தமிழ் | తెలుగు

» ஆன்மீக கருத்து » பல்சுவை

பல்சுவை

தற்காலிக நாகரீகமானது மனிதனின் அன்றாட தேவைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. எடுத்துக்காட்டாக, பறவைகளும், விலங்குகளும் விடியற்காலையில் எழுகின்றன. பிறகு தன்னுடைய அன்றாட உணவைத் தேடுவதில் சுறுசுறுப்பாக ஈடுபடுகின்றன. இரவு வந்தவுடன் மீண்டும் தனது இருப்பிடம் தேடி செல்கின்றன. இதைப்போன்றே நகரத்திலுள்ள மக்கள், தங்களது உணவிற்காக, பெருங்கூட்டமாக ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு பணிபுரியச் செல்கிறார்கள்.

உண்மையான நாகரிகமானது மனிதனின் அடிப்படை தேவைகளுடன் மட்டும் தொடர்புடையதல்ல. அது மனிதனுக்கும், இறைவனாகிய அந்த மிகவும் உயர்ந்த தந்தைக்குமிடையே உள்ள உறவை அறிந்துகொள்வதற்கானது. அந்த உறவினை ஒருவன் எந்த முறையில் வேண்டுமானாலும் அறியலாம். கிறிஸ்துவம், வேத இலக்கியங்கள் அல்லது குர்-ஆன் என ஏதேனும் ஒரு முறையிலிருந்து அது கற்கப்பட வேண்டும். மனித இனத்தின் கடமை இறைவனுடனான உறவை புரிந்துகொள்வதற்கானது என்பதை தெரிவிப்பதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும். இறைவனுடனான உறவை அறிந்துகொள்ளுதல் ஒவ்வொருவருக்கும் அவசியமாகும். இல்லையெனில், ஒருவன் மிருகத்தனமான குணங்களில் ஈடுபட்டு நேரத்தை வீணடித்து விடுகிறான். நாம் அனைவரும் இறைவன்மீது அன்பு செலுத்த முயற்சிக்க வேண்டும். அதற்கு நாம் வேதங்களை படிக்க வேண்டும்.

சரியான விஷயத்தை எங்கிருந்து வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்று சாணக்கிய பண்டிதர் கூறுகிறார். உதாரணமாக, ஒரு கோப்பையில் நஞ்சும் அமுதமும் சேர்ந்திருந்தால், நஞ்சை விட்டுவிட்டு அமுதை மட்டும் எடுத்துக்கொள்ளுமாறு அவர் கூறுகிறார். மேலும், தங்கத்தை அசுத்தமான இடத்தில் கண்டால்கூட அதனை எடுத்துக்கொள்கிறோம். இவ்வாறாக இறைவனை அறிந்துகொள்வதில் ஒருவன் தீவிரமாக இருப்பானேயானால், அவன் தன்னை, “நான் ஒரு கிறிஸ்தவன்”, “நான் ஓர் இந்து” அல்லது “நான் ஓர் இஸ்லாமியன்” என்றோ, “நான் ஏன் எல்லா வேத இலக்கியங்களையும் பின்பற்ற வேண்டும்?” என்றோ ஒருவன் நினைக்கக்கூடாது. வேத இலக்கியங்களை பின்பற்றுவது இறைவனிடம் அன்பை வளர்த்துக் கொள்வதற்கானதேயாகும். மாணவர்கள் மேற்படிப்பிற்காக அமெரிக்கா செல்லும்பொழுது, அங்குள்ள ஆசிரியர்கள், அமெரிக்கராக, ஜெர்மானியராக அல்லது இதர நாட்டைச் சேர்ந்தவராக இருக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஒருவருக்கு மேற்படிப்பு தேவைப்பட்டால் அவர் ஆசிரியரின் நாட்டினைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், அங்கு சென்று படிக்கிறார்கள். அதைப்போலவே எல்லா வேதங்களையும் படிக்க முனையும்போது அது இந்த மதத்தைச் சார்ந்தது, அது அந்த மதத்தைச் சார்ந்தது என்று நினைக்கக்கூடாது.

எல்லா நாட்டிலுள்ள உணவு வகைகளையும் நாம் உண்ண விரும்புகிறோம். எல்லாவிதமான பழங்களையும், காய்கறிகளையும் நாம் உண்ண நினைக்கிறோம். ஏன்? ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையுடையதாக இருக்கிறது. எல்லா பழங்களும் இனிப்பாகத்தான் இருக்கிறது. இது அடிப்படை சுவையாகும். ஆனால் மாம்பழம் ஒரு சுவை. பலா வேறு சுவை, வாழை ஒரு சுவை, மாதுளை ஒரு சுவை என்று கூறிக்கொண்டே போகலாம். அதைப்போலவே வேதங்கள் எல்லாவற்றிலும் இருக்கும் சாராம்சம் ஒரே இறைவன் என்பதாகும், ஆனால் ஒவ்வொரு வேதத்தையும் நாம் படிக்கும்போது அது ஒரு தனி சுவையாகும். எவ்வாறு தேனீயானது எல்லாவிதமான மலர்களிலிருந்தும் தேனை சேகரிக்கிறதோ, அதேவிதமாக மனிதனும் தேனீயிடமிருந்து பரந்த மனப்பான்மையை கற்றுக்கொள்ள வேண்டும். ஆக பல்சுவையையும் பெற வேண்டுமென்றால் நாம் உலக முழுவதிலுமுள்ள எல்லா புராணங்கள், புனித நூல்கள், கிரந்தங்களையும் படித்து, அவற்றிலுள்ள சாராம்சத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இறைவன் எவ்வாறு ஒவ்வொரு யுகத்திலும் வெவ்வேறு விதமாக வெவ்வேறு மனித இனத்திடம் கிரியை செய்தார் என்பதையும், இனி வரப்போகிற தர்ம யுகம் அல்லது ராம ராஜ்யம் அல்லது ஆயிர வருட அரசாட்சியில் என்ன நடக்கப்போகிறது என்பதையும் நாம் முன்பே தெரிந்துகொள்ள முடியும். எனவே இனி எல்லா வேதங்களையும் படிப்போம்! பல்சுவையையும் பெறுவோம்! ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை ஏற்றுக்கொள்வோம்!

✡✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீக கருத்து