தமிழ் | తెలుగు

» ஆன்மீக கதைகள் » பட்டத்து குதிரையும், பாட்டாளி கழுதையும்!

பட்டத்து குதிரையும், பாட்டாளி கழுதையும்!

ஒரு மன்னனின் அரண்மனையில் சகல வசதிகளுடன் ஒரு பஞ்ச கல்யாணி குதிரை இருந்தது. அரசன் பட்டத்து குதிரையின்மீது அமர்ந்து நகர்வலம் வருகின்றபோது, நகர மக்கள் யாவரும் இருபுறமும் நின்று மன்னனை வணங்குவர். எத்தனை ஆயிரக்கணக்கான மனிதர்கள் என்னை வணங்குகிறார்கள் என்று குதிரையானது தனக்குள் எண்ணிக்கொண்டு, கர்வப்பட்டது. குதிரையை தினமும் மாலை வேளையில் அழைத்துச் சென்று, நீரில் நீந்த விட்டும், ஆற்று மணலில் புரளவிட்டும் நடை பயில விடுவர். காலையில் துணிப்பொதிகளை சுமந்து வந்த கழுதையை அதன் முதலாளி ஆற்றங்கரையில் மேய விட்டிருப்பான். பட்டத்துக் குதிரைக்கு நடக்கும் உபசாரங்களை கழுதை அதிசயமாகப் பார்க்கும்.

கழுதையை ஏளனமாக பார்த்து குதிரை இவ்வாறு சொல்லும்: “இது என்ன அதிசயம்! தினமும் என்னை எத்தனை ஆயிரக்கணக்கான பேர்கள் வணங்குகிறார்கள் தெரியுமா? வீதியில் என்மீது மன்னன் அமர்ந்து வரும்போது என்னை வந்து பார். உன்னுடைய பிழைப்பு அழுக்கு மூட்டையை சுமந்து வருவதும், வெளுத்த பின் வீடு செல்வதும், கிடைத்ததை சாப்பிட்டுக் கொண்டிருப்பதுதான் உன் வாழ்வு. என்னைப் பார் அரச வாழ்க்கை வாழ்கிறேன்” என்று பெருமையாக குதிரை கூறியது. அதற்கு கழுதை இவ்வாறு கூறியது: “நான் உண்மையாக உழைக்கிறேன். என் எஜமானன் என்னை நன்கு கவனித்துக் கொள்கிறார். தன் ஆசை மகளை எனக்கு கட்டித் தருவதாக அவளிடமே கூறுவார். ஆசையாக அவளும் என் செல்ல மாமன் நீ என்று கழுத்தைக் கட்டிக்கொள்வாள். எங்கள் குடும்பத்திற்கு எப்படியெல்லாம் உழைக்கிறாய். காட்டிலிருந்து விறகு கட்டுகளைக் கொண்டு வருகிறாய். துணி வெளுக்க சாரமண் கொண்டு வருகிறாய். வெளியூர் செல்வதாயின், எங்கள் உடைமைகளை சுமந்து கொண்டு எங்களில் ஒருவனாக வாழ்கிறாய். நீ கிடைக்க நாங்கள் என்ன புண்ணியம் செய்தோம் என்று முதலாளி மகள் பேசுவாள். என்னுடைய தாயும், தந்தையும் காலமான உடன் அவர்களை முறைப்படி அடக்கம் செய்தார்கள். நான் அவர்கள் குடும்பத்தில் ஒருவனாகியிருக்கிறேன்” என்றது. பல நாட்கள் சென்றன.

வெளியூர் சென்றிருந்த கழுதை அன்று ஆற்றங்கரைக்கு வந்தது. சேவகர்கள் ஒரு புதிய குதிரையை பழக்கிக் கொண்டிருந்தார். பழைய குதிரை ஒரு மரத்தடியில் கண்ணீருடன் நின்று கொண்டு கழுதையைப் பார்த்தது. “என் நிலையைப் பார்த்தாயா? அரசனுக்கு தந்த மரியாதையை எனக்குத் தந்ததாக எண்ணி இறுமாப்புடன் பேசினேன். அரசன் இனிமேல் இந்தப் புதிய குதிரையில் பவனி வருவார். என்னை போர் வீரர்களுக்கு உணவாக்கி விடுவார்கள்” என்று நா தழுதழுக்க குதிரை கூறியது. அதற்கு கழுதை: நடப்பது எதையும் எதிர்கொள்ளும் ஆற்றலை இறைவன் உனக்குத் தரட்டும் என்று கூறியது. இன்னும்கூட பல பெரிய நிறுவனங்களில் பணிபுரிவோர் தாங்களே, அதன் எஜமான்கள் என எண்ணி உடன் பணியாற்றும் ஊழியர்களை கொத்தடிமைகளைப் போல நடத்துவதை நாம் காணலாம். பிறர் மனம் புண்படும்படி சொல்லாலும், செயலாலும் இவர்கள் நடப்பார்கள். அதன் பின்விளைவு என்னவாகும் என்பதை அறியார்கள். அண்ட சராசரங்களை தோற்றுவித்த ஆதி நாயகன் ஏக இறைவன் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் மாம்சப்பிரகாரமாக வழி வந்த வழித்தோன்றல்கள் தங்களை கடைநிலை ஊழியராக்க கருதிப் பணி புரிவதை இன்று ஆசிரமத்தில் நாளும் காணலாம். பணிவு – கனிவு -துணிவு தெய்வீகப் பெருமகன் தேவாசீர் லாறியின் வாழ்வின் இலக்கணம். எந்த இடத்தும் பணிவு, எந்த உயிரிடத்திலும் கனிவு, எத்தகு வேளையினும் துணிவு. இது கர்ம யோகத்தின் அடிப்படை தத்துவமாகும்.

கண்டு எடுத்தோன் சத்திய நகரக்குடிமகன்,
தேவகவி சுவாமிஜி அன்பிற்கரசு
– வான் மறையாக வ(ள)ரும்

✡✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீக கதைகள்