தமிழ் | తెలుగు

» ஆன்மீக கருத்து » மனிதனின் பரிணாம வளர்ச்சி

மனிதனின் பரிணாம வளர்ச்சி

மனிதனாக பிறந்தவன் படிப்படியாக முன்னேற வேண்டும். மனிதனின் பரிணாம வளர்ச்சியும் படிப்படியானது. இந்த படிப்படியான வளர்ச்சியை அடையவே கொலு வைக்கிறார்கள். கொலு என்றால் ‘அழகு’ என்று பொருள். மேடை அமைத்து 9 படிகள் அமைத்து கொலு வைக்கப்படுகிறது.

முதல் படியில் புல், செடி, கொடி ஆகிய தாவர பொம்மைகள் வைக்கப்படுகிறது. இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையை இது குறிக்கிறது. இரண்டாம் படியில் சங்கினால் செய்த பொம்மைகள் வைக்கப்படுகிறது. நத்தை போல மெதுவாக நிதானமாக சென்று உயர் இடத்தை பிடிக்க வேண்டுமென்று உறுதி கொள்வதே இதன் பொருளாகும். மூன்றாம் படியில் எறும்பு, கரையான் புற்று பொம்மைகள் வைக்கப்படுகிறது. எறும்பைப்போல சுறுசுறுப்பு, எத்தனை முறை தகர்த்தாலும் கரையான் திரும்பத் திரும்ப புற்றைக் கட்டுவது போன்ற திடமனப்பான்மை வேண்டி இந்த பொம்மைகள் அடுக்கப்படுகிறது.

நான்காம் படியில் நண்டு, வண்டு பொம்மைகள் இடம் பெறுகிறது. இவற்றின் குணம் ஆழமாக ஊடுருவி பார்ப்பது, எந்த விஷயத்தையும் ஆழமாக சிந்தித்து செயலாற்றுவதை இந்த பொம்மைகள் குறிக்கும். ஐந்தாம் படியில் மிருகங்கள், பறவைகள் பொம்மைகள் வைக்கப்படுகிறது. மிருக குணத்தை விட வேண்டும். பறவை போல் கூடி வாழ வேண்டும் என்பதே இதன் பொருளாகும். ஆறாம் படியில் மனித பொம்மைகள் வைக்கப்படுகிறது. வாழ்க்கையில் மேற்கண்ட ஐந்து படிகளில் உள்ளது போன்ற குணங்களை கடைபிடித்தால் முழு மனிதன் என்ற அந்தஸ்தைப் பெறலாம் என்பது இதன் தத்துவமாகும்.

ஏழாம் படியில் முனிவர்கள், மகான்களின் பொம்மைகள் வைக்கப்படுகிறது. மனிதன் சத்திய மார்க்கத்தை கடைப்பிடித்தால் மகான்கள் ஆகலாம் என்பதே இதன் உள்ளர்த்தமாகும். எட்டாம் படியில் தெய்வங்களுக்குகீழ் ஸ்தானத்தில் இருக்கும் தேவர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். மனிதன் முனிவர், மகானாக உயர்வதை இது காட்டுகிறது. ஒன்பதாம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் தங்கள் தேவியரான சரஸ்வதி, லட்சுமி, பார்வதியுடன் இருக்க வேண்டும். உயிர்கள் தங்கள் நிலையை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி தெய்வீக நிலைக்கு வரவேண்டுமென்ற தத்துவத்தை உணர்த்தவே கொலு என்ற ஒன்றே உருவானது.

மனிதனின் பூரண வளர்ச்சியைப் பற்றி விவிலியத்தில் இரகசியமாக கூறப்பட்டுள்ளது. இதை நமக்கு ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா விளக்கிக் கூறியுள்ளார். இறைவன் எவ்வாறு சிருஷ்டித்தார் என்பதைப் பற்றி விவிலியம் கூறுகிறது. முதலாவதாக வெளிச்சம் உண்டாகக்கடவது என்று இறைவன் கூறினார். அப்பொழுது வெளிச்சம் தோன்றியது. இறைவன் வெளிச்சத்தை அந்தகாரத்திலிருந்து பிரித்தார். சாயங்காலமும், விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று. மனிதன் கர்ம பாவம் என்ற இருளில் மூழ்கியிருக்கிறான். ஒருநாள் இறைவனின் சத்தத்தைக் கேட்கிறான். அதுதான் வெளிச்சமாகும். அம் மனிதனின் மனதிலிருக்கும் இருள் அகன்று விடுகிறது. இறைவன் அவன் மனதில் குடிகொள்ளுகிறார். அதுவே வெளிச்சம் தோன்றுவதாகும்.

நாம் பூமியிலிருக்கிறபடியால் மாலையும், விடியற்காலமும் இரவு என்று கூறுகிறோம். ஆனால் இறைவனின் கணக்குப்படி மாலையும் விடிற்காலமும் முடிந்தால் மனிதனின் பரிணாம வளர்ச்சி ஒரு பகல் என்று அர்த்தமாகும். ஏன்? இறைவன் ஜோதி சொரூபமானார். அவர் மனிதர்களுக்காக கீழே இறங்கி வந்து மறுபடியும் மேலே செல்வது மாலை நேரமாகும். மறுபடியுமாக அவர் காலையில் திரும்பி இறங்கி வருகிறார். அது பல ஆயிரக்கணக்கான வருடங்களாகும். ஆனால் இறைவனின் பார்வையில் அது ஒரு பகல் என்று அழைக்கப்படுகிறது. அடுத்ததாக இறைவன் தண்ணீரை பிரிக்க ஒரு திரை அல்லது பிளவை சிருஷ்டித்தார். இந்த திரை தண்ணீரின் நடுவில் ஏற்படுத்தப்பட்டது. இதைத்தான் நாம் ஆகாயம் என்று அழைக்கிறோம். ஆகாயத்தின்கீழ் பாதி தண்ணீரும், ஆகாயத்தின் மேலே பாதி தண்ணீரும் சேர்க்கப்பட்டது.

