தமிழ் | తెలుగు

» பிரமுகர்களின் உரை » மலைவாழ் மக்களிடையே ஒன்றே குலம் ஒருவனே தேவன் பிரச்சாரம்

மலைவாழ் மக்களிடையே ஒன்றே குலம் ஒருவனே தேவன் பிரச்சாரம்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பாடேரு என்ற மலைக்கிராமம். கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் இருக்கும் இம்மலைப்பகுதிதான் மலைவாழ் மக்களுக்கு தலைநகரமாகும். இம்மலைக் கிராமத்தில் உள்ள மலைவாழ் மக்களிடையே “ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்ற கொள்கையை பரப்புவதற்காக மனுஜோதி ஆசிரமத்தின் சார்பாக சர்வ சமய மாநாடு மற்றும் தேசீய ஒருமைப்பாடு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மனுஜோதி ஆசிரமத்தின் தலைவர் D. பால் உப்பாஸ் N. லாறி மற்றும் ஆந்திர மாநிலத்திலுள்ள ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள், முக்கிய பிரதிநிதிகள் இந்நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தனர். மலைவாழ் மக்கள் மற்றும் ஏழை எளிய மக்களிடம் இறை கருத்துக்களைத் தெரிவிப்பதற்கும், கடவுள் ஒருவரே என்ற ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் உபதேசங்கள் அடங்கிய புத்தகங்களை இலவசமாக கொடுப்பதற்கும் இந்த விழா ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இவ் விழாவில் முக்கிய பிரமுகர்கள், பேச்சாளர்கள், அறிஞர் பெருமக்கள், அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர். முன்னதாக ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் துதிபாடல்களின் இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது.

மழைவாழ் மக்கள் நலத்துறை முன்னாள் அமைச்சர் திருமதி. மணிக்குமாரி அவர்கள் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். இவருடன் சிறப்பு விருந்தினர்களாக அரசு மாவட்ட சட்ட மன்ற உறுப்பினர் திரு. கிடாரி சர்வேஸ்வரராவ், பாடேரு நகரத்தின் சட்ட மன்ற உறுப்பினர் திருமதி. கிட்டி ஈஸ்வரி, விசாகப்பட்டினத்திலுள்ள தெலுங்கு அதிகார பாஷை சங்கத்தின் தலைவர் திரு. கே.எல்.என். நரசிம்ஹ நாயுடு, விஜயவாடாவைச் சேர்ந்த திரு. கஜராம கிருஷ்ணா மற்றும் திருமதி. சத்தியவதி, திரு. நாகராஜு, திரு. பி.வி.ஜி. குமார், திரு. கோவிந்த், பாடேரு கிராமத்திலுள்ள பள்ளிவாசலின் தலைவர் திரு. முஹம்மத் ஜஹாங்கீர் அலி மற்றும் திரு. முஹம்மத் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

மழைவாழ் மக்கள் நலத்துறை முன்னாள் அமைச்சர் திருமதி. மணிக்குமாரி அவர்கள் பேசும்போது: நாம் எல்லோரும் கஷ்டம் வரும்போது மட்டும்தான் இறைவனை தேடுகின்றோம். நாம் எதைச் செய்தாலும் நான்கு பேருக்கு நன்மையையே செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட வேண்டும். நாம் எல்லாரும் ஒன்றாக ஒற்றுமையாக சேர்ந்து இருந்தாலே அது இறைவனுக்கு நன்மை செய்வதாகும். நாம் இறை நம்பிக்கையை மறக்காமல், நம் பிள்ளைகளுக்கும், மற்றவர்களுக்கும் உதவி செய்யும் உயர்ந்த பழக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டிய காலக்கட்டத்தில் உள்ளவர்களாக இருக்கிறோம்.

இந்த மனுஜோதி ஆசிரமமானது கன்னியாகுமரிக்கு அருகிலுள்ளது என்று எனக்கு தெரிவித்தார்கள். அவ்வளவு தொலைவிலிருக்கும் அந்த இடத்திற்கு எல்லாராலும் செல்ல முடியாவிட்டாலும், இந்தக் கருத்துக்களை நம்முடைய மாநிலத்திற்கு மட்டுமல்ல, நம்முடைய நாட்டிற்கே ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற ஒற்றுமையை அறிவுறுத்தக்கூடிய புத்தகங்களை நமக்கு கொடுத்திருக்கிறார்கள். இதை நம்முடைய மாநிலத்திலுள்ள அனைவருக்கும் தெரியப்படுத்த முடியாவிட்டாலும்கூட நம் அருகிலுள்ள சிலருக்காவது தெரிவிக்க கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம் என்றார்.

விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அரக்கு என்ற இடத்திலுள்ள சட்டமன்ற உறுப்பினர் திரு. கிடாரி சர்வேஸ்வரராவ் பேசும்போது: மனிதனுடைய நிலை ஒரு குறிப்பிடக்கூடிய வரையறைக்குட்படாத நிலைக்கு அப்பாற்பட்டது. உலகம் எந்த வேகத்தில் போகின்றதோ நாமும் அந்த வேகத்திற்கு போட்டி போட்டுக் கொண்டு ஓட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். கடவுள் இருக்கிறார் என்று மறந்து போகின்ற காலக்கட்டாயத்தில் இருக்கக்கூடியவர்களாக இருக்கின்றோம். நம் எல்லோருக்கும் நல்ல வழியைக் காண்பிக்கக்கூடிய ஒரு நல்ல சன்மார்க்க நெறியில் வழிநடத்தக்கூடிய இந்த கூட்டம் அமைத்திருக்கிற பெரியவர்களுக்கு என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

மனிதனுக்கு, தன்னுடைய நிலை என்ன? தன்னுடைய பிறப்பென்ன? இந்த பிரபஞ்சத்தில் என்ன நடக்கிறதென்று அறியக்கூடிய அறிவு அவனுக்கில்லை. ஆகாயத்தில் எப்படி செல்வது? பூமிக்கு கீழ் என்ன நடைபெறுகின்றது? மனிதனுடைய வாழ்க்கையில் என்ன நடைபெறுகின்றது என்ற ஆலோசனையைத் தவிர இறைவனைக் குறித்த சிந்தனையற்று அலைகின்றான். ஒரு நாளைக்கு இருபத்தி நான்கு மணி நேரத்தில் பணிக்கு தன்னுடைய உணவை எடுத்துக் கொண்டு செல்லுகின்ற காலக்கட்டாயத்தில் இருக்கின்றான். விவசாயியோ கோழி கூவியவுடனே வயலுக்கு சென்று விடுகிறான். இந்த காலக்கட்டத்தில் கடவுள் மனிதனை இந்த பூமிக்கு எதற்காக அனுப்பினார் என்பதையும், பத்து பேருக்கு நன்மை செய்வதற்காக அனுப்பியிருக்கிறார் என்பதையும் மறந்து விடுகிறான்.

இப்படிப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நமக்கு நினைவூட்டும் விதமாக பெரியவர்கள் அநேகர் தங்கள் கருத்துக்களை மேடையில் தெரியப்படுத்தினார்கள். அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். மனிதனானவன் இரவிலே தூங்கி காலையில் எழும்பவில்லையென்றால் அவனுடைய மனைவி அவன் மனைவி அல்ல. அவன் பிள்ளைகள் அவன் பிள்ளைகள் அல்ல. அவனுடைய வீடு அவனுடைய வீடு அல்ல. அவனுடைய சரீரம் அவனுடைய சரீரமல்ல என்ற உண்மையை மறந்துபோகின்ற நிலையில் இருக்கின்ற நாம் அதை தெரிந்துகொள்ளும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் நாம் எல்லோரும் பங்குபெறுவது மட்டுமல்ல, ஒருவருக்கொருவர் நன்மை செய்வதற்கு இதில் அங்கத்தினர்களாக இருக்க வேண்டும்.

நாம் இறைவனை தேடாமல் நாளைக்கு தேடலாம் என்று வாய்தாக்கள் போட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால் இறைவன் நம்மை மன்னித்துக்கொண்டு சென்றுகொண்டே இருக்கிறார். இப்படியே நாம் இருக்கும்போது என்றாவது ஒருநாள் மனம் மாற வேண்டும். இப்படி நல்ல நிகழ்ச்சிகள் நடத்தும்போது நாம் ஒற்றுமையாக சேர்ந்து மனம்மாறி இறைவனோடு ஒன்றுபட வேண்டும் என்று கூறினார்.

பாடேரு என்ற இடத்திலுள்ள சட்டமன்ற உறுப்பினர் திருமதி. கிட்டி ஈஸ்வரி அவர்கள் பேசும்போது: கடவுள் ஒருவரே என்றும் எல்லா மதங்களும் ஒரே கருத்தினை சொல்கிறது என்றும், கடவுள்மேல் நம்பிக்கையை ஏற்படுத்தவும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அருமையான கருத்தை தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பாடேரு என்ற பகுதிக்கு வருகை தந்து ஆதிவாழ் மக்களிடம் தெரியப்படுத்திக் கொண்டிருக்கக்கூடிய உங்கள் அனைவருக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு நிகழ்ச்சி நடைபெற வேண்டுமானால் அந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்கிறவர்கள், அதில் கலந்து கொள்கிறவர்கள், மேடையில் வீற்றிருக்கும் பெரியவர்கள் அவர்களை பார்த்தாலே தெரிந்துவிடும். இவர்கள் அனைத்து மதத்தவரையும், அரசியல் பிரமுகர்களையும், கவிஞர்களையும் வரவழைத்து நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே இந்த பாடேரு பகுதியானது புண்ணியம் செய்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இந்த பாடேரு பகுதியை தேர்ந்தெடுத்தது இங்கே வாழும் மக்களின் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

