தமிழ் | తెలుగు

» ஆசிரியர் குறிப்பு » நவம்பர் – டிசம்பர் 2014 – Jan 2015

நவம்பர் – டிசம்பர் 2014 – Jan 2015

அன்பார்ந்த ஆன்மீக சகோதர சகோதரிகளே,

ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்!

2014-ம் வருடம், அக்டோபர் மாதம் 3-ம் தேதி நடைபெற்ற நீதியுக ஸ்தாபக விழாவானது, மனுஜோதி ஆசிரமத்தில் கூடி வந்திருந்த எல்லாருக்கும் மற்றும் உலகெங்கிலும் உள்ளவர்களுக்கும் ஆசீர்வாதமாக இருந்தது. ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பிரசன்னம் அந்நாள் முழுவதும் இருந்ததை உணர முடிந்தது.

செப்டம்பர் மாதம் 4-ம் தேதி முதல் 14-ம் தேதி வரையும், அக்டோபர் மாதம் 4-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையும் தேனி, கோவை, ஈரோடு, திருப்பூர், ராமநாதபுரம் போன்ற பல மாவட்டங்களுக்கு ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்ற கொள்கையை மக்களுக்கு பிரச்சாரம் செய்யச் சென்றனர்.

நான் ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சென்று வந்தேன். நவம்பர் மாதத்தில் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகளை மக்களுக்கு அறிவிக்க ஆந்திரா மாநிலத்திற்கு நாங்கள் குடும்பமாக சென்றிருந்தோம். 1987-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதியன்று ஸ்ரீ லஹரி கிருஷ்ணா ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகளை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.

இன்றைக்கு ஜனங்கள் தங்களுடைய திறமைகளை உபயோகிக்க விரும்புவதில்லை. இந்த தாலந்துகளைக் கொடுத்தது யார்? இறைவன் இந்த திறமைகளை உங்களுக்கு அளித்திருக்கிறார். ஆனால் திடீரென்று மக்களுக்கு பெருமை ஏற்பட்டு, தாங்கள் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்ற எண்ணம் வந்து விடுகிறது. அதன் பிறகு திறமைகளைக் கொடுத்தவரைவிட அவர்கள் அதிக முக்கியமானவர்களாக ஆகிவிடுகிறார்கள்.

நமக்கு இறைவன் திறமைகளை அருளுகிறான். எதற்காக அதை அருளுகிறான்? என்ற கேள்விக்கு ஸ்ரீமத் பகவத் கீதை 10-ம் அத்தியாயத்தில் பதில் உள்ளது. ஸ்ரீமத் பகவத் கீதை 10:41: “எந்தெந்த வஸ்து என் விபூதியை விளக்குவதாகவோ, லக்ஷ்மீகடாக்ஷம் பொருந்தியதாகவோ, உயர்ந்த சக்தி வாய்ந்ததாகவோ உள்ளதோ அந்த வஸ்து என்னுடைய சக்தியின் அம்சத்தில் தோன்றியது என்று அறிதல் வேண்டும்”

இந்த ஸ்லோகத்திற்கு ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கூறும் விளக்கமாவது:“அர்ச்சுனா! மகிமையின் வஸ்துக்கள் யாவும், வெளிப்பிரகாரமாக நல்லதும், அழகானதும், அறிவைப்போன்றும், வல்லமையானதும், இருதயத்தின் பலன்களும் அல்லது மனிதனால் போற்றப்படுகிற எந்த காரியமும் என்னிடத்திலிருந்து வருபவைகளாகும். அவைகள் என்னுடைய மகிமையின் வெளிப்படுத்தலின் ஒரு சிறிய பகுதியாகவும் உள்ளது.” நம்மிடம் உள்ள திறமைகள், நற்பண்புகள், அறிவு, ஆற்றல் இவையெல்லாம் இறைவனின் அம்சமாகும். அல்லது இறைவனின் சக்தியின் சிறிய பகுதியாகும். அப்படிப்பட்ட சக்தியை நாம் (நம்முடைய திறமை) என்று நினைத்துக்கொள்ளாமல் இறைவன் அருளிய வரம் என்று எண்ணி அதை நல்வழியில் உபயோகப்படுத்த வேண்டும். அத்துடன் அது இறைவனின்
பண்பு என்று உணர்ந்து இறைவனில் ஒரு பாகமாகி அவருடனே ஒன்றுபட வேண்டும். ஏனெனில் இறைவனுடைய சக்திக்கு முன்பாக நம்முடைய திறமையை, அறிவை, ஆற்றலை நாம் ஒப்பிட முடியாது. அவ்வாறில்லாமல் நம்மிடம் இருக்கும் திறமையை நாம் தவறாக உபயோகப்படுத்தினால் என்ன நேரிடும் என்பதற்கு ஸ்ரீ லஹரி கிருஷ்ணா ஒரு சம்பவத்தைக் கூறுகிறார்.

