தமிழ் | తెలుగు

» பத்திரிகை செய்திகள் » புரந்தரதாஸர்

புரந்தரதாஸர்

ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!

நாரத முனிவரை உலகிற்கு அனுப்பிய இறைவன்தான் திருவுள்ளம் கொண்டிருந்தால் முதலிலேயே நல்வாழ்வு வாழும்படி பணிந்திருக்க முடியாதா? முடியும். ஆனால் ஏன் அப்படி செய்யவில்லை? “மனிதன்” மனிதன் செய்யக்கூடிய தவறுகளையெல்லாம் செய்தாலும் பின்பு திருந்தி தெய்வ வாழ்க்கையைப் பெறமுடியும்”என்பதை உலகிற்கு காட்டவே இப்படிச் செய்த முயற்சிகள் பல. அர்ஜுனனுக்கும் உத்தவருக்கும் கீதோபதேசம் செய்ததுபோல ரகுநாதனுக்கும் போதிக்கின்ற முறையாலே நம் எல்லோர்க்கும் போதிக்கின்றான் இறைவன்.

ஒருநாள் காலை, வேமன்னபுரி வீதிகளில் ஒரு கிழவர், “ரகுநாதன் என்ற வட்டி வியாபாரியின் வீடு எது?” என்று கேட்டுக்கொண்டே வந்தார். தம்மை விசாரித்தவர்களிடம், “கொஞ்சம் பண உதவி வேண்டும்”என்றார். “ஐயோ பாவம்! அவன் கொடையாளி என்று உமக்கு யார் சொன்னார்கள்? வேறு யாரையாவது பார்த்தாலும் பயன் உண்டு” என்று சொன்னார் சிலர். “அவனிடமா?” என்று பரிகசித்தனர் சிலர். அதை ஏற்காமல் மெல்ல மெல்ல நடந்து ரகுநாதனின் வீட்டை அடைந்தார் முதியவர். அவரது பஞ்சைக் கோலம் கண்ட ரகுநாதன், “இந்த பிராமணனிடம் என்ன இருக்கப்போகிறது அடகு வைக்க?”என்று எண்ணி, “யாரைய்யா நீர், அசாத்ய வேலை இருக்கிறது, வந்த விஷயத்தை சுருக்கமாகச் சொல்லும்” என்றான்.

கிழவர், “ஏதேது ஆரம்பமே சுப சூசகமாகக் காணோமே” என்று நினைத்து, மூட்டையை அவிழ்த்து, எலுமிச்சம்பழம் ஒன்றைக் கையிலெடுத்து “சதமானம் பவதி” என்று பஞ்சாதி சொல்லி, தலையில் அட்சதையைப் போட்டு, எலுமிச்சம்பழத்தை கையிலே கொடுத்தார். ரகுநாதன் அதை கையில் வாங்கியபின், “ஓகோ! வியாபாரம் என்று நினைத்தேன். யாசகமா? சரிதான்” என்று உறுமியவனாய் பேரேட்டுப் புத்தகத்தில் கண்களை ஓட்டினான்.

கிழவர் மிகவும் நயமான குரலில், “ஸ்வாமி! நீங்கள் மகா பிரபு. எனக்கு ஒரே ஒரு மகன். விவாகம் செய்விக்க வேண்டும். ஓர் ஆயிரம் வராகன் தானமாக கொடுத்தால் ஒரு குடும்பத்தைக் காத்த புண்ணியம் உண்டு. கிருபை செய்ய வேண்டும்”என்று கூழை கும்பிடு போட்டார். சீறி எழுந்தான் ரகுநாதன். “ஐயா! உமக்கு உண்மை தெரியாது. இந்தத் தொழிலே தரித்திரத்தொழில், எனக்கு உணவு கிடைப்பதே துர்லபம். குல கௌரவத்தைக் காப்பாற்ற இந்த வீட்டில் இருக்கிறேன். பணமாவது! காசாவது! போம்!” என்று கூறினான்.

கிழவர் அசைவதாயில்லை. மேலும் நகர்ந்து நிமிர்ந்து உட்கார்ந்தார். “அப்பா! நம்முடைய நாடு கொடை வள்ளல்கள் தோன்றிய நாடு. மகாபலி என்ன? சிபி சக்கரவர்த்தி என்ன? கர்ணன் என்ன? இப்படி எத்தனையோ மகான்கள் பிறந்த நாடு” என்று மிகவும் அமைதியாக தானத்தின் பயனைப்பற்றிப் பேசலானார். ரகுநாதனோ, “ஏன் ஐயா! கிழவராயிற்றே என்று பொறுத்தேன். முடிந்ததோ? இன்னும் இருக்கிறதோ? போதும் உம் உபதேசம். இதை யார் கேட்கிறார்களோ அவர்களிடம் சொல்லும். என் பொழுதெல்லாம் வீணாகிவிட்டது. என்னிடமிருந்து ஒரு செப்புக்காசும் கிடைக்காது, எழுந்திரும்” என்றான்.

கிழவரோ அசட்டுச் சிரிப்புடன், “ஸ்வாமி! இப்படிப் பேசலாமா! ”என்று மேலும் தொடங்க கோபம் மிகுந்த ரகுநாதன் கிழவரைக் கழுத்திலே கையைக் கொடுத்து தள்ளினான். கிழவர் வெகுண்டு அவனைக் கட்டிப் பிடித்தார் இருவரும் கீழே உருண்டனர். ரகுநாதனது குடுமி அவிழ்ந்தது. துணிகள் அழுக்காயின. “அடடா! பிச்சை எடுக்கும் கிழத்துக்கு இவ்வளவு பலமா?” என்று வியந்து உதறிக்கொண்டு, தன் நகைக்கடையைத் திறக்க ஓடினான் ரகுநாதன். இங்கே கிழவர் சற்றே அயர்ந்திருந்து, நல்ல வியாபாரி என்று எண்ணி, “இவன் மனைவியின் குணம் எப்படியோ? பார்ப்போம்”என்று வீட்டிற்குள் நுழைந்தார்.

– தொடரும்…

✡✡✡✡✡✡✡

Filed under: பத்திரிகை செய்திகள்