ஒரு மனிதனுக்கு ஆவி, ஆத்மா, சரீரம் இருக்கிறது. இந்த சரீரத்திலேயே இரண்டு சரீரம் இருக்கிறது. ஒன்று ஐம்புலன்களையுடைய சரீரம், இன்னொன்று ‘நவானிதேஹி’ என்று அழைக்கப்படுகின்ற ஒளிமயமான சரீரமாகும். எவ்வாறு தண்ணீர்களுக்கு மத்தியில் பிளவாக ஆகாயம் இருக்கிறதோ, அதேவிதமாக இந்த இரண்டு சரீரங்களுக்குமிடையே ஒரு பிளவு இருக்கிறது. இந்தப் பிளவு என்பது இரண்டு சரீரங்களையும் பிரிக்கும் இறைவனின் சத்தியம் என்ற பட்டயமாகும். ஐம்புலன்களை அனுபவிக்க வேண்டும் என்று ஒன்று கூறுகிறது. நவானிதேஹியோ ஆன்மீக காரியங்களின்பால் செல்ல வேண்டுமென்று கூறுகிறது. இத்தகைய போராட்டம் ஒவ்வொரு ஆன்மீகவாதிக்கும் ஏற்படும்.

மூன்றாம் நாள் இறைவன் ஆகாயத்தின் கீழிருக்கும் தண்ணீர் ஒன்றாக சேரட்டும் என்றார். அதற்கு சமுத்திரம் என்று பேரிட்டார். வெட்டாந்தரைக்கு பூமி என்று பேரிட்டார். பிரிவினை என்பது தேவையானது. ஆன்மீகவாதிகள் லௌகீக வாழ்க்கையில் மூழ்கி அதை அனுபவிப்பவர்களுடன் சேர்ந்து வாழ முடியாது. அத்துடன் மூன்றாம் நாளன்று செடி, கொடி, புல், பூண்டு, மரங்களையும் சிருஷ்டித்தார். தண்ணீர் பிரிந்து வெட்டாந்தரையில் ஒளி பட்ட பின்னரே செடி கொடிகள், புல், பூண்டுகள் முளைத்தன. அதைப் போலவே நாமும் பிரிந்து வந்த பின்னர் தான் இறைவன் என்று வித்து நம்முடைய மனதில் விதைக்கப்பட்டு முளைக்கிறது.

நான்காம் நாள் இறைவன் சூரியன், சந்திரன், மற்றும் நட்சத்திரங்களை பூமிக்கு ஒளி கொடுப்பதற்காக சிருஷ்டித்தார். காலத்தை இச்சுடர்களின் மூலமாக கணக்கிடுகிறோம். அதற்கு முன்பாக நாள், வாரம், மாதம், வருடம் என்ற கணக்கே இல்லை. இறைவனை அடைந்த பின்னர் அந்த கால கணக்கு ஒழிந்து விடுகிறது. அதை பூமியிலிருக்கும்போதே நடைமுறையில் கடைபிடிக்க வேண்டும். நல்ல நாள், கரிநாள், கெட்ட நேரம், அபசகுனம், ராகு, கேது, தோஷம் போன்றவை சூரியனுக்கு கீழ் வசிப்பவர்களுக்கு பலிக்கும். இறைவனில் பாகமானவர்களை அவை தாக்குகிறதில்லை. ஐந்தாம் நாள் இறைவன் தண்ணீரில் நீந்துபவையையும், பறக்கும் பறவைகளையும் தண்ணீரிலிருந்து சிருஷ்டித்தார். ஆறாம் நாள் காட்டு மிருகங்கள், ஊரும் பிராணிகள், நாட்டு மிருகங்களை சிருஷ்டித்தார். அத்துடன் தம்முடைய சாயலாக மனிதனையும் சிருஷ்டித்தார்.

அருட்பெருஞ்ஜோதியாகிய இறைவன் ஒரு மனிதனின் மனதில் பிரவேசித்த பின்னர் அவனிடம் இருள் நீங்குகிறது. ஆனால் போராட்டம் துவங்குகிறது. மனதில் ஏற்படும் போராட்டத்தில் நல்ல சக்தி ஜெயிக்க வேண்டுமெனில் அவன் லௌகீகமாக வாழும் மனிதர்களிடமிருந்து பிரிந்து, பின்னர் இறைவன் எழுதிய வேதம் அவன் மனதில் விதைக்கப்படுகிறது. அதன்பின்னர் ஐம்புலன்களைப் பின்பற்றி மிருகங்களைப்போல வாழாமல், இறை சிந்தையுடையவனாக வாழ்ந்தால் அவன் மனிதனாகிறான் என்பதை ‘சிருஷ்டிப்பு’ என்ற இறைவனின் படைப்பிலிருந்து அறிந்துகொள்ளுகிறோம்.

✡✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீக கருத்து