தமிழ் | తెలుగు

» ஆன்மீக கதைகள் » நான்கு திறமைகள்

நான்கு திறமைகள்

ஒரு நாட்டில் நல்ல உள்ளம் படைத்த நால்வர் நண்பர்களாக இருந்தனர். நான்கு பேரும் நான்கு விதமான திறமைகளோடு திகழ்ந்தவர்கள். முதலாமவன் ஆசாரி. இரண்டாமவன் நெசவாளி. மூன்றாமவன் பொற்கொல்லன். நான்காமவன் மந்திரவாதி ஆவர். இவர்கள் நால்வரும் மக்களுக்காக உழைத்தது போதும், நம்முடைய பிறவிப் பயனை அடைய வேண்டுமானால் இறைவனைத் தேடி செல்ல வேண்டும் என முடிவு செய்து பயணித்தனர்.

அவர்கள் தங்களுடைய திறமையின்மேல் பற்று கொண்டமையால் தாம் பயன்படுத்தும் கருவிகளையும் தங்களோடு எடுத்துச் சென்றனர். நெடு நேர பிரயாணத்தில் களைப்புற்றவர்களாக ஓய்வு எடுக்க முடிவு செய்தனர். நால்வரும் உறங்கி விட்டால் நம்முடைய உடைமைகளை யார் பாதுகாப்பது என்று நினைத்து, ஒவ்வொருவரும் குறிப்பிட்ட மணி நேரம் விழித்திருப்போம், பிறகு மற்றவனை எழுப்பி விட்டு ஒருவர் மாற்றி ஒருவர் தூங்க வேண்டும் என முடிவு செய்தனர். முதலாவதாக ஆசாரியானவன் வெறுமனே உட்கார்ந்தால் தூங்கி விடுவோமே! என்ன செய்வது என சிந்தித்து, தான் எடுத்து வந்த கருவியைக் கொண்டு ஏதாவது செய்யலாம் என்று நினைத்து, ஒரு கட்டையில் அழகான பெண்ணின் உருவத்தை செதுக்கினான். அவனுடைய நேரம் முடியும் தருவாயில் அந்த பெண்ணின் உருவம் முழுமை பெற்றது. அவன் இரண்டாமவனை எழுப்பி விட்டு தூங்கினான்.

நெசவாளியான இவன் அதைப் பார்த்தவுடனே இந்த பொம்மை நிர்வாணமாக இருக்கிறதே என்று நினைத்து, தன்னுடைய திறமையினால் அங்கே கிடந்த ஓலை மற்றும் நார்களைக் கொண்டு அழகான ஆடையை உடுத்துவித்தான். அதன் பிறகு பொற் கொல்லனை எழுப்பினான். மரக்கட்டையிலுள்ள அழகான பெண்ணின் உருவ பொம்மையைக் கண்டவுடன், தான் அணிந்திருந்த ஆபரணத்தைக் கொண்டு, தன்னுடைய திறமையினால் வடிவமைத்து, அதை அணிவித்து விட்டு நான்காமவனை எழுப்பி விட்டு உறங்கலானான். மந்திரவாதியான இவனோ தூங்கிவிடக்கூடாது என்பதற்காக மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே இருக்கலாம் என நினைத்தான். அப்போது இந்த மரக்கட்டையில் உருவான அழகான பெண்ணின் உருவத்தைப் பார்த்தவுடனே தன்னுடைய மந்திர சக்தியை வைத்து, அந்த உருவத்திற்கு உயிர் கொடுத்தான்.

உடனே அந்த உருவமானது ஒரு அழகான பருவ மங்கையாக அவர்கள் முன் தோற்றமளித்தாள். இந்த பெண் எனக்குத்தான் சொந்தமானவள் என நால்வரும் சண்டையிடத் தொடங்கி விட்டனர். ஆசாரி இவளுக்கு நான்தான் உருவம் அளித்தேன் என்றும், நெசவாளி நான்தான் இவளுக்கு உடை உடுத்துவித்தேன் என்றும், பொற்கொல்லனோ நான்தான் ஆபரணத்தால் அலங்கரித்தேன் என்றும், மந்திரவாதியோ இது எல்லாம் பெரிய காரியமா! நான்தான் மரக்கட்டையாக இருந்த இவளுக்கு உயிர் கொடுத்தேன் என்றும் சண்டையிட்டனர்.

