தமிழ் | తెలుగు

» பிரமுகர்களின் உரை » தேவேந்திர பூபதி அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு

தேவேந்திர பூபதி அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு

கல்கி ஜெயந்தி விழாவில்

“வணிக வரித்துறை இணை ஆணையர்

                அனைவருக்கும் எனது இனிய மாலை வணக்கங்கள். “நல்லோரை காண்பதும் நன்றே, நலமிக்க நல்லோர் சொல் கேட்பதும் நன்றே, அவரோடு இணங்கி இருப்பதும் நன்றே”என்ற ஒளவையாரின் பாட்டைப்போல நல்லோர்கள் அல்லது புனித ஆத்மாக்கள் இருக்கக்கூடிய இந்த இடத்திலே வந்து சேர்ந்தபோது எனக்கு மகாபாரதத்திலுள்ள ஒரு சிறிய கதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது.

யுதிஸ்டிரன் என்ற தருமர், ராஜஸூய யாகம் நடத்தினார். அவருக்கு அதில் ஒரு பெரிய பெருமிதம் ஏற்பட்டது. யாரும் செய்ய முடியாத யாகத்தை தான் செய்து முடித்த இறுமாப்போடு இருந்தபோது, அங்கே ஒரு கீரிப்பிள்ளை வேகமாக வந்தது. அதினுடைய உடலில் பாதி தங்கமாக இருந்தது. மீதியுள்ள உடல் இயல்பாக இருந்தது. அந்த கீரிப்பிள்ளை யாகம் நடந்த யாக சாலையில் வந்து கீழே உருண்டது. பின் சோகமாக எழும்பியது. அவர் கீரிப்பிள்ளையிடம் ஏன் இவ்வளவு சோகமாக இருக்கிறாய் என்று கேட்டார்.

ஏன் உன்னுடைய உடல் இவ்வாறு இருக்கிறது என்று தருமர் கேட்டதற்கு, கீரிப்பிள்ளை இவ்வாறு கூறியது: “பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் அந்தண வேதியர் குடும்பம் இருந்தது. அவர்கள் வருகிற யாருக்காவது தர்மம் செய்துவிட்டு, அதன்பின் மிஞ்சிய உணவை உண்டு வாழ்ந்து வந்தார்கள். அந்த சமயத்திலே பெரிய பஞ்சம் வந்தது. அப்பொழுது யாருக்கும் உணவு கிடைக்காமல் இருந்தது. ஒரு சந்நியாசி வந்தார். அந்த அந்தண குடும்பம் தனக்கு வைத்திருந்த விதை நெல்லை எடுத்து, அவித்து, உணவு சமைத்து சந்நியாசிக்கு கொடுத்தனர். அவருக்கு கொடுத்துவிட்டு இந்த இருவரும் பட்டினியாக இருந்தனர். உணவு கொடுத்த பாத்திரத்தை கழுவி அந்த தண்ணீரை வெளியே ஊற்றும்போது அது என்மேல் பட்டதினால் என் உடலில் தண்ணீர் பட்ட இடம் மாத்திரம் தங்கமாக மாறியது. அப்பொழுதிலிருந்து என்னுடைய ஆசை மீதமிருக்கும் உடலின் பாகமும் தங்கமாக வேண்டும் என்று நான் ஒவ்வொரு இடத்திற்கும் செல்கிறேன். எங்கெங்கெல்லாம் யாகம் நடக்கிறதோ, எங்கெங்கெல்லாம் புனித ஆத்மாக்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் நான் கீழே விழுந்து புரள்கிறேன். ஆனால் என்னுடைய மீதி உடலிலுள்ள பாகம் தங்கமாக மாறவில்லை. யுதிஸ்டிரன் உலகிலேயே மிக சிறந்த தர்மவான். அதினால் இந்த இடத்திலேயாவது என்னுடைய மீதி உடலும் தங்கமாகும் என்று நினைத்து வந்தேன். ஆனால் மாறவில்லை”என்று கீரிப்பிள்ளை சோகமாக கூறியது.

