தமிழ் | తెలుగు

» ஆன்மீக கதைகள் » புத்திசாலித்தனம்

புத்திசாலித்தனம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ லஹரி கிருஷ்ணாய!

இறையே அபயம்! யாவும் இறையின் உபயம்!

பல்லாயிரம் கோடி கோடி அண்டங்கள்.
எல்லா பொருளிலும் ஓர் எல்லையில்லா வெளி வானிலே
நில்லாது சுழன்றோட நியமம் செய்தருள் நாயகன்
சொல்லாலும் மனத்தாலும் தொடரொணாப் பெருஞ்சோதி
யான வல்ல பேரிறைவன் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா
கருணையால் இந்த உலகை படைத்து நம்மை
வாழ வைக்கிறார். உலகைக் காத்தருளும் பேரருள்
எல்லா நாடுகளிலும் தான் தோன்றி (ஸ்வயம்) வழிநடத்துகிறது.

அப்படி ஜிம்பாப்வே நாட்டில் லோங்கோ எனும் பெயரில் மறை நாயகன் தோன்றினார். அந்த நாட்டின் காட்டின் நடுவே ஒரு சிறு கிராமம். காட்டிலிருந்து வந்த கொடூரமான சிங்கங்கள் பலரைக் கொன்று விட கிராமத்து மக்கள் பயந்து ஊரை விட்டே ஓடி விட்டனர். ஒருநாள் காலை ஊரை விட்டு ஓடும் அவசரத்தில் திமிதி என்ற பார்வையற்ற கிழவனும் பண்டா என்ற சோம்பேறி இளைஞனும் தனியே விடப்பட்டனர். திமிதி வெளிப்பார்வையற்றவனாயினும் உள்ளொளியாம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா (லோங்கோ)வை ஆராதித்து வருபவன். உமது சித்தப்படி நடக்கும் என்று எப்போதும் இறை நாமத்தை எண்ணி வாழ்பவன். காலையில் எழுந்து ஊர் காலியானதைத் தெரிந்துகொண்ட திமிதி மெதுவாக நடந்து செல்கையில் தூங்கியெழுந்து வந்த பண்டா, பெரியவரே என்ன நடந்தது எல்லோரும் எங்கு போய் விட்டார்கள் என்று தவிப்புடன் கேட்டான். நானும் தனியாக விடப்பட்டேன். இனி நாமிருவரும்; ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசையாக இருப்போம். கிராமத்தார் எங்கு போய்விட்டார்கள் என்று இனி எப்படி தேடிக்கண்டு பிடிப்பது என்று பெரியவர் அங்கலாய்க்கிறார். அதற்கு பண்டா சிங்கங்கள் நம்மைக் கொன்று விடக்கூடாது. கிராமத்தில் இருந்தால்தானே அவை நம்மை பிடிக்கும், எனவே காட்டுக்குள் ஓடி விடுவோம் என்றான்.
சரியென்று சொல்லி இருவரும் கிராமத்தை விட்டு சென்று, அடர்ந்த காட்டுக்குள் சென்றனர். அங்கு ஓர் அகலமான பாப்பாவ் மரத்தைத் தேர்ந்தெடுத்து அதன்மேல் பரண் அமைத்து குடிசை ஒன்றை அமைத்தனர். திமிதி பார்வையற்றவன் என்றாலும் மீன் பிடிப்பது, பொறிகள் அமைத்து பறவைகள், சிறிய மிருகங்கள் ஆகியவற்றை பிடிப்பது போன்ற வித்தைகளை நன்கு அறிந்தவன். அவற்றை பண்டாவுக்கு கற்பித்து திறமை மிக்கவனாக மாற்றினான். இருவரும் பகலில் காட்டுக்குள் சென்று வேட்டையாடுவதும், இரவில் தங்கள் பரண் வீட்டிற்கு வந்து பசியாறி இளைப்பாறுவதுமாக சில வருடங்கள் கழிந்தன.
