்களின் குணம் விளங்கும். நீங்கள் யாரிடமிருந்து அன்பை எதிர்பார்க்கிறீர்களோ அவர்களிடத்திலிருந்து அன்பை பெறமாட்டீர்கள். ஆனால் இறைவனின் பூரண அன்பையும், அருளையும் பெறுவீர்கள். அதுவே இறைவனின் பாகமாயிருப்பவர்களின் பாக்கியமாகும்.

– ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா

✡✡✡✡✡✡✡

Filed under: ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்