தமிழ் | తెలుగు

» ஆன்மீக கருத்து » பொறாமை

பொறாமை

எல்லாவற்றின் மூலமும் இறைவனை பூரணமாக உணர்ந்தவர்கள் மிகச்சிலரே. பெரிய மீசையையும், தாடியையும் வளர்த்துக்கொண்டு மக்களிடம், “நீங்கள் இறைவனுக்கு சமமானவர்கள். இறந்தவுடன் விழித்தெழுந்து இறைவனாகிவிடுவீர்கள்” என்று கூறும் போலி மஹாத்மாக்களை நாம் காண்கிறோம். அவர்களெல்லாம் மஹாத்மாக்களல்ல. உண்மையாக சொல்லப்போனால் துராத்மாக்கள். அவர்கள் கிருஷ்ணரின் நிலையினை ஆக்கிரமித்து, அவருடன் ஐக்கியமாக நினைக்கும் அளவிற்கு, கடுமையான இதயம் படைத்தவர்கள். அலுவலகத்திலுள்ள பணியாளன் தனது எஜமானரின் பதவியை பிடிக்க நினைத்தால், அதை எஜமானர் விரும்புவாரா? அதைப்போலவே இறைவனாக மாற நினைக்கும் உயிர்வாழிகள் அவரால் விரும்பப்படுவதில்லை. இருப்பினும் இறைவனாக மாறுவதற்கான சிலரது வீண் முயற்சிகளை அவர் விரும்புவதில்லை. இதுபோன்று முயற்சி செய்பவர்கள் பகவத்கீதையில் த்வேஷ்ட அதாவது பொறாமையுள்ளவர்கள் என்று விவரிக்கப்படுகிறார்கள்.

       தான் அஹம் த்விஷத: க்ரூரான் ஸம்ஸாரேஷு நராதமான்

       க்ஷிபாம்யஜஸ்ரம் அஷுபான் ஆஸுரீஷ்வ் ஏவ யோனிஷு

பொறாமையுடன் கருணையின்றி இருக்கும் இத்தகைய கடைநிலை மனிதர்களை ஜடவாழ்வு என்னும் கடலில் பல்வேறு அசுர இனங்களுக்குள் நான் நிரந்தரமாக தள்ளுகிறேன். இறைவனின் நிலைமீது பொறாமை கொண்டவர்கள் நரகத்தனமான சூழ்நிலைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதற்கு சான்றாக ஒருவன் வாழ்ந்ததாக விவிலியத்தில் கூறப்பட்டுள்ளது. லூசிபர் என்பவன் இறைவனின் மெய்க்காப்பாளன். அத்துடன் இறைவனின் சிங்காசனத்தை பாதுகாக்கும் பொறுப்பும், பூமியை பார்த்துக்கொள்ளும் பொறுப்பும் அவனுக்கு கொடுக்கப்பட்டது. அவன் மெய்க்காப்பாளனாக இருந்ததினால் அவன் எல்லா மறைபொருளைக் குறித்த அறிவுடையவனாகவும் இருந்தான்.

ஆறு யுகங்களின் முடிவில் ஒரு மனிதன் இறைவனின் சிங்காசனத்தில் அமருவதை அவன் அறிந்துகொண்டான். அந்த மனிதன்தான் இறைவனின் அவதாரம் என்பதை அவன் அறியவில்லை. உடனே அவன் மனதில் பொறாமை எழுந்தது. ஒரு மனிதன் இறைவனின் சிங்காசனத்தில் உட்காருவதற்காகவா நான் இத்தனை நாட்கள் சிங்காசனத்தைப் பாதுகாத்தேன். மனிதன் மண்ணில் தோன்றியவன். நான் நெருப்பில் தோன்றியவன். திருக்குர்-ஆன் அத்தியாயம் 5, சூரா 15:28-33: மேலும், உமதிரட்சகன் மலக்குகளிடம், “நிச்சயமாக நான், மனிதனை தட்டினால் சப்தம் வரக்கூடிய, மாற்றமடைந்த கறுப்பு களிமண்ணிலிருந்து படைக்கப்போகிறேன்”. பின்னர், “அவரை நான் சரியாக உருவாக்கி, அவரில் என் ஆவியிலிருந்தும் நான் ஊதியபோது, அவருக்கு சிரம் பணிந்தவர்களாக விழுங்கள்என்று மலக்குகளிடம் அல்லாஹ் கூறினார். உடனே மலக்குகள் அவர்கள் ஒவ்வொருவரும் ஒருமித்து அவருக்கு மரியாதை செலுத்த சிரம் பணிந்தார்கள். இப்லீஸைத் தவிர; சிரம்பணிந்தவர்களுடன் ஆகுவதிலிருந்து அவன் விலகிக் கொண்டான். அதற்கு அல்லாஹ்இப்லீஸே! சிரம்பணிந்தோருடன் நீயும் ஆகாதிருக்க உனக்கு என்ன நேர்ந்தது?என்று கேட்டான். அதற்கவன், “தட்டினால் சப்தம் கொடுக்கக்கூடிய மாற்றமடைந்த கறுப்புக் களிமண்ணால் நீ அவரை சிருஷ்டித்த ஒரு மனிதனுக்கு, நெருப்பால் படைக்கப்பட்ட நான் சிரம் பணிபவனாக இருப்பதற்கில்லை என்று கூறினான். நானே அந்த சிம்மாசனத்தில் அமருவேன் என்று அவன் நினைத்தான். அவன் அவ்வாறு மனதில் நினைத்தவுடன் இறைவன் அவனை பதவியிறக்கம் செய்து நரகத்தை சிருஷ்டித்து அதில் அவனை தள்ளினார். நரகத்தில் தள்ளப்பட்ட பின்னர் அவன் சும்மா இருந்தானா? இறைவனின் புதிய சிருஷ்டிப்பான மனிதர்களின் மனதில் பொறாமையை விதைக்கிறான். ஏதேன் தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும் வசித்து வந்தபோது, அவர்கள் இருவருக்கும் இறைவன் ஒரு கட்டளையை விதித்தார். தோட்டத்தில் இருக்கும் எல்லா பழங்களையும் புசிக்கலாம். ஆனால் தோட்டத்தின் நடுவில் இருக்கும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் பழத்தை புசிக்க வேண்டாம் என்று இறைவன் கட்டளையிட்டார். லூசிபர், கலியன், இப்லீஸ் என்று அழைக்கப்படும் அவன் அவர்களிடம் சென்று, இறைவன் உங்களிடம் இந்த மரத்தின் கனியை ஏன் புசிக்க வேண்டாம் என கூறினார் என்று தெரியுமா? நீங்கள் அந்த மரத்தின் கனியைப் புசித்தால் நீங்களும் இறைவனைப் போலாகி விடுவீர்கள் என்று இறைவனுக்கு உங்கள்மேல் பொறாமை. எனவேதான் நீங்கள் இறைவனாக கூடாது என்பதற்காக இந்த கட்டளையை விதித்துள்ளார்” என்று கூறி மனிதர்களை ஏமாற்றினான். அதினால் இப்பொழுது மனித குலம் தவிக்கின்றது.

