தமிழ் | తెలుగు

» ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள் » நான்முகன் – பிரம்மா

நான்முகன் – பிரம்மா

நான்முகன் என்று பிரம்மாவை குறிப்பிடுவார்கள். பிரம்மாவுக்கு நான்கு முகங்கள் இருக்கிறது என்பது ஒரு தத்துவமாகும். பிரம்மா என்பவர் எல்லாவற்றையும் படைப்பவர் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். அவர் நான்கு திசைகளிலும் நடக்கக்கூடியவற்றை பார்க்கக்கூடியவர் என்பதை மக்களுக்கு உணர்த்தவே, பிரம்மாவிற்கு நான்கு முகங்கள் உள்ளன. விவிலியத்திலும் இறைவனுக்கு நான்கு முகங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த நான்கு முகங்கள் இறைவனின் நான்கு நிலைகளை அல்லது இறைவன் தம்மை மனிதனுக்கு நான்கு நிலைகளில் வெளிப்படுத்திக் கொடுக்கிறார் என்பதைக் காண்பிக்கிறது. வேறுவிதமாக கூற வேண்டுமென்றால் இறைவனின் நான்கு நிலைகள் அல்லது பதவிகள் என்று கூறலாம்.

எசேக்கியேல் 1:10 “அவைகளுடைய முகங்களின் சாயலாவது, வலதுபக்கத்தில் நாலும் மனுஷ முகமும் சிங்கமும், இடதுபக்கத்தில் நாலும் எருது முகமும் கழுகு முகமுமாயிருந்தன”. விவிலியத்தில் எசேக்கியேல் என்ற தீர்க்கதரிசி இறைவனின் நான்கு முகங்களைக் கண்டான். மனுஷமுகம், சிங்க முகம், எருது முகம், கழுகு முகம் போன்றவற்றைக் கண்டான்.

இறைவன் ஒரு மனிதனாக அவதரிப்பதே எருது முகத்தின் அர்த்தமாகும். அவர் ஒரு மனிதனாக இந்தப் பூமியில் பிறந்து மனிதர்களுக்காக வாழ்ந்து, மனிதனை மீட்க தம் உயிரை துறந்தார். ஒரு எருது பேசாமல் உழைக்கிறது. அதைப் போலவே இறைவனும் மனிதனாக எல்லா கஷ்டங்களையும் சகித்தார். இது இறைவனின் ஒரு முகமாகும்.

சிங்கம் மிருகங்களின் ராஜா. மனிதர்களுக்கு இறைவன் தான் ராஜா. இந்தப் பூமியில் அவர் அவதரிக்கும்போது நானே வானத்துக்கும், பூமிக்கும் ராஜா என்று பிரகடனம் செய்தார். இதுவே இறைவனின் சிங்க முகமாகும்.

மறுபடியுமாக ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா நமக்கு காட்சி கொடுக்க வேண்டும். அவர் நமக்கு எவ்வாறு காட்சி கொடுக்க வேண்டும்? ஒரு மனிதனாக, பரமபுருஷராக, மறுபடியும் காட்சி கொடுக்க வேண்டும். இதுவே மனுஷ முகத்தின் தாற்பரியமாகும்.

ஸ்ரீ கிருஷ்ணர் பகவத்கீதையில் பறவைகளில் நான் கருடனாக இருக்கிறேன் என்று கூறினார். கழுகானது மிக உயரத்தில் பறக்கும். அது பறவைகளின் ராஜாவாக திகழ்கிறது. வானங்களின் எஜமானாக இருக்கிறது. ஆக இறைவனே எல்லாவற்றிற்கும் எஜமான், வைகுண்ட நாதன், பரமாத்மா என்பதை கழுகு முகம் காண்பிக்கிறது.

மனிதனாகவும், ராஜாவாகவும், பரமபுருஷராகவும், பரமாத்மாவாகவும் இறைவன் இருப்பதே பிரம்மாவுக்கு நான்கு முகங்கள் இருப்பதின் அர்த்தமாகும்.

– ஸ்ரீ லஹரி கிருஷ்ணா

 

 

Filed under: ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்