தமிழ் | తెలుగు

» ஆன்மீக கட்டுரைகள் » பிள்ளைக்கு தந்தை இறைவன்

பிள்ளைக்கு தந்தை இறைவன்

ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் தன்னை ஒரு சாதாரண மனிதனாக இவ்வுலகத்திற்கு காண்பித்துக்கொண்டாலும், தன்னை நம்பிய உண்மையான பக்தர்களுக்கு தாம் ஒருவரே இறைவன் என்றும், சிருஷ்டி கர்த்தரென்றும் தெரியப்படுத்தினார். 1985-ம் வருடம் மனுஜோதி ஆசிரமத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா தாம் யார் என்பதை இப்பதிவில் தெரியப்படுத்தியதை காணலாம்.

மனுஜோதி ஆசிரமத்தில் இறைவனை அடைவதற்காகவும், ஆன்மீக பயிற்சி பெறுவதற்காகவும், அநேகர் இங்கே வந்து தங்குவதுண்டு. சில பெற்றோர்கள்கூட தங்களுடைய பிள்ளைகளை ஆன்மீக பயிற்சி பெறுவதற்காக கொண்டுவந்து விட்டு செல்வதுண்டு. அவ்விதமாக ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினம் என்ற மாவட்டத்திலுள்ள சிந்தப்பள்ளி என்னுமிடத்தில் மலைவாழ் பகுதியை சார்ந்த ஒரு வாலிபனும் மனுஜோதி ஆசிரமத்தில் தங்கியிருந்தான். அவனுடைய பெயர் இலட்சணா. மலைவாழ் பகுதியில் இருந்து வந்த காரணத்தினால் ஆசிரமத்தில் பனை மரங்கள், மற்ற சோலைவனங்களில் சுற்றி திரிவது அவனது வழக்கமாகும். ஒருநாள் ஒரு கொடிய விமுள்ள பாம்பு அவனை தீண்டியது. இந்த தகவல் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவோ அவனை தன்னுடைய காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

செல்லும் வழியில் நீ இறைவனை தேடு, நீ உன்னுடைய வாயை திறந்து பரமபுருஷர் உனக்காக அளித்த பலியை நினைவுகூர்ந்து இறைவனை துதித்துக்கொண்டு வருமாறு அவனிடம் கூறினார். அவன் ஜீவனுக்காக போராடிக்கொண்டிருந்ததால் அவனால் வாயை திறந்து பேச முடியவில்லை. மருத்துவமனையில் மருத்துவர்கள் அவனை பரிசோதித்து, அவனுடைய இதய துடிப்பு சீராக இல்லை. இன்னும் 2 மணி நேரத்தில் இறந்து விடுவான் என்று மீண்டும் மீண்டும் தகவலை தெரியப்படுத்திக்கொண்டிருந்தனர். மருத்துவர்கள்
ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவிடம் இவன் இறப்பது நிச்சயம். எனவே அவனுடைய பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் தகவல் கூறிவிடுங்கள் என்றார்கள். அரவம் தீண்டிய காரணத்தினால் அவனுடைய வாயிலிருந்து நுரையானது வெளியே வந்துகொண்டிருந்தது. ஆனால் அவனோ, தான் இறந்துவிடுவேன் என்ற பயமே இல்லாமல் அய்யா, அய்யா என்று மட்டும் உச்சரித்துக்கொண்டிருந்தான். அப்பொழுது மருத்துமனையில் வேலை செய்யும் ஒருவர், நீ இறந்து விடப் போகிறாய், உனக்கு பயமே இல்லையா என்றார். அவனோ ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அய்யா எனக்கு இருக்கிறார், நான் இறக்கமாட்டேன் என்று பதிலளித்தான்.

ஒரு மணி நேரம் டாக்டர்களின் தீவிர சிகிச்சைக்குப் பிறகும், இன்னும் 1 மணி நேரத்திற்குள்ளாக அவன் இறந்து விடுவான் என்றனர். அவனுடைய சுவாசத்திற்காக ஆக்ஸிஜன் பொருத்தப்பட்டது. அப்பொழுது ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் அவன் அருகில் சென்று, அவன் இருதயத்தின்மேல் தனது கரங்களை வைத்தார். அவனுடைய இருதயமானது பயங்கர வேகத்துடன் அதாவது வெடித்து விடுவதுபோல் துடிப்பதை உணர்ந்தார். தன்னுடைய கரங்களை அவனுடைய இருதயத்திலிருந்து எடுக்காமல், “மரணமே நீ இந்த இடத்திற்கு வராதேஎன்று கட்டளையிட்டார். சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த மருத்துவர்கள் அவன் சுய நினைவை இழந்து கொண்டிருக்கிறதை கண்டு, அவன் பிழைப்பதற்கான எந்தவிதமான நம்பிக்கையும் இல்லை என்று ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவிடம் கூறினார்கள். அவனது தலையானது சாய்ந்து விட்டது. ஆனால் அவனது உடலோ குளிர்ந்த நிலையிலிருந்து மெதுவாக உஷ்ணமடைகிறது. வியர்வையானது வெளியேற தொடங்கியது. அப்பொழுது ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் மருத்துவர்களிடம் இப்பொழுது ஏன் அவனின் உடலிலிருந்து வியர்வை வருகிறது என்று கேட்டார். அதற்கு மருத்துவர்களோ சில நேரங்களில் இவ்வாறு வியர்வையானது வெளியேறும் என்று பதிலளித்தனர்.

