தமிழ் | తెలుగు

» ஆன்மீக கருத்து » பரந்த மனப்பான்மை

பரந்த மனப்பான்மை

ஒரு ஞானியிடம் ஒரு மனிதர் வாழ்வில் நிறைய கஷ்டங்களை சந்திப்பதாகவும் தொடர்ந்து ஏற்படும் வலிகளை தன்னால் தாங்க முடியவில்லை என்றும் புலம்பினார். ஞானி ஒரு தம்ளரில் ஒரு கைப்பிடி உப்பை போட்டு கலக்கினார். அதை அந்த மனிதரிடம் கொடுத்து குடிக்க கூறினார். அதை குடிக்க முடியாமல் அவர் திணறினார். உப்பு கரிக்கின்றது என்று ஞானியிடம் கூறினார். இப்பொழுது ஒரு ஜாடி தண்ணீரில் ஒரு கைப்பிடி உப்பை போட்டு கலந்தார். அதை அந்த மனிதனிடம் கொடுத்து குடிக்க கூறினார். அவர் அதை குடித்துவிட்டு இதை குடிக்க முடிகிறது. உப்பு லேசாகத்தான் தெரிகிறது என்றார். ஞானி அந்த மனிதனை அருகேயுள்ள ஏரிக்கு அழைத்துச்சென்று அதில் ஒரு ஒரு கைப்பிடி உப்பை போட்டார். பின்னர் அந்த ஏரியின் தண்ணீரை குடிக்கும்படி கூறினார். இந்த தண்ணீர் நன்றாக உள்ளது. உப்பின் சுவை சிறிதளவுகூட தெரியவில்லை என்று அந்த மனிதர் கூறினார். நான் எல்லா தண்ணீரிலுமே ஒரே அளவு உப்பைத்தான் போட்டேன். அதின் தாக்கம் சிறிதளவு தண்ணீரில் அதிகமாகவும், அதிகமான தண்ணீரில் சிறிதாகவும் தெரிந்தது. வாழ்க்கையிலும் நமது வலிகளும், பிரச்சினைகளும் உப்பைப் போன்றது. மனதை விசாலமாக்கி, பரந்த மனப்பான்மை ஏற்படும்போது வலியின் தாக்கம் குறைந்துகொண்டே வரும். ஏரி போன்று மனம் விசாலமானபின் வலியின் தாக்கமே இருக்காது என்று ஞானி கூறினார்.

✡✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீக கருத்து