தமிழ் | తెలుగు

» ஆன்மீக கருத்து » பஞ்சதீர்த்தம்

பஞ்சதீர்த்தம்

முற்காலங்களில் இறைவனைக் கண்டுகொள்வதற்கும் அவருடைய ஆசிகளைப் பெறுவதற்கும் சில மஹான்கள் வனங்களுக்குச் சென்று தவமிருந்து இறைவனுடைய தரிசனத்தைக் கண்டும், அவரிடம் அநேகமான வரங்களைப் பெற்றும் இருக்கிறார்கள். அவர்களில் அத்ரி முனிவரும் அவருடைய துணைவியாராகிய அனுசுயாவும் இறைவனின் அருளைப் பெற்று, தவ வலிமை வாய்ந்தவர்களாக திகழ்ந்து வந்தனர். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மும் மூர்த்திகளின் அம்சமாக உள்ள ஒரு ஆண் குழந்தையை இறைவன் அவர்களுக்கு கொடுத்தார். அக்குழந்தைக்கு அவர்கள் தத்தா என பெயரிட்டனர்.

பிற்காலத்தில் அவரின் மகிமைகளைக் கண்ட மக்கள் அவரை குருதத்தா என அழைத்தனர். அக்காலத்தில் ஜமதக்னி என்ற முனிவர் தன் மனைவி மக்களுடன் வனத்தில் வாழ்ந்து வந்தார். அவரிடம் கேட்டவற்றை எல்லாம் அருளும் காமதேனு என்ற பசுவும் இருந்தது. ஒருமுறை குருதத்தாவின் அருளைப் பெற்ற காத்தவீரியன் என்ற சக்கரவர்த்தி வேட்டையாட தன் படைபரிவாரத்துடன் காட்டிற்கு வந்த சமயம் ஜமதக்னி முனிவரைச் சந்தித்தார். அப்பொழுது ஜமதக்னி, காமதேனு என்ற பசுவின் உதவியால், காத்தவீரியனுக்கும் அவனது படைபரிவாரத்திற்கும் ராஜமரியாதையுடன் கூடிய பெரிய விருந்தளித்தார். அதனைக் கண்ட சக்கரவர்த்தியும் அந்த பசுவைத் தனதுடைமையாக்கிக் கொள்ள வேண்டுமென்ற தீய எண்ணத்துடன் அவர்களுடைய தவ வலிமையையும் சிந்தித்துப் பார்க்காமல், குருதத்தாவின் ஆசியைப் பெற்றவன் என்ற கர்வத்தினால் அந்தப் பசுவை பலவந்தமாக தன் அரண்மனைக்கு இழுத்துச் சென்று விட்டான்.

நடந்த காரியங்களைக் கேள்விப்பட்ட முனிவரின் மகனான பரசுராமன் காத்தவீரியனைக் கொன்று பசுவை மீட்டார். இதைக் கேள்விப்பட்ட காத்தவீரியனின் பிள்ளைகள் சமயம் பார்த்து ஜமதக்னி முனிவரைக் கொன்றனர். தன்னுடைய தாயாரின் வேண்டுகோளின்படி தந்தையாரின் இறுதிச் சடங்குகளை முடிப்பதற்காக, தெச்சணத்தில் இருந்த குருதத்தாவின் ஆசிரமத்திற்கு தாயையும், தந்தையின் உடலையும் சுமந்து கொண்டு தெச்சணம் நோக்கி பயணத்தைத் தொடர்ந்தார் பரசுராமர். குருதத்தாவின் ஆசிரமத்தை அடைந்தபோது, குருதத்தா பரசுராமனை நோக்கி, தன் ஆசிரமத்திற்கு அருகிலுள்ள மலைக்குச் சென்று நீராடி வரும்படி கூறினார். அம்மலைக்குச் சென்ற பரசுராமர் அங்கு தண்ணீர் இல்லாததைக் கண்டு ஸ்ரீமந் நாராயணரைத் தியானித்து அம்பெய்தபோது, அந்த இடத்தில் ஒரு நீர்வீழ்ச்சி உருவானது. அந்நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த குருதத்தா அந்த நீர்வீழ்ச்சிக்கு பஞ்சதீர்த்தம் (ஐந்தருவி) என பெயரிட்டார்.

அகத்திய முனிவரும் தெச்சணமே! சில அருந்தவ முனிவர்களும் தெச்சணமே! என்ற பாடலுக்கேற்ப அகத்தியர் முதற்கொண்டு குருதத்தா, பரசுராமர், போகர்கள், சித்தர்கள், திருமூலர், வள்ளலார், தீர்க்கதரிசி முத்துக்குட்டியும் தோன்றி கடவுள் ஒருவரே என்ற உண்மையை உலகிற்கு தெரிவித்ததும் இந்த தெச்சணமே. அவர்கள் அனைவரும் எதிர் நோக்கிய ஒப்பற்ற ஸ்ரீமந் நாராயணரின் பதியும் தெச்சணமே.

இவை அனைத்தும் இக்கலியுக முடிவில் ஸ்ரீமந் நாராயணரின் இரகசிய வருகையான கல்கி மகா அவதாரத்தின் இருப்பிடமான மனுஜோதி ஆசிரமத்தை மனுகுலம் தெரிந்து கொண்டு, இவ்விடத்தை நோக்கி வருகை தந்து, அவருடைய போதனைகளை அறிந்துணர்ந்து அதன் மூலமாக வைகுண்டம் செல்லவதற்காகவே இவ்வடையாளங்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வுண்மையை இறை மக்கள் உணர்ந்துகொள்வார்கள்.

சான்று: குருதத்தாவின் வரலாறு

 – இறைக்கவி. கு. இரவிக்குமார், கோவை

✡✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீக கருத்து