ஆனால் இலட்சணாவோ சுயநினைவில்லாமல் இருக்கின்றான். தனக்காக ஸ்ரீ லஹரி கிருஷ்ணா பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார் என்பதை  மட்டும் அறிந்திருந்தான். சிறிது நேரம் கழித்து ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவிடம் மருத்துவர்கள் அவன் பிழைத்து விடுவான் என நினைக்கிறோம் என்று கூறினர். அவனை கவனித்துக்கொண்டிருந்த செவிலியர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவனது இருதயத்தின்மேல் கை வைத்து பிரார்த்தித்தவுடன் அவன் உடலானது உஷ்ணமடைந்து வியர்வை வந்ததை கண்டதும், இவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். இவர் இவ்வளவு சக்தியுள்ளவர் என்பதை இன்று என் கண்களால் கண்டேன் என்று ஆச்சரியமடைந்தார். அது மாத்திரமல்லாது மனுஜோதி ஆசிரம பக்தர்களிடம் இதை கூறினாள். அவனுக்கு மெதுவாக சுய நினைவு வரதொடங்கியது. அவன் மயக்க நிலையிலிருந்து தெளிவடைந்து கண் விழித்தான். அப்போது ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் அவனிடம் சென்று மருத்துவர்கள் உனக்கு நல்ல மருந்துகள் கொடுத்து உன் உயிரை காப்பாற்றி விட்டார்கள் என்றார். அதற்கு அவன் என்ன பதில் உரைத்தான் என்பது தெரியுமா? நீங்கள் என் இருதயத்தில் உங்களுடைய கரத்தை வைத்தீர்கள், எனக்காக பிரார்த்தனை செய்தீர்கள். பின் நான் ஏன் குணமடைய முடியாது என்று ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவிடம் கூறினான்.

இந்த நிகழ்ச்சியை பற்றி ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் கூறும்போது, அவனது ஊர், பெயர் எனக்கு தெரியாது. அவனுடைய பெற்றோர்கள் யார் என்றும் எனக்கு தெரியாது. ஆனால் என்னை தந்தை அதாவது அய்யா, அய்யா என்று அழைத்தான். இப்பொழுது நான் தந்தையாக வேண்டும். அதுவரை நான் அவனுக்கு தந்தையாக இல்லை. இப்பொழுது தந்தையாகி விட்டேன். அவனது நம்பிக்கையே அவனை பிழைக்க வைத்து விட்டது. மருத்துவர்களின் நம்பிக்கையோ அல்லது என்னுடைய நம்பிக்கையோ அவனைப் பிழைக்க வைக்கவில்லை என்கிறார்.

ஒரு படிப்பறிவு இல்லாத ஒருவன், அவனது நம்பிக்கையினால் இந்த கலியுகத்தில் அவதரித்த ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின்மேல் வைத்த பூரண நம்பிக்கை மறுபடியும் உயிரோடு வர செய்தது. அந்த நம்பிக்கை நம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். அப்போது நாம் நம்முடைய பிரச்சினைகளிலிருந்து காப்பாற்றப்படுவோம் என்பது நிச்சயம். கலியுக மக்களுக்கு அவர் நமக்கு கற்பித்த மந்திரத்தை உச்சரித்து மரணமில்லா பெருவாழ்வை பெற்றுக்கொள்வோம்.

ஸ்ரீமந் நாராயண மந்திரம்

நம்முடைய தேவனாகிய கர்த்தர் லஹரி கிருஷ்ணா ஒருவரே பரிசுத்தர்! பரிசுத்தர்!!பரிசுத்தர்!!! அவர் சதாகாலங்களிலும் ஜீவிக்கிறவர், ஆதிபலி அன்பினால் நம்மை மீட்டுக்கொண்டவர்; அவரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றென்றுமுள்ளது.

———✡✡✡✡✡✡———-

Filed under: ஆன்மீக கட்டுரைகள்