தமிழ் | తెలుగు

» ஆன்மீக கதைகள் » தெய்வத்தின் துணை வேண்டும்

தெய்வத்தின் துணை வேண்டும்

நாம் நம் திறமையால், அறிவால் வாழ்க்கையில் வெற்றி அடைந்ததாக நினைக்கிறோம். ஆனால் இந்த எண்ணம் தவறு. தெய்வம் துணை நின்றால்தான் நம் முயற்சிகளுக்கு முழு பலனும் கிடைக்கும். இதை உணர்த்த ஒரு கதை.

பாரதப்போர் நடந்து கொண்டிருந்தது. அர்ஜுனனுக்கு பகவான் கிருஷ்ணர் தேரோட்டியாக செயல்பட்டார். ஒரு நாள் யுத்தம் முடிந்து பாசறைக்கு திரும்பினான் அர்ஜுனன். அவனுக்கு தன் வில் வித்தையால்தான் வெற்றி அடைகிறோம் என்ற கர்வம் உண்டாயிற்று.

அதனால், வழக்கமாக முதலில் தேரிலிருந்து இறங்கும் அவன், அன்று கிருஷ்ணரை முதலில் இறங்கும்படி கூறினான். அர்ஜுனனின் எண்ண ஓட்டத்தை புரிந்துகொண்ட பகவான், அவனது அகந்தையை நீக்க முடிவு செய்தார். “வழக்கமாக நீதானே முதலில் இறங்குவாய்? இன்று மட்டும் ஏன் என்னை முதலில் இறங்கச் சொல்கிறாய்?” என்று கேட்டார். இதற்கு அர்ஜுனன், “இன்று வழக்கத்தை மாற்றலாமே!” என எகத்தாளமாக பதிலளித்தான்.

அதற்கு கிருஷ்ணர் “இல்லை! நீதான் முதலில் இறங்க வேண்டும். நான் இறங்கினால் உனக்குத்தான் ஆபத்து” என்றார். “எனக்கு ஆபத்தா? என்ன ஆபத்து? என் கையில்தான் வில் இருக்கிறதே!” என்றான் அர்ஜுனன் கர்வத்துடன்.

“அதெல்லாம் பிறகு பேசிக்கொள்ளலாம். முதலில் நீ கீழே இறங்கு!” என பகவான் கட்டளையிடும் தொனியில் கூறினார். அதற்கு மேல் மறுப்பு தெரிவிக்க பயந்தவனாக அர்ஜுனன் கீழே இறங்கினான். பகவான் பின்னர் இறங்கினார். கிருஷ்ணர் இறங்கியதும் அந்த தேர் தீப்பிடித்து எரிந்தது.

கிருஷ்ணர் அர்ஜுனனை நோக்கி, “நான் முதலில் இறங்கியிருந்தால் தேருடன் சேர்ந்து நீயும் சாம்பலாகியிருப்பாய்” என்றார். அர்ஜுனன் மிகவும் பயந்து போய், எதனால் இப்படி நேரிட்டது என்று கேட்டான். கிருஷ்ணர் இவ்வாறு பதிலளித்தார்: “அர்ஜுனா! உனக்கு எதிராக போரிட்டவர்கள் மந்திர சக்தி கொண்ட அம்புகளை எய்தனர். அவை செயல்படாமல் நான் தடுத்து வந்தேன். நான் தேரை விட்டு இறங்கியதும் அம்புகளின் மந்திர சக்தி வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. அதனால்தான் தேர் தீப்பற்றிக் கொண்டது. உன்னை இதுவரை காப்பாற்றி வந்தது உனது வீரம் அல்ல. எனது சக்திதான். இதை முதலில் புரிந்துகொள்!” என்றார். அர்ஜுனின் கர்வம் காணாமல் போனது.

✡✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீக கதைகள்