தமிழ் | తెలుగు

» ஆசிரியர் குறிப்பு » பிப்ரவரி 2015

பிப்ரவரி 2015

அன்பார்ந்த ஆன்மீக சகோதர சகோதரிகளே, ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்!

ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்!
பிப்ரவரி மாதம் 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை “ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் மகிமையடைந்த தினவிழா” கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் அநேக பக்தர்கள் கலந்துகொண்டனர். மலேசியாவிலிருந்தும் சில பக்தர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர். அனைவரும் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் மகிமையின் பிரசன்னத்தை உணர்ந்தனர்.

ஜனவரி மாதத்தில் வேலூர், திருப்பதி மற்றும்  வேறு சில இடங்களுக்கும் ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்ற கொள்கையை மக்களுக்கு பிரச்சாரம் செய்வதற்காக என்னுடைய சகோதரன் திரு. D. லியோ பால் மற்றும் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்களில் சிலரும் சென்று கைப்பிரதிகளை விநியோகித்தனர். ஜனவரி மாதத்தில் நானும், என்னுடைய சகோதரனும் ஆன்மீக சேவைக்கான இந்தியாவின் நட்சத்திரம் 2015 என்ற விருதிற்கு தெரிந்தெடுக்கப்பட்டதினால் பெங்களூருக்கு சென்று, முன்னாள் இந்தியப் பிரதமர் தேவகவுடாவிடமிருந்து விருதினைப் பெற்றுக்கொண்டோம்.
 
“திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன” என்பதற்கிணங்க பூலோக வைகுண்டமாகிய மனுஜோதி ஆசிரமத்தில் மகிமையடைந்த தினவிழாவின் போதும், கல்கி ஜெயந்தி விழாவின்போதும் கலப்பு திருமணங்கள் நடைபெறுகின்றன. முற்காலத்தில் திருமணங்கள் எவ்வாறு நடந்தது மற்றும் பெண் பார்க்கும் படலம் எவ்வாறு நடைபெற்றது என்பதை சுவாரஸ்யமாக விவிலியம் கூறுகிறது. தற்காலத்தில் நடப்பதற்கு அது மிகவும் வேறுபட்டதாக அமைந்திருக்கிறது.

அபிராம் என்பவன் இறைவனின் சிநேகிதன் என்ற விருது பெற்றவன், சிறந்த பக்தன், இறை நம்பிக்கைக்கு தகப்பன் என பெயர் பெற்றவன். அவன் தன்னுடைய மகனுக்கு பெண் பார்க்க, தன் வீட்டின் முக்கிய வேலைக்காரனை அனுப்புகிறான். அவன் பெயர் எலியேசர். யாராவது தன் மகனுக்கு பெண் பார்க்க வேலைக்காரனை அனுப்புவார்களா? இல்லை. அபிராம் இந்தியாவிலிருந்தபோது நிம்ரோத் என்ற அரசனின் முக்கிய மந்திரியாக இருந்தவன் எலியேசர். அபிராமை தீயிலிட்டபோது, தீ அவனை சேதப்படுத்தாததால், எலியேசர் அபிராமிடம் உன்னுடைய இறைவன் உன்னை தீயிலிருந்து உன்னை காப்பாற்றியிருக்கிறார், ஆகையால் நான் அவரைத்தான் இனி வணங்குவேன் என்று கூறி அபிராமிற்கு வேலைக்காரனானான். அதினால்தான் அபிராம் எலியேசரை அனுப்பினான்.
எலியேசருக்கு அபிராமின் இறைவன் மீது நம்பிக்கை இருப்பதையும் அபிராம் அறிந்திருந்தான். எலியேசர் அபிராமின் சொந்த ஊருக்குச் சென்று கிணற்றருகே நின்று பிரார்த்தனை செய்கிறான். அபிராமின் இறைவா, இந்த ஊர் பெண்கள் தண்ணீர் எடுக்க இப்பொழுது வருவார்கள். எனக்கு தாகமாக இருக்கிறது, சிறிது தண்ணீர் குடிக்கத் தா என்று நான் கூறும்போது, உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் ஒட்டகங்களுடைய தாகத்தையும் தீர்ப்பேன் என்று எந்த பெண் கூறுகிறாளோ அந்தப் பெண்தான் என் எஜமானுக்கு நீர் பார்த்த பெண் என்று அறிந்துகொள்வேன் என்கிறான்.

எலியேசர் பிரார்த்தனை செய்த வண்ணமாகவே ரெபெக்காள் என்ற அபிராமின் உறவினரின் பெண் குடத்தை சுமந்துகொண்டு வருகிறாள். எலியேசரும் தாகமாயிருக்கிறது என்கிறான். உடனே அந்த பெண் என் ஆண்டவனே, உங்கள் தாகம் தீரும்வரை குடியுங்கள், அதன்பின்பு உங்கள் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் கொடுக்கிறேன் என்று கூறினாள். ஓ! இவள்தான் அபிராமின் மகனுக்கு நியமித்த பெண் என்று எலியேசர் மகிழ்ச்சி அடைந்தான். எலியேசர் செய்த பிரார்த்தனையை நாம் இங்கு சற்று ஆராய்ந்து பார்த்தால் அவன் எத்தகைய பெண்ணை தன் எஜமானனின் மகனுக்கு தேர்வு செய்தான் என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.