ஒரு நாள் திமிதி பண்டாவிடம், நீயும் வளர்ந்து வாலிபம் அடைந்து விட்டாய். உனக்கு ஒரு மணப் பெண் தேவை. நான் இறந்து விட்டால் நீ துணையற்றவனாகி விடுவாய். எனவே நீ மணமுடித்து கொள்வது நல்லது என்று கூறினான். அதற்கு பண்டா ஒத்துக்கொண்டான். ஆனால் எங்கே போய் எனக்கு பெண் தேடுவது? என்றான் பண்டா. இங்கிருந்து நேர்கிழக்கே இரண்டு நாட்கள் நடந்து சென்றால் அங்குள்ள பெரிய ஏரியின் கரையில் ஒரு கிராமம் இருப்பது பற்றி என் தந்தை அடிக்கடி கூறுவார். மணமுடித்தால் அந்த கிராமத்தில் மணமுடிக்க வேண்டும். அங்குள்ள பெண்கள் வீரமிக்கவர்கள். கடினமான வேலை செய்பவர்கள் என்று கூறுவார். பெண்ணின் தனித்தன்மை என்னவென்றால் ஆணுக்கு பெண் சற்றும் சளைத்தவள் அல்ல. படிப்போர் சிந்திக்கட்டும். திமிதி ஒரேயடியாக புகழ அதைக் கேட்ட பண்டா சரி அங்கேயே போய் பெண் கேட்போம் என்றான். அடுத்த நாள் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு இருவரும் கிழக்கு நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.
காட்டுவழியில் செல்கையில் முதியவர் கல் போன்று ஏதோ ஒன்றை மிதிக்க பண்டாவிடம் தான் மிதித்தது என்ன என்று கேட்டார். அது ஒரு ஆமை என்று பண்டா கூற அதைப் பிடித்து வைத்துக்கொள். ஒரு நேரம் உதவியாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது என்றான். அடுத்த நாள் அது போலவே கட்டை போன்ற ஒன்றின்மீது காலை வைத்து இது என்ன? என்று பார்வையற்ற கிழவன் இளைஞனிடம் கேட்டான். அது யாரோ வேட்டைக்காரன் தவறி விட்டுச் சென்ற துப்பாக்கி என்று பண்டா பதில் சொல்ல, அது தேவையாக இருக்கும் ஒரு நேரம், எனவே அதையும் எடுத்து வைத்துக்கொள் என்றான். பெரியவர் கூறுவதில் ஏதோ அர்த்தம் இருக்கும். போக போகத்தான் அது பற்றித் தெரியும் என்று எண்ணியவாறு பண்டா துப்பாக்கியை பத்திரப்படுத்தினான். காட்டு வழியில் வேகமாக நடந்தார்கள். இரண்டாம் நாள் ஏரிக்கரையை அடைந்தார்கள். கரையின் ஒருபுறம் அழகான குக்கிராமத்தைப் பார்த்து பண்டா உங்கள் தந்தை விவரித்த கிராமம் இதுவாகத்தான் இருக்கும். நாம் போய் அவர்களிடம் பேசலாம் என்று கூறி கிராமத்தை நோக்கி நடந்தனர்.
கிராமத்தின் அருகே ஏரிக்கரையில் துணி துவைத்துக்கொண்டிருந்த பெண்களிடம் பேச ஆரம்பித்தான் திமிதி. உங்கள் கிராமத்தின் பெயர் என்ன? நாங்கள் வெகு தூரத்திலிருந்து வருகிறோம் என்றார். அதற்கு அந்த பெண்கள் எங்கள் ஊர் பெயர் பெண் கிராமம். ஊர் முழுக்க பெண்களே. ஆண்கள் அனைவரையும் சிங்கம் ஒன்று கொன்று விட்டது. அது ஊரில் எந்த ஆணையும் தங்க விடுவதில்லை என்று கூறி அங்கலாய்த்தனர். அந்த சிங்கத்தை எந்த ஆணும் வேட்டையாடவில்லையா? என்று கேட்க சில வீரமுள்ள ஆண்கள் வேட்டையாட வந்தனர். ஆனால் அந்த சிங்கமோ அவர்களை தந்திரமாக ஒழித்து விட்டது என்றனர். சரி நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள் என்று கேட்டனர். என் வளர்ப்பு மகனுக்கு திருமணம் முடிக்க இங்கு வந்தேன். அவனுக்கு ஒரு நல்ல பெண் எடுக்க உங்கள் கிராமத்துக்கு வந்தோம் என்றான் திமிதி. மேலும் எங்களை இந்த கிராமத்தில் தங்க விட்டால் கட்டாயமாக அந்த சிங்கத்தை வேட்டையாடிக் கொன்று விடுவோம் என்றான். அவர்கள் இருவரின் தைரியத்தையும் பாராட்டினர் அந்த பெண்கள். சரி, கிராமத்திற்கு உள்ளே வாருங்கள் என்று அழைத்தனர். கிராமத் தலைவியும் வந்த இருவரிடமும் பேசி அவர்கள் சிங்கங்களுக்கு அஞ்சவில்லை என்பதை அறிந்து நீங்கள் தங்கலாம். ஆனால் உங்களுக்கு ஏற்பட இருக்கும் விபத்துக்கு நாங்கள் பொறுப்பாளிகள் அல்ல என்று கூறினாள். அவள் கூறுவதை கேட்டு பண்டாவுக்குப் பயம். ஐயா, பெரியவரே நாம் இருட்டுவதற்குள் ஓடிவிட்டால் சிங்கம் நம்மை கொன்று விடாது அல்லவா? அப்புறம் நாம் பிழைத்துக்கொள்வோம் என்றான். ஆனால் கிழவனோ பயப்படாதே, நான் பார்த்துக்கொள்கிறேன் என்றான். இந்த குருட்டுக் கிழவனால் என்ன செய்ய முடியும் என்று கிராமத்துப் பெண்கள் வியந்தனர்.
