தமிழ் | తెలుగు

» ஆன்மீக கருத்து » மதங்களை இணைத்த மகாகவி

மதங்களை இணைத்த மகாகவி

கடவுள் வாழ்த்து பாடி, எல்லா கடவுளும் ஒரே கடவுள் என்று ஒருவர் புரியவைத்தார். அவர் யார்? செய்குதம்பிப்பாவலர். அவர் ஒரு இஸ்லாமியர், நூறு விஷயங்களை ஒருங்கே புரியும் திறனாளராவார். அவரிடம் கடவுள் வாழ்த்து பாடச் சொன்னார்கள். சிரமாறு உடையான் என்று ஆரம்பித்து பாடினார். எந்த இறைவனை குறித்து பாடினீர்கள்? என்று கேட்டதற்கு, “எந்த இறைவனையும் குறிக்கும் எல்லாரையும் குறித்து” என்றார் பாவலர். அதற்கு விளக்கம் கேட்டனர். “விநாயகர் மாறுபாடான சிரம் உடையவர். எனவே சிரம்மாறு உடையார். முருகன் ஆறு சிரம் உடையவர். எனவே சிரம்+ஆறு+உடையவர். சிவனோ, கங்கை ஆறு தலைமேல் உடையவார். எனவே சிரம் ஆறு அதாவது கங்கையை தலைமேல் உடையவர். திருமாலோ, காவிரி, கொள்ளிடம் நடுவே ஆற்றில் தலைவைத்து (சிரம்) படுத்திருக்கும் ஸ்ரீரங்கநாதர். அவரும் சிரம்+ஆறு+உடையவர்” என்றார். உடனே அனைவரும் கைதட்டினார்கள்.

இஸ்லாமியராகிய நீங்கள் இந்து கடவுளைப் பற்றி கூறினால் போதுமா? இது இஸ்லாமிய கடவுள் வாழ்த்து இல்லையா? என்று கேட்டபோது “எல்லாம் ஒன்றுதான். அல்லாஹ் என்ற பேரருளாளன் உலகுக்கு தலையாய வழியாகிய இஸ்லாத்தை உடையவன் என்ற பொருள் கொண்டாலும் பொருந்துமே” என்றார். சாமர்த்தியம் மட்டுமல்ல, சத்தியமும் அதுதான். இப்படி மனங்களை இணைத்த மகாகவியாவார் செய்குதம்பிப்பாவலர்.

✡✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீக கருத்து