உடனே தருமருக்கு இருந்த கர்வம், இறுமாப்பெல்லாம் போய்விட்டது. உடனே அவர்: “என்னை மன்னித்துவிடு. நான் நீ நினைக்கும் அளவுக்கு தகுதி வாய்ந்தவனல்ல. ஒருவேளை உன்னுடைய சேர்க்கை என்னை தருமவானாக்கினால் ஒருமுறை கீழே புரண்டுபார், தங்கமாகலாம்”என்றார். உடனே கீரிப்பிள்ளை கீழே புரண்டது, அதின் பாதி உடல் தங்கமாகியது. அந்த இடம்தான் இந்த மனுஜோதி ஆசிரமமாக இருக்குமோ என்ற ஐயப்பாடு எனக்கு ஏற்பட்டது. ஏனென்றால் நல்லோர்களுடைய ஆத்துமாதான் எத்தனை பேரையும் இணைக்கும்.

பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளதுபோல எப்பொழுதெல்லாம் இந்த உலகிலே தீமை தலைதூக்குகிறதோ, எப்பொழுது தர்மம் தன்னுடைய சக்தியை இழக்கிறதோ, அப்பொழுதெல்லாம் அந்த தர்மத்தை காப்பதற்காக நான் அவதாரம் எடுத்து வருவேன் என்கின்ற உண்மையான செய்தியை கல்கி மகா அவதாரத்தின் 47-வது கல்கி ஜெயந்தி நினைவுறுத்துகிறதோ என்று எனக்கு தோன்றுகிறது. விவேகானந்தருடைய சொற்பொழிவின் சாராம்சம் என்னவென்றால் “எந்த நாடு பல்லாயிரம் ஆண்டுகளாக எந்த கலாச்சாரத்தின்மீதும் வன்முறை செலுத்தவில்லையோ, எந்த ஒரு நாடையும் ஆக்கிரமிப்பு செய்யவில்லையோ, மற்ற எந்த கலாச்சாரத்தின்மீதும் திணிப்பு செய்யவில்லையோ அந்த கலாச்சாரத்தை பிரதிபலிக்கக்கூடிய ஒரு இந்தியனாக, ஒரு இந்துவாக நான் உங்கள் முன்பாக வந்திருக்கிறேன்”என்று கூறுவார். அந்த பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகத்தான் இந்த சர்வ சமய மாநாட்டை பார்க்கிறேன்.

ஏனென்றால் ஒரு பக்கம் வி. ஜி. சந்தோஷம் அவர்கள் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் ஆன்மீக குரு, அரசு அதிகாரி மற்றும் ஒவ்வொருவரும் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தங்களுடைய அனுபவங்களை கூறிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் சாலையின் முன்னே ஒரு சிறிய அடையாளம்கூட இல்லாத இடத்திலே இவ்வளவு ஜன சமுத்திரம் கூடியிருக்கிறதென்றால் அது ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவுடைய மகிமையின் எடுத்துக்காட்டாகும். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவருடைய அனுமதியில்லாமல், அவருடைய உந்து சக்தியில்லாமல், அவருடைய அனுக்ரஹமில்லாமல் யாரும் பல்வேறு நாட்டிலிருந்தோ, பல்வேறு இடங்களிலிருந்தோ இங்கே வரமுடியாது. அந்த அனுமதியை, பேராற்றலை உங்களுக்கு கொடுத்திருக்கிறார். அந்த வகையிலே இந்த சர்வ சமய மாநாட்டிலே அந்த கீரிப்பிள்ளையைப்போல நான் உருண்டெழுந்து, என்னுடைய ஆத்துமாவையும் தங்கமாக்குவதற்கான ஒரு வாய்ப்பை அவர் எனக்கு கொடுத்திருக்கிறார். உங்களோடு இணைந்து ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவுடைய பேரானந்தத்திலே, அருட்பேராற்றலிலே கலந்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பை நல்கிய அவருக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் என் அன்பையும், தெரிவித்துக்கொண்டு நன்றி கூறி விடைபெறுகிறேன்.

நன்றி! வணக்கம்.

✡✡✡✡✡✡✡

Filed under: பிரமுகர்களின் உரை