“எனக்கு ஒரு தம்பி உண்டு. அவர் நன்றாக பாடக் கூடியவர். இனிமையாக, உருக்கமாகப் பாடுவார். கூட்டத்தில் அவர் பாடினால் ஜனங்கள் அப்படியே அழுவார்கள். அவ்வளவு உருக்கமான, இனிமையான குரலில் யாரும் பாடுவதை நான் கேட்டதேயில்லை. அப்படி ஒருவர் பாடும்பொழுது ஜனங்கள் அழுவதையும் நான் கண்டதில்லை. பாடும் வரத்தை தந்தவரைக்காட்டிலும் ஒருநாள் தான் பெரியவன் என்ற எண்ணம் அவனுக்கு வந்துவிட்டது. நான் சினிமாவில் பாடி, நடிக்கப்போகிறேன் என்று
சொல்லி அதற்கு விண்ணப்பமும் செய்தான். உன்னுடைய பாடும் வரத்தை இழந்து விடுவாய் என்று நான் அவனை எச்சரித்தேன். அவனோ கொடுத்த வரத்தை இறைவன் திரும்ப எடுத்துக்கொள்ளமாட்டார் என்றான். திடீரென்று அவனுக்கு தொண்டையில் ஏதோ கோளாறு ஏற்பட்டது. இப்பொழுது பாடும் திறமையைக்கூட இழந்துவிட்டான். அந்த அளவிற்கு அவனுடைய தொண்டை கெட்டுவிட்டது. இவ்விதமாக வரங்களைப் பெற்ற ஒவ்வொருவருக்கும் இது எச்சரிக்கையாகும்.

இறைவனுடைய மகிமையை அடையும் பொருட்டு இன்றைக்கே நாம் மனம் மாற வேண்டும். இல்லாவிட்டால் இறைவனால் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட எல்லா திறமைகளும் அல்லது வரங்களும் எடுத்துப் போடப்படும்.” இச்சம்பவத்தில் தன்னைத்தானே திறமைசாலி என்று நினைத்து மகிமையை அல்லது புகழை தனக்குத்தானே எடுத்துக்கொண்டதால், அவர் இறைவனுடைய சக்தியை தவறாக
உபயோகிக்கிறவராகி விடுகிறார்.

ஆகையால் ஒருவனுக்கு கொடுக்கப்பட்ட திறமைகளினால் புகழ் ஏற்பட்டால் அது கடவுளுடைய பண்பாகும் என்பதை உணர்ந்துகொண்டு ‘நான்’ என்ற அகங்காரத்தையும், பெருமையையும் அகற்றிவிட்டு எல்லா புகழும் இறைவனுக்கே என்று உணர்ந்து கூற வேண்டும். இந்த இரகசியத்தை அறிந்தவர்கள் இறைவனில் ஒரு பாகமாக ஆகிறார்கள். அடுத்தபடியாக நாம் ஏன் எல்லா வேதங்களையும் வாசிக்க வேண்டும் என்பதற்கும் விடையுள்ளது.

முதலாவதாக இறைவனை உணர்ந்தவர்கள் எல்லோரும், பகவத்கீதை, வேதாகமம், குர்-ஆன் முதலியவற்றை வாசிக்கத் தவறக்கூடாது. இந்துக்கள் வேதாகமத்தையும், குர்-ஆனையும், கிறிஸ்தவர்கள் பகவத்கீதையையும், குர்- ஆனையும், முஸ்லீம்கள் வேதத்தையும், பகவத்கீதையையும் வாசிக்க வேண்டும் அப்பொழுதுதான் நீங்கள் இறைவனுடைய திட்டத்தை அறிந்துகொள்ள முடியும். நாம் யாராக இருந்தோம்? எப்படி இருந்தோம்? எந்த ஸ்தானத்திலிருந்து விழுந்துவிட்டோம்? என்றெல்லாம் நாம் கண்டுபிடிக்க முடியும்.

ஆனால் நாம் இப்பொழுது நம்மை பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறோம்? வேலைக்குச் சென்று நன்றாக சாப்பிட்டு, களித்து முதுமையின் காரணமாக மரிக்கும்படி உண்டாக்கப்பட்டிருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். அப்படியென்றால் நமக்கும் மிருகங்களுக்கும் வித்தியாசமேயில்லையே! யோசிப்பதற்கும், வாசிப்பதற்கும், சிந்திப்பதற்கும், திட்டமிடுவதற்கும், எழுதுவதற்கும், புதியவைகளை கண்டுபிடிப்பதற்கும், உண்டாக்குவதற்கும் இறைவன் அறிவை நமக்கு கொடுத்திருக்கிறார். ஆகையால் நாம் சாதாரணமான மக்களல்ல. நாம் இறைவனில் பாகமாவதற்காக சிருஷ்டிக்கப்பட்டவர்கள். அதை உணர்ந்துகொண்டு, நம்முடைய திறமைகளை இறைவனுக்கு உபயோகப்படுத்துவோம்! இறைவனுக்கு புகழை செலுத்துவோம்!

உலகத் தமிழ் வாசகர்களுக்காக manujothi.com என்ற இணையதளத்திலும் மனுஜோதி இதழை வெளியிட்டு வருகிறோம். இந்த இதழை நீங்களும் படித்து இன்புற்று, மற்றவர்களும் படித்துப் பயன்பெற உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து உதவுங்கள். தர்மத்தை நிலைநாட்டும் பணியில் அனைவருக்கும் பங்கு உண்டு. இந்த உலகத்தை மூடியிருக்கும் இருளை அகற்ற மனுஜோதி தீபத்தை ஏற்றி வையுங்கள். இருள் தானாக மறைந்துவிடும்.

வானம், பூமி, சமுத்திரம் யாவையும் படைத்த பரமபுருஷராகிய ஸ்ரீமந் நாராயண மூர்த்தியாம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவுக்கே எங்கள் கனம், துதி, மகிமை யாவும் உரித்தாகுக!

Filed under: ஆசிரியர் குறிப்பு