அவ்வழியே சென்ற ஒரு முனிவர் இவர்கள் ஒரு பெண்ணுக்காக சண்டையிடுவதைப் பார்த்து அவர்களை சமரசமாக இருக்கும்படி கூறி, அவர்கள் யார் என்றும், அவர்கள் எதற்காக புறப்பட்டார்கள், மேலும் இந்த பெண் எவ்வாறு தோன்றினாள் என்றும் அவர்களிடமிருந்து அறிந்துகொண்டார். பிறகு அந்த நால்வரையும் பார்த்து: நீங்களோ இறைவனைத் தேடி வந்த முடிவு நல்ல முடிவுதான். இறைவனை அடைய வேண்டுமென்று நீங்கள் என்ன செய்தீர்கள் என கேட்டார். அந்த நால்வரும் ஒவ்வொருவராக பதிலளிக்கத் தொடங்கினர். ஆசாரி செய்யும் தொழிலே தெய்வம். ஆகவே நான் என் தொழிலை தெய்வமாக கருதி, மக்களுக்கு நல்ல பொருட்களை செய்து கொடுத்திருக்கின்றேன் இதைவிட வேறு என்ன செய்ய வேண்டும் என்றான்.

முனிவர் அவனிடம்: இறைவன் உனக்கு திறமையைக் கொடுத்திருக்க நீ உன்னுடைய திறமையின்மேல் பற்று கொண்டு, உன்னுடைய தொழில் கருவிகளைக் கொண்டு இந்த உருவத்தை உண்டாக்கி மற்ற மூவருக்கும் ஆசையைத் தூண்டி பிரச்சினைக்குள்ளாக்கி விட்டாய். இறைவனை அடைய வேண்டுமானால் முதல் நிலையை அதாவது முற்றும் துறந்தவனாக நீ இருந்தால்தான் அவரை அடைய முடியும் என்றார். நெசவாளனிடம் நீ இறைவனை அடைவதற்காக என்ன செய்தாய் என்று கேட்டார்.

அவன் ஆசாரி தொழில் செய்யும் என் நண்பனைப்போல் நான் எந்த கருவிகளையும் என்னுடன் எடுத்து வரவில்லை. என்னுடைய தொழிலே மனிதனின் மானத்தை காக்கும் உடைகளை நெய்வதுதான். இறைவன் எனக்கு கொடுத்த திறமையை வைத்து நான் இந்த மரக்கட்டைக்கே மானத்தை காத்தேன். நான் உங்களைப் போல் தியாக உள்ளம் படைத்தவன். அதனால்தான் மரத்தால் இருந்த உருவத்திற்கு என் திறமையினால் முயன்று உடையை உடுத்தினேன். மற்றவருக்கு உதவி செய்வதில் என்ன தவறு இருக்கிறது என தந்திரமாக வாதாடினான். நெசவாளனை சாந்தத்தோடு பார்த்த துறவி: நீ எந்த தொழில் கருவியையும் உன்னுடன் எடுத்து வரவில்லை, இறைவனை அடைவதற்கு எல்லாவற்றையும் விட்டு விட்டு, வந்த பின்பு உன்னுடைய ஆழ் மனதில் உள்ள பற்றை விட்டு விட மறந்தது ஏன்? உதவி செய்வது நியாயம்தான். உதவிக்கு கைமாறாக இவளுக்கு உடை உடுத்தினேன், அதற்காக இந்த பெண் எனக்குத்தான் சொந்தம் என்று நீ எவ்வாறு கூற முடியும்? நீ மற்றவர்களின் மானத்தை காப்பதை உன் தொழிலாக வைத்துக்கொண்டு, நான் என்ற பற்றை விட்டு விடாமல் உன்னுடன் எடுத்து வந்ததால்தான், நீ மற்ற மூவரையும் பிரச்சினைக்குள்ளாக்கி விட்டாய்! என அவனிடம் நிதானமாக பதிலளித்தார்.

மூன்றாவதாக பொற்கொல்லனிடம்: நீ இறைவனை அடைய என்ன செய்தாய் என்று கேட்டதற்கு, அவனோ இந்த இருவரைப்போல நான் கிடையாது. அவரை அடைய நான் எல்லாவற்றையும் விட்டு விட்டேன். இரண்டாவதாக பற்றையும் விட்டு விட்டதினால்தான் நான் அணிந்திருந்த ஆபரணத்தை வைத்து, என் கண்ணில் பட்ட மரக்கட்டை உருவத்திற்கு என்னுடைய திறமையினால் வடிவமைத்தேன். என்னுடைய ஆழ்மனதில் இறைவனைத் தவிர வேறு எதிலும் நாட்டமில்லை என்பதற்கு என் செயலே சாட்சி. மற்றவருக்கு கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது? மற்றவர்களுக்கு புத்தி சொல்ல நினைக்கிற உமக்கு என்னைப் பற்றி என்ன தெரியும் என கோபமாக முனிவரிடம் கேட்டுவிட்டு, நான் அதிகமாக என்னைப் பற்றி கூற விரும்பவில்லை என்றான்.