நான் எந்த வேதத்தையும் படிக்கவில்லை, எந்த புராணங்களையும் படிக்கவில்லை, எனக்கு தெரிந்ததெல்லாம் தர்மத்தை ஆசரிப்பதுதான். அதுதான் இன்று வரை நம்மைக் காப்பாற்றி வருகிறது. நம்மையோ நம்முடைய உயிரைக் காப்பாற்றவோ பணம் தேவைப்படுகிறது. ஆனால் அவர்களைக் காப்பாற்றுவதற்காக கடவுளிடம் வேண்டுகிறோம். கடவுளோ நேரடியாக பணம் தருகிறாரா? எந்த விக்கிரகத்திலோ அல்லது போட்டோவின் மூலமாகவோ பணம் வந்திருக்கிறதா? யாரையாவது அவர் நமக்கு அனுப்புவார். நமக்கு உதவி செய்வதற்காக மற்றவர்களை அனுப்புவதுபோல் நாமும் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அதைத்தான் வேதங்கள் நமக்கு தெரியப்படுத்துகிறது. இந்திய கலாச்சாரமும் அதைத்தான் சொல்கிறது. வீட்டிற்கு வந்தவர்களை உபசரிக்க வேண்டும். இதை அந்த காலத்திலிருந்த பெரியவர்கள் கடைப்பிடித்தார்கள். ஆகவேதான் நாம் இந்த பூமியில் மனிதர்களாக ஜீவித்துக்கொண்டிருக்கிறோம்.

ஏனென்றால் மனிதன்தான் அனைத்தையும் கற்றுக்கொண்டு தேர்ச்சி பெற்றவனாக இருக்கின்றான். மனிதனுக்கு மகிழ்ச்சி எவ்வாறு ஏற்படுகிறதோ துக்கமும் அவ்வாறே ஏற்படுகிறது. கோபம், பகை, சண்டைகள் மனதில் எழும்போது அவற்றை மறந்தால்தான் நாம் நிம்மதியாக வாழ முடியும். எனவே நம்முடைய மனதை கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமக்கு இவை எல்லாம் தெரியும். ஏன் மற்றவர்களுக்குக் கூட சொல்வோம், ஆனால் அதை நம்முடைய வாழ்க்கையில் கடைபிடிப்பதற்குத்தான் கஷ்டமாக இருக்கும். அந்த கஷ்டத்தை நாம் இஷ்டப்பட்டு கடைபிடித்தால்தான் நாம் இறைவனுடன் ஒன்றுபடுவதற்கு அது ஒரு அவகாசத்தைக் கொடுக்கிறது.

இந்த கூட்டத்திலே கலந்துகொண்டதனால் நாமனைவரும் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் ஆசியைப் பெற்றுக்கொண்டோம். அவருடைய சந்நிதானத்தில் நாம் இருப்பதால் நம்முடைய கோபம் மற்றும் பிரிவினைகளை மறந்து மற்றவர்களிடம் அன்பு காண்பிக்க கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம். இந்த உலகத்திலேயே அதிக விலையுயர்ந்தது என்னவென்றால் அன்பு மட்டும்தான். அதை நாம் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும். நாம் சிலரிடம் பேசும்போது, நமக்கு கோபம் ஏற்படும். ஆனால் அதை உடனே வெளிக்காட்டாமல் சிறிய சிரிப்பை வெளிப்படுத்துவோம். அதனால் பல பிரச்சினைகள் தவிர்க்கப்படும். நம்முடைய உடல்நிலையும் பாதிக்கப்படாது. எனவே அன்பை நாம் ஒவ்வொருவருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும். அதைத்தான் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா நமக்கு போதித்து வழிகாட்டி இருக்கிறார் என்று கூறினார்.

நிகழ்ச்சியின் நிறைவில் மனுஜோதி ஆசிரமத்தின் செயலாளர் ராகவ ரெட்டி அவர்கள் நன்றியுரை கூறினார். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள் அடங்கிய புத்தகங்கள் மற்றும் சி.டிக்கள் வழங்கப்பட்டது.

✡✡✡✡✡✡✡

Filed under: பிரமுகர்களின் உரை