முதலாவதாக வழிப்போக்கன் தாகமாயிருக்கிறது என்று கூறியவுடன் என் ஆண்டவனே குடியுங்கள் என்று ரெபெக்காள் கூறினாள். இதிலிருந்து அவளுடைய குடும்பத்தார் நற்குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிந்துகொள்ளலாம். ஏனென்றால் அவள் ஒரு வழிப்போக்கனை மிக மரியாதையுடன் என் ஆண்டவனே என்று அழைக்கிறாள். அத்துடன் அதிதிகளை உபசரிக்கும் குணமும் அவளிடமும் இருந்தது என்பதையும் நாம் அறிய வருகிறோம். “அதிதி தேவோபவ” என்ற சொல்லிற்கிணங்க இந்த பெண் எலியேசரை நன்றாக உபசரித்தாள்.

அடுத்ததாக அவள் மிகவும் ஆரோக்கியமான பெண் என்பதும் புலப்படுகிறது. அக்காலத்தில் கிணற்றினுள்ளே படிகள் அமைக்கப்பட்டிருக்கும். அதில் இறங்கி குடத்தில் தண்ணீர் மொண்டு மேலே ஏறி வரவேண்டும். இவ்வாறு அவள் பத்து ஒட்டகங்களுக்கும் தண்ணீர் கொடுக்க வேண்டுமென்றால் அவளுக்கு காசநோயோ, வேறு எந்த நோயும் இருக்க முடியாது. அவள் திடகாத்திரமான, ஆரோக்கியமான பெண்ணாக இருந்தாள். எலியேசரின் 10 ஒட்டகங்களுக்கும் நீர் கொடுக்க வேண்டுமென்றால் அவள் பிராணிகளை நேசிப்பவளாக இருந்திருக்கிறாள் என்பதையும் நாம் கண்டுகொள்ளலாம்.

பிராணிகளை நேசிப்பவள் சைவ உணவை உண்பவளாகவே இருக்க முடியும், அவள் எவ்வாறு அசைவ உணவை உண்ணுவாள்? ஆக எலியேசர் எவ்வாறு தன் எஜமானின் மகனுக்கு பெண்ணை தேர்ந்தெடுத்தான்? நற்குலத்தைச் சேர்ந்த, தன் வீட்டாரையும் பிறரையும் மதிக்கின்றவளாகவும், அதிதிகளை உபசரிப்பவளாகவும், ஆரோக்கியமானவளாகவும், பிராணிகளின்மேல் கருணை கொண்டவளாகவும், சைவ உணவை உண்பவளாகவும் இருப்பவளை தேர்ந்தெடுத்தான்.

தற்காலத்தில் பெண் சிவப்பாகவும், மெத்த படித்தவளாகவும், நுனிநாக்கில் ஆங்கிலம் புரள வேண்டும், பணக்கார பெண்ணாகவும் இருக்க வேண்டுமென்று மக்கள் விரும்புகின்றனர். ஆனால் எலியேசர் பெண்ணை தேர்ந்தெடுத்ததுபோல இறைவனிடம் அந்த பொறுப்பை கொடுத்துவிட்டால் இறைவன் நல்ல பெண்ணை அருளுவார். 1008 பெண்களை பார்த்து அதில் 1007 பெண்களை நிராகரித்து ஒரு பெண்ணை தேர்வு செய்தால் அது மனிதாபிமான செயலாக இருக்குமா? ஒரே பெண்ணை பார்த்து அவளை நிச்சயிப்பது சிறந்தது என்று வேதங்களின் வாயிலாக அறிகிறோம். மேலும் வெளித்தோற்றமாக பார்க்காமல், இறைவனுக்குப் பயந்து அவர் வழிநடப்பவளான, குணசாலியான பெண்ணை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருப்போம். நாமும் அதை கடைப்பிடித்து மற்றவர்களுக்கும், நம் சமுதாயத்திற்கும் உதாரணமாக வாழ்வோம்!

உலகத் தமிழ் வாசகர்களுக்காக manujothi.com என்ற இணையதளத்திலும் மனுஜோதி இதழை வெளியிட்டு வருகிறோம். இந்த இதழை நீங்களும் படித்து இன்புற்று, மற்றவர்களும் படித்துப் பயன்பெற உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து உதவுங்கள். தர்மத்தை நிலைநாட்டும் பணியில் அனைவருக்கும் பங்கு உண்டு. இந்த உலகத்தை மூடியிருக்கும் இருளை அகற்ற மனுஜோதி தீபத்தை ஏற்றி வையுங்கள். இருள் தானாக மறைந்துவிடும்.

வானம், பூமி, சமுத்திரம் யாவையும் படைத்த பரமபுருஷராகிய ஸ்ரீமந் நாராயண மூர்த்தியாம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவுக்கே எங்கள் கனம், துதி, மகிமை யாவும் உரித்தாகுக!

– ஆசிரியர்

Filed under: ஆசிரியர் குறிப்பு