திமிதியும், பண்டாவும் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட குடிசைக்குச் சென்றனர். திமிதி சிங்கம் வரும் வரை நான் தூங்கப் போகிறேன். வந்தால் என்னை எழுப்பு என்றான். காட்டின் வழியாக நடந்து வந்தபோது பிடித்த ஆமையையும், கண்டெடுத்த துப்பாக்கியையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு கிழவன் குறட்டை விட ஆரம்பித்தான். சற்று நேரத்தில் பலத்த கர்ஜனையுடன் சிங்கம் கிராமத்திற்கு வந்தது. கிராமத்திற்குள் ஆண்கள் இருப்பதை மோப்பம் பிடித்தது. நேராக அவர்கள் தங்கியிருந்த குடிசைக்கு வெளியே வந்து நின்று, என் கிராமத்திலே எனக்கு பயப்படாமல் வந்து தங்கிய முட்டாள் யார்? என்று கோபாவேசத்துடன் கத்தியது. திமிதி எழுந்துகொண்டு அடே, அறிவுகெட்ட சிங்கமே, என்னையா யார் என்று கேட்கிறாய்? முதலில் நீ யாரென்று கூறு என்றான்.
சிங்கத்திற்கு மேலும் கோபம் வந்தது. தன் பேன் படர்ந்த தாடி முடி ஒன்றை பிடுங்கி கதவு இடுக்கு வழியே நீட்டியது. என் தாடி முடியைப் பார்த்து நான் யார் என்று தெரிந்து கொள் என்றது. திமிதியும் இப்போது என் தாடி முடியை பார் என்று கூறி நூல் ஒன்றில் கட்டப்பட்ட ஆமையை கதவுக்கு வெளியே திணித்தான். இவ்வளவு பெரிய தாடி முடி பேன் என்றால் உள்ளே இருப்பவன் பெரிய ராட்சஷனாக இருக்க வேண்டும் என்று நினைத்து சிங்கம் பயந்தது. என்றாலும் நான் ஒன்றும் உன் தாடி முடியைக் கண்டோ, அதிலுள்ள பேனைக் கண்டோ பயப்பட மாட்டேன். என் கர்ஜனையை கேட்டிருக்கிறாயா? என்று கூறி பலமாக கர்ஜித்தது.
புத்திசாலியான திமிதி நீ என்ன கூறினாய்? இதை கர்ஜிப்பு என்றா கூறுவது? எலி கத்தியதைப்போல் அல்லவா இருந்தது. கதவிலுள்ள ஓட்டையில் மறுபடியும் கர்ஜித்தால் என்னால் கேட்க முடியும் என்றான். சிங்கம் கதவின் ஓட்டை வழியாக கர்ஜிக்க வாயை திறக்க திமிதி அந்த ஓட்டை வழியாக துப்பாக்கி முனையை வைத்து சிங்கத்தை சுட்டு வீழ்த்தினான். மறுநாள் பெண் கிராமத்து பெண்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சிங்கத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். தங்களை சிங்கத்திடமிருந்து காப்பாற்றிய திமிதியை கிராமத்தின் தலைவனாக்கினர். பண்டாவுக்கு அதே கிராமத்தில் பெண் எடுத்து மணமுடித்தான் குருட்டு கிழவன் திமிதி. பண்டாவுக்கு வாய்த்த மனைவிக்கு பிறந்த குழந்தைகள் சிங்கத்தை கண்டு பயப்படாத குழந்தைகளாக வளர்ந்தனர். இது ஜிம்பாப்வே தோனா நாடோடிக்கதை.

லஹரி ஓம் தத் ஸத்!

கண்டு எடுத்தோன், சத்திய நகரக்குடிமகன்,
தேவகவி சுவாமிஜி அன்பிற்கரசு

✡✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீக கதைகள்