கலியன் பொறாமையினால் நரகத்தில் தள்ளப்பட்டான். அத்துடன் மனித குலத்திற்கு நாசத்தையும் ஏற்படுத்தினான். பொறாமை என்ற தீய பண்பை பற்றி வள்ளுவன் பத்து குறள்களை அழுக்காறாமை என்ற தலைப்பில் வடித்துள்ளார்.

அழுக்காறு எனவொரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்து விடும் என்று கூறப்படும் குறளின் பொருளாவது, பொறாமை குணம் தன்னை உடையவனின் செல்வ வளத்தைக் கெடுப்பதோடு, கொடிய நரகத்திலும் அமிழ்த்தி விடும். எனவேதான் கலியன், லூசிபர், இப்லீஸ் என்பவன் இந்த குறளுக்கேற்ப நரகத்தை அடைந்தான்.

ஸ்ரீமத் பகவத் கீதையில் 9-வது அத்தியாயத்தில் தீய எண்ணத்தினின்றும், பொறாமையினின்றும் விடுபட்ட உனக்கு இராஜரிக இரகசியத்தை கற்பிக்கிறேன் என்று கிருஷ்ணர் அர்ச்சுனனிடம் கூறுகிறார். ஆக இறைவனை அடைய வேண்டுமெனில், பொறாமை என்ற குணம் நம்மிடம் அறவே இருக்கக்கூடாது.

“பொறாமை பாதாளத்தைப் போல் கொடியதாயிருக்கிறது” என்றும் “பொறாமை எலும்புருக்கி” என்றும் விவிலியம் கூறுகிறது. அதாவது ஒருவன் பொறாமை குணத்தை உடையவனாக இருந்தால் அவன் உடலானது மெலிந்துவிடும் என்று விவிலியத்தில் கூறப்பட்டுள்ளது. பொறாமை ஒருவனிடம் இருந்தால் அது வாழ்க்கையில் முன்னேற விடாமல் தடுக்கும் தடங்கலாக இருக்கிறது. அத்துடன் ஒருவனின் ஆரோக்கியத்திற்கு மிகவும் கேடு உண்டாக்குகிறது. எவ்வாறென்றால் அது ஈரலில் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. எவ்வாறு ரோஜா மலரைப் பறிக்கும்போது முள்ளானது நம்மை குத்துகிறதோ அதைப்போலவே பொறாமை குணம் நம்மிடமிருந்தால், நம்மிடம் பழகுகிற நபர்களையும் அது குத்துகிறது.

நம்மை அறியாமலேயே நாம் மற்றவர்களையும் காயப்படுத்துகிறோம். மேலும் பொறாமை என்ற குணம் அடுத்தவர் மனதையும் புண்படுத்துகிறது, நம்மையும் அழிக்கிறது. அதினால் பொறாமை என்ற குணத்தை நம்மிடமிருந்து எடுத்துப்போட வேண்டும் என்று ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கூறுகிறார். எனவே பொறாமையை என்னும் கொடியவனை நம்மிடமிருந்து நீக்கி, அன்பாக வாழ்ந்து ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவை பின்பற்றுவோம்!

✡✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீக கருத்து