அவனைப் பார்த்து சிரித்த முனிவர்: ஆபரணங்கள் செய்வது உன்னுடைய வேலை. எனவே தங்கத்தின் மேல் உனக்கு பற்று இல்லை என வைத்துக்கொள்வோம். ஆனால் நீ உன்னுடைய ஆபரணத்தை மற்றவர்களுக்கு அணிவித்ததோடு அல்லாமல், அலங்காரம் செய்து மற்றவனை சோதிக்கத் தூண்டுவது எந்த விதத்தில் நியாயம்? மேலும் உன்னுடைய திறமையினால் நீ மற்றவர்களுக்கு கொடுக்க நினைப்பது சரிதான். அதற்காக உன்னுடைய மனித குணமான கோபத்தையும் மற்றவனிடம் கொடுக்க நினைப்பது தவறு என சாந்தமாக பதிலளித்தார். எனவே உன்னுடைய கோபத்தால் உனக்கு எந்தவித பிரயோஜனமுமில்லை. நீதான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம் என்றார்.

இறுதியாக மந்திரவாதியிடம் நீ இறைவனை அடைய என்ன செய்து விட்டாய் என்று கேட்டபோது அவன்: நான் மற்ற மூவரைப்போல இல்லை; பிறவியிலே பெரும் பிறவி இந்த மனிதப் பிறவி. அந்த பிறவியிலே இறைவனை அடைவதுதான் சிறந்தது. அதனால் எனக்கு தெரிந்த மந்திரங்களால் ஒரு மரக்கட்டைக்கு உயிர் கொடுத்து இறைவனை அடைவதற்கு வழி வகுத்திருக்கிறேன். நான் மட்டும் அவரை அடைய வேண்டும் என நினைப்பது சுய நலம், இந்த பெண்ணுக்கு உயிர் கொடுத்ததற்காக அவள் என்னை மணந்து கொண்டு, நாங்கள் இருவரும் இறைவனுக்காக தொண்டு செய்வோம். இதில் என்ன தவறு இருக்கிறது. இறைவனை அடைவதற்கு இதை விட வேறு என்ன செய்ய வேண்டும் என்றான்.

மந்திரவாதியினுடைய வாதத்தைக் கேட்டுக் கொண்டிருந்த முனிவரிடம் அந்த பருவ மங்கை குறுக்கிட்டாள். நீங்கள் பதிலளிப்பதற்கு முன்னால் ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொருவரையும் ஒவ்வொரு காரணத்தை சொல்லி விட்டு நான் யாருக்கும் சொந்தமில்லை என்று கூறிவிட்டீர்கள். அப்படியென்றால் என்னுடைய கதி என்ன என்பதை சற்று யோசித்துப் பாருங்கள். ஒவ்வொருவரும் என்னை உரிமை கொண்டாடுவதற்கு பெண் என்ன போகப் பொருளா? எனக்கு உயிர் கொடுத்த இந்த மந்திரவாதியிடமும் என்னை நீங்கள் ஒப்படைக்கவில்லை என்றால், தூங்கி விடக்கூடாதே என்பதற்காக அவர்கள் என்னை படைத்ததாக ஆகிவிடும். நேரத்தை வீணாக்கக்கூடாது என்ற நோக்கத்திற்காகவா நான் படைக்கப்பட்டேனா? சந்நியாசியாகிய நீங்களோ முற்றும் துறந்த முனிவர், நீங்களும் என்னை மணந்துகொள்ள முடியாது, எனவே மந்திரவாதியிடம் பதிலுரைப்பதற்கு முன்னால் என்னைப் பற்றி சிந்தித்து முடிவு சொல்லுங்கள் என சந்நியாசியிடம் கூறினாள்.

