தமிழ் | తెలుగు

» ஆன்மீக கருத்து » புத்தர் காப்பாற்றிய அன்னப்பறவை

புத்தர் காப்பாற்றிய அன்னப்பறவை

புத்தர் என்று அழைக்கப்பட்ட சித்தார்த்தனின் அத்தை மகன் தேவதத்தன் அவரது வயதை ஒத்தவன். அரண்மனை தோட்டத்தில் இருவரும் இணைந்து விளையாடுவார்கள். ஒருநாள் சித்தார்த்தன் அரண்மனை தோட்டத்தில் இருந்தபோது, அவரது மடியில் ஒரு அன்னப்பறவை வந்து விழுந்தது. அதன்மீது அம்பு தைத்து இரத்தம் வடிந்துகொண்டிருந்தது.

இளகிய மனம் கொண்ட சித்தார்த்தனின் மனம் துடித்தது. அதின் உடலிலிருந்த அம்பை மெதுவாக வெளியே எடுத்து, தனது உடலின்மேல் போர்த்தியிருந்த பட்டுத்துணியை எடுத்து அதில் அன்னத்தை பொதிந்தான். பின் காயத்திற்கு மருந்து தடவி அரண்மனைக்கு அதை எடுத்துச்சென்றான். அப்போது அத்தை மகன் தேவதத்தன் ஓடி வந்தான். அவன் சித்தார்த்தனிடம்: “இது நான் வேட்டையாடிய பறவை, அதை என்னிடம் கொடு” என்று கேட்டான்.

சித்தார்த்தனுக்கு கோபம் வந்தது. பறவை வலியால் துடிக்கிறது என்று கூறிவிட்டு நடந்தான். தேவதத்தனோ அதை தன்னிடம் தருமாறு அடம்பிடித்தான். ஆனால் சித்தார்த்தனோ அதை தான் குணமாக்கப்போவதாக கூறினான். இருவருக்கும் இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின் அவன் தேவதத்தனிடம்: உயிர்களை காயப்படுத்துவது நியாயமல்ல, ஒன்று செய்வோம். இந்த பறவையை நான் கீழே விடுகிறேன். இருவருமே இந்த பறவையை அழைப்போம். அது யாரிடம் செல்லுகிறதோ அவருக்கு பறவை சொந்தம் என்று கூறினான். தேவதத்தனும் அதற்கு ஒப்புக்கொண்டான்.

சித்தார்த்தன் அன்னப்பறவையை கீழே விட்டான். பிறகு தேவதத்தன் பறவையை தன்னிடம் வரும்படி அழைத்தான். ஆனால் பறவை அவனை நெருங்கவில்லை. ஆனால் சித்தார்த்தன் அழைத்ததும் பறவை மெதுவாக அவனது மடியில் அமர்ந்தது. பிறகு சித்தார்த்தன் அதற்கு மருந்திட்டு குணமாக்கி, அதை பறந்து செல்ல அனுமதித்தான். சித்தார்த்தன் அரசன் என்பதால் போர்ப்பயிற்சி பெற்றிருந்தும் போரை விரும்பவில்லை, ஆயுதங்களை தொட விரும்பவில்லை. உயிர் பலி எங்கு நடந்தாலும் அங்கு சென்று பலியிடுதல் பாவகரமான செயல் என்று போதித்தான். பின்னாளில் சித்தார்த்தன்தான் புத்தராக மாறினார்.

புத்தரின் அன்பும், அஹிம்சையும் உலகையே கவர்ந்து அவரது கொள்கைகள் உலகெங்கும் பரவியது. நாமும் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும் என்று எண்ணி மனுஜோதி ஆசிரம தலைவர் தேவாசீர் லாறி ஆசிரமத்தில் ஏராளமான பறவைகளை வளர்த்தார். எந்த பறவைகளையும் அவர்கள் கொல்லுவதில்லை. புத்தரின் கருணை அவரிடமும் இருந்தது. இன்றும் கூட மனுஜோதி ஆசிரமத்தில் மயில், கோழி, புறா, வாத்து, குருவி, கிளிகள் மற்றும் கிண்ணிக் கோழிகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன. மயில்களின் நடனம், குயிலின் கானம், வாத்துக்களின் அன்ன நடை, கிளிகளின் பேச்சு, கோழிகளின் கொக்கரக்கோ சத்தம், புறாக்களின் அணிவகுப்பு அனைத்தையும் மனுஜோதி ஆசிரமத்தில் அமைதியாகவும், ஆனந்தமாகவும் கண்டு களிக்கலாம்.

நீங்களும் ஒருமுறை வாருங்களேன் என்று வாசகர்களை அவைகளும் அன்புடன் அழைக்கிறது.

– தூத்துக்குடி பாலு

✡✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீக கருத்து