தமிழ் | తెలుగు

» ஆன்மீக கருத்து » நீங்களும் கண்ணப்பன் ஆகலாம்!

நீங்களும் கண்ணப்பன் ஆகலாம்!

ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரா என்று இறைவனுக்கு ஒரு பெயர் இருக்கிறது. ஸ்ரீ என்றால் ‘சிலந்தி’ என்று ஒரு பொருள் உள்ளது. ‘காளம்’ என்றால் ‘சர்ப்பம்’, ‘ஹஸ்தி’ என்றால் ‘யானை’. கற்பனை வலையைப் பின்னிக்கொள்ளும் நம் அறிவே சிலந்தி. சிலந்திக்குத் தன் பெருமையே அதிகம் போல நமக்கு நம் பெருமை. சிலந்தி தன்னுடைய பெருமையையும், திறமையையும் பரமேஸ்வரனுக்கே அர்ப்பணம் செய்ததாக வரலாறு கூறுகிறது. நம் அறிவும் சிவார்ப்பணம் ஆக வேண்டும் என்பதே சிலந்தி காண்பிக்கும் உட்பொருளாகும்.
நம்மில் படமெடுக்கும் அகம்பாவமே பாம்பு. ‘தேகமே நான்’ என்ற நம் எண்ணமே யானை. இந்த அகம்பாவத்தைத் துறந்து நம் செயல்களை இறை தொண்டிற்கே பயன்படுத்த வேண்டும். அதற்குத் தேவையான தகுதியே ‘திண்ணன்’. அவர் கண்ணை அர்ப்பணித்து, கண்ணப்பன் ஆனார். இது பக்தனின் பெயர் மட்டுமல்ல, பக்திக்குக் கிடைத்த பெயராகும்.
திண்ணனின் கதையை சமஸ்கிருதத்தில் எழுதிய உபமன்யு முனிவர், கண்ணப்பனை தீரன் என்றார். ‘திண்ணன்’, ‘தீரன்’, ‘கண்ணப்பன்’ இம்மூன்று பெயர்களுமே பக்தியின் லட்சணங்கள் ஆகும். எதற்கும் வளையாத ஏகாக்ரசித்தமே திண்ணனாக உருவெடுத்தது. சிதறாத விடாமுயற்சியே தீரனின் குணமாகும். மனதைச் சிதறவிடாமல் அனைத்தையும் சிவமயமாகத் தரிசித்தலே கண்களை (பார்வையை) அர்ப்பணித்தல் ஆகும். அதுவே கண்ணப்பனின் லக்ஷணமாகும்.
புத்தி, அகங்காரம், சரீர செய்கை இவற்றை ஒரு முனைப்போடு, சிரத்தையுடன் சமர்ப்பண உணர்வுடன் சிவனுக்கு அர்ப்பிப்பவன், லௌகீக வாழ்வில் எப்படிப்பட்டவனாக இருந்தாலும், சிவனின் பார்வையில் அவனே மகா பக்தனாவான். ஆதிசங்கரர், ‘சிவானந்த லஹரி’யில் கண்ணப்பனை மட்டுமே மகா பக்தனாகப் புகழ்ந்து, ‘வனசரோ பக்தாவம் ஸாயதே’ என்று பாடியுள்ளார்.
இதே கருத்தை விவிலியம் இவ்வாறு கூறுகிறது: உன் முழு இருதயத்துடனும், உன் முழு ஆத்துமாவுடனும், உன் முழு சிந்தையோடும், உன் முழு சரீரத்தோடும் இறைவனை சேவிக்க வேண்டும். முழு இருதயத்துடன் இறைவனை சேவிப்பதென்றால், நம் அன்பு இறைவனின் பாலிருக்க வேண்டும். அப்படியென்றால் மற்றவர்கள் இரண்டாம் பட்சமாகிவிடுகிறார்கள்.
முழு ஆன்மாவுடன் என்றால் ‘நான்’ என்ற எண்ணம் அல்லது அகங்காரம் என்பதை நாம் அழித்து விட்டு அவரிடம் சரணாகதியடைய வேண்டும். முழு சிந்தை என்பது முழு மனதுடன் அவரை நேசிப்பதாகும். முழு சரீரமென்றால், முழு பெலத்துடன் அவரை நேசித்து சேவிப்பதாகும். இந்த நான்கையும் நாம் செய்தால் நாமும் கண்ணப்பனாகலாம்!

✡✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீக கருத்து