இந்த வாதத்தில் நாம்தான் வெற்றி பெற்றோம் என மந்திரவாதிக்கு ஒரு நம்பிக்கை வந்துவிட்டது. சந்நியாசியோ அந்த நான்கு திறமைகளுடைய நால்வரையும் பார்த்து உபதேசிக்கலானார். இறைவனை அடைய வேண்டும் என்று நீங்கள் நினைத்ததே பெறும் பாக்கியம்தான். ஏனென்றால் மனிதப் பிறவியில் மட்டும்தான் இறைவனின் திருவிளையாடலைப் பற்றி நாம் பேசி அறிந்துகொள்ள முடியும். ஆகவே என்னுடைய உரையை தெளிவாக கேட்டுத் தெரிந்து கொண்டால்தான், நீங்கள் இறைவனை அடைவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்ன செய்து விட்டீர்கள் என்று உணர்ந்து கொள்வீர்கள் என கூறியவுடன் நால்வரும், சரி கூறுங்கள் என்றனர். மங்கையோ கொஞ்சம் அவசரமாக எனக்கு என்ன பதில் எனக் கேட்டாள். முதலாவதாக நால்வருக்கும் பதிலளிக்கிறேன். பிறகு உன் கதி என்ன என்று நீயே யோசித்துக் கொள், முடிவை உன்னிடமே விட்டு விடுகிறேன் என்று சந்நியாசி கூறினார். அந்த மங்கையோ அரை மனதோடு சரி என்றாள்.

சந்நியாசி இவ்வாறு கூறினார்: மனிதனுடைய நான்கு முக்கிய நிலைகளைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். முதலாவது முற்றும் துறப்பது. இரண்டாவது ஆசையைத் துறப்பது. மூன்றாவது நான் என்ற அகங்காரத்தை துறப்பது. இந்த நிலைகளைக் கடக்கும்பொழுதுதான் நீ புதிதாக பிறந்த மனிதனாகின்றாய். இந்த மனிதப் பிறவியிலே உன்னைப் படைத்ததற்காகவும், நீ அவரைப் பற்றி அறிந்துகொள்வதற்காகவும் இறைவனை ஜெபித்துக் கொண்டிருப்பதுதான் நம்முடைய கடமையாக இருக்கிறது. இதுவே நான்காவது நிலையாகும். நம் அனைவரையும் இறைவன் படைத்தார். நமக்கு திறமைகளைக் கொடுத்தார். நாம் நம்முடைய திறமையைக் கொண்டு பெருமை கொள்ளாமல் வாழ வேண்டும். இறைவனை அடைய வேண்டும் என எண்ணிய ஒருவன் மனித பிறவியிலே அனைத்து வேதங்களையும் கற்று, தனக்கு இறைவன் கொடுத்த கடமைகளை சரி வர செய்ய கடமைப்பட்டிருக்கிறான். பற்றை விட்டவனுக்கு மற்ற எந்தவிதமான உயிரிலோ, பொருளிலோ மோகம் வராது. மொத்தத்தில் சமாதி நிலையை அடைந்தவனுக்கு இறைவன் மட்டுமே துணை. எனவே நீங்கள் ஐந்து பேரும் இந்த நான்கு நிலைகளை கடந்து விட்டால் இறைவனை அடைந்து விடலாம் என்று கூறினார்.

சற்று நேரம் அனைவரும் அமைதலாக இருந்தனர். முதலாவதாக பருவ மங்கை மவுனத்தைக் கலைத்தாள். இந்த நால்வரும் நேரத்தை வீணாக்கக்கூடாது என்ற நோக்கத்திற்காக நான் படைக்கப்பட்டதாக நினைத்தது என் தவறு. என்னால்தான் எல்லா பிரச்சினைக்கும் காரணம். எனவே நேரத்தை வீணாக்காமல் இறைவனுக்கு நன்றி செலுத்துவதுதான் என்னுடைய கடமையாக இருக்கும் என்றாள். உடனே சந்நியாசி இளம் பருவத்தில்தான் இறைவனை கண்டுகொள்ள முடியும், சரியான முடிவு எடுத்தாய் என பாராட்டினார். அவள் அழகான சித்திரமுள்ள ஆடை அணிந்திருந்ததினால் அவளுக்கு சித்திராங்கி என பெயரிட்டார். நான்கு திறமைகளுடைய நால்வரும் மனம் மாறினர். நான்கு நிலைகளை கடைப்பிடிப்பதற்கு சந்நியாசியையே தங்களுடைய மானசீக குருவாக ஏற்றுக்கொண்டனர். அவருடைய சீடர்களாக அவரைப் பின்பற்றிச் சென்றனர்.

K. நாகராஜ், புதுச்சேரி

✡